குரு அமர்ந்து தாத்தாவுடன் பேச துவங்கிட இவள் தான் அமர்வதா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்த வேளையில்,
“குட்மார்னிங் மகிழ்மா. உனக்கு டீயா காஃபியா?” என்று சமையலறை வாயிலில் இருந்து குரல் கொடுத்தார் கோதை.
“குட் மார்னிங் அத்தை” என்றவள்,
“எனக்கு டீ தான்” என்றுவிட்டு பிறகு தயக்கத்துடன்,
“உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே போட்றேன்” என்று அவருடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“இதிலென்னம்மா சிரமம். எல்லாருக்கும் தான் போட்றேன். உனக்கு தான் ரொம்ப நேரம் நேத்து நின்னது டையர்டா இருக்கும். நீ போய் உட்காரு நான் டீ கொண்டு வர்றேன்” என்க,
“இல்லை இல்லைத்தை நான் இங்கேயே இருக்கேன்” என்றவள் அவருக்கு உதவி புரிந்தாள்.
தேநீரை தயாரித்ததும், “நான் கொடுத்திட்டு வர்றேன்” என்று தட்டை தூக்க,
“அப்பாக்கு சக்கரை கம்மியா போட்ருக்கேன் இது அவருக்கு கொடு” என்று கூறி அனுப்ப,
“தாத்தா காஃபி” என்று அவர்கள் முன் நின்றாள்.
“தேங்க்ஸ் மா” என்று அவர் எடுக்க,
குருவும் தனக்கு ஒன்றை எடுத்து கொண்டான்.
மகிழ் அகன்றதும்,
“பிரசாத் நீ தொழில்ல மட்டும் இல்லை. வாழ்க்கையில கெட்டிக்காரன் தான் மகிழ் மாதிரி ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து இருக்கியே. மகிழ் மாதிரி நல்ல பொண்ணு எல்லாம் தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க. அவ்ளோ நல்ல பொண்ணு. நல்ல திறமையான பொண்ணு கூட இல்லைன்னா இந்த வயசுலயே வேலைக்கு போயிட்டே படிச்சிட்டு மூனு சின்னப்பசங்களை தனியா பாத்துக்க முடியுமா?” என்று கூற,
குருவின் பார்வை தங்களை கடந்து சென்ற மகிழினியின் மீது படிந்து எழுந்தது.
தானும் சமையலறையிலே கோதையுடன் தேநீரை பருக அவர் வரண்டாவில் அமருமாறு கூற மறுத்துவிட்டாள்.
தேநீரை அங்கேயே பருகி முடித்தவள்,
“அத்தை நான் போய் எழிலும் கவினும் எழுந்துட்டாங்களான்னு பாத்திட்டு வந்திடவா?” என்று வினா எழுப்ப,
“போய்ட்டு வாம்மா இதுக்கு எதுக்கு கேள்வி. கீழே லாஸ்ட் ரூம்ல தான் அவங்க தூங்குறாங்க” என்று பதில் மொழிய,
சம்மதமாக தலையசைத்து விட்டு அவர்கள் அறையை நோக்கி சென்றாள்.
முதலில் கோதையிடம் கூறாது செல்லலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் குரு தான் கூறியிருக்கிறானே உன்னால் எந்த பிரச்சனையும் வர கூடாது.
அம்மாவிடம் தாத்தாவிடம் நன்முறையில் நடந்து கொள் என்று.
தான் கூறாது சென்று அவர்கள் தான் அவர்களை மதிக்கவில்லை என்று எண்ணிவிட்டால் என்ன செய்வது என்று தான் அனுமதி கேட்டாள்.
என்னவோ ஒவ்வொரு விடயத்தையும் செயலையும் அனுமதி வாங்கி பல முறை யோசித்து செய்ய அவளுக்கு ஏதோ சிறை போல தான் எண்ணம் வந்தது.
ஆனால் என்ன செய்வது இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த நவீன சிறை தான் தனக்கு.
அகிலின் அறை கதவில் கையை வைக்க அது தானாக திறந்து கொண்டது.
உள்ளே எட்டிப்பார்க்க இளையவர்கள் இன்னும் உறகத்தில் இருந்தனர். குளியலறையில் சத்தம் வந்தது அகிலன் குளித்து கொண்டு இருப்பான் போல.
சத்தம் எழுப்பாது திரும்பி வந்துவிட்டாள்.
உடனே வந்தவளை கண்ட கோதை,
“என்னம்மா போனதும் வந்துட்ட. குட்டி பசங்க எங்க?” என்று வினவ,
“அவங்க தூங்கிட்டு இருக்காங்கத்தை” என்றவள்,
“நான் உங்களுக்கு சமையலுக்கு ஹெல்ப் பண்ணவா?” என்று வினா தொடுக்க,
பதில் கூற வந்தவர் அப்போது தான் மகியின் ஈரங்கூந்தலை கவனித்துவிட்டு,
“என்னம்மா தலை இப்படி ஈரமா இருக்கு. நல்லா துவட்ட மாட்டியா? சளி பிடிச்சிக்க போகுது” என்றுவிட்டு துண்டால் தலையை நன்றாக துவட்டிவிட்டார்.
சடுதியில் மகிக்கு விழிகள் கலங்கி விட்டது. தாயின் நினைவு வந்துவிட்டது. அவளது தாயும் இப்படித்தான் மகியின் கூந்தலை ஈரமாகவே இருக்க விட மாட்டார்.
ஒற்றை பெண் என்பதால் பார்த்து பார்த்து வளர்த்தார்.
இப்படி எல்லாம் தன்னை ஒருவர் கவனித்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று எண்ணம் வர மறு நொடியே இவரையா தான் ஏமாற்றுகிறோம் என்று குற்றவுணர்வும் சேர்ந்து வந்தது.
மகியின் முகத்தை கண்டவர்,
“என்னம்மா ஏன் திடீர்னு முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு?” என்று கேள்வி எழுப்ப,
“அது ஒன்னுமில்லைத்தை திடீர்னு அம்மா ஞாபகம் வந்திடுச்சு அதான்” என்றாள்.
“அம்மா அப்பா இல்லை அப்படி எல்லாம் கவலைப்படாத. நானும் உனக்கு அம்மா மாதிரி தான் என்ன. என்னை அம்மாவா நினைச்சுக்கோ. எனக்கு நீயும் அம்முவும் ஒன்னுதான்” என்க இவளுக்கு மேலும் குற்றவுணர்வு அதிகமாகியது.
அதை மறைத்து கொண்டு அவருடன் சமையலில் உதவினாள். அடுத்தடுத்து இளையவர்கள் அனைவரும் எழுந்து வர வீடு கொஞ்சம் களைக்கட்டியது.
காலையில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர். மகிழ் இளையவர்களுக்கு ஊட்டிவிட்டபடியே தானும் உண்டு முடித்தாள்.
பின்னர் மதிய உணவிற்கு பிறகு காசிநாதன் கோமதி தம்பதியினர் அடுத்த வாரம் மகியையும் குருவையும் விருந்திற்கு அழைத்துவிட்டு ஊருக்கு கிளம்பினர்.