குரு அவர்களை விட்டு வர செல்ல கோதை மகிழை ஓய்வெடுக்க கூறினார்.
இளையவர்களுடன் குருவின் அறையில் தான் சிறிது நேரம் ஓய்வெடுத்தாள். இளையவர்கள் உண்டதும் உறங்கிவிட்டனர்.
இவள் தான் சிறிது நேரம் புரண்டு விளையாட்டு உறக்கம் வராது எழுந்து வெளியே வந்தாள்.
கோதை மட்டும் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருக்க அவருடன் இணைந்து கொண்டாள்.
கோதை பேச அதனை கேட்டபடி இருந்தவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை. எழிலும் கவினும் உறக்கம் கலைந்து எழுந்து கீழே அவளிடமே வந்திருந்தனர்.
அவர்களுக்கு பாலை ஆற்றி கொடுத்துவிட்டு அவர்களது உரையாடல் தொடர்ந்தது.
இயல்பிலே அமைதியான சுபாவம் கொண்ட மகிழ் மற்றவர்கள் பேசுவதை நன்றாக கவனிப்பாள். அதை தான் இப்போது செய்து கொண்டிருந்தாள்.
கோதை குருவின் சிறு வயது கதைகளை கூற அதனை கேட்டபடி இருந்தாள்.
காசி குடும்பத்தை வழியனுப்ப சென்றவன் எங்கேயோ வெளியே சென்றுவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தான்.
மகிழ் அவன் வந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து நிற்க கோதை,
“வந்துட்டியாப்பா. காஃபி தரவா?” என்று வினவ,
“ஹ்ம்ம் ரூம்க்கு கொடுத்து விடுங்க” என்றவன் எழுந்து நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
அந்த பார்வையின் அர்த்தம் அறியாது அவள் நிற்க. அறைக்குள் நுழைந்த அடுத்த கணமே,
“மகி…” என்ற குருவின் குரல் அவளை உரக்க அழைத்தது.
“மகிம்மா உன்னைத்தான் கூப்பிட்றான் பாரு போய் என்னன்னு கேளு” என்று கோதை மொழிய,
மகிழ் எழுந்து சென்றாள். உடன் கவினும் எழிலும்.
அவள் அறைக்குள் நுழைந்த நொடி,
“வாட் தி ஹெல் திஸ். உன்கிட்ட நேத்தே சொன்னேன்ல என் திங்க்ஸ யாரும் தொட்டா எனக்கு பிடிக்காதுன்னு. வட் இஸ் திஸ். ஹூ டிட் திஸ்…” என்று முகம் சிவக்க கர்ஜிக்க,
எதிரில் ஒரு நொடி எதுவும் புரியாது நின்ற மகிழுக்கு விழிகள் கலங்கிவிட,
“ம்மா ம்மா…” என்று அவளது காலை பயத்தில் கட்டி கொண்ட எழில் மற்றும் கவனும் அழுகைக்கு தயாராக இருந்தனர்.
சடுதியில் அவன் விழிகள் இளையவர்கள் மீது படிய ஒன்றும் கூறாது விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்.
இங்கு மகிழினி தான் சட்டென்று புயலுக்குள் சிக்கி நொடியிலே தூக்கி எறியப்பட்ட நிலையில் இருந்தாள்.
ஒரு கணம் எதுவும் விளங்கவில்லை. கை காலெல்லாம் நடுங்கியது. இப்படி ஒரு கோபத்தை நேரில் குருவிடம் கண்டது இல்லை.
ஏன் வாழ்விலே யாரிடமும் இத்தகைய கோபத்தை அவள் எதிர்நோக்கியதில்லை.
அவளது நிலையே இப்படி என்றால் சிறியவர்களை கூறத்தான் வேண்டுமா விழிகளில் நீருடன்,
“ம்மா பயமா இருக்கு. இங்க வேணாம் வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று எழில் கூற,
“ஆமா வா போதாம்” என்று கவின் அழவே தொடங்கியிருந்தான்.
நொடியில் தன்னை சமாளித்தவள்,
“ச்சு ஒன்னுமில்லை அங்கிளுக்கு கோபம் அதான் அப்படி பேசிட்டாங்க” என்று பலவாறாக அவர்களை சமாதானம் செய்தவள் மெத்தையில் அமர வைத்துவிட்டு அவர்கள் இழுத்து போட்ட துணிகளை கண்டாள்.
குருவின் அலமாரியில் இருந்து அவர்கள் உயரத்திற்கு எட்டியவரையில் துணிகளை வெளியே இழுத்து போட்டிருந்தனர் கவினும் எழிலும்.
எல்லாம் நன்றாக தேய்த்து வைக்கப்பட்டிருந்த துணிகள் கசங்கி இருந்தது.
தன்னுடைய உடைமையில் இருந்து துணி தேய்க்கும் கருவியை எடுத்து அமர்ந்து அனைத்தையும் தேய்த்து அடுக்கி வைத்தாள்.
சிறுவர்கள் இருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தனர்.
பின்னர் இருவரிடம் பொறுமையாக இனி இது போல செய்ய கூடாது. இந்த அறையில் இருந்த எந்த பொருளையும் எடுக்க கூடாது. விளையாட வேண்டும் என்றால் அவர்களுக்காக வாங்கி கொடுக்கப்பட்டிருந்த பொம்மையை வைத்து மட்டும் தான் விளையாட வேண்டும் அதுவும் வராண்டாவில் தான் என்று பலவாறாக எடுத்து சொல்லி கொண்டிருந்தாள்.
இங்கு கோபத்தில் வெளியே வந்து மகிழுந்தை இயக்கி நெடுந்தூரம் வந்த பிறகே மகிழுந்தை நிறுத்தினான் குரு.
வந்த கோபத்தில் கண்மண் தெரியாது கத்திவிட்ட பிறகு தான் அவளது காலடியில் முகம் முழுவதும் அப்பிய பயத்துடன் நின்றிருந்த சிறுவர்களை கண்டான்.
சட்டென ஏதோ போலாகிவிட அங்கிருந்து நகர்ந்து வந்துவிட்டான். இருந்தும் அந்த சிறுவர்களது முகம் தான் மனதில் வந்து போனது.
குழந்தைகளை திட்டும் அளவிற்கு குரு குணம் கெட்டவன் அல்ல. தான் பொருட்களை யாரும் தொடுவதையே அறவே விரும்பாதவனுக்கு தன்னுடைய உடைகள் அப்படி கசங்கி கிடந்ததை கண்டதும் கோபம் தலைக்கேறிவிட்டது.
அதுதான் அப்படி நடந்து கொண்டான். முதல் முறையாக வாழ்வில் தான் செய்துவிட்ட ஒன்றிற்காக தன்னையே கடிந்து கொண்டான்.
‘இது உனக்கு தேவையா? இந்த ஒப்பந்த திருமணம் தேவையா? குழந்தைகள் இருந்தால் வீடு இப்படித்தான் இருக்கும் இனி நீதான் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணிவிட்டு பிறகு வீட்டை நோக்கி பயணமானான்.
கோதை குரு வந்ததும், “என்னப்பா வந்ததும் எங்க போய்ட்ட?” என்று வினவ,
“ஒரு அர்ஜென்ட் ஒர்க் அதான் மா” என்று பதிலளித்துவிட்டு மாடிக்கு ஏறியனுக்கு சிறிதாய் தடுமாற்றம்.
அறைக்குள் நுழையும் முன்பே மகிழின் குரல் செவிக்குள் நுழைந்தது.
“நீங்க அங்கிளோட திங்க்ஸ கலைச்சு போட்டதுனால தான அங்கிள் கோபப்பட்டாங்க. இனிமேல் இங்க இருக்க எந்த திங்க்ஸயும் தொடக்கூடாது. நீங்க ரெண்டு பேரும் குட் பாய்ஸ் தான அம்மா பேச்சை கேட்பிங்க தான?” என்று வினவுகையிலே இவன் உள்ளே வர அவனது அரவத்தில் சட்டென்று அவளது பேச்சு பட்டென்று தடைபட அமர்ந்திருந்தவள் எழுந்துவிட்டாள்.
அவனை கண்டதும் அவளுக்குமே உள்ளுக்குள் நடுக்கம் தான். அதை மறைத்து கொண்டு அவனை கண்டவள்,
“சா.. சாரி சார். மன்னிச்சிடுங்க. சின்ன பசங்க தெரியாம இப்படி பண்ணிட்டாங்க. இனிமேல் இப்படி நடக்காது. நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன்” என்று மன்னிப்பை வேண்டியவள்,
“அது நான் உங்க ட்ரெஸ் எல்லாம் எடுத்து அயன் பண்ணி மடிச்சு உங்க கபோர்ட்லயே வச்சிட்டேன்” என்று தயங்கி தயங்கி கூறினாள்.
அவளுக்கு பயம் எடுத்து வைத்ததற்கும் எதற்காக என்னுடைய உடையை தொட்டாய் என்று திட்டிவிட்டால். எடுத்து வைக்காமல் இருக்கலாம் என்றால் அதற்கு திட்டுவானோ என்று பயம் வந்தது.
பயத்தை வெளியே காண்பிக்காது இருக்க முயற்சித்தவாறு தான் அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பதிலுக்காக அவன் முகம் கண்டாள்.
ஒரு நொடி அமைதியாக இருந்தவன் பின்னர் அவளது மன்னிப்பை ஏற்று கொண்டு தலையசைப்பை கொடுத்துவிட்டு,
“போய் எனக்கு ஒரு காஃபி எடுத்திட்டு வா” என்றான்.
அவன் மன்னிப்பை ஏற்றதில் நிம்மதியடைந்து,
“ஹ்ம்ம்” என்றுவிட்டு நகர போனவளது கால்கள் சிறியவர்களை கண்டு தடையானது.
எழிலும் கவினும் தான் குருவை கண்ட அச்சத்தில் கை காலை கூட அசைக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தனரே.
குரு ‘என்ன?’ என்று புருவம் தூக்கி பார்க்க,
“ம்ஹூம்” என்றவள் கீழிறங்கி சென்றாள்.