காதல் 9.1

காதல் 9:

மகிழினி படுத்த சிறிது நேரத்திற்கே குருவும் தன்னுடைய மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு படுத்துவிட்டான்.

படுத்த சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டான். ஆனால் மகிழுக்குத்தான் உறக்கம் வருவேனா என்று அடம்பிடித்தது.

திரும்பி குருவை கண்டாள் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

‘படுத்தவுடன் உற்ங்கிவிட்டார் எனக்குத்தான் உறக்கம் வரவில்லை’ என்று எண்ணி கொண்டாள்.

அவள் எவ்வளோ முயன்றும் உறக்கம் வரவில்லை‌. என்னதான் அவனுக்கும் மகிழுக்கும் காத தூரம் இடைவெளி இருந்தாலும் அந்த அறையில் தன்னுடன் வேறு ஒருவர் அதுவும் அந்நிய ஆண் என்ற‌ எண்ணமே அவளை உறங்கவிடாது செய்தது.

விழிகளை மூடினாலும் அந்த இரவின் அசாத்திய அமைதியில் அவனுடைய சீரான மூச்சுக்காற்று இவளை தொல்லை செய்தது. ஒருவன் இருக்கிறான் என்று உணர்த்தியது.

புரண்டும் படுக்க இயலவில்லை. எங்கே தான் திரும்பி படுத்தாள் அவன் எழுந்துவிடுவானோ என்று அசையாது படுத்திருந்தாள்.

வெகுநேரம் கழித்தே அவளுக்கு உறக்கம் வந்தது. எப்படியோ ஒரு வழியாக உறங்கி போனவள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டாள்.

அது அவளுடைய வழக்கம் விரைவாக எழுந்தால் தான் எல்லா வேலையும் முடித்துவிட்டு பணிக்கு கிளம்பி செல்ல நேரம் சரியாக இருக்கும்.

ஆனால் இன்றோ தனக்கு எந்த வேலையும் இல்லை. இனியும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இருக்குமா? என்பது சந்தேகம் தான்.

ஏனெனில் தான் வேலைக்கு செல்வது பற்றி இன்னும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. இத்தனை பெரிய பணக்கார வீட்டினர் நிச்சயமாக தங்கள் வீட்டுப் பெண் பணிக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள் என்று தான் அவளது எண்ணம்.

இருந்தும் ஒரு முறை அனுமதி கேட்டு பாக்கலாம் என்று நப்பாசை அவளுக்கு இருந்தது.

எழுந்ததும் அவளது நினைவு காலையில் தினமும் தன்னை எழுப்பிவிடும் பறவைகளின் நினைவு தான் வந்தது.

சட்டென எழுந்து கொள்ள அவளது காலில் சிம்மாசனமிட்டிருந்த கொலுசு ஜல் ஜல்லென சத்தமிட சடுதியில் அப்படியே நின்றுவிட்டவள் திரும்பி குருவை கண்டாள்.

அவன் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தான். அப்போது தான் அவளுக்கு மூச்சு திரும்பி வர மெதுவாக நடந்து சென்று பால்கனியில் இருந்து அவ்விடத்தை கண்டாள்.

வழக்கம் போல அந்த குருவிகள் தண்ணீரையும் தானியங்களையும் உண்டு கொண்டிருந்தன.

முடிந்த அளவு அந்த குடுவையை நிரப்பி வைத்திருந்தாள் தான். ஆனால் அதுவும் மூன்று நாட்களில் தீர்ந்துவிடும் அதன் பிறகு மறக்காது ‌சென்று நிரப்பிவிட்டு வர வேண்டும் என்று எண்ணி கொண்டவள் அதே போல சத்தமிடாது சென்று உடை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.

குளியலறைக்குள்ளே புடவையும் உடுத்திவிட்டு வெளியே வந்து பால்கனியில் நின்று தலையை உலர்த்தினாள்.

அந்த காலை வேளையில் குளிர்காற்று தழுவி செல்ல அங்கிருந்து காணும் காட்சிகள் ரம்யமாக இருந்தது.

இதுதான் இவர் அடிக்கடி இங்கு நிற்பதற்கு காரணமோ என்று எண்ணம் வர,

‘சே சே இருக்காது இவருக்கு இத்தனை அழகான ரசனையா?’ என்று நினைத்தாள்.

அடுத்த கணமே ஏன் ரசனை இருக்காது இவருக்கு ஒரு அழகான காதலியே இருக்கிறாள் அப்போது ரசனை இருக்காதா? ரசனை இல்லாது காதல் வருமா? என்றெல்லாம் எண்ணத்துடன் கூந்தலை தட்டி கொண்டிருந்தாள்.

உறக்கத்தில் இருந்த குருவை ‘டிங் டிங்’ என்ற ஒலி கலைக்க விழிகளை சுருக்கியபடி திறந்தவன் ஓசை வந்த திசைக்கு திரும்பினான்.

அங்கே பச்சை நிறத்தில் சேலை உடுத்தி ஈரக்கூந்தலை சட்டு சட்டென்று தட்டி கொண்டிருந்த மகியின் பின்புறம் தெரிந்தது.

அவள் தட்டும் போது வளையல் ஒன்றோடொன்று இடித்த போது கேட்ட சத்தம் தான் அந்த ஓசை.

ஒரு கணம் விழி மூடி திறந்தவன் மறுபுறம் திரும்பி படுத்து உறக்கத்தை தொடர முயற்சிக்க முடியவில்லை.

சரியென்று எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்த அரவத்தை உணர்ந்தவள் திரும்பி பார்க்க அவன் தனது அலைபேசியில் முகத்தை புதைத்திருந்தான்.

‘நான் தான் டிஸ்டர்ப் பண்ணி எழுப்பிவிட்டுட்டேனோ?’ என்று அவளுக்கு எண்ணம் வந்தது.

பின்னர் இருக்காது நாம் தான் சத்தமின்றி பூனை நடை போட்டு வந்து பால்கனியில் நின்றுவிட்டோமே என்று தன்னை தானே சமாதானப்படுத்தியவள் கூந்தல் ஓரளவு காய்ந்ததும் உள்ளே சென்றாள்.

குரு இன்னும் அதே இடத்தில் தான் இருந்தான். அவளுக்கு கீழே செல்ல வேண்டும் சென்று எழிலையும் கவினையும் பார்க்க வேண்டும். தானில்லாது எப்படி இரவில் உறங்கினார்களா என்று தெரியாது மனது தவித்தது.

அவனிடம் கேட்க தயங்கி முன் போய் நின்றாள். ஆனால் வாயை திறந்து கேட்கவில்லை.

இவன் தான் இரண்டு நிமிடங்கள் கடந்து தலையை நிமிர்த்தி ‘என்ன’ என்பதாக புருவம் உயர்த்தினான்.

“நான் கீழே போகலாமா?” என்று கேட்க,

அவன் சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு,

“வெயிட் பண்ணு நானும் ரெடியாகிட்டு வர்றேன் சேர்ந்து போகலாம்” என்றான்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் மீண்டும் பால்கனிக்கு சென்று நின்றுவிட்டாள்.

அறையில் இருந்த நீள்விருக்கையில் அமர யோசனையாக இருந்தது. எதையும் பயன்படுத்தாதே என்றுவிட்டானே.

தான் அதில் அமர்ந்து‌ தன்னை எதாவது கூறிவிட்டால் என்ன செய்வது என்று கம்பியை பிடித்தபடி நின்றுவிட்டாள்.

நேற்று இரவு சரியாக உண்ணவில்லை. லேசாக பசியெடுத்தது. தண்ணீர் கிடைத்தால் தேவலாம்.

ஆனால் அறையில் தண்ணீரே இல்லை. அவனிடம் அனுமதி கேட்க சென்ற போது ஒருமுறை விழிகளால் அறையை சுற்றி வந்துவிட்டாள்.

தண்ணீர் பொத்தல் இருப்பதற்கான தடையமே இல்லை‌.

வெளியே நின்றிருந்தவளுக்கு அப்போது தான் அந்த அறையில் ஒரு குளிர்சாதன பெட்டி இருப்பது நினைவு வந்தது.

நினைவு வந்து என்ன பயன் கீழே செல்லும் போது பார்த்து கொள்வோம் இதுவரை பசியை தாங்கியதே இல்லையா? என்று சிந்தித்து நின்றிருந்தாள்.

குரு குளித்து முடித்து வந்த பிறகும் அவள் அங்கேயே நிற்க,

“மகிழினி ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க. இங்க வந்து சோஃபால உட்கார வேண்டியது தான?” என்று குரல் கொடுத்தான்.

அதில் யோசனையில் இருந்தவள் திடுக்கிட்டு திரும்பி,

“ஹான் இதோ இதோ வர்றேன் சார்” என்று வந்து நீள்விருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

அப்போது தான் தன்னுடைய அலைபேசி நினைவு அவளுக்கு வர தன்னுடைய பையில் இருந்து எடுத்து பார்த்தாள்.

அவளது திருமண விடயம் அறிந்து அலுவலகத்தில் இருந்து ஒரு சில வாழ்த்துக்கள் செய்தி வந்திருந்தது. அதற்கு பதில் அனுப்பியவாறு குனிந்திருந்தாள்.

இருந்தும் குருவின் செய்கைகள் கவனத்தில் பட்டது. குளித்து வந்தவன் தலையை காய வைத்து ஏதோ ஜெல் வைத்து கொண்டிருந்தான்.

பிறகு வாசனை திரவியத்தை எடுத்து உடை மேல் அடித்தான். பிறகு ஏதோ செய்தான்.

எல்லாம் முடித்து தயாராகி திரும்பியவனது விழிகளில் விழுந்தது.

மகிழ் கையில் இருந்த மிகவும் சேதாரம் அடைந்த நிலையில் இருந்த பழைய அலைபேசி. அது இருக்கும் நிலையை கண்டால் எப்போது வேண்டுமானாலும் பழுதாகலாம் அப்படி இருந்தது.

பாதி திரையே தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் கவினும் எழிலும் தான். இரண்டாவதாக குறைந்த விலைக்கு வாங்கி இருந்தாலும் அதனை மகி பத்திரமாக வைக்கவே முயற்சித்தாள்.

ஆனால் இளையவர்கள் இருவரும் அதனை எடுத்து அடிக்கடி கீழே போட்டு இந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தனர்.

இருந்தும் மகிழினி மொத்தமாக பழுதடைந்தாள் வேறு எதாவது பழைய அலைபேசியை வாங்கி கொள்ளலாம் என்று இருந்தாள்.

மகிழினி எப்போதும் தன்னுடைய தேவைகளை பெரியதாக கருதுவதில்லை.

அதுவும் அவள் அந்த அலைபேசியை அதிக நேரம் உபயோகிப்பது இல்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இல்லை. அழைப்பு வந்தால் பேசுவாள் அது ஒன்றிற்கு மட்டும் தான் அந்த அலைபேசி பயன்பட்டது.

அந்த பாதி திரையில் இவளுக்கு என்ன தெரிகிறது என்று சிந்தித்தபடியே,

“வா கீழே போகலாம்” என்றிட அதற்காகவே காத்திருந்தவள் போல வேகமாக அந்த அலைபேசியை மீண்டும் அலமாரியில் உள்ள தனது பையில் வைத்துவிட்டு அவனுடன் சென்றாள்.

இருவரும் கீழே இறங்கிவர பிறைசூடன் கூடாரத்தில் அமர்ந்து தான் செய்திதாள் வாசித்து கொண்டிருந்தார்.

குரு வந்ததும், “குட் மார்னிங் தாத்தா” என்றிட,

“குட் மார்னிங் பிரசாத்” என்றவர்,

“குட் மார்னிங் மகிழ்” என்று புன்னகையுடன் கூறினார்.

மகிழினியும், “குட் மார்னிங் தாத்தா” என்று மென்னகையுடன் கூறினாள்.

‘சார்’ ‘மேம்’ என்ற அழைப்பெல்லாம் திருமணத்திற்கு முன்பே தாத்தா அத்தை என்று அவர்களுக்கு சொல்லுக்கேற்ப மாறியிருந்தது

error: Content is protected !!
Scroll to Top