உள்ளம் – 7.3

அவனறிந்து சொந்த வீட்டைவிட்டு வெளியேறி வந்தப் பிறகு இந்த ஒருவாரம்தான் ரங்கராஜனின் வீட்டிற்குச் செல்லாது கடத்திய நீண்ட நெடிய நாட்கள். காலையில் தொடங்கி இரவு வரை அங்குதான் உலாத்திக் கொண்டிருப்பான். அவ்வப்போது திவாகர் அனைத்தையும் சரியாய் கவனித்துக் கொள்வானா? என்ற சந்தேகம் எழுந்தாலும், அவனாக அழைத்துக் கேட்கவில்லை. திவா
ஓரிரு முறை அழைத்துப் பேச, இடையில் விசாரித்துக் கொள்வான். திவாகரால் முடியும், முடியாது போனால் தன்னுடைய உதவி தேவைப்பட்டால் சென்று உதவலாம் என நினைத்தான்.

மனம் இப்போது நிதர்சனத்தை ஓரளவிற்கு ஏற்றுக் கொண்டிருந்தது‌. ரங்கராஜன் அழைத்தாலும் கூட இனி அங்கு மனம் ஒன்றி முதல் போல வேலை பார்க்க முடியாது என்ற எண்ணம் இவனுக்கு இந்த சில நாட்களில் தோன்றியிருந்தது. இந்தப் பிரிவும் நல்லதிற்குத்தான் என எண்ணிக் கொண்டான். இல்லையென்றால், மனோஹரியை தினமும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் , மனம் அதை விரும்பவில்லை. அவனறிந்து முதன்முதலில் ஒரு பெண் அவன் மீது நேசம் கொண்டிருக்கிறாள். இதற்கு முன்னே யாரும் அவனிடம் நேருக்கு நேராக உரைத்ததில்லை. முதலும் கடைசியுமானப் பெண் இவளாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான்.

மனோஹரி பிறந்தநாள் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்தன. முதல் இரண்டு நாட்கள் அவளது பேச்சில் சீர் குலைந்திருந்த அனைவரது வாழ்க்கையும் இப்போது நேராகிப் போயிருந்தது. அவரவருக்குரிய பொறுப்புகள் இழுத்துக் கொள்ள, எல்லாம் சரியாகிவிட்டதென தங்களை நம்ப வைக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.

எப்போதும் போல மனோஹரி மருத்துவமனைக்குக் கிளம்புவதற்காக குளித்து முடித்து சுரிதாரை அணிய, ராதாமணி அவளது அறைக்குள் நுழைந்தார்.

“இன்னைக்கு வேலைக்குப் போக வேணாம் மனோ. இந்த சேலையைக் கட்டி ரெடியா இரு!” என அவள் கையில் இடலை நிறத்தில் ஒரு சேலையைத் திணித்தார்.

“எதுக்கு மா லீவ், சேலையெதுக்கு கட்ட சொல்ற நீ?” சந்தேகமாகத் தாயை கண்கள் இடுங்கப் பார்த்தாள்.

“ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம முதல்ல சுடிதாரைக் கழட்டு டி!” என்று அவளது துப்பட்டாவில் கையை வைத்தார்.

அவரது கரத்தைத் தடுத்துப் பிடித்தவள், “இப்போ எதுக்குன்னு நீயா சொல்றீயா? இல்லை, நான் அப்பாகிட்ட போய் கேட்கவா?” எனப் பல்லைக் கடித்தாள்.

“உன்னைப் பொண்ணுப் பார்க்க வராங்க. ஒழுங்கா சேலையைக் கட்டி ரெடியாகுற வழியைப் பாரு. எதாவது முரண்டு பிடிச்ச, கன்னத்துலயே நாலு வெச்சுடுவேன்!” கோபமாகப் பேசியவரின் வார்த்தைகளில் மனோஹரி அதிர்ந்து போனாள். அவர் கூறியதைக் கேட்டவளுக்கு சினம் தாறுமாறாகப் பொங்கியது.

“யாரைக் கேட்டுப் பொண்ணு பார்க்க வரச் சொன்னீங்க? எனக்கு இஷ்டமில்லை, மொதல்ல அவங்களுக்கு கால் பண்ணி வர வேணாம்னு சொல்லுங்க…” இவள் சீறலாய்ப் பதிலளித்தாள்.

“யாரடி கேட்கணும். இத்தனை வருஷம் பெத்து வளர்த்தவங்களுக்குத் தெரியாதா, உனக்கு என்ன பண்ணணும், பண்ணக் கூடாதுன்னு. இப்போ சேலையைக் கட்டுற…” மனோஹரியின் கையில் சேலையைத் திணித்தார் ராதா.

“உங்க இஷ்டத்துக்கு ஆட்றதுக்கு நான் ஒன்னும் பொம்மை இல்லை மா. யார் முன்னாடியும் என்னால அலங்காரம் பண்ணீட்டு வந்து நிக்க முடியாது. புரிஞ்சுக்கோங்க!” பொறுமையை இழுத்துப் பிடித்துப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசினாள்.

இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரங்கராஜன், “ராதா, நீ போய் வேலையைப் பாரு. நான் பேசிக்கிறேன்!” என மனைவியை அனுப்பியவர், “என் மேல மரியாதை வச்சிருந்தா, இந்த சேலையைக் கட்டீட்டு இப்போ ரெடியாகுற மனோ. என் பொண்ணு என்னை எங்கேயும் அசிங்கப்படுத்த மாட்டான்னு நம்பிட்டு இருக்கேன். அரைமணி நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்க!” என்றவர் நகர, போகும் அவரையே வெறித்தவள், எதுவும் பேசாது உடையை மாற்றினாள்.

விழியோரம் ஈரம் கசியப் பார்க்க, அதை துடைத்தெறிந்து முகத்தை கழுவிவிட்டு தனக்குத் தெரிந்தளவிற்கு சேலையை உடுத்தினாள். ராதாமணி அறைக்குள் நுழைந்து சேலையை சரிசெய்து, தலையை பின்னலிட்டு பூ வைத்துவிட, இவள் அவரையே வெறித்தார். மனம் இந்நொடி குமரனைத் தேடியலைந்தது‌. அவன் அருகிலிருந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என மனம் நம்பித் தொலைத்தது.

மகளின் வெறித்த முகத்தைப் பார்த்தவர், “முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்கோ மனோ. உன் வாழ்க்கை கெட்டுப் போகணும்னு நாங்க என்னைக்கும் நினைக்க மாட்டோம் டி…” என நகர்ந்தார்.

திவாகர் அன்றைக்கு குவாரிக்குச் செல்லவில்லை. அவனும் தயாராகி வர, ரங்கராஜன் வெள்ளை வேட்டி சட்டை உடுத்தியிருந்தார். முகம் கடந்த பத்து நாளை விட இப்போது நன்றாய் தெளிந்திருந்தது.

ராதாமணி காலையிலே குளித்து முடித்து பழைய புடவை ஒன்றை உடுத்தி, சமையல் செய்யும் பெண்ணுடன் சேர்ந்து சமைத்து முடித்திருக்க, இப்போது அறைக்குச் சென்று பட்டுப்புடவை அணிந்து தயாராகி வந்தார்.

வெளியே நடக்கும் எதற்கும் தனக்கு சம்பந்தமில்லை என்பதைப் போல மனோஹரி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்திலே மகிழுந்து சத்தமும், அதன் நீட்சியாய் ராதாமணியின் பேச்சும் இவளது செவியைத் தொட்டது.

“வாங்க நிர்மலா, வாங்க அண்ணா, வாங்க மா, தம்பி உள்ளே வாங்க!” என ராதா வரவேற்க, “வாங்க அக்கா…” ரங்கராஜனும் புன்னகையுடன் அனைவரையும் அழைத்தார்.

எல்லோரும் உள்ளே வந்து அமர்ந்தனர். “எப்படி இருக்க ரங்கா?” என நிர்மலா விசாரிக்க, பரஸ்பர நலவிசாரிப்பு அரங்கேறியது.

நேரத்தைப் பார்த்த மனோ, குமரனுக்கு அழைக்கலாமா ? வேண்டாமா? என மனதின் அலைப்புறதலைப் புறந்தள்ளி, அவனுக்கு அழைப்பை விடுத்திருந்தாள். இரண்டு முறை அழைப்பு சென்றும் ஏற்கவில்லை. மூன்றாம் முறையாக மனோஹரி மனதெங்கும் வியாபித்த பதற்றத்துடன் அழைக்க, கடைசி நொடியில் அழைப்பை ஏற்றிருந்தான் குமரன். இவளுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, “ஹலோ…” என அவன் பேசவும், இவளுக்கு ஏனோ விழிகள் கலங்கியது. ஒருவாரம் கழித்தான அவனுடைய பேச்சு செவியை மோதி சிந்தையை சித்தம் கலங்கச் செய்திருந்தது.

“வீட்ல கொஞ்சம் பிரச்சனை. நீங்க வரீங்களா?” இவள் குரல் லேசாய் பிசிறு தட்டியது.

“என்னாச்சு?” குமரன் யோசனையுடன் வினவினான்.

“நேர்ல வாங்க!” என மனோ அழைப்பைத் துண்டித்திருக்க, ‘இந்தப் பெண் என்ன செய்து வைத்திருக்கிறாளோ?’ என்ற பதற்றத்தில் வாகனத்தை மனோ வீட்டை நோக்கித் திருப்பியிருந்தான். வீட்டை அடையும் அந்தச் சொற்ப நிமிடங்களில் மனம் பலவித கற்பனைகளை அள்ளித் தெளித்திருந்தது.

ராதா அனைவருக்கும் தேநீரைக் கொடுத்து விருந்து உபச்சாரம் செய்தார். திவாகர் எதுவும் பேசாது ஓரத்தில் தந்தை அருகிலே நிற்க, “பொண்ணை வரச் சொல்லுங்க சம்பந்தி. என் பையன் பார்க்கட்டும்…” என மாப்பிள்ளையின் அப்பா கூற, ரங்கராஜன் மனைவியைப் பார்த்தார்.

“இதோ, வர சொல்றேன்ங்க…” என்ற ராதா மனோஹரி அறைக்குள் நுழைந்தார்.

“மனோ, ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க. கொஞ்சம் சிரி டி!” என இவர் சிடுசிடுக்க, “என் மூஞ்சியே அப்படித்தான் மா!” என மனோ பல்லைக் கடித்தாள். உள்ளுக்குள்ளே பயம் நெஞ்சைக் கவ்வியது. குமரன் சரியான நேரத்திற்கு வந்து விடுவானா? மாட்டானோ? என்ற பதைபதைப்பு மனதெங்கும் வியாபித்திருந்தது. முகம் முழுவதும் வியர்வைத் துளிகள் பரவின.

“சரி, சரி… வா!” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

“நமஸ்காரம் பண்ணு மனோ!” ராதா மகள் காதில் முணுமுணுக்க, வந்தவர்களைப் பார்த்து சம்பிரதாயப் புன்னகை வீசினாள்.

மாப்பிள்ளை எனப்பட்டவனின் பார்வை இவளிடம்தான். இவளைப் பார்த்ததும் அவனது விழிகள் மின்னின. “ஹாய் மனோ!” இயல்பாய் அவன் பேச, இவள் தயக்கமாய்த் தலையை அசைத்தாள். இதுவே வேறு எது சூழ்நிலையாக இருந்திருந்தால், மதிப்பு கொடுத்திருக்கமாட்டாள். ரங்கராஜன் என்ற ஒரு வார்த்தை அவளைக் கட்டிப் போட்டிருந்தது.

“எங்களுக்குப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. முன்னாடியே சொன்னதுதான்ங்க.
வரதட்சணை எதுவும் நாங்க பெருசா எதிர்பார்க்கலை. உங்க இஷ்டம்!” பேச்சு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர, மனோஹரியின் பார்வை நொடிக்கு ஒருமுறை வாயிலை அடைந்து மீண்டன. சில நிமிடங்களிலே மூச்சிரைக்க குமரன் உள்ளே நுழைந்திருந்தான். அவனைக் கண்டதும்தான் இவளுக்கு உயிரே வந்திருந்தது‌.

‘இவன் எதுக்கு இங்க வந்தான்?’ ராதாமணி அதிர்ந்து கோபமாய்ப் பார்க்க, அனைவரின் பார்வையும் அவனிடம்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top