காதல் 8.2

அருகில் இருந்த குரு எந்தவித எண்ணமும் இன்றி அலைபேசியில் யாரிடமோ தொழில்சம்மந்தமாக பேசி கொண்டிருந்தான்.

எண்ணங்களில் உழன்றவள் திரும்பி அவனை பார்க்க பேசி கொண்டு இருந்தவன் அவளது பார்வையை உணர்ந்து திரும்பி,

‘என்ன’ என்று புருவம் உயர்த்த,

அதில் சுயம் பெற்றவள், “ம்ஹூம்” என்று விட்டு மீண்டும் சாரளத்தின் வழியாக வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

இது மகிழினியுடைய முதல் மகிழுந்து பயணம். பெற்றோர் உயிருடன் இருக்கும் போது செழியன் மகிழுந்து வாங்கி எல்லோரும் ஒன்றாக வெளியே சென்று வர வேண்டும் என்று பல முறை கூறியிருக்கிறான்.

மகிக்கும் மகிழுந்து வாங்கி குடும்பமாக கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று கொள்ளை ஆசை இருந்தது. ஆனால் மகிழுந்து பயணத்தை எல்லாம் அவள் உணரும் நிலையில் இல்லை.

எழிலையும் கவினையும் பார்த்துவிட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

அலைபேசியில் பேசி முடித்தவன் திரும்பி,

“என்ன மகிழினி எதாவது வேணுமா?” என்று வினவ,

அவனது வினாவில் ஒரு நொடி திகைத்தவள் பின்னர், “இல்லை எதுவும் வேணாம்” என்று தலையை இடம் வலமாக அசைக்க, அவன் மீண்டும் தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மகிழுந்து வீட்டினை அடைய இருவரும் கீழே இறங்கினர்.

அடுத்த கணம் குருவின் கை மகியின் கரத்தை பிடித்து கொண்டது.

இதனை ஓரளவு எதிர்பார்த்து இருந்ததால் அவள் அதிகமாக அதிரவில்லை. இருந்தும் குளிர்பதனியினால் சில்லிட்டிருந்த கையில் மெலிதான நடுக்கம்.

அதனை உணர்ந்தவன் சற்று அழுத்தமாக அவளது கையை பிடித்தான்.

மனதிற்குள் இந்த பெண் ஏன் இந்த சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் பயந்து நடுங்குகிறாள் என்று எண்ணியவனுக்கு புரியவில்லை பெண்ணின் உணர்வுகள் மிக நுண்ணியவை என்று.

ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றனர்.

உள்ளே நுழைந்ததும் குருவின் தந்தை ராஜ சேகர் புகைப்படத்தின் முன் வணங்கிவிட்டு பின்னர் விளக்கை ஏற்றி கடவுளையும் வணங்கிவிட்டு அமர்ந்தனர்

பிறகு பாலும் பழமும் கொடுக்கும் சடங்கு நடைபெற்றது.

குரு, “ம்மா எதுக்கு இதெல்லாம்” என்று மறுக்க,

“பிரசாத் இப்படிலாம் பேச கூடாது. இதெல்லாம் வழி வழியா வர்ற சடங்கு” என்று அதட்டி அவனிடம் பாலை நீட்ட இரு மிடறு விழுங்கியவன் மகிழிடம் அதனை கொடுக்க, குவளையை வாங்கியவளின் கரத்தில் மட்டுமல்ல இதயத்திலும் சிறிதான நடுக்கம் பிறந்தது.

தன்னுடைய வீட்டிலே யார் வைத்த மீதத்தையும் சாப்பிட்டு பழகாதவளுக்கு அந்த பாலை அருந்துவது அவ்வளவு பெரிய விடயமாக இருந்தது.

உறவுக்கார பெண்மனி ஒருவர், “என்னம்மா பொண்ணு ரொம்ப நேரமா பாலை கையிலே வச்சிருக்க. சீக்கிரமா குடிமா” என்க,

ஒருகணம் குருவின் புறம் பார்வை சென்றது. குருவும் அமைதியாக இவளை தான் பார்த்திருந்தான்.

வேறுவழியில்லை நாய் வேடம் போட்டாயிற்று குரைத்து தான் ஆக வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிவிட்டு கடகடவென்று அந்த பாலை விழுங்கிவிட்டாள்.

அந்த கணம் உள்ளுக்குள் பெரும்பாறை ஒன்று கனத்தது. அடுத்து கொடுக்கப்பட்ட பழத்தையும் சகித்து உண்டு முடித்தவளது விழிகள் இளையவர்களை தான் தேடியது.

ஆனால் காணவில்லை எங்கு சென்றார்கள் என்று வேறு யோசனை பிறந்தது.

கோதை, “ரெண்டு பேரும் எழுந்து போய் மகி வீட்ல இருக்க அவங்க அம்மா அப்பா போட்டவ கும்பிட்டு வாங்க” என்றிட,

மகிழுக்கு இந்த ஒப்பந்த திருமணத்திற்கு இதெல்லாம் தேவைதானா என்று தான் தோன்றியது.

என்னவோ இப்படி ஒரு செயலை துணிந்து செய்த பிறகு தாய் தந்தையர் முகத்தை ஏறிட்டு பார்க்க அவளுக்கு துணிவில்லை‌.

இருந்தும் அமைதியாக இருவரும் அந்த வீட்டை நோக்கி சென்றனர். ஆச்சரியமாக குரு இன்று எதற்கும் பெரியதாக கோபப்படாது நடந்து கொண்டிருந்தான்.

இருவரும் வீட்டை அடைய வீடு ஏற்கனவே திறந்திருந்தது. மகிழ் யோசனையுடன் உள்ளே நுழைய அங்கே தான் அகில், கவின் மற்றும் எழில் மூவரும் இருந்தனர்.

‘இவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள்’ என்று நினைத்த மகி அதனை கேட்க வர,

“அகில் நீங்க ஏன் இங்க இருக்கிங்க?” என்று குரு கேட்டிருந்தான்.

அகில், “அது வந்து மாமா” என்று தயங்க,

“என்ன வந்து போய் இனிமேல் அதுதான் நம்ம வீடு நீங்க அங்கதான் இருக்கணும்” என்றவன்,

“புரிஞ்சுதா?” என்க,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தான் அகில்.

இதனை மகி தான் ஆச்சர்யத்துடன் பார்த்தாள். தான் கேட்போம் என்று நினைத்தவள் மறந்தும் குரு இவ்வாறு பேசுவான் என்று எண்ணவில்லை.

அதுவும் இத்தனை உரிமையாக என்று அவளுக்குள் வியப்பு தான். அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறையினை வைத்து எங்கே தன்னை சார்ந்தவர்களையும் அப்படி நடத்திவிடுவானோ என்று உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை இனியும் நடக்காது என்று உள்ளே சிறிது நிம்மதி எழுந்தது.

அவன் பேசி முடித்ததை உணர்ந்தவள்,

“அதோ அந்த ரூம்ல தான் அம்மா அப்பா போட்டோ இருக்கு” என்று கை காண்பிக்க இருவரும் அந்த புகைப்படம் முன் நின்று வணங்கினர்.

மகிழுக்கு பெற்றவர்களது புகைப்படத்தை காணவே குற்றவுணர்வாக இருந்தது. மனதிற்குள் மன்னிப்பை மானசீகமாக வேண்டி கொண்டாள்.

அறையில் இருந்து வெளியே வந்த கணம்,

“அகில் வீட்டை லாக் பண்ணிட்டு எங்களோடவே வா” என்றிட,

அவனும் தலையசைத்து விட்டு வீட்டை பூட்ட

கவின், “ம்மா தூக்கு” என்று அவள் மீது தொற்றி கொண்டான்.

எழில், “ம்மா நானு” என்று அவளது கையை பிடித்து கொண்டாள்.

இருவருக்கும் குருவை கண்டு ஏதோ சிறிய அச்சம் இருந்தது. குருவும் சிறியவர்களிடம் ஏதும் பேசவில்லை.

அவர்கள் வீட்டினுள் வந்ததும் கோதை மகியை ஒரு அறையில் ஓய்வெடுக்க கூறிட விட்டால் போதுமென்று இளையவர்களுடன் சென்றுவிட்டாள்.

அவர்கள் இருவரையும் அருகில் உறங்க வைத்தவளுக்கு தான் உறக்கம் சிறிதும் அண்டவில்லை‌. இருந்தும் விழி மூடி படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் உறக்கத்தை தழுவி இருந்தாள்.

சிறிது நேரத்தில், “அண்ணி அண்ணி” என்று குரல் அருகில் கேட்க,

சிரமப்பட்டு விழிகளை பிரித்தாள். எதிரில் அம்மு,

“அண்ணி அம்மா உங்களை எழ சொன்னாங்க. எழுந்து குளிச்சிட்டு இதெல்லாம் போட்டுக்குவிங்களாம்” என்று கூற,

சம்மதமாக தலையசைத்தவள் திரும்பி பார்த்தாள். அதில் புதிய பட்டு சேலை நகை என்று நிறைய இருந்தது.

பார்த்தவுடன் புரிந்து போனது உள்ளுக்குள் சிறிதான கலக்கம் தான்.

எல்லாவற்றையும் கடந்து தான் ஆக வேண்டும் என்று மனதிற்குள் கூறியவள் எழுந்து குளித்து அவர்கள் கொடுத்த உடையை மாற்றிவிட்டு நகைகளையும் அணிந்து கொண்டாள்.

கண்ணாடியில் தன்னை பார்க்க நகைக்கடை பொம்மை போலவே இருந்தது மகிக்கு. அவள் தயாராகும் சமயம் இளையர்கள் எழுந்து கொள்ள அவர்களை அம்முவும் ஷர்மியும் பார்த்து கொண்டனர்.

இரவுணவை முடித்த பிறகு அகிலன் இளையவர்களை ஏதோ கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.

error: Content is protected !!
Scroll to Top