“ஏங்க, வந்து சாப்பிடுங்க. ஏன் வாசலையே பார்த்திட்டு இருக்கீங்க?” என்ற குரலுக்கு பதிலாக குமரன் உள்ளே வந்து கொண்டிருந்தான். ரங்கராஜன்தான் குமரனை வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.
“வா குமரா!” அவனை வரவேற்றவருக்குத் தலையசைப்பை மட்டும் பதிலாய்க் கொடுத்தான். மனோஹரியின் செவியிலும் தந்தை பேச்சு விழ, அவளது கவனம் மொத்தமும் இங்கே குவிந்தது.
“இங்க வந்து உட்காரு குமரா!” தன்னருகே உள்ள இருக்கையைக் கை காண்பித்தார் பெரியவர்.
“பரவாயில்லை சார், இருக்கட்டும்!” அவன் மறுக்க, கையைப் பிடித்திழுத்து அருகே அமர்த்தினார். அவனது முகத்தைத் தயக்கமாய்ப் பார்த்தவரை குமரன் அமைதியாய் நோக்கினான்.
“குமரா, இனி நீ வேலைக்கு வர வேணாம். சொந்தத் தொழில் எதாவது பண்ணு…” என்ற ரங்கராஜனின் குரலில் ஏகத்தயக்கம். அவரது பேச்சில் இவனுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. இதை எதிர்பார்த்து தானே வந்தான். அதனால் பெரிதாய் அவனை எதுவும் பாதித்து விடவில்லை.
“ஓகே சார்!” தலையை அசைத்து அவர் கூற்றை நொடியில் ஏற்றுக் கொண்டான். ஆனால், இவருக்கு குற்ற உணர்வு அரித்தது.
“என்னை மன்னிச்சுடு குமரா. என் பொண்ணு விஷயத்துல நான் சுயநலவாதியாவே இருந்துட்டுப் போறேன். எனக்கு என் குடும்பக் கௌரவம் முக்கியம்…” என்றவர் மேற்கொண்டு பேசும் முன், கையை நீட்டித் தடுத்துவிட்டான் குமரன். அவரை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதிலும் கௌரவம் என்னும் வார்த்தை இவனை கீழிறக்குவது போலிருக்க, இறுகிப் போய்விட்டான்.
“நான் கிளம்புறேன் சார்!” குரலில் இறுக்கத்துடன் பேசியவனைத் தடுத்த ரங்கராஜன், “குமரா, நான் பேசுனதைத் தப்பா எடுத்துக்காத டா. ஒரு தனி மனுஷனா எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனால், உங்கப்பாவோட பையனா என்னைக்கும் பிடிக்காது. என்னை நீ புரிஞ்சுப்பன்னு நம்புறேன்!” என்றவர் தவிப்பாய் அவனது கையைத் தடவும், இவன் உடல் தளர்ந்தது. அந்த முகத்தில் கண்ட தவிப்பும், பாவனையும் இவனது கோபத்தை அமிழ்ந்து போகச் செய்திருந்தது. ஏனோ இந்த மனிதரிடம் அவனால் அத்தனை எளிதில் கோபம் கொள்ள முடிவதில்லை.
மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “சார், நீங்க இவ்வளோ எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உங்க நிலைமை எனக்குப் புரியுது. நானா இருந்தாலும், இந்த முடிவைதான் எடுத்திருப்பேன்!” குமரனின் வார்த்தைகளை கேட்ட ரங்கராஜனுக்கு அப்படியொரு ஆசுவாசம் பிறந்தது. அந்நொடி அவரது மனதிலிருந்த கவலை பாதியாய் கரைந்திருந்தது.
அவனது தலையில் நேசத்துடன் கரத்தை வைத்தவர், “நல்லா இரு குமரா! நானா போக சொல்ற வரை என்னைவிட்டுப் போக மாட்டேன்னு சொன்ன வார்த்தையை நீ காப்பாத்திட்ட. ஆனால், என்னால காப்பாத்த முடியலை!” உணர்ச்சிவசப்பட்டு பேசியவரை இவன் உணர்வில்லா முகத்துடன் பார்த்திருந்தான்.
நேற்று பார்த்தவர்தான் இவரா? என சந்தேகிக்கும் அளவிற்கு ரங்கராஜன் உடைந்து போயிருந்தார். அவனுக்கும் தெரியுமே! அவருடைய ஜாதி பற்றும், தன் தந்தைக்கும் அவருக்கும் இடையேயான பனிப்போரைப் பற்றியும். மனோஹரியின் பேச்சும் செயலும் அவரை வருத்தியிருப்பதை நினைத்ததும், ஏனோ இவனுக்கு அவள்மீது கோபம் வந்தது. முதலாளி என்பதைத் தாண்டி ரங்கராஜனுக்கும் அவனுக்கும் இடையேயான பந்தம் உறவுகளுக்கு அப்பாற்பட்டதாகிற்றே!
அவரது கையைத் தன் தலையின் மீதிருந்து எடுத்தவன், “சார், விடுங்க…” என அந்தப் பேச்சை முறித்தான்.
“ராதாமணி, டேபிள்ல ஒரு கவர் வச்சிருக்கேன் பாரு. அதை எடுத்துட்டு வா!” என மனைவியை நோக்கிக் குரல் கொடுத்தார் ரங்கராஜன். அவர் கணவர் கூறிய நெகிழிப்பையை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அகல, “குமரா, இந்தப் பணத்தை வச்சுக்கோ. சொந்தமா பிஸ்னஸ் பண்ணு!” என அவன் கைகளில் பணத்தை திணித்தார் ரங்கராஜன்.
அந்தப் பணத்தை ஒரு முறை பார்த்தக் குமரன், அவரது கைகளிலே திருப்பிக் கொடுத்தான். “வேணாம் சார். இந்தப் பணத்தைக் கொடுத்து, எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு பார்த்தீங்களா?” என மறுத்தவன் குரல் அதை ஏற்கமாட்டேன் என உறுதியாய் வெளிவந்தது.
இருவரது உரையாடலையும் கேட்ட வண்ணமிருந்த மனோஹரியின் இதழ்கள் கேலியாய் வளைந்தன.
‘செஞ்ச தப்பிற்கு பிராய்ச்சித்தம் செய்கிறாரோ?’ என எண்ணி நகைத்தாள்.
“குமரா, பணம் வேணாம்னா, வேற என்ன வேணும் சொல்லு. உனக்குன்னு இதுவரை நான் எதுவுமே செஞ்சது இல்லை. என்ன வேணுமோ கேளு!” என்றவரின் வார்த்தைகளில் இவனுக்கு இளம்புன்னகை.
சில வருடங்களுக்கு முன்பொருமுறை இருவருக்கும் இடையே இதே போலொரு உரையாடல் நிகழ, “அதான் தொழில் கத்துக்கிட்டல்ல மேன். அப்புறம் என்ன, நீயா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்றது!” என சிரிப்புடன் கேட்டவரிடம் இவன் புன்னகைத்தான்.
“நீங்களா போக சொல்றவரை உங்களைவிட்டுப் போக மாட்டேன்!” என்றிருந்தான் குமரன். அவனது பதிலில் பெருமிதமாய் உணர்ந்தவர், “எனக்கும் உன்னை விட்ற ஐடியா இல்லை குமரா!” என ஆர்பாட்டமாய் சிரித்திருந்தார் ரங்கராஜன்.
“உனக்குன்னு எதாவது வேணுமா குமரா, சொல்லு!” இதே கேள்வியை அன்றும் அவர் கேட்டிருக்க, எப்போதும் அவனது பதில் இதுவாகத்தான் இருந்தது
அந்த சிரிப்பை அவரது முகத்தில் தேடித் தோற்றவன், “எதுவுமே கேட்கத் தோணலை சார். கேட்க நேரமோ, காலமோ வந்தா, கேட்குறேன்!” என எழுந்து நின்றான்.
“குமரா, உனக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளு!” என்றவருக்கு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவன், “உங்கப் பொண்ணுக்கிட்டே ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும் சார்!” என இவன் கேட்க, மனோஹரி செவியிலும் அது விழுந்தது. ராதாமணி கணவரைப் பார்த்து வேண்டாம் என தலையை அசைக்க, “பேசிட்டு வா குமரா!” என இவர் அனுமதியளித்திருந்தார். அதில் மனைவி இவரை முறைத்து வைத்தார்.
சரியென்ற குமரன் மனோஹரியின் அறைக்குள் நுழைந்தவன், ‘என்ன செய்கிறாள் இவள்?’ என அவளது செயலில் திகைத்துப் போனான்.
உள்ளம் கேட்கும்…