காதல் 8.1

காதல் 8:

“அண்ணி பொண்ணை அழைச்சிட்டு வர சொல்றாங்க” என்று அம்மு வந்து நிற்க,

அழகுகலை நிபுணர், “இதோ ஒன் மினிட்மா” என்றுவிட்டு மகிழை எழுந்திருக்க கூறியவர் அவளுடைய சேலையின் மடிப்புகளை நன்றாக இழுத்து விட்டு சரி செய்தார்.

பின்னர் சுற்றி வந்து ஒரு முறை கண்டவர்,

“ஹ்ம்ம் எல்லாம் ஓகே உங்களுக்கு ஸ்வெட் ஆனா இதை வச்சு ஒத்தி எடுங்க.‌ ரொம்ப அழுத்தி துடைக்க வேணாம்” என்று ஒரு சிறிய துணியை நீட்டினாள்.

சம்மதமாக தலையசைத்த மகிழினி அடர் கத்தரி பூ நிறத்தில் கற்கள் பதித்த பட்டு சேலையும் அதற்கு பொருத்தமாக அதே நிறத்தில் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளும் அணிந்து பார்க்க அத்தனை அழகாக இருந்தாள்.

எல்லாம் அழகுகலை பெண்ணின் கைவண்ணம் தான். இதற்கு அப்பெண்ணிற்கு பல ஆயிரங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்று அவளுக்கு புரிந்தது.

இவ்வளவு நகைகளும் இந்த உடையும் அதோடு சேர்த்த இந்த அழகு பூச்சும் சேர்த்து தான் ஒரு பொம்மை போலவே அவளுக்கு தோன்றியது.

கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்தவளுக்கு இது தான் தானா என்று கூட சந்தேகம் எழுந்தது.

“க்கா வாங்க போகலாம்” என்று ஷர்மி கூற,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து வெளியே வர ஆயத்தமாக ஷர்மியும் விஷாலியும் ஆளுக்கொரு புறம் வந்து மகிழை அழைத்து சென்றனர்.

வெளியே மண்டபத்தில் ஆட்கள் ஆங்காங்கே குழுமியிருந்தனர். இவள் வெளியே வந்ததும் பலருடைய பார்வையும் மகிழ் மீது தான்.

புரோகிதர் அக்னி குண்டத்தில் முன் மந்திரங்களை கூறி கொண்டிருக்க அவரது முன்புறம் கத்தரிபூ நிறத்தில் கரை வைத்த வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த குருவின் இதழ்களில் மெல்லிய கீற்றாய் புன்னகை‌ வீற்றிருந்தது.

மகிழ் மெதுவாக நடந்து சென்று அவனருகில் அமர்ந்தாள். இதோ இன்னும் சிறிது நேரத்தில் தன்னுடைய வாழ்வு தலைகீழாக மாறப்போவது அவளுக்கு தெரிந்திருந்தது.

குருவுடன் சேர்ந்து புரோகிதர் கூறியபடி அனைத்தையும் செய்து கொண்டிருந்தவளின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள்.

என்னதான் திருமணம் செய்ய நாட்டமில்லை என்று கூறினாலும் அவளுக்கென்று ஒரு சில ஆசைகள் முன்பே இருந்தது.

நேசம் அழகான உணர்வு அது தனக்கு ஒருவர் மேல் பூக்க வேண்டும் அவரும் தன் மேல் நேசங்கொண்டு தன்னை தாங்க வேண்டும்.

தாய் தந்தையரை போல தானும் ஒரு உண்மையான நேசத்தில் தன்னை தொலைத்து அழகான வாழ்வை வாழ வேண்டும் அத்தனை ஆசை கனவு எல்லாம் இருந்தது. ஆனால் எல்லாம் இப்போது கானல்நீராய் மண்ணோடு மண்ணாக போகிறது.

போகட்டும் எதுவும் வேண்டாம் தனக்கு இனி. தன்னை சார்ந்தவர்களுக்காக தானே இப்படி ஒரு முடிவு. இதன் பின்னர் இந்த விடயத்தை பற்றி சிந்திக்கவே கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து கொண்ட கணம்

புரோகிதர், “இந்தாங்கோ இந்த மாங்கலயத்தை பொண்ணு கழுத்தில கட்டுங்கோ” என்று மாங்கல்யத்தை குருவின் கையில் கொடுத்தார்.

குரு பிரசாத் மகிழினியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி மனையாக்கி கொண்டான்.

அடுத்து கணம், “ஹே…” என்று கூச்சலுடன் இளைய பட்டாளம் ஆர்ப்பரித்து அட்சதையை அவர்கள் மேல் தூவினர்.

மாங்கல்யத்தை அணிவிக்கும் நொடி மகியின் விழிகள் ஒரு நொடி குருவிடம் தான் நிலைத்தது. அவனும் மகியை தான் ஒரு கணம் கண்டான்.

அகிலன் தான் தமக்கையின் வாழ்வு சிறந்துவிட்டதை விழிநீரை சுண்டிவிட்டபடி கண்டான். அவனுக்கு வாழ்வில் இருந்த ஒரு பெரிய வருத்தம் நீங்கியது.

தங்களால் தான் தமக்கை தனக்கொரு வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லையோ என்ற மனக்கவலை அவனை சில நாட்களாக அரித்து கொண்டிருந்தது. இப்போது அது இருந்த இடம் தெரியாமல் போனது.

எழிலும் கவினும் கூட சிரிப்புடன் ஆர்ப்பரித்து தங்களது குட்டிகைகளில் அட்ச‌‌தையை அள்ளி தூவினர்.

பிறைசூடனுக்கும் கோதைக்கும் மனது நிறைந்து போனது‌. எப்படியோ ஒரு வழியாக குருவை சம்மதிக்க வைத்து திருமணத்தையும் முடித்தாயிற்று என்று நிம்மதி ஜனித்தது.

அடுத்தடுத்து சடங்குகள் நல்லபடியாக நடந்துமுடிய காலை மற்றும் மதிய உணவை முடித்துவிட்டே வீடு திரும்பினார்கள்.

மகிழினிக்கும் குரு பிரசாத்திற்கும்‌ தனியாக ஒரு மகிழுந்து ஏற்பாடு செய்திருக்க அதில் தான் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

மகிக்கு காலையில் இருந்து அந்த கணமான மாலையை கழுத்தில் போட்டிருந்தது கழுத்து வேறு வலித்தது.

இதில் எழிலையும் கவினையும் விட்டு வந்தது வருந்த செய்தது. பெற்றோர் விட்டு சென்ற பிறகு மகி அவர்கள் இருவரையும் பெரியதாக பிரிந்து இருந்தது இல்லை. எப்போதும் தன் கைக்குள்ளே தான் வைத்து கொள்வாள்.

இப்போது அகில் பார்த்து கொள்கிறான் தான் ஆனாலும் கடந்த மூன்று நாட்களாக அவர்களுடன் அதிக நேரம் இருக்க முடிவதில்லை.

error: Content is protected !!
Scroll to Top