திவாருக்கு அடுத்தப்படியாக குமரனை வைத்திருந்தார். அப்படியிருப்பவனை வேண்டாம் எனத் தூக்கியெறிவது அத்தனை சுலபமாய் இல்லை பெரியவருக்கு. எந்தத் தொழில் என்றாலும், கட்சிக் கூட்டம், கட்சிப்பணி, பிரச்சனை என எதுவாக இருந்தாலும், அவருக்கு முன்னே குமரனின் நிழல் அங்கே சமீபித்திருக்கும். எல்லாவற்றையும் பொறுமையாய் அலசி ஆராய்ந்து எது தங்களுக்கு ஒத்து வரும் என கண்ணும் கருத்துமாய் இருப்பவனை இழப்பது அவருக்கு ஒரு கையையே எடுத்துவிடுவதற்கு சமம்தான்.
இனிமேல் எல்லா பொறுப்புகளையும் திவாகரைக் கவனிக்கச் சொல்லிவிட்டு, இவர் மேற்பார்வைப் பார்க்கலாம் என மனதில் ஆயிரம் எண்ணங்கள். அதற்கு உயிர்க் கொடுக்கும்போது என்னென்ன பிரச்னைகள் எழும் என இவருக்கும் புரிந்தது. இருந்தும், இது இப்போது கசப்பான மருந்தாய் இருந்தாலும், பிற்காலத்தில் மகன் தனியாளகத்தானே எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். இப்போதிருந்தே கற்றுக்கொண்டால் அது நிர்க்கதியில்லாத காலத்தில் பேருதவியாய் இருக்கும். அவனும் யாரையும் எதிர்பார்த்து நிற்கத் தேவையில்லை என எண்ணி பெருமூச்சை வெளிவிட்டார்.
மனோவின் விருப்பத்தை அவரால் நிச்சயமாக நிறைவேற்ற முடியாது. பணம், படிப்பு, அந்தஸ்திற்கு என அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டு குமரன் சொக்கநாதனின் குடும்ப வாரிசு என்ற காரணமே அவரை யோசிக்க விடாது, மகளிடம் மறுப்பைத் தெரிவிக்க வைத்திருந்தது. அவுமில்லாது குமரன் தங்களை விட கீழ் ஜாதி என ரத்தத்திலே ஊறிப்போன ஜாதி வெறி குமரனை இனிமேலும் உடன் வைத்துக்கொண்டால், ஆபத்தென அறிவுறுத்த, இஷ்டமின்றி முடிவெடுத்திருந்தார் பெரியவர்.
“இல்லை ராதா, அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் சரியா வராது. வேற ஏதாவது யோசிக்கணும்!” ரங்கராஜன் உடனடியாய் மறுத்துவிட்டார்.
“பின்னே எது சரிவரும்னு நினைக்குறீங்க? உங்க மக அந்த ஒன்னுமில்லாத குமரனை கல்யாணம் பண்ணீட்டு வந்து நிக்கிற வரைக்கும் அமைதியா இருப்பீங்களா?” ராதா எரிச்சலாகக் கேட்டார்.
“ராதா, நம்ம புள்ளையைப் பத்தி என்ன பேசுற நீ!” என அதட்டினார். மகள் அப்படியெல்லாம் எந்தக் காலத்திலும் செய்யமாட்டாள் என உள்மனம் அடித்துக் கூறியது.
“ப்ம்ச்… என்ன செய்யமாட்டா. உங்க மக ரொம்ப அழுத்தமா இருக்கா. அவளைப் பத்தி உங்களுக்கே தெரியும். விஷயம் கையை மீறிப் போறதுக்கு முன்னாடியே நம்ம அவளுக்கு கல்யாணம் பண்றது நல்லது. ஊர்க்குள்ள விஷயம் கசிஞ்சா, நம்ம மானம்தான் போகும்…”
“ராதா, கண்டிப்பா மனோ அப்படியெல்லாம் பண்ணமாட்டா. நம்மளை மீறி அவ ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டா. இப்போ கூட குமரனை உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணி வைங்கன்னுதான் கேட்டா. ஓடிப்போய் கல்யாணம் பண்றவ, நம்மகிட்ட வந்து கேட்டுட்டு இருக்க மாட்டா!” ரங்கராஜன் மனைவியைக் குற்றம் சாட்டினார். மகளைப் பேசுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனோஹரியைப் பற்றிய அவரது கணிப்பு இந்த வகையில் நூறு சதவீத உண்மை என அவளின் பேச்சில் உணர்ந்திருந்தார்.
“என்ன உங்க மக மேல அப்படியொரு நம்பிக்கை. இதோ, இப்போ இவனைப் பிடிச்சிருக்குன்னு நம்மகிட்ட சொல்றவ, நாலு பேர்கிட்ட சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்?” ரங்கராஜனை முறைத்த ராதாமணி, “அந்தக் குமரனுக்குப் பொண்ணைக் கொடுக்கலாம்னு முடிவு எதுவும் பண்ணிட்டீங்களா என்ன?” என கண்கள் இடுங்கக் கேட்டார்.
அந்தக் கேள்வியே தனக்குப் பிடிக்கவில்லை என முகத்தைச் சுளித்தவர், “என்ன பேச்சு இது ராதா, அப்படியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. அந்த எண்ணமும் இந்த ஜென்மத்துல வராது. குமரன் என்னோட விஸ்வாசி, அதுக்காக வேற ஜாதிகாரனுக்கு அதைவிட, சொக்கனோட மகன் அவன். அவனுக்குப் போய் என் பொண்ணைக் கொடுக்குறதா?” எனக் கூறிய ரங்கராஜனின் முகமே கசப்பை விழுங்கியது போலானது. அவரால் அப்படியொரு முடிவை மனம் உவந்து செய்ய முடியாது.
“அப்புறம் யோசிக்க என்ன இருக்கு? மொத அந்தக் குமரன் பையனை வேலைக்கு வர வேணாம்ன்னு சொல்லிடுங்க. அவன் மேல தப்பு இல்லைன்னாலும், இதுக்கும் மேல உங்க மக சும்மா இருக்கமாட்டா. அவன் கூட வேலைக்குப் போய்ட்டு வர பொம்பளைப் பிள்ளையை அனுப்புனப்பவே எனக்கு நெருடலா இருந்துச்சு. ஆனாலும், உங்க மக அவன்கிட்ட ஒருநாளும் சிரிச்சு பேசுனதில்லை. முறைச்சுட்டே தானே இருக்கான்னு மடச்சி மாதிரி ஏமாந்திருந்திருக்கேன் நானு!” ராதாமணிக்கு மனதே ஆறவில்லை.
தங்கள் பெண்ணை அத்தனை பக்குவம் பார்த்து வளர்த்து பெரிய படிப்பு படிக்க வைத்து, நல்ல சம்பந்தமாகத் தேடி சீரும் சிறப்புமாய் திருமணத்தை முடிக்கலாம் என எண்ணியிருக்க, இவள் என்னவென்றால் தங்கள் நினைப்பை மொத்தமாய் நெருப்பிலிட்டுப் பொசுக்கப் பார்க்கிறாளே என்ற ஆதங்கம். அது தந்தக் கோபம் வார்த்தைகளில் கொட்டினார்.
தங்கள் வசதி, ஜாதி, அந்தஸ்து என எதிலுமே பொருந்தாத, தங்களிடம் வேலை பார்க்கும் ஒருவனைக் கை நீட்டி கரம் பிடிக்க வேண்டும் என்று கூறியவளை அப்போதே கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு. கணவரின் வார்த்தைக்காக அமைதி காத்தார்.
குமரன் மீது அவருக்கு நல்லெண்ணம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், மனோவின் செயலில் அவன் மீது இவருக்குக் கோபம் வந்தது. அவனை வீட்டில் சேர்த்திருக்கக் கூடாது என மனம் அடித்துக் கொண்டது.
ரங்கராஜனின் முகம் மனைவி பேசியதின் விளைவால் யோசனையில் சுருங்கி விரிந்தது.
“யோசிக்க எதுவும் இல்லங்க. இந்த மாதிரி விஷயத்துல சமயோகிதமா சிந்திக்கிறதுதான் நல்லதுங்க. இல்ல, நிலைமை கையை மீறிப் போய்டும்…” என்றவர், “போன முறை விஷேசத்துல பார்த்தப்பவே உங்க ஒன்னுவிட்ட அக்கா நிர்மலா பையனுக்கு இவளைக் கேட்டாங்களே! உங்களுக்கு நியாபகம் இருக்கா? நீங்கக் கூட மக ஒரு வருஷம் வேலை பார்க்கட்டும்னு கல்யாணம் பண்ற நினைப்பு இல்லைன்னு தட்டிவிட்டீங்களே!” என அன்றைய நிகழ்வை ரங்கராஜனுக்கு விளக்க முயன்றார்.
“ஆமா ராதா, அவங்களுக்கு என்ன இப்போ?” இவர் கேள்வியாய்ப் பார்த்தார்.
“அவங்களுக்கு ஒன்னும் இல்லை. இப்போ போன வாரம் கூட சந்தையில பார்த்தேன். மறுபடியும் பொண்ணு கேட்டாங்க. எனக்கு அவங்க பையனை பிடிச்சிருந்தது. டாக்டருக்குப் படிச்சிருக்கான். நல்ல விதமாத்தான் தெரியுது. விசாரிச்சுப் பாருங்க. எல்லாம் ஒத்து வந்தா பேசி முடிக்கலாம்…” என்றார்.
“ராதா, முதல்ல மனோகிட்ட பேசணும், பேசி புரிய வைக்கணும். என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா!”
“அவகிட்ட சொன்னீங்க, வர்றவங்களை உள்ள கூட விடமாட்டா, பார்த்துக்கோங்க. அவங்க வரட்டும். பார்த்துட்டு போனதும், பேசி முடிவு பண்ணிக்கலாம். முதல்ல நீங்க யார்கிட்டயாவது சொல்லி, அந்தப் பையனை பத்தி விசாரிக்க சொல்லுங்க…” என்ற ராதா, கணவர் கையிலிருந்தக் குவளையை வாங்கிக்கொண்டு நகர்ந்தார்.
மாடியில் நின்று கொண்டிருந்த மனோஹரி பெற்றவர்களைத்தான் பார்த்திருந்தாள். அவர்கள் பேசுவது இவளது செவிகளை எட்டவில்லை. ஆயினும் தன்னைப் பற்றிய பேச்சுதான் அங்கே நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது.
இரவு உணவுண்ண மனோஹரி வரவேயில்லை. மற்ற மூவரும் மேஜையில் அமர்ந்திருந்தனர். “திவா, மனோவை சாப்பிடக் கூட்டீட்டு வா!” ரங்கராஜன் யோசனைப் படிந்த முகத்துடன் கூற, இவன் தங்கை அறைக்குச் சென்றான்.