உள்ளம் – 6.3

“மனோ, அப்பா உன்னை சாப்பிடக் கூப்ட்டாரு. ஏதோ பேசுவார்னு நினைக்கிறேன். நீ வா…” திவாகர் தந்தையைக் கணித்தவனாகப் பேச, அவளும் அவரிடம் பேச வேண்டும் என எழுந்து முகம் கழுவி வந்தாள். அழுதழுது முகம் வீங்கி விழிகள் சிவந்திருந்தன. காலையில் பின்னிய கூந்தல் இப்போது கலைந்து போயிருக்க, அதை லேசாய் சரிசெய்தவாறே உணவு மேஜையில் அமர்ந்தாள்.

ராதாமணி மகளுக்கு உணவைப் பரிமாறினாலும், அவரது முறைப்பு அவளைத் தொடர்ந்தது. அதையெல்லாம் மனோ லட்சியம் செய்யவில்லை. உணவைக் கைகளில் அளந்தவள், தந்தையே நிமிர்ந்து பார்த்தவாறு இருந்தாள்.

“என்ன கேட்கணும் மனோ?” முன்பிருந்த அக்கறையும் கனிவும் அவரது குரலில் இல்லை. இறுகிப் போனது போல அமர்ந்திருந்தார். மகளின் செயல் அவரது பொறுமையை, நிதானத்தை இழக்க வைத்திருந்தது. அமைதியாய்ப் பேசினால், அவளது அடமும் அழுத்தமும் இன்னும் கூடிப் போய்விடும் என கட்டுப்படுத்தியிருந்த கோபத்தை வார்த்தைகளில் உமிழ்ந்தார்.

“உங்களோட முடிவு என்னப்பா?” மனோஹரி தந்தை முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். குரலில் இப்போது லேசானத் தயக்கம். அவரது தளர்ந்த தோற்றமும் உடலும் இவளை நிதானம் கொள்ளச் செய்தது. ஆயிரம் இருந்தாலும் அவளுடைய நேசத்திற்குரிய தந்தையாகிற்றே. அவரைப் பேசிவிட்டு அறைக்குள் சென்று இவள் உகுத்த உவர்நீர் தலையணை மட்டுமே அறிந்த ரகசியம். மேலும் அவரை வருத்த வேண்டாம் என குரலில் கவலையுடன் கேட்டாள்.

“என்ன முடிவெடுக்க சொல்ற மனோ? நீ சொன்னதும் சரின்னு சொல்லி, குமரனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீயா?” குரலில் சீற்றத்துடன் கேட்டார் ரங்கராஜன். இத்தனை நடந்தும் இந்தப் பெண் எதையும் லட்சியம் செய்யாமல், அர்ஜூனனுக்கு பட்சியின் விழிகள் மட்டும்தான் குறிக்கோள் என்பதைப் போல குமரனைப் பற்றியே பேசுவதில் அவருக்குக் கோபம் சுறுசுறுவென பொங்கத் துவங்கியது.

இவளது விழிகள் லேசாய் பனித்தன தந்தையின் சுடுசொற்களில். இதுவரை மனோவிடம் பாச முகத்தை மட்டுமே காண்பித்த ரங்கராஜனின் மற்றொரு முகமும் குரலும் அவளை கலங்கச் செய்தன. “இதுதான் உங்களோட முடிவா பா?” இவள் முகத்தை நிமிர்த்தி, விழிகளை சிமிட்டி உருளவிருந்த விழிநீரை உள்ளிழுத்தபடி, அழுத்தமாய்க் கேட்டாள்.

“ஆமா மனோ! இந்த எண்ணத்தை இதோட விட்டுடு. எந்தக் காலத்திலும் நான் இதுக்கு சம்மதிக்கமாட்டேன். குமரன்னு இல்லை, அந்த இடத்துல யாரா இருந்தாலும் என் பொண்ணை ஒரு வேலைக்காரனுக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன். இதுதான் இதைப் பத்தி பேசுறது கடைசியா இருக்கணும். உன்னை இதுவரை கைநீட்டி அடிச்சது இல்லை நான். அதை செய்ய வச்சிடாத!” வெகு கடுமையாய்ப் பேசினார் மனிதர். இதற்கு மேலும் இந்த விஷயத்தில் பொறுமை காப்பது கடினம் என மூளை விழிப்படைந்தது.

அவரது முகத்தின் பாவனைகளை அவதானித்தவள், “அப்போ நீங்களும் கேட்டுக்கோங்க. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது குமரனோடதான், அதுவும் உங்க சம்மதத்தோட தான் நடக்கணும். இல்ல, கடைசிவரை உங்கப் பொண்ணா இந்த வீட்லயே இருந்துடுவேன்!” என்று உறுதியாய் உரைத்துவிட்டு, உணவுண்ணாது சினத்துடன் அறைக்குள் சென்றடைந்தாள். அவளது பேச்சில் பெற்றவர்கள் ஒரு நொடி ஸ்தம்பித்துப் போயினர்.

“பார்த்தீங்களா, நான்தான் சொன்னே இல்ல? உங்க மகளுக்கு அவ்வளோ அழுத்தம். என்ன பேசீட்டு போறா பாருங்க…” ராதாமணி பல்லைக் கடித்தார்.

“ம்மா, கோபப்படாதீங்க. அவளைப் பேசி சரி பண்ணலாம்…” திவாகர் கூற, ரங்கராஜன் எதுவுமே பேசவே இல்லை. மகள் சென்ற திசையையே வெறித்தார். மனைவி கூறியது இப்போது சரியெனத் தோன்ற, நிர்மலா மகனைப் பற்றி விசாரிக்கலாம் என முடிவெடுத்திருந்தார். சின்ன பெண், பொறுமையாய் கையாளலாம் என அவர் அமைதியாயிருக்க, மனோவின் செயலும் பேச்சும் அதை தடை செய்திருந்தது.

மறுநாள் காலையில் எழுந்த மனோஹரி எதுவுமே நடவாதது போலிருந்தாள். இரண்டு நாட்கள் வேலைக்கு விடுப்பு கூறிவிட்டாள். ஏனோ மருத்துவமனைக்குச் சென்றாலும் கூட, பணியில் ஒன்ற முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. அதனாலே இந்த விடுப்பு.

வேலைக்காரப் பெண்ணிடம் தேநீர் தயாரிக்கச் சொல்லி குடித்தவள், குளித்துவிட்டு உணவுண்ண அமர்ந்தாள். ராதாமணி மகளை முறைத்துக்கொண்டே சுற்றினார்.

திவாகர் குவாரிக்குக் கிளம்பினான். எல்லாம் இயல்பாயிருந்தாலும் ஏதோ ஒன்று குறைந்தது. சம்பிரதாயத்திற்குக் கூட ஒருவர் முகத்திலும் புன்னகையில்லை. இரும்பை விழுங்கியது போலிருந்தனர். அதற்குக் காரணமானவளோ, எதையும் லட்சியம் செய்யவில்லை. ஏதோ விடுமுறை நாளில் வீட்டிலிருப்பது போலிருந்த அவளது செய்கையில் ராதாமணி கொதித்துப் போனார்.

தங்கையை யோசனையாய்ப் பார்த்த திவாகர், “மனோ, ஹாஸ்பிடல் போகலையா?” என வினவினான்.

“இல்ல திவா, ரெண்டு நாள் லீவ் சொல்லி இருக்கேன். போக மூட் இல்ல!” இவள் குரல் சோர்ந்து வந்தது.

“இனிமே இவ வேலைக்குப் போகக் கூடாது திவா. இவ வேலை பார்த்துதான் நம்ம வீட்ல நிறையணும்னு அவசியம் இல்ல. இனி எங்கப் போறதுனாலும், எங்களை கேட்காம நீ நகரக் கூடாது டி!” ராதாமணி அவளின் முன்னே வந்து கோபமாய் உரைக்க, அவரை நிமிர்ந்து விழிகள் இடுங்கப் பார்த்தவளின் வலதுகை அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்புவிடுத்தது.

“ஹலோ டாக்டர், இன்னைக்கு லீவ் சொல்லி இருந்தேன். பட், வொர்க் எதுவும் இல்லை. 12 மணிக்கு மேல வந்து ட்யூட்டில ஜாய்ன் பண்ணிக்கிறேன் டாக்டர்!” என அழைப்பைத் துண்டித்தவள், ராதாவை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தாள்.

‘நீங்கள் எந்த வகையிலும் என்னைக் கட்டுப்படுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது!’ என்றொரு பார்வை அது. ஆனால், தாய்க்கு அது அலட்சியப் பார்வையாய்த் தெரிந்தது.

“ஏன் டி கொழுப்பெடுத்த கழுதை, நான் சொல்றதை கேட்கக் கூடாதுன்னே இப்படி பண்ணுவியா?” அவர் கோபமாய் இரைய, “ராதா, அவளைவிடு. வேலைக்குப் போய்ட்டு வரட்டும்!” இத்தனை நேரம் அமைதியாய் நீள்விருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ரங்கராஜன் குரல் சத்தமாய் ஒலித்தது.

“ஏங்க, அவ பண்றதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ண போய்தான் இங்க வந்து நிக்கிது. ஒருத்தரும் என்னை இந்த வீட்ல என்னை மனுஷியா மதிக்கிறதே இல்ல. அப்புறம் எதுக்கு இந்த வீட்ல இருக்கேன் நான்?” காய்ந்தார் பெண்மணி.

திவாகருக்கு எரிச்சலாய் வந்தது. இந்த இரண்டு நாட்களில் மொத்த வீடும் தலைகீழாய் மாறியிருக்க, அவனுக்கு உவப்பாய் இல்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் தானா? என மனம் சலித்துப் போக, சரியாய் உண்ணாது கிளம்பிவிட்டான். மனோஹரி அறைக்குச் சென்றுவிட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top