“சார் அவங்க தோள்ல கையை போட்டு நில்லுங்க” என்றிட,
குரு மறுகணமே மகியை நெருங்கி தோள்மீது கையை போட்டுவிட மகிக்கு தான் அவனது திடீர் நெருக்கம் ஒரு வித அசௌகரியத்தை உண்டு பண்ணியது.
அவனுடைய நெருக்கம் அவன் மீதிருந்து வந்து வரும் வாசனை திரவியத்துடன் கூடிய அவனது வாசம் என்று எல்லாம் சேர்ந்து அவளை சற்று தள்ளி நிற்க வைத்தது.
குரு அடுத்ததாக அவளது வெற்றிடையில் கையை பதித்து அவளை தன் புறம் திருப்பியபடி நிற்க வைத்திட அவளது விழிகள் அதிர்வில் விரிந்து கொண்டது.
அந்த காட்சி அழகாக புகைப்படக் கருவியில் சிறை பிடிக்கப்பட்டது. ஆனால் மகிக்கு தான் வெற்றிடையில் பதிந்த அவனது கரத்தின் வெம்மை குளிரெடுக்க வைத்தது. சட்டென முகம் முழுவதும் வியர்த்து விட்டது.
கால்கள் கூட நடுங்கியது. வாழ்வில் முதன் முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளை நிலை குலைய செய்துவிட்டது.
அடுத்த கோணத்திற்காக அவளை திருப்ப முயற்சித்தவன் மகிழின் முகத்தை கண்டுவிட்டு,
“ஏய் மகிழினி என்னாச்சு. எதாவது பண்ணுதா?” என்று வினவ,
அவனையே ஒரு கணம் பற்றுகோலாக பற்றியிருந்தவள் சட்டென்று விலகி,
“ம்ஹூம் ஒன்னுமில்லை” என்றிருந்தாள். ஆனால் முகம் முழுவதும் சிவந்து வியர்த்திருந்தது.
“ஆர் யூ ஓகே?” என்று மீண்டும் வினவ,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் ஓரடி அவனிடமிருந்து விலகி நின்றாள்.
அதில் தான் அவனுக்கு அவளுடைய நிலை புரிபட,
‘இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ ரியாக்ட் பண்றா’ என்று மனதில் நினைத்தவன்,
“ஹே ஜெஸ்ட் ரிலாக்ஸ் இட்ஸ் ஜெஸ்ட் அ போஸ் ஓகே. டு யூ நீட் வாட்டர்” என்றவன் யாரையோ அழைத்து நீரை எடுத்து வர சொன்னான்.
தண்ணீர் வந்ததும், “ட்ரிங்க் இட்” என்று கொடுக்க நடுங்கும் கரங்களை கட்டுப்படுத்தி அதனை வாங்கியவள் மடமடவென வாயில் சரித்தாள்.
ஓரளவு பதட்டம் மற்றும் நடுக்கம் மட்டுப்பட்டது.
“இப்போ ஓகே வா?” என்று வினா தொடுக்க,
“ஹ்ம்ம்” என்று அமைதியாக தலையசைத்தாள்.
“இப்போ போட்டோ எடுக்க ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றதும் சடுதியில் அவள் முகத்தில் அச்சம்.
இப்போது குருவிற்கு சிறிதான எரிச்சல் எட்டி பார்த்தது. அவன் இவ்வளவு தூரம் பொறுமையாக பேசியதே மிகவும் பெரிய விடயம்.
அதுவும் சிறு பெண் ஏதோ பயந்துவிட்டால் என்று கருணை காட்டியிருந்தான். மற்ற நேரமாக இருந்தால் கோபத்தில் திட்டியிருந்திருப்பான்.
இப்போது நண்பர்களுடன் பேசியது என்று சற்று நல்ல மனநிலையில் இருந்தான். அதுவும் அவளது சிவந்து வியர்த்துவிட்ட முகத்தை கண்டதும் சட்டென்று கோபப்பட மனது வரவில்லை.
அதனால் தான் இத்தனை பொறுமையாக எடுத்து கூறினான்.
இப்போதும் இழுத்து பிடித்த பொறுமையுடன், “மகிழினி லுக் ஹியர் இட்ஸ் ஜெஸ்ட் அ போஸ். நான் உன்னை எதுவும் பண்ணிட மாட்டேன். லைட்டா தான் என் கை உன்மேல டச் ஆகும். வா” என்று கூற,
அவளுக்கு புரிந்தது அவன் இதுவரை பொறுமையாக பேசியதே பெரிய விடயம் என்று.
“ஹ்ம்ம்” என்று சம்மதமாக தலையசைத்தவள் வந்து அவனருகே நின்றாள்.
முன்பு போல அல்லாது சற்று மோலோட்டமாகவே அவள் மேல் கைப்படுமாறு கோணங்களில் நின்றான்.
இருந்தும் அவளுக்கு ஒரு அந்நிய ஆணின் அருகாமை அவஸ்தையை தான் கொடுத்தது. மிகவும் சிரமப்பட்டு முகம் மாறாது இருந்தாள். இவளது நிலை புரியாது புகைப்பட கலைஞர் வேறு இரண்டு மணி நேரமாக வளைத்து வளைத்து புகைப்படங்களை எடுத்து தள்ளியிருந்தார்.
மகிழுக்கு தான் உள்ளுக்குள் சிறிதான நிலநடுக்கமே தோன்றி மறைந்திருந்தது. விழிகள் கலங்கும் போல் ஆனது. பிரம்ம பிரயத்தனப்பட்டு இயல்பாக இருந்தது போல காண்பித்தாள்.
கோமதி வந்து இருவரையும் உணவுண்ண அழைக்கவும் தான் இவளுக்கு உயிரே வந்தது.
இதுதான் வாய்ப்பென்று உணவுண்ண சென்றுவிட்டாள் அதுவும் குருவுடன் தான். இனி அவளுடைய அனைத்தும் சில காலங்களுக்கு குரு என்றாகிவிட்டதே.
ஏனோ உணவும் தொண்டையில் இறங்க மறுத்தது. தனக்கு மட்டும் தான் இவனுடன் நெருங்கி நிற்பதில் இத்தனை சங்கட்டமாக இருந்ததா இவனுக்கு இல்லையா? என்று ஓரக்கண்ணால் குருவை காண அவனோ அருகில் இருந்த ஒருவருடன் ஏதோ பேசி சிரித்தபடி உண்டு கொண்டிருந்தான்.
வெளிநாட்டில் படித்து வளர்ந்தவனுக்கு இதெல்லாம் மிகவும் சாதாரணமாக தான் இருக்கும்.
காசிநாதன் வேறு வந்து சாப்பிடுங்க என்று இருவரது இலையையும் நிரப்பிவிட்டு சென்றார். அவளது மறுப்பெல்லாம் அங்கே செல்லா காசானது.
அன்றைய தினம் எப்போதடா முடியும் என்று எண்ணியிருந்தவளுக்கு ஒருவழியாக பதினொரு மணிக்கு தான் அறைக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
ஏனோ அழுக தோன்றியது. ஆனால் முடியவில்லை. அறையிலும் வர்ஷினி, ஷர்மிளா, விஷாலி எழில் மற்றும் கவின் என எல்லோருமே இருந்தனர். மகியுடன் தான் உறங்குவோம் என்று இங்கு வந்துவிட்டிருந்தனர்.
மறுநாள் அதிகாலை முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.
கோதை வந்து, “எல்லாரும் சீக்கிரமா படுங்க. காலையில சீக்கிரமா எழணும்” என்றுவிட்டு சென்றிட இவளும் குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு தானும் படுக்கையில் விழுந்தாள்.
ஆனால் உறக்கம் அண்டவில்லை. சுழலுக்குள் நுழைந்துவிட்டாயிற்று இனி அது இழுத்து செல்லும் பாதையில் தான் தான் செல்ல வேண்டும் வேறு எந்த வழியும் இல்லை என்றியவாறு உறங்கி போனவளது கன்னத்தில் கண்ணீர் தடயங்கள்…