அவளுக்கு ஏற்கனவே மகி மற்றும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். இப்போது அவர்கள் தங்கள் வீட்டிற்கே தங்களுடன் வர போகிறார்கள் என்று அறிந்தவுடன் அத்தனை குஷி.
அதிலிருந்து “அண்ணி அண்ணி” என்று மகிழ் பின்னாலேயே தான் சுற்றினாள்.
“மகிக்கா மகிக்கா” என்ற குழந்தை மனம் மாறாத குரலும் அதனை தொடர்ந்து பெரியதான மூச்சு சத்தமும் கேட்க,
மகிழுக்கு சிறிதான புன்னகை அரும்பியது. இடைப்பட்ட நேரத்தில் ஓரளவு தெளிந்திருந்தாள். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இதுதான் உன்னுடைய வாழ்க்கை என்று தனக்குத்தானே கூறி கொண்டவள் எதற்கும் பதட்டப்படாது எளிதாக கடந்துவர வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.
“என்ன ஷர்மி?” என்று திரும்ப,
“க்கா நான் உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்திருக்கேன்” என்று சிரிப்புடன் குவளையை நீட்ட,
“க்கா நான் உங்களுக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து இருக்கேன்” என்று தானும் குவளை கொண்டு வந்து நீட்டிய விஷாலிக்கும் மூச்சு வாங்கியது.
“க்கா என்னோடதை தான் பர்ஸ்ட் குடிக்கணும்” என்று ஷர்மிளா கூற,
“நோ என்னோடததை தான் குடிக்கணும்” என்று விழிகளை உருட்டினாள் விஷாலி.
இருவரது சண்டையும் கண்டு மகிழுக்கு மென்னகை எழுந்தது. இவர்கள் இருவரும் கோதையின் கணவர் ராஜ சேகரின் தங்கை கோமதியின் இரட்டை புதல்விகள்.
கோமதியின் கணவர் தான் காசிநாதன் மிகவும் நல்ல மனிதர். குருபிரசாத் பணத்தை தாண்டி மதிக்கும் ஒருவர்.
காசி தான் மகிழுக்கு தாய் தந்தையர் யாருமில்லை என்பதை அறிந்து அவளது பெற்றோர் இடத்தில் இருந்து திருமணத்தை முன்னின்று நடத்துக்கிறார்.
திருமணம் பேசி முடித்த அன்று மகிழை சந்தித்து, ‘உனக்கு பெற்றோர் இல்லை என்று வருந்தாதே இனி நாங்கள் இருவரும் தான் உன்னுடைய பெற்றோர். இந்த திருமணத்தினை பெண் வீட்டின் சார்பாக எடுத்து நடத்துவோம்’ என்று கூறியவர் தான் இன்று வரை அதனை செய்தும் காண்பித்து கொண்டிருக்கிறார்கள்.
காசிக்கு ஏற்றது போல கோமதியும் குணவதி தான். மகி தான் இந்த எதிர்பாராத அன்பில் திக்குமுக்காடி போனாள்.
என்னதான் போலியான திருமணம் என்றாலும் அதனால் கிடைத்த உறவுகள் அவளை நெகிழ செய்தது. தாய் தந்தையரை இழந்து தவித்தவளுக்கு அந்த சொந்தங்கள் அத்தனை ஆறுதலாக இருந்தது.
இது நிரந்தரமில்லை என்று தெரிந்தும் கிடைக்கும் வரை அனுபவித்து கொள்ளலாம் என்று துணிந்து இறங்கியிருந்தாள்.
“உங்க அக்காவுக்கு தான் எல்லாம் கொடுப்பிங்களா? எனக்கு இல்லையா?” என்று குரு சிரிப்புடன் வினவ,
மகிழ் அவனது புன்னகை அதிசயமாக பார்த்தாள். இவருக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா? என்று தான் அந்த நொடி தோன்றியது.
“அத்தான் உங்களுக்கு அம்மு தருவா. நாங்க எங்க அக்காவுக்கு தான் தருவோம்” என்று இருவரும் ஒரு சேர சிலுப்பி கொள்ள,
பெரியவர்கள் இருவருக்கும் புன்னகை அரும்பியது.
“ஓஹோ… அப்போ எனக்கு தர மாட்டிங்களா? சரி நான் என் தங்கச்சிக்கிட்டயே வாங்கிக்கிறேன்” என்று கூறுகையிலே,
“அண்ணி உங்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து இருக்கேன்” என்று ஒரு கையில் குவளையும் மறுகையில் அணிந்திருந்த லெஹெங்காவையும் பிடித்தபடி படி ஏறினாள் அம்மு.
“அம்மு நீயும் உன் அண்ணிக்கு தான் ஜூஸ் கொடுப்பியா?” என்று வினவ,
“ஆமா ஜூஸ் அண்ணிக்கு தான்” என்று அம்மு சிரிப்புடன் கூற,
“பார்றா எல்லோரும் இப்போவே அவளுக்கு சப்போர்ட்டா என்னை டீல்ல விட்டுட்டிங்களா?” என்று புன்சிரிப்புடன் வினவினான்.
“ஆமா…” என்று மூவரும் கோரஸாக கூற,
“பாத்துக்கிறேன் உங்களை” செல்லமாக முறைப்பை கொடுக்க,
“ஏய் வாண்டுங்களா உங்களை எங்க தேடுறது போங்க போய் சாப்பிடுங்க” என்று அவர்களிடமிருந்து பழச்சாற்றை வாங்கி இருவருக்கும் கொடுத்தார்.
அதனை வாங்கி பருகியபடி மகிழ் இளையவர்களை காண அவர்கள் இருவரும் ஏக்கமாக மகியை தான் பார்த்திருந்தனர்.
சடுதியில் அவளுக்கு என்னவோ போல் ஆக, “வாங்க இங்க” என்று இருவரையும் அருகே அழைத்தாள்.
இத்தனை நேரம் அவளது அருகில் தான் இருந்தனர். சற்று நேரத்திற்கு முன்பு தான் அவர்களை கீழே அனுப்பி இருந்தாள்.
அதுவும் கோதை தான் வாழ்த்து கூற நிறைய ஆட்கள் மேடைக்கு வந்து செல்வர். இதனால் இளையர்களுக்கு தான் தொந்திரவு என்று கீழே அமர வைத்திருந்தார்.
மகிழ் கூறியது தான் தாமதம், “மகிம்மா” என்று இருவரும் அவளது கையை பிடித்தபடி நின்று கொண்டனர்.
இருவரது முகத்திலும் அத்தனை சிரிப்பு. இவர்களுக்காக தானே இத்தனையும் எந்த காலத்திலும் இவர்களை தான் ஏங்கவிட கூடாது என்று எண்ணி கொண்டாள்.
அதன் பின்னர் சில நிமிடங்களில் அகில், “வாங்க நாம ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வரலாம்” என்று இருவரையும் அழைத்து சென்றான்.
மகிக்கு புரிந்தது அகில் அவர்களை அழைத்துச் சென்றதன் காரணம். அகில் எப்போதும் இப்படித்தான் வயதிற்கு அதிகமான மனமுதிர்ச்சியும் பக்குவமும் அவனிடம் இருந்தது.
அடுத்து தான் மகிழுக்கு சோதனை காலம் ஆரம்பமானது.
புகைப்பட கலைஞர் வந்து நல்ல வித விதமான கோணங்களில் புகைப்படம் எடுக்க துவங்கினார்.