“ஏய் மனோ, என்னடி பேசுற நீ, விளையாட்றீயா?” என ராதாமணி அதிர்ச்சியில் மகளருகே விரைந்தார். ரங்கராஜனும் கூட மனோவை அதிர்ந்துபோய் பார்த்தார். மகள் கூறியதைக் கேட்டு கிரகிக்க சில கணங்கள் தேவைப்பட்டன அந்த மனிதருக்கு.
“ச்சு… பதறாத மா! நான் சும்மா சொல்லலை. எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைங்க. எப்படியும் யாருக்கோ ஒருத்தருக்கு என்னைக் கட்டி வைக்கதானே போறீங்க? காலம் பூராம் வீட்ல ஒன்னும் வச்சுக்கப் போறதில்லையே!” எந்தவித அலட்டலுமின்றி மனோ பேசப் பேச, மற்றவர்களுக்கு வாயடைத்த நிலைதான். அத்தனை எளிதாகப் பேசுகிறாளே இந்தப் பெண் என மற்ற மூவரும் உறைந்துதான் போயினர். திருமணம் என்பது எத்தனை பெரிய விஷயம். நாள் பார்த்து, ஊர் கூடி, சொந்தங்களை அழைத்து என எத்தனையோ வரையறைகளும் வரைமுறைகளும் அடங்கியுள்ளன.
‘அதைவிட குமரன், குமரனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுப்பதா? என்ற எண்ணமே எட்டிக் காயாய் கசந்தது. அவர்களுடைய தகுதிக்கும் வசதிக்கும் அவன் எள்ளலவும் ஈடாக மாட்டேனே! எப்படி இவள் இத்தனை தைரியமாய் அலட்சியமாய்ப் பேசுகிறாள். ஒருவேளை குமரனுக்கும் இதில் பங்குள்ளதோ? அவன் கொடுத்த ஊக்கத்தில்தான் மகள் இப்படி பேசுகிறாளோ?’ பெற்ற மனம் நொடியில் பல கற்பனைகளைக் கிளைப்பரப்ப, ராதாமணி குமரனை நிமிர்ந்து பார்த்தார்.
அவனுக்கு இன்னும் அவள் பேச்சின் சாரம்சம் உறைக்கவில்லை போல. ‘என்ன உளறுகிறாள் இவள்?’ என்ற பாவனைதான் அவனிடத்தில். முகத்தில் புரியாத பாவனையுடன் நின்றிருந்தவனை ராதாமணியால் எள்ளலவும் சந்தேகிக்க முடியவில்லை.
“அறிவிருக்கா டி உனக்கு? கிறுக்கு மாதிரி பேசீட்டு இருக்க. பொறந்த நாள்னு கூடப் பார்க்காம கன்னத்துலயே நாலு வச்சிடுவேன்!” ராதாமணி பல்லைக் கடித்தார். பெற்ற உள்ளம் தவித்தது அவளது பேச்சில். மகளைப் பற்றி தாய் அறியாதது இல்லை. அவளுக்கு ஒன்று வேண்டும் என்றால், எந்த எல்லைக்குச் சென்றேனும் சாதித்துக் கொள்ளும் வகையில் சேர்த்தி. பிடிவாதமும் அடமும் அவளது பிறவிக் குணம். அதற்கு பெரியதொரு காரணம் ரங்கராஜன்தான். மகள் என்றால் அத்தனைப் பிரியம் அவருக்கு. யாரும் மகளை ஒரு வார்த்தைக் கூட பேச விடமாட்டார்.
“மனோ, நீ என்ன சொல்றன்னு புரிஞ்சுதான் பேசுறீயா?” திவாகர் கூட அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. குரலில் தங்கையின் மீதான அதிருப்தி தெறித்தது. இருவரும் அவளைத் திட்ட முனைய, ரங்கராஜன் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கும் பிரக்ஞையின்றி, திராணியற்று புறத்தூண்டல் உறைக்காது அமர்ந்திருந்தார்.
“ப்பா… உங்ககிட்ட தான் கேட்டேன். பதில் சொல்ல மாட்றீங்க?” எதுவுமே நடக்காதது போல இயல்பான பாவனை மனோவின் குரலில். தந்தையின் கையைப் பிடித்து அவரை உலுக்கினாள்.
சுயம் பெற்றவர், அவள் முகத்தைப் பார்க்காது குமரனை நிமிர்ந்து நோக்கியவர், “குமரா, நீ சூளைக்குக் கிளம்பி போ. அப்புறம் பேசிக்கலாம்…” என்றார்.
தலையை அசைத்தவன் முகத்தில் யோசனைக் கோடுகள். மனம் முழுவதும் எதிரிலிருந்தவளின் பேச்சில் அதன் சாரம்சத்தில் உறைந்திருந்தது. இப்படியொரு எணணம் என் மீது இவளுக்கு எப்போது உதித்தது. நான் எந்த வகையிலும் அவளது வழியில் குறுக்கிடவில்லையே என மூளை அவசர அவசரமாக அவளுக்கும் தனக்குமான நிகழ்வுகளை மீட்டிப் பார்த்து, தன் மீது எங்கேனும் பிழை இருக்குமோ என சீர்தூக்கிப் பார்க்கத் தொடங்கியது.
“நான் வரேன் சார்…” என்றவன் மனோஹரியின் முகத்தை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவாறு நகர்ந்திருந்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவன் முகத்திலிருந்து எதையுமே அவளால் இனம் காண முடியாது போனது.
அவன் விடை பெற்றதும் ரங்கராஜனின் பார்வை மகளிடம் குவிந்தது. “மனோ மா, என்ன சொல்ற நீ?” எனப் பொறுமையாய் வினவினார். சிறுபிள்ளை ஏதோ புரியாது பேசுகிறாள். எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வாள் என நிதானத்தைக் கையிலெடுத்தார். வயது பிள்ளைகளை இது போன்ற விஷயத்தில் திட்டித் தீர்க்கவோ, அடிக்கவோ கூடாது என அவரது எண்ணம். அப்படி செய்தால் அவர்களது எதிர்வினை எப்படியிருக்கும் என எத்தனையோ குடும்பத்தைப் பார்த்த அனுபவம் அவரை நிதானமாய் இருக்க கட்டளையிட்டது.
“ஏங்க, அவ என்ன கதையா சொல்றா. இவ்ளோ பொறுமையா கேட்டுட்டு இருக்கீங்க? பேசுறதையும் பேசீட்டு, எப்படி உக்காந்து இருக்கா…” ராதாமணி மகளை அடிக்கக் கை ஓங்க, “ம்மா… என்னம்மா நீங்க” என திவாகர் அவரை அடக்கினான்.
“ராதா, கொஞ்ச நேரம் அமைதியா இரு…” மனைவியை அதட்டிய ரங்கராஜன் மனோவின் புறம் திரும்பி அமர்ந்தார்.
“ப்பா… அதுதான் சொன்னேனே. எனக்கு குமரனைப் பிடிச்சிருக்கு. உங்க எல்லார் சம்மதத்தோட எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைங்க!” குரலில் வெகு அழுத்தம். இயல்பாய் இருப்பது போல வெளியே காண்பித்தாலும், மனதில் தந்தையின் பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியாது தவித்துதான் போனாள் பெண். ஆனால், துளி கூட அதை முகத்தில் வெளிப்படுத்தவில்லை.
ரங்கராஜனுக்கு மகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. சின்ன பெண், வயது கோளாறு, தெரியாமல் ஏதோ உளறுகிறாள் என்ற எண்ணம்தான் தந்தைக்கு. மனோ உரைத்ததை கற்பனை கூட அவர் செய்ய விரும்பவில்லை. அப்படியெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லையே என மனம் கூச்சலிட்டது.
“மனோ, குமரனோட அப்பா யாருன்னு உனக்குத் தெரியும் இல்ல. அப்புறம் எப்படி நீ இதை கேட்கலாம்…” திவாகர் அடிக்குரலில் கேட்டான். இந்தப் பெண் சொன்னதையே விதம் விதமாய் வார்த்தைகளை மாற்றிப் போட்டு எல்லோரையும் கோபம் கொள்ளச் செய்கிறாளே என அவனுக்கு சினம் மூண்டது.
“ஏன், அவர் அப்பாகிட்ட வேலைக்கு சேரும் போது, சேர்ந்து இங்க பத்து வருஷமா வேலை பார்க்கும் போது கூட அவரோட அப்பா சொக்கநாதன் அங்கிள்னு உங்களுக்குத் தெரியாதோ? இல்லை இத்தனை நாளா எனக்குத்தான் தெரியலையோ திவா?” திவாகரை நிமிர்ந்து பாரத்துக் கேட்டவளின் கேள்வி அவனைச் சுட்டது. அவள் கேட்பதின் நியாயம் உணர்ந்தவனிடம் சத்தியமாய் பதிலில்லை. மௌனமாய் தங்கையை வெறித்தான்.
“எதையும் எதையும் நீ முடிச்சுப் போட்ற டி…” ராதாமணி குரலை உயர்த்தினார்.
“ஏன் மா, ஏன் அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா என்ன? குமரனோட குடும்பத்துக்கும் நமக்கும் பிரச்சனை. அவங்க வீட்டு பையன் உங்க வீட்டு மருமகனா வரக் கூடாது. ஆனால், அதே குமரன் மட்டும் நம்ம வீட்ல பத்து வருஷத்துக்கும் மேல வேலை பார்க்கலாம். அது தப்பில்லைல?” சுரீரென மகள் கேட்ட கேள்வி ரங்கராஜனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருந்தது.
“மனோ, இது உனக்குத் தேவையில்லாதது. இந்த எண்ணத்தை நீ மறந்துறதுதான் நல்லது. இது எந்த வகையிலும் ஒத்து வராது…” ரங்கராஜன் குரல் முழுவதும் இறுக்கம். இத்தனை தூரம் இவள் யோசித்திருப்பாள் என அவர் எண்ணியிருக்கவில்லை.
“ஏன் பா ஒத்து வராது. அதெல்லாம் ஒத்து வரும், வரணும். பத்து வருஷமா அவரோட உழைப்பை எல்லாம் இந்த வீட்ல ஏத்துப்பீங்க. அவரோட என் கல்யாணத்தை மட்டும் ஒத்துக்க மாட்டீங்க. ஆனாலும் இந்த விஷயத்துல நீங்க ரொம்ப பெரிய சுயநலவாதி பா!” மனோஹரியின் குரலில் சீற்றம் நிரம்பியிருந்தது.
நீள்விருக்கையிலிருந்து எழுந்து நின்றவள், “உங்களுக்கு நியாபகம் இருக்கா பா. ஒருநாள் குமரன் என்னோட மகன் மாதிரின்னு ஒரு வார்த்தை நீங்க சொல்லி இருந்தீங்க. அது வெறும் வாய் வார்த்தைக்குதானே?” எள்ளலாகக் கேட்டாள்.
“மனோ, அதை நான் என் மனசுல இருந்துதான் சொன்னேன்...” மறுநொடி ரங்கராஜன் உறுதியாய் உரைத்தார். அது வெறும் வாய் வார்த்தையன்று. முழு மனதாகத்தான் குமரனை மகன் போலென்று கூறியிருந்தார்.