காதல் 7.1

காதல் 7:

“என்ன மகிழ் யோசனை மோதிரத்தை போடும்மா” என்ற கோதையின் குரலில் தனது சிந்தையில் இருந்து சுயநினைவை அடைந்தவள் தன்னெதிரில் கடல் வான நிறத்தில் ஷெர்வானி அணிந்து புன்னகையுடன் நிற்பவனை விழி உயர்த்திப் பார்த்தாள்.

அவனது முகத்தில் எந்தவித கலக்கமும் இல்லை. அல்லது அவ்வாறு நன்றாக நடிக்கிறானா என்று தெரியவில்லை. தானும் இதில் நடிக்கத்தான் வேண்டும் என்று நினைத்து அவனது விரலில் நடுங்கும் கரங்களால் மோதிரத்தை அணிவித்தாள்.

பதிலுக்கு அவனும் மோதிரத்தை அணிவிக்க வர தன்னுடைய நடுகத்தை மறைந்தபடி அவனிடம் கரத்தை நீட்ட அவன் எந்த மாறுதலும் இன்றி மோதிரத்தை அணிவித்துவிட,

“ஹே….” என்று அங்கே இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்தது.

“கங்கிராட்ஸ் குரு கங்கிராட்ஸ் மகிழினி…” என்று சத்தம் வேறு ஆங்காங்கே வந்தது.

மகிழினி ஒரு அமைதியான புன்னகையுடன் ஏற்க குருவும் இதழ் தாண்டா புன்னகையை சிந்தினான்.

அது ஒரு சிறிய திருமண‌‌ மண்டபம் ஆயினும் சற்று ஆட்கள் அதிகமாகத்தான் வந்திருந்தனர்.

இன்று குரு பிரசாத்திற்கும் மகிழினிக்கும் நிச்சயம். நாளை காலை திருமணம்.

மோதிரத்தை மாற்றி கொண்டதும் ஒவ்வொருவராக மேடை ஏறி வந்து வாழ்த்துக்களை கூற துவங்கினர்.

மேடையில் இருந்தாலும் மகிழினியின் பார்வை அவ்வபோது அகிலன் அருகில் அமர்ந்திருந்த எழில் மற்றும் கவின் மீது தான் இருந்தது.

இருவரும் கையில் ஒரு சிறிய இனிப்பை வைத்து உண்டபடி‌ இருந்தனர். அருகில் இருந்த அகிலனது விழிகளில் தான் லேசான நீர்ப்படலம்.

முகமெங்கும் அத்தனை மகிழ்ச்சி பிரதிபலித்தது. பின்னே இருக்காதா? நடக்குமா நடக்காதா? என்று எண்ணியிருந்த தமக்கையின் திருமணம் இப்போது கைக்கூடி வந்துவிட்டதே.

அதுவும் அகிலனது முன் மாதிரி நாயகன் குரு பிரசாத்துடன் அல்லவா. சிறு வயதில் இருந்தே அகிலுக்கு குரு மீது பிரம்மிப்பு தான்.

இத்தனை சிறிய வயதில் எப்படி அவ்வளவு நிறுவனங்களை வெற்றி கரமாக நடத்தி வருகிறார் என்று பலமுறை அவனை வியந்து பார்த்திருக்கிறான்.

அதுவும் அவனது உடை நடையில் இருக்கும் திமிர் கம்பீரம் எல்லாம் சேர்த்து அகிலை குருவிற்கு ஒரு விசிறியாகவே மாற்றியிருந்தது.

நிறைய முறை குரு அலுவலகம் கிளம்பி செல்லும் போது அவனுக்கு தெரியாமலே மறைந்து நின்று பார்த்திருக்கிறான்.

அவனை பார்க்கும் ஒவ்வொரு முறையும் குருவை போலவே ஆக வேண்டும் உத்வேகம் எழும். அதற்காகவே குருவை அடிக்கடி பார்ப்பான்.

இப்போது அந்த நாயகனே தனது தமக்கையின் கணவர் தனக்கு மாமா என்று எண்ணும் போது அத்தனையாய் மகிழ்ச்சியாக இருந்தது.

தாங்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வரன் இது. குருவிற்கு தனது தமக்கையை பெண் கேட்கிறார்கள் என்று அறிந்ததும் அகிலுக்கு தலைகால் புரியவில்லை.

எங்கே தமக்கை தங்களை நினைத்து மறுத்துவிடுவாளோ என்று பயந்து அவள் எண்ணத்தை தெரிவிக்கும் முன்பே இது போல ஒரு வாழ்க்கையை நாம் கனவிலும் எண்ணி பார்க்க முடியாது. அதுவும் குரு போன்றவரை எல்லாம் எங்கும் தேடி கண்டறிய இயலாது என்று பலவாறு கூறி சம்மதத்தை பெற்றிருந்தான். இல்லையில்லை பெற்றதாக அவன் எண்ணியிருந்தான்.

அகிலனது முகத்தினை கண்ட மகிக்கு தான் குற்றவுணர்வு மேலோங்க முகத்தை திரும்பிக் கொண்டாள்.

என்றாவது ஒரு நாள் உண்மை தெரிய வரும்போது அகில் நிச்சயமாக தன்னை மன்னிக்க மாட்டான் என்று தெரியும். ஆனால் அது வரும் போது பார்த்து கொள்வோம் என்று மனதை தேற்றி கொண்டு தான் இந்த முடிவிற்கு வந்திருந்தாள்.

“மகி எதாவது குடிக்க கொண்டு வர சொல்லவாம்மா?” என்று கோதை வினவ,

“இல்லை இருக்கட்டும் அத்தை” என்று மறுத்துவிட்டாள்.

“சரிம்மா எதாவது வேணும்னா என்ன கூப்பிடு. இங்க தான் சொந்தகாரங்களை கவனிச்சிட்டு இருப்பேன்” என்று நகர்த்திட்டார்.

மகிழ் சம்மதம் கூறி இருபது நாட்கள் கடந்திருந்தது. குரு மகிழை காண்பித்த நொடி கோதைக்கு ஏக போக அதிர்ச்சி தான்.

காரணம் மகிழினி பெண் என்பதால் அல்ல. தன்னுடைய மகனுக்கு ஒரு பெண்ணை பிடித்துள்ளதா அதனையும் தன்னிடம் கூறிவிட்டானே என்ற வியப்பு தான். எப்போதும் வேலை வேலை என்று ஓடி கொண்டு இருப்பவன் கருத்தில் ஒரு பெண் விழுந்திருக்கிறாள்.

அதுவும் தங்களது விருந்தினர் மாளிகையில் குடியிருக்கும் மகிழினியை பிடித்துள்ளதா என்பதில் தான்.

அதிர்ச்சி எல்லாம் ஒரு நொடி தான் அதன் பிறகு அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகன் திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான் அதுவும் மகிழினி போன்ற ஒரு நல்ல பெண்ணை பிடித்திருக்கிறது என்னும் கூறிவிட்டான்.

கோதை அவள் வந்த நாளில் இருந்தே மகிழினியை கவனிக்கிறாரே இப்படி ஒரு அமைதியா குணமான பெண் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாள்.

பணம் அந்தஸ்து அதெல்லாம் அவரது சிந்தைக்கு எட்டவே இல்லை. மிகவும் மகிழ்வுடன் பிறைசூடனிடம் இதனை தெரியப்படுத்த அவருக்கும் இதில் ஏக மகிழ்ச்சி தான்.

பிறை சூடனுக்கும் மகிழினி மீது நல்ல எண்ணமும் பிரியமும் இருந்தது. மறுநாளே மணிமாறனிடம் பேசி மகிழினியை சம்மதிக்க வைக்க கூறினார். இருவருக்கும் ஜாதகமும் நன்றாக பொருந்தி போனது.

மணிமாறனது பேச்சை மகிழ் கேட்கவில்லை என்றால் என்ன செய்வது என்று எண்ணிய கோதை நேரடியாக தானே மகிழை சந்தித்து பேசினார்.

மகிழை தன் பெற்ற மகள் போல பார்த்து கொள்வதாக கூறினார். எழில் மற்றும் கவினும் இனி அவர்களது பொறுப்பு. அகிலையும் தாங்களே படிக்க‌ வைப்பதாக கூறினார்.

ஏற்கனவே சம்மதத்தை தெரிவிக்கும் எண்ணத்தில் இருந்தவள் கோதையிடம் சம்மதத்தை கூறியிருந்தாள். அதன் பிறகு எல்லாம் தடபுடல் தான்.

குரு எதனையும் ஆடம்பரமாக செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டிருந்தான். இருந்தும் சிறிது ஆடம்பரமாக தான் செய்தனர்.

எங்கே குரு மனது மாறிவிடுவானோ என்று அஞ்சி அடுத்த இருபதாவது நாளே திருமண நாளை குறித்திருந்தார்.

மகிழினியை அழைத்து சென்று நகை புடவை என்று நிறைய வாங்கி கொடுத்தார்.‌ மகிழ் வேண்டாம் என்று மறுத்தும் நிறையவே வாங்கி இருந்தார்.

இந்த திருமணத்தில் அதிகமாக மகிழ்ந்த மற்றொரு ஆள் வர்ஷினி தான்.

error: Content is protected !!
Scroll to Top