ஆனால் அகில் இவ்வளவு உறுதியாக கூறிவிட மனது
கலங்கி நின்றாள். விழிகள் வேறு கலங்கி தொலைத்தது.
இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அகிலின் காயம் வேறு மனக்கண்ணில் தோன்ற தான் இவர்களை சரியாக பார்த்து கொள்ளவில்லையோ…?
தன்னால் இவர்களை பார்த்து கொள்ள இயலாதோ? தந்தையின் ஆசைப்படி அகிலை மருத்துவருக்கு படிக்க வைக்க முடியாதோ என்று மனது துடித்தது.
அழுகையை அடக்கி கொண்டு அறைக்கு வந்துவிட்டாள். விடிய விடிய இதே சிந்தனை தான் அகிலை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தான் மறுநாள் முழுவதும் போராடினாள்.
ஆனால் அகிலனோ இம்மியும் அசைந்தானில்லை. மகிழுக்கு அவனை சம்மதிக்க வைக்க முடியாது என்று புரிந்து போயிற்று.
வேறுவழியின்றி அகிலனிடம் வீட்டை விற்க வேண்டாம் தான் வேறு எங்காவது பணத்திற்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறேன். நீ கல்லுரியில் சேருவதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி கூறி சம்மதிக்க வைத்திருந்தாள்.
அவனை சம்மதிக்க வைத்தாயிற்றே தவிர பணத்திற்கான மாற்று வழிதான் எங்கேயும் இல்லை.
எந்தபுறம் சென்றாலும் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. மறுநாள் இரவும் யோசித்து யோசித்தே உறக்கம் பறிபோனது.
இரண்டாவது நாள் காலை வேறுவழியின்றி குருவின் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கூறுவோம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
வேண்டாம் என்று கூற எண்ணியிருந்த என்னை மறுநாளே சம்மதம் கூற வைக்கிறதே இந்த விதி என்று உள்ளுக்குள்ளே நொந்து கொண்டாள்.
ஆனால் இப்போதைக்கு இது தான் தன்னுடைய இறுதி வாய்ப்பு இதனை நழுவ விட்டால் அகிலனை நிச்சயமாக மருத்துவம் படிக்க வைக்க இயலாது என்று இந்த முடிவை கையில் எடுத்திருந்தாள்.
பிறை சூடனுக்கும் பூங்கோதைக்கும் துரோகம் இழைக்கிறோமோ என்று மனது அடித்து கொண்டது ஆனால் தனக்கு வேறு எந்த வழியும் இல்லை சூழ்நிலை கைதியாக நிற்கிறோம் என்று தனக்குத்தானே சமாதானம் கூறி கொண்டு தாய் தந்தையர் முன்பு நின்று மன்னிப்பையும் கேட்டுவிட்டு குருவிடம் சம்மதத்தை கூற அலுவலகம் சென்றிருந்தாள்.
தன்னை மீறி அனைத்தும் நடக்கிறது அதன் போக்கிலே செல்வோம். இதன் மூலம் அகிலனது வாழ்வு சிறப்பாக அமையும். அவன் முன்னேறிவிட்டால் எழிலயும் கவினயும் நன்றாக பார்த்து கொள்வான். தன்னுடைய வாழ்வு என்ன ஆனால் என்ன? என்று பலவாறாக சிந்தித்து கொண்டாள்.
இனி அகிலன் விருப்பபட்டது போல தமிழ்நாட்டிலே மிகப்பெரிய மருத்துவ கல்லூரி வர்ஷினி சேர்வதாக கூறியிருந்தாலே அதிலே அங்கேயே சேர்த்துவிடலாம்.
தான் திருமணத்திற்கு சம்மதித்தால் குரு வெளிநாட்டில் கூட படிக்க வைப்பதாக கூறினாரே நிச்சயமாக இந்த கல்லூரியில் சேர்த்துவிடுவார் என்று முடிவிற்கு வந்துவிட்டாள். ஆனால் சில கேள்விகளை தெளிவு படுத்த வேண்டியிருந்தது. அதற்காக தான் அவன் முன்பு இப்போது அமர்ந்திருந்தாள்.
இரண்டு நிமிடங்கள் கடந்தும் மகிழ் பேசாதிருப்பது குருவின் பொறுமையை சோதிக்க,
“மிஸ் மகிழினி எனக்கு நிறைய வொர்க் இருக்கு” என்று கைக்கடிகாரத்தை பார்த்தான்.
அதிலே அவன் கூற வந்த மற்ற விடயங்கள் மகிழுக்கு புரிந்துவிட,
“சார் நான் எனக்கு…” என்று இழுத்தவள் ஒரு கணம் விழிகளை மூடி திறந்துவிட்டு,
“நான் என் முடிவை சொல்றதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சில க்ளாரிபிகேஷன் வேணும்?” என்றிட்டாள்.
குரு ‘கேள்’ எனும்விதமாக பார்த்து வைக்க,
“இப்போ இந்த அக்ரிமெண்ட் மேரேஜ்க்கு என்ன அவசியம்? ஐ மீன் நீங்க ஏன் இப்போ இந்த அக்ரிமெண்ட் மேரேஜ் முடிவுக்கு வர காரணம்?” என்று வினவ,
குருவிற்கு அந்த நொடி நிச்சயமாக அவளிடம் பதில் கூற விருப்பம் இல்லை. ஆனால் சூழ்நிலையின் காரணமாக பதில் அளித்தான்.
“எனக்கு ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருக்கு” என்று தொடங்கி வீட்டில் நடந்தது வரை கூறி முடித்தவன் அடுத்து என்ன தெரிய வேண்டும் என்பதாய் அவளை கண்டான்.
அவன் கூறியதை கேட்ட மகிழுக்கு இதற்கு ஒப்பந்த திருமணம் தான் ஒரே தீர்வா.
வீட்டில் தன் காதலை பற்றி பேசி புரிய வைக்கலாம் அல்லது ஹனியின் வீட்டில் பேசலாம் என்று பலவாறாக எண்ணம் வந்தது.
அதெல்லாம் தனது முதலாளியிடம் கேட்க முடியாதே என்று நினைத்துவிட்டு,
“இதுக்கு ஐ மீன் இந்த அக்ரிமெண்ட் மேரேஜ்க்கு என்னை ஏன் சூஸ் பண்ணிங்க?” என்று வினா எழுப்ப,
நேற்றே காரணத்தை கூறிவிட்டேனே இருந்தும் இன்று மீண்டும் கேட்கிறாளே என்று சிறிது எரிச்சல் படர்ந்தாலும்,
“நீ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியால இல்லைன்றதை தாத்தா அம்மாக்கிட்ட சொல்லும் போது கேட்டேன். அண்ட் தென் உன் தம்பி எஜிகேஷனுக்காக நீ லோன் அப்ளை பண்ணி இருந்தது தென் வீட்டை சேல் பண்ண போறதா எனக்கு நியூஸ் வந்தது. அப்போ நான் என்னோட பிளான்க்கு ஒரு ஆளை தேடிட்டு இருந்தேன். அதுவுமில்லாம நீ என்னோட கன்ட்ரோல்ல என் கம்பெனில ஒர்க் பண்ற வொர்க்கர். அக்ரிமெண்ட் ஓவர் ஆன பின்னாடி வேற யாராவதா இருந்தா எதாவது கேம் ஆட சேன்ஸ் இருக்கு. பட் யூ காண்ட்” என்று நீளமாக சொல்லி முடித்தான்.
அதாவது நீ என்னுடைய கட்டுப்பாட்டில் வேலை செய்யும் பணியாளர் என்னை மீறி உன்னால் ஏதும் செய்ய இயலாது என்ற மிரட்டல் இருந்தது.
அவன் கூறுவதை கேட்டு முடித்த மகிழ் எல்லாவற்றையும்
ஆராய்ந்து தான் குரு தன்னை தேர்ந்தெடுத்துள்ளான் என்று புரிந்தது.
ஒரிரு விநாடி அமைதிக்கு பின்னர்,
“நான் உங்க அக்ரிமெண்ட்க்கு சம்மதிக்கிறேன்” என்று கூறி முடித்தவளுக்கு இதயத்தின் ஓரம் கீறல்.
அடுத்த கணம் குருவின் இதழ்களில் இகழ்ச்சி புன்னகை தோன்றி மறைந்தது. அவனது பணத்திற்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை என்று மீண்டும் அடித்து கூறியது.
மகிழுக்கு அவன் புன்னகை எல்லாம் கருத்திலே பதியவில்லை. சம்மதம் கூறியாயிற்று அடுத்து என்ன நடக்கும் என்பது தான் சிந்தனையாக இருந்தது.
“ஓகே நான் அக்ரிமெண்ட் ரெடி பண்ணிட்டு உங்ககிட்ட இன்பார்ம் பண்றேன். தென் நெக்ஸ்ட் ப்ரசீட் பண்ணலாம். யூ கேன் லீவ் நவ்” என்று முடித்துவிட, சரியென தலையசைத்து விட்டு வந்து தனது வேலையில் ஆழ்ந்தாள்.
குரு அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை துரிதப்படுத்தினான். இந்த விடயம் குரு, மகிழ் மற்றும் கரண் மூவரை தவிர யாருக்கும் தெரியவிடவில்லை அவன்.
அன்றைய பொழுது ஒருவாராக கடக்க குரு பணியை முடித்துவிட்டு வீட்டை அடைந்திருந்தான்.
அடுத்து தாயிடம் எப்படி இதனை கூறுவது என்ற யோசனை தான். தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணை தனக்கு பிடித்துள்ளது திருமணம் செய்து வையுங்கள் என்று தனது தாயிடம் தன்னால் எப்படி கூற இயலும் என்று தான் யோசித்து கொண்டிருந்தான்.
கோதையும் அவனுடைய முடிவிற்காக தான் அவனது முகத்தையே இரண்டு நாட்களாக பார்த்து கொண்டிருந்தார்.
இரவுணவை முடித்தவன் தனிமையில் தாயிடம் பேச எண்ணி,
“ம்மா ரூம்க்கு பால் எடுத்துட்டு வாங்க. நான் உங்ககிட்ட பேசணும்” என்றிட,
“சரிப்பா” என்றவரது முகத்தில் அத்தனை ஆனந்தம். மகன் தனது முடிவை கூற போகிறானே என்று.
எப்படியும் நல்ல முடிவை தான் கூறுவான் என்று அவருக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.
அறையின் பால்கனி கம்பியை பிடித்து வானத்தை வெறித்து கொண்டிருந்தவன் எப்படி தெரிவிப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
“பிரசாத்…” என்றபடி அறைக்குள் வந்த கோதை அவன் பால்கனியில் நின்றிருப்பதை கண்டு அவனருகில் சென்றவர்,
“இந்தாப்பா உனக்கு பிடிச்ச மாதிரி பாதாம் பிஸ்தா எல்லாம் போட்டு பால் காய்ச்சி எடுத்திட்டு வந்திருக்கேன்” என்று சிரிப்போடு கூறினார்.
அதனை வாங்கி ஒரு மிடறு விழுங்கியவன் தாயை கண்டான்.
“என்னப்பா ஏதோ பேசணும்னு சொன்ன?” என்க,
“ஹ்ம்ம் சொல்றேன்” என்றவனுக்கு வார்த்தை தான் வரவில்லை.
பார்வையை அங்குமிங்கும் அலையவிட்ட போது தான் தோட்டத்தின் அருகில் நிலாவின் வெளிச்சத்தில் நின்றிருந்த மகிழினி பட்டாள்.
சட்டென தாயின் புறம் திரும்பியவன்,
“ம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்க,
கோதையின் முகத்தில் ஆயிரம் மத்தாப்புக்கள் மகிழ்ச்சியாய் பூத்ததது.
“ஆனால்…” என்று இழுக்க,
“என்னப்பா?” என்றவருக்கு சிறிது அச்சம் தான் மகனை நினைத்து.
தாயை திரும்பி நேருக்கு நேராக பார்த்தவன்,
“பட் பொண்ணு அதோ அவளா இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று விட்டு மீண்டும் பாலை பருக துவங்கிட,
அவன் காண்பித்த திசையில் நின்றிருந்த மகிழினியை கண்டு ஏகமாக அதிர்ந்து, “என்ன?” என்றிருந்தார்.