இன்னும் அகில் வந்திருக்கவில்லை என்று நினைவு வர பதட்டம் சூழ்ந்தது. தனது அலைபேசியை எடுத்து கொண்டவள் கதவை லேசாக சாற்றிவிட்டு வந்து அவனுக்கு அழைப்பு விடுத்தபடியே தெருவில் எட்டிப்பார்க்க.
அந்த இருட்டில் மெல்லிய தெருவிளக்கின் ஒளியில் சற்று சோர்வடைந்து ஓய்ந்து போன தோற்றத்தில் நடந்துவரும் தமையனை காணும் நொடி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
விழிகளில் பாதி உறகத்துடன் நடந்து வந்தவன் தமக்கையை கண்டதும முகத்தில் இருந்த சோர்வை மறைத்து புன்னகைக்க முயன்றான்.
ஏனோ அந்த நொடி விழிகள் கலங்கியது. தான் இவர்களை சரியாக கவனித்து கொள்ளவில்லையோ…? தன்னால் அது இயலவில்லையோ…? மனது கலங்கியது.
சடுதியில் விழிநீரை உள்ளிழுத்து கொண்டவள்,
“என்ன அகி இவ்ளோ லேட் ஆகிடுச்சு?” என்று வினவ,
“இன்னைக்கு பார்ட்டில ஆளுங்க கொஞ்சம் அதிகமா வந்துட்டாங்க கா. அதான் லேட் ஆகிடுச்சு. சாரிக்கா என்னால உன் தூக்கமும் கெட்டு போகுது” என்று வருந்தினான்.
அக்கணம் ஏனோ கண்கள் மீண்டும் கலங்கியது. அதனை மிகவும் முயன்று மறைத்து,
“சரி மார்னிங் பேசிக்கலாம். போய் படு” என்றவள்,
“சாப்பிட்டியா?” என்க,
“ஹ்ம்ம் சாப்பிட்டேன்கா. குட்நைட்” என்று அறைக்குள் நுழையும் போது தான் அவனது கையை மறைத்து கொண்டே செல்வது போல தோன்றியது.
“அகி நில்லு” என்று கூற,
“என்னக்கா” என்று திரும்பியவன் இப்போதும் கையை பின்புறம் மறைத்து வைத்திருக்க,
“ஏன் கையை மறைச்சு மறைச்சு வைக்கிற?” என்று வினவ,
“ஒன்னுமில்லை கா” என்றவனது முகத்தில் பதட்டம்.
“இல்லையே உன் முகமே சரியில்லையே?” என்று படக்கென்று அவனது கையை தன்புறம் இழுத்துவிட்டவள் கையில் இருந்த கட்டை கண்டு அதிர்ந்து,
“அகி என்னாச்சு ஏன் இவ்ளோ பெரிய கட்டு” என்று வினவும் முன் விழிகள் நிறைந்திருந்தது.
“ப்ச் க்கா பாத்திரத்தை தூக்கி வைக்கும் போது தெரியாம கையில கிழிச்சிடுச்சு. சின்ன காயம் தான். இதுக்கு போய் கண்கலங்கிட்டு இருக்க” என்று சமாதானம் கூற,
“எது இது சின்ன காயமா? எவ்ளோ பெரிய கட்டு போட்டிருக்கு. பாத்து செய்யமாட்டியா? இதுக்கு தான் உன்னை எந்த வேலைக்கும் போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா?” என்று கடிந்தவளுடைய கண்ணீர் தான் குறையவில்லை.
“க்கா நான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போகும் போது எதாவது அடிப்பட்டா என்ன பண்ணுவ வேலைக்கு போக வேணாம்னு சொல்லுவியா? இட்ஸ் ஜெஸ்ட் ஆன் ஆக்சிடென்ட்” என்று மொழிய,
“நீ என்ன சொன்னாலும் நான் உன்னை வேலைக்கு விட்ருக்க கூடாது. என் மேல தான் தப்பு. இனிமேல் நீ வேலைக்கு போக கூடாது” என்று கூறிவிட,
“க்கா எல்லாத்தையும் தூக்கி உன்மேலயே போட்டுக்காத. என்னோட கேர்லெஸ்னால தான் இது நடந்திருச்சு. இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்கிறேன்” என்று சமாதானம் கூற,
“நோ இனி நீ என்ன சொன்னாலும் நான் உன்னை வேலைக்கு போக விட மாட்டேன். ஈவன் காலேஜ் போன பிறகு கூட நீ பார்ட்டைம் போக கூடாது” என்று கண்ணீரை துடைத்தபடி உறுதியாக மொழிந்தாள்.
“க்கா புரியாம பேசாத. நீ ஒரே ஆளே எல்லாத்தையும் எப்படி சமாளிப்ப. கம்பெனில வாங்குற லோன் வீட்டு மேல வாங்குற லோன் இதெல்லாம் எப்படி அடைக்கிறது. நானும் பார்ட்டைம் போய் எதாவது இயர்ன் பண்ணாதான் சீக்கிரம் கடன் அடைக்க முடியும்” என்று விளக்க
,
“எந்த கடனையும் அடைக்க தேவையில்லை. நான் லோன் எதுவும் வாங்கலை. வீட்டை விற்க போறோம்” என்று நடந்தவற்றை சொல்லிவிட,
கேட்ட அகிலின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் பரவியது.
“அக்கா என்ன சொல்ற? வீட்டை நம்ம வீட்டை விற்க போறியா?” என்று நம்ய இயலாது வினவ,
“ஹ்ம்ம் ஆமா…” என்று அழுகையை அடக்கி கூறினாள்.
நொடியில் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன்,
“உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? நம்ம வீட்டை நம்ம அப்பா அம்மா அண்ணா அண்ணியோட வாழ்ந்த வீட்டை விற்கப்போறேன்னு சொல்ற” என்று சினத்துடன் வினா தொடுக்க,
“நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதைவிட்டா நமக்கு வேற ஆப்ஷன் இல்லை” என்று விளக்கினாள்.
“வேணாம் நம்ம வீட்டு வித்துதான் இந்த படிப்புனா எனக்கு இந்த படிப்பு வேணாம். நான் காலேஜ் ஜாயின் பண்ணலை. இன்ஜினியரிங் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்க,
“அகி புரியாம பேசாத. நம்ம அம்மா அப்பா இருந்திருந்தா கூட இந்த முடிவை தான் எடுத்திருப்பாங்க. அப்பா ஆசைய நிறைவேத்த வேணாமா?” என்று இயம்ப,
“வேண்டாம். இல்லாத அவங்க ஆசைக்காக இருக்க உங்களை நடுத்தெருவில நிக்க வைக்க நான் விரும்பலை. சாரிக்கா. நான் இதுக்கு எப்பவும் சம்மதிக்க மாட்டேன். வீட்டை விற்க சைன் போடவும் மாட்டேன். என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாத” என்று அறைக்குள் நுழைந்து கதவை மூடி கொண்டான்.
அகிலின் செயலில் மகிழ் தான் தான் அதிர்ந்து நின்றுவிட்டாள். அகில் முதலில் கோபப்படுவான் பிறகு சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள்.