காதல் 6.1

காதல் 6:

குருவின் வார்த்தைகளை கேட்ட மகிழிக்கு தான் ஏகமாய் அதிர்ச்சி உள்ளிறிங்கியது.

என்னவோ இத்தனை பெரிய விடயத்தை இவ்வளவு சாதரணமாக அவன் கூறிவிட்டு செல்வான்
என்று அவள் துளியும் எதிர்ப்பார்க்கவில்லை.

திருமணம் அதுவும் ஒப்பந்த திருமணம் கதைகளில் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஒன்று இப்போது தன் முன்னாடியே பேசப்படுகிறது. அதுவும் தன்னை கொண்டு.

அவளுக்கு சில நிமிடங்கள் எதுவும் உறைக்கவில்லை. குரு கிளம்பு என்று கூறியதும் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல எழுந்து தன்னிடத்திற்கு வந்துவிட்டாள்.

ஏதும் செய்ய தோன்றவில்லை மனதிற்குள்,

‘நீ என்னை மேரேஜ் பண்ணிக்கணும் அதுவும் அக்ரிமென்ட் மேரேஜ்’ என்ற குருவின் வார்த்தைகளே எதிரொலித்தது.

ஏனோ அந்த வார்த்தைகள் அத்தனை உவப்பாய் இல்லை.

“மகிழ் மகிழ்… உன்னை எத்தனை டைம் கூப்பிட்றது” என்று தோழி அவந்திகா தோளை உலுக்கிய பிறகு தான் தன்னிலை அடைந்தவள்,

“ஹான் என்ன அவந்திகா என்ன கேட்ட?” என்று வினவ,

“என்ன பகல் கனவா? எவ்ளோ டைம் கூப்பிட்றது” என்று அலுக்க,

“சாரி ஏதோ திங்க்கிங்ல இருந்துட்டேன். சொல்லு அவந்திகா என்ன விஷயம்?” என்று வினவ,

“மனோகர் சார் ஈவ்னிங்க்குள்ள சேலரி ரிப்போர்ட்ஸ லீவ் கால்குலேட் பண்ணி பைனலைஸ் பண்ண சொன்னாரு. நீ லீவ் ரிப்போர்ட்ஸ் கொடுத்தா நான் பைனலைஸ் பண்ணி கொடுப்பேன்” என்க,

“ஓ… சாரி நான் இதோ கொஞ்சம் நேரத்துல ரிப்போர்ட்ஸ் உனக்கு மெயில் பண்ணிட்றேன்” என்றவள் அடுத்தடுத்து வேலைகளில் மூழ்கி போனாள்.

ஆனால் மனதின் ஓரம் குருவுடன் நடந்த பேச்சு வார்த்தை மனதிற்குள் ஓடி கொண்டு தான் இருந்தது.

வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் குழந்தைகளை கவனித்து கொள்ள இரவு சமையல் துவைக்க கிடந்த என வேலைகள் நீண்டு கொண்டே சென்றது.

அகிலனும் பகுதி நேர வேலைக்கு சென்றுவிட்டு இன்னும் வந்திருக்கவில்லை.

சிறுவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல எழுந்து வந்து வாசலுக்கு அருகில் கால்களை கட்டி கொண்டு அமர்ந்தவள் சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

காலையில் இருந்து மகிழை அலைக்கழிக்கும் குருவின் வார்த்தை தான் இப்போதும் அவளை வாட்டியது.

ஒப்பந்த திருமணம் அதாவது பொம்மை திருமணம்…? பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் கல்யாண வைபோகம் எத்தனை புனிதமானது. இரண்டு குடும்பங்களை இணைத்து வைக்கும் பாலம்.

அதனை‌ இப்படி சுலபமாக ஒப்பந்த திருமணம் செய்து கொள்வோம் இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்து கொள்வோம் என்று கூற முடிந்தது. அதுவும் திருமணம் என்று கூறிய அடுத்த நொடியே விவாகரத்தை பற்றி கூறுகிறாரே.

குரு வெளிநாட்டில் படித்து வளர்ந்தவன் என்று யாரோ கூற கேட்டது நினைவில் வந்தது.

அந்த வெளிநாட்டு கலாச்சாரம் தான் இதிலும் பிரதிபலிக்கிறது போலும் என்று மனதிற்கு புரிந்தது.

இருந்தும் பணமிருந்தால் எதையும் செய்யலாம் போலும் என்று எண்ணம் வந்தது. இல்லையேல் உனக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன் நீ இரண்டு வருடங்களுக்கு எனக்கு மனைவியாக நடிக்க வேண்டும் என்று கேட்க மனது வருமா?

ஏனோ பெற்ற தாய் தந்தையரை நினைத்து விழிகள் கலங்கியது. நீங்கள் இருந்திருந்தால் இந்நேரம் பணம் கொடுக்கிறேன் மனைவியாக நடிக்க வா என்று யாராவது தன்னை அழைத்திருப்பாரா? என்று எண்ணம் வந்தது.

கண்ணை கரித்து கொண்டு வந்தது. அவன் கேட்கும் நிலையில் தான் தானிருக்கிறோம் போல என்றும் சிந்தை பிறந்தது.

அவளுக்கு இப்போது திருமணம் கணவன் குழந்தை என்று எந்தவிதமான‌ ஆசைகளும் இல்லை. இல்லை என்று சொல்வதை விட தனக்குள்ளே புதைத்து கொண்டாள்.

ஆசையாய் காதலித்து அற்புதமாக அழகாய் ஒரு நிறைவான வாழ்வை வாழும் தாய் தந்தையர் மீது மகிழுக்கு எப்போதுமே ஒரு பிரம்மிப்பு உண்டு. அதே போல தான் செழியன் மற்றும் சுசி மீதும்.

இவர்கள் இருவரும் கூட நல்ல புரிதலான தம்பதிகள் தான். நேசம் எவ்வளவு தூய்மையான‌ உணர்வு. நிச்சயமாக தானும் ஒரு ஆத்மார்த்தமாக ஆழமாக காதலித்து நேசத்தில் திளைத்து ஒரு அற்புத வாழ்வை வாழ வேண்டும் என்று மனதிற்குள் மகிக்கு அவ்வளவு ஆசை இருந்தது.

கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது கூட தோழிகளுடன் காதல் கல்யாணம் என்று பலவற்றை பேசி சிரித்து மகிழ்ந்திருக்கிறாள்.

ஆனால் வாழ்வில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் அவள் வாழ்வே தலைகீழாய் திரும்பிவிட்டிருந்ததே.

இதில் காதல், திருமணம் என்று எவற்றிற்கும் ஒரு சதவீதம் கூட இடமின்றி போனதே. அன்றிலிருந்து இன்றுவரை ஓடிக்கொண்டு தானே இருக்கிறாள்.

மணிமாறன் திருமணத்தை பற்றி ஒரு நல்ல வரன் வந்திருப்பதாக கூறிய போதும் தன்னுடைய வாழ்வில் திருமணம் கணவன் குழந்தை என எதற்கும் இடமில்லை என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

மனதிற்குள் இருந்த அந்த வயதிற்குண்டான உணர்வுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தனவே. இப்போதைக்கு கண்ணுக்கு சிந்தைக்கு தெரிவதெல்லாம் அகில் எழில் மற்றும் கவின் தான். அவர்களுக்கு நல்ல வாழ்வு அமைத்து கொடுப்பது தான்.

ஆனால் இப்படி ஒருவர் அதுவும் தனக்கு இத்தனை வருடமாக அடைக்கலம் கொடுத்த முதலாளி வீட்டிலிருந்தே இத்தகைய கேள்வி தன் முன் வைக்கப்படும் என்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

இதற்கு ஒப்புக்கொண்டால் தங்களுடைய வீடு தங்கள் கையைவிட்டு எங்கும் செல்லாது என்று ஒருபுறம் ஒரு முறை எண்ணம் வந்து போனதென்னவோ உண்மை தான்‌. ஆனால் தனக்கு போக்கிடம் கொடுத்து இன்றுவரை நன்றாக பார்த்து கொண்டிருக்கும் பிறை சூடனுக்கும் பூங்கோதைக்கும் துரோகம் இழைப்பதை போல எண்ணம் பிறந்தது சடுதியில் அதனை அழித்துவிட்டாள்.

குரு உன்னிடம் ஒப்பந்த திருமண விடயத்தை பேசாது போயிருந்தால் வீட்டினை விற்கும் முடிவிற்கு தானே வந்திருப்பாய். ஏன் அதற்குத்தானே ஏற்பாடுகளை செய்திருக்கிறாய் இதற்கு மேல் இதனை பற்றி சிந்திக்காதே என்று மனதிற்கு‌ கடிவாளமிட்டவள் நாளை குருவிடம் மறுத்து கூறலாம் என்று நினைத்து கொண்டு உள்ளே எழுந்து செல்ல நேரம் பணிரெண்டை தாண்டியிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top