காதல் 5.1

காதல் 5:

அலுவலகம் முடிந்து வந்த குரு உடை மாற்றிவிட்டு வந்து சாப்பிட‌ அமர, அவனுக்கு உணவை பரிமாறிய கோதை முகம் சரியில்லாமல் இருந்தது.

அதனை வந்தவுடன் கவனித்தாலும் அவரே கண்டிப்பாக கூறிவிடுவார் இல்லையெனில் தானே கேட்போம் என்று எண்ணியிருந்தான்.

அருகிலே அமர்ந்திருந்த பிறை சூடனது முகமும் அவ்வாறு தான் இருந்தது.

“இன்னொரு இட்லி வைக்கட்டுமாப்பா” என்று கேட்டு இட்லியை எடுத்து வைத்த கோதைக்கு வார்த்தைகள் வாய் வரை வந்துவிட்டது ஆனால் கூறத்தான் முடியவில்லை‌.

அமைதியாக சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்து தாயின் அருகில் அமர்ந்தவன்,

“ம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை? என்கிட்ட எதாவது சொல்லணுமா? ஏன் பேஸ் ஒரு மாதிரி இருக்கு” என்றிட,

இதற்காகவே காத்திருந்தவர் போல மகனை நெருங்கி அமர்ந்து அவனுடைய கைகளை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டவர்,

“பிரசாத்…” என்று பாசமான குரலில் அழைத்தார்.

அவரது அழைப்பின் பேதத்திலே விடயம் பெரியது என்று அவனுக்கு புரிந்தது. காரணம் எதாவது பெரிய விடயத்தை பேச வேண்டும் என்றால் தான் கோதை இவ்வாறு அழைப்பார்.

குரு அமைதியாக அவரை நோக்க,

“காலையில நம்ம குடும்ப ஜோசியர்க்கிட்ட‌ உன் ஜாதகத்த கொண்டு போய் பாத்திட்டு வந்தேன்” என்று ஆரம்பிக்க, அவனுக்கு தெரிந்தது தன்னுடைய திருமண சம்மந்தமான விடயம் தான் என்று.

“அவர் சொன்ன விஷயத்துல தான் பா நானும் உங்க தாத்தாவும் ரொம்ப பயந்துட்டோம்” என்று பீடிகை போட்டவர்,

“அவர் உனக்கு நேரம் சரியில்லை. அதனால மூனு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி ஆகணும்.‌ அப்படி பண்ணலைன்னா உன் உயிருக்கே ஆபத்தாகிடும் அதுவுமில்லாம அப்படி மூனு மாசத்துல நடக்கலைன்னா அதுக்கப்புறம் அமையுற கல்யாண வாழ்க்கை நிலைக்காதுனு சொல்லிட்டாருப்பா” என்று வருத்தத்துடன் கூறி முடிக்க,

“ப்ச் மா. இதுக்கு தான் இவ்ளோ வொர்ரி பண்ணிங்களா? இந்த ஜாதகம் ஜோசியம் இதெல்லாம் உண்மையே இல்லை. பணத்தை ஏமாத்துற ட்ரிக்ஸ்.‌ உங்ககிட்ட நான் எத்தனை டைம் சொல்லியிருக்கேன் இதை எல்லாம் நம்பாதிங்கன்னு. படிச்சே நீங்களே இப்படி பண்ணிட்டு இருக்கிங்க” என்று அலுத்துக் கொள்ள,

“பிரசாத் இப்படிலாம் பேசாதப்பா. ஜாதகம் ஜோசியம் எல்லாம் உண்மை. நடக்காமத்தான் எல்லாரும் போய் பாக்குறாங்களா?” என்று வினவினார்.

“யார் போய்‌ பாத்தா எனக்கென்ன. நீங்க போய் இதை பாக்காதிங்கன்னு தான் சொல்றேன். இதை வேற பெருசா எடுத்துக்கிட்டு என்கிட்ட சொல்ல வந்துட்டிங்க. எனக்கு நிறைய வொர்க் இருக்கு” என்று எழுந்து செல்ல முயற்சிக்க,

இத்தனை நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்த பிறைசூடன்,

“பிரசாத் என்ன பழக்கம் இது. பெரியவங்க பேசும் போது பாதில எழுந்துக்கிறது. அவ எவ்ளோ பயந்து போய் பேசிட்டு இருக்கா. நீயென்னடான்னா அதை கேர் பண்ணிக்காத மாதிரி எழுந்து போய்ட்டு இருக்க” என்று அதட்டினார்.

“ப்ச் தாத்தா இப்போ என்ன என்ன பண்ண சொல்றிங்க. அம்மா ஜாதகம் அது இதுன்னு எதையாவது பாத்திட்டு வந்து என்கிட்ட எதையாவது சொன்னா நான் என்னதான் பண்ண முடியும்” என்று தாத்தாவிடமும் சற்று எரிச்சலுடன் பேச,

“என்ன பண்ணனும்னா கல்யாணம் பண்ணிக்கணும்” என்று பிறைசூடன் கூற,

“வாட் கல்யாணாமா?” என்று அதிர்வுடன் குருவிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தது.

“ஆமப்பா. உங்க காசி மாமா ரெண்டு வரன் கொண்டு வந்து இருக்காருப்பா. ரெண்டுமே நல்ல இடமா இருக்கு.‌ உன் ஜாதகத்தோட நல்லா பொருந்தி போகுது. பொண்ணுங்க கூட நல்ல அம்சமாதான் இருக்காங்க. நீ சரின்னு சொன்னா நாளைக்கே பொண்ணு பாக்க போகலாம்” என்று அவனது கையை பிடிக்க,

“ம்மா ஆர் யூ கிட்டிங். என்ன பேசிட்டு இருக்கிங்க. பர்ஸ்ட் ஆஃப் ஆல் எனக்கு கல்யாணத்துலே இன்ட்ரெஸ்ட் இல்லை. இதுல ஜாதகம் பார்த்து வேற‌. நோ வே நான் இதுக்கு எப்பவுமே சம்மதிக்க மாட்டேன்” என்று சற்று அழுத்தி கூற,

“குரு இப்படிலாம் பேசாதப்பா. உன் நல்லதுக்குத்தான சொல்றோம். மூனு மாசத்துல கல்யாணம் நடக்கலைன்னா உன் உயிருக்கு எதாவது ஆபத்து வந்திடும்” என்று கலக்கத்துடன் கூற,

“அதெல்லாம் சுத்த பொய். அப்படியே உயிருக்கு ஆபத்து வந்தாலும் என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும். இதுக்கு மேல என்னை கம்பெல் பண்ணாதிங்க” என்று கட்டுப்படுத்திய கோபத்துடன் இருவருக்கும் பொதுவாக முடித்தவன் விறுவிறுவென எழுந்து அறைக்கு சென்றுவிட்டான்.

போகும் அவனையே இயலாமையுடன் பார்த்த கோதைக்கு விழிகள் கலங்கியது‌.

மகளின் கலக்கத்தை கண்ட பிறைசூடன் அவரது தோளில் ஆதரவாக கையை வைத்து,

“வருத்தபடாதம்மா. எல்லாம் சரியாகிடும்” என்று கூற,

“எப்படிப்பா சரியாகும். இவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாதான் எல்லாம் சரியாகும்” என்றவரது கன்னத்தில் கோடாய் கண்ணீர் இறங்கியது.

ஜோசியரது இத்தைய வார்த்தையை எந்த தாயால் தாங்க இயலும். கோதைக்கு விடயத்தை தெரிந்து கொண்ட நொடியில் இருந்து அச்சம் தான் மனமெங்கும் வியாபித்திருந்தது.

மகன் எத்தனை ஆசையாய் பெற்று வளர்த்த மகன் அவனுடைய உயிருக்கு ஆபத்தா என்று எண்ணும் போதே நெஞ்சு தடதடத்தது.

வீட்டிற்கு வந்து தந்தையிடம் கூறும்போதே விழிகள் கலங்கியது. கோதைக்கு ஜாதகம் ஜோசியம் இதில் எல்லாம் நம்பிக்கை மிகவும் அதிகம்.

பிறைசூடன் தான் மகளை தேற்றி குருவிடம் பேசி அவனுக்கு திருமணத்தை விரைவில் முடித்துவிடலாம் என்று எடுத்து கூறியிருந்தார்.

ஆனால் குருவோ பிடிவாதமாக மறுத்து சென்றுவிட்டானே.

குருவின் பிடிவாதத்தை பற்றி இருவருக்கும் நன்றாக தெரியும்‌‌. ஒரு முடிவை குரு எடுத்துவிட்டால் கடவுளே வந்தாலும் அதனை மாற்ற இயலாது.

error: Content is protected !!
Scroll to Top