சில மனிதர்கள் வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருப்பார்கள்.
சில மனிதர்களோ வாழ்க்கையிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால், விதி எனும் கால சிலந்தி தன் வலையைப் பின்னி, அவர்களை ஒரே பாதையில் நிறுத்திவிட்டால்…
என்ன நடக்கும்?
☀️☀️☀️☀️☀️☀️
அதிகாலை 4:45 மணி.
சென்னையின் புகழ்பெற்ற அந்த அரசு மருத்துவமனை, விடியலுக்கு முந்தைய அந்த அமைதியில் மூழ்கியிருந்தது.
அது சாதாரண அமைதியல்ல; வறண்ட மௌனத்தின் கனம் தாங்கிய ஒரு அமைதி.
சற்று முன் பெய்து ஓய்ந்திருந்த மழையின் ஈரப்பதம் காற்றில் கலந்திருந்தது.
ஈரமான மண்ணின் வாசம் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவியிருந்தாலும், அந்தப் பெரிய வளாகத்தின் ஒரு மூலையில் மட்டும் அந்த வாசத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நெடி காற்றில் கலந்திருந்தது.
ஃபார்மலின்.
மரணத்தைப் பாதுகாத்து வைக்கும் அடர்ந்த வாசம்.
மருத்துவமனையின் மார்ட்சுரி.
அந்தக் குளிர்ந்த அறைக்குள், ஸ்டீல் டேபிளுக்கு அருகில் அசையாது நின்றிருந்தான் அதிரன்.
வெள்ளை நிற மருத்துவர் கோட்டின் மேல் அணிந்திருந்த ஏப்ரன்.
கைகளில் surgical gloves.
அவனது முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை.
கண்ணாடியில் படியும் ஒரு பனித்திரை போல அவனது முக பாவங்கள் ஒரு கணத்தில் படர்ந்து சட்டென மறைந்தன.
அவன் முன்னால் இருந்த case file-ஐ மெதுவாகப் புரட்டினான்.
காகிதம் புரளும் சத்தம் கூட அந்த அறைக்குள் அசாத்யமான எதிரொலியை உருவாக்கியது.
“Male… forty-two… road traffic accident.”
அவன் குரலில் எந்தவொரு மாற்றமும் இல்லை; எந்தத் தயக்கமும் இல்லை.
அருகில் நின்றிருந்த ஜூனியர் டாக்டர் அந்தச் சிதைந்த உடலைப் பார்த்தபடி சற்றுத் தயக்கத்துடன் தன் உமிழ்நீரை விழுங்கினான்.
அவனது கண்களில் பயத்தின் சாயல் படிந்திருந்தது.
சில நொடிகள் நிலவிய அடர்ந்த அமைதிக்குப் பிறகு, தன் சந்தேகத்தைக் கேட்கத் துணிந்தான் அந்த ஜூனியர்.
“சார்…”
அதிரன் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“என்ன?”
“எப்படி சார்… தினமும் இப்படி dead bodies கூடவே இருக்கீங்க? பயமாவோ, கஷ்டமாவோ இல்லையா?”
அதிரனின் கைகள் ஒரு நொடி அசைவற்று நின்றன.
பிறகு மெதுவாக அவனை நோக்கித் திரும்பினான்.
அந்தப் பார்வையில் கோபம் இல்லை, ஆச்சரியமும் இல்லை; ஒருவித அசாத்ய அலட்சியமும், உணர்ச்சியற்ற வெற்றுப் பார்வையும் மட்டுமே இருந்தன.
“மரணத்துக்கு நடுவுல இருக்க பழகிட்டா… பயம் போயிடும்.”
அவ்வளவுதான்.
அவன் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான்.
அவனது கைகளுக்கு இந்த வேலை பழகியிருந்தது.
குருதியின் நிறம் பழகியிருந்தது.
மரணத்தின் வாசம் பழகியிருந்தது.
மனித உடலின் சிதைவு கூட அவனது மனதை இனி எந்த விதத்திலும் பாதிப்பதாக இல்லை.
ஆனால்… உயிரோடு இருக்கும் மனிதர்களின் அருகில் நிற்பது மட்டும் அவனுக்கு இன்னும் பழகவே இல்லை.
அவர்களின் கேள்விகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் போலி உணர்ச்சிகள்—எல்லாமே அவன் மனதிற்குள் கேள்விக்குதிரைகளின் பாய்ச்சலாய், தேவையற்ற சத்தங்களாகவே தோன்றின.
வேலையை முடித்துவிட்டு gloves-ஐ கழற்றினான்.
Wash basin முன் நின்று கைகளை நீண்ட நேரம் கழுவினான்.
தண்ணீர் அவனது விரல்களின் வழியாக வழிந்தோடியது.
சோர்வு இல்லை, வருத்தம் இல்லை, கோபம் இல்லை.
எதையோ இழந்த வெறுமை மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது.
அப்போது பாக்கெட்டில் இருந்த போன் அதிர்ந்தது.
திரையில் தெரிந்த பெயர்—’மாமா’.
அவன் சில நொடிகள் அந்தப் போனையே பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க மாமா.”
“அதிரா… இன்னைக்கு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவ?”
“தெரியாது.”
“வேலை எப்போ முடியும்?”
“தெரியாது.”
மறுமுனையில் சில நொடிகள் கனத்த அமைதி.
பிறகு மாமாவின் குரல் சற்றுத் தயக்கத்துடன் கேட்டது.
“இன்னைக்கு… கொஞ்சம் சீக்கிரம் வந்துடு.”
அதிரனின் புருவம் சுருங்கியது.
“ஏன்?”
“வீட்டுல பேசணும்.”
“எதைப் பற்றி?”
அவன் கேட்டவுடன் மறுமுனையில் மீண்டும் ஒரு சிறிய அமைதி.
பொட்டில் சுட்டது போல் அந்த மௌனம் ஏதோ சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.
“வந்ததும் சொல்றேன்.”
அதிரன் பதில் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தான்.
அவனுக்கு அந்த உரையாடல் பிடிக்கவில்லை.
வீட்டில் தனக்காக காத்திருக்கும் அந்தப் பேச்சு, தன்னுடைய அமைதியை இன்னும் கொஞ்சம் சிதைக்கப் போகிறது என்பதை மட்டும் அவன் ஆழமாக உணர்ந்திருந்தான்.
அதே நேரத்தில்…
சென்னையின் மற்றொரு முனையில் இருந்த ஒரு நடுத்தர வர்க்கத்து வீடு, அதிரனின் வறண்ட உலகத்திற்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது.
அங்கே காலை என்பது அமைதியாக வருவதில்லை.
மகிழ்ச்சி மத்தாப்புக்களுடனும், புன்னகை பூவனங்களுடனும் சத்தத்தோடுதான் வரும்.
சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம்.
முற்றத்தில் தண்ணீர் தெளிக்கும் வாசம்.
தொலைக்காட்சியில் ஒலிக்கும் சுப்ரபாதம்.
அதற்கிடையில் வீட்டிலிருந்தவர்களின் சிரிப்பொலி.
அந்த வீட்டின் நடுவே, ஒரு கையில்
மல்லிகைப் பூக்கூடையையும் இன்னொரு கையில் போனையும் வைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள் வெண்மதி.
“அம்மா!”
“என்னடி?”
“இந்த மல்லிகையை சாமிக்கு வைக்கணுமா? இல்ல அத்தைக்கு வைக்கணுமா?”
“முதல்ல நீ கீழே வச்சுடு. அப்புறம் யாருக்கு வேணுமோ அவங்க எடுத்துக்கட்டும்.”
“அம்மா… உங்க logic-க்கு உலகத்துல யாருமே போட்டி கிடையாது!”
வெண்மதி கலகலவென சிரித்தபடி கூடையைக் கீழே வைத்தாள்.
அவள் இருக்கும் இடத்தில் வறண்ட மொழிக்கு இடமே இல்லை.
அவள் பேசுவாள், சிரிப்பாள், கிண்டல் செய்வாள்.
அவளைச் சுற்றி இருப்பவர்களையும் புன்னகைக்க வைப்பாள்.
அவளது கசின் ஆத்ரிதா அவளை வியப்போடு பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
“மதி…”
“ம்ம்ம்?”
“உனக்கு battery எங்கே இருக்குடி?”
வெண்மதி புரியாமல் பார்த்தாள்.
“என்ன?”
“காலையில நாலரை மணிக்கே எழுந்து இவ்வளவு energy-யோட சுத்துற. எனக்கு பத்து மணிக்கு எழுந்தாலும் battery low-ஆ இருக்கு.”
வெண்மதி சிரித்தாள்.
“வாழ்க்கையே ஒரு battery மாதிரிடி. Use பண்ணாம வச்சிருந்தா charge எதுக்கு?”
“அடேய்… காலையிலேயே philosophy ஆரம்பிச்சுட்டா!” ஆத்ரிதா செல்லமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.
வெண்மதி சிரித்தபடி பால்கனிக்குச் சென்றாள்.
அதிகாலைக் காற்று அவளது முகத்தை மென்மையாக வருடியது.
மல்லிகையின் வாசமும், மழைக்குப் பிந்தைய காற்றின் வாசமும் ஒன்றாகக் கலந்து பழைய ஞாபகத்தின் புதிய வாசனை போல அவள் நாசியில் நிறைந்தது.
அவளுக்கு வாழ்க்கை அழகாகத் தெரிந்தது.
அவளுக்கு மனிதர்கள் பிடிக்கும், உறவுகள் பிடிக்கும், காதல் பிடிக்கும்.
காதல் என்ற வார்த்தை வந்தாலே அவளது வண்டு விழிகளில் ஒரு கனவு வந்து அமரும்.
அவளுக்குப் பெரிய ஆசைகள் எதுவும் இல்லை.
இறகைக் கையில் வைத்துக்கொண்டு வானில் பறக்கும் பறவையைத் தேடுவது போல, தன் நெஞ்சில் உள்ள நினைவுக்குச் சொந்தக்காரனை, ஒருநாள் தன்னை உண்மையாகப் புரிந்து கொள்ளும் ஒருவனைத் தேடுகிறாள்.
அவள் சொல்லாமல் விடும் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளும் ஒருவன் வருவான் என்ற நம்பிக்கை அவளுக்குள் மேகத்திரளாகத் திரண்டிருந்தது.
அதே காலை.
மருத்துவமனை வாசலில் இருந்து தன் காரை நோக்கி நடந்துகொண்டிருந்தான் அதிரன்.
Phone மீண்டும் ஒலித்தது.
இந்த முறை மாமா இல்லை, நண்பன் நிதிலன்.
“என்னடா?”
“குட் மார்னிங் சொல்லலாம்னு கூப்பிட்டேன்.”
“குட் மார்னிங்.”
“அடப்பாவி… உன் வாயிலிருந்து அந்த வார்த்தை வர்றதுக்குள்ள எனக்கு morning-ஏ போயிடும்!”
அதிரனின் உதடுகளில் ரேஷன் கடை சர்க்கரை போல எடைக்குறைவாக ஒரு சிரிப்பு.
அவனிடம் அந்தச் சிரிப்பைப் பார்க்கக்கூடியவர்கள் வெகு சிலர். அதில் ஒருவன் நிதிலன்.
“இன்னைக்கு evening free-ஆ?”
“தெரியாது.”
“வீட்டுக்கு போறியா?”
“போகணும்.”
“சரி, வீட்டுல என்ன drama-ன்னு நாளைக்குச் சொல்லு,” என்று கூறி நிதிலன் இணைப்பைத் துண்டித்துவிட அதிரனும் பெருமூச்சுவிட்டபடி வீட்டிற்கு கிளம்பினான்.
அதிரன் காரைக் கிளப்பி சாலைகளில் அதை பறக்க விட வெண்மதியோ தன் பால்கனியில் நின்று வேகமாய் செல்லும் அந்த காரை கண்டு சலித்த படி முணுமுணுத்தாள்.
“அந்த கார்காரன் எவன் அவன்னு தெரியலை… சரியான அவசரத்திற்கு பிறந்தவன்” என்று சொன்னவளின் வாழ்வில் அவசியமானவனாக நுழைவனாக அதிரன்?
விடை காலத்தின் கையில்.