உள்ளம் – 4.4

‘அவனுடனான வாழ்க்கை முழுவதும் இதே போலதான் இருக்குமோ? காலம் முழுவதும் அவனுடன் நான் சண்டையிடப் போகிறேனோ?’ என்ற எண்ணம் நிம்மதியை குலைத்திருந்தது. எது தவறு, சரியென சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் எப்போது குமரனுக்கு எப்போது உதிக்கும்? என்ற கவலை அவளை சோர்வுறச் செய்தது.

மனோவின் கையைப் பிடித்து அழுத்திய ரங்கராஜன், “மனோ, நான் இப்போ ஒரு கேள்வி கேட்குறேன். அதுக்குப் பதில் சொல்லு…” என்றார். அவள் நிமிர்ந்து தந்தை முகத்தைக் கேள்வியாக நோக்கினாள்.

“உன்னை யாராவது அடிச்சா என்ன பண்ணுவ? திருப்பி அடிப்பீயா, இல்ல இன்னொரு கன்னத்துலயும் அடிங்கன்னு ஏசுநாதர் மாதிரி சொல்லுவீயா?” என வினவினார். மனோவிடம் பதிலில்லை. அமைதியாக அவரை வெறித்தாள்.

“கண்டிப்பா திருப்பி அடிப்ப. அதுமாதிரி தான் இதுவும். யாரையும் நானா போய் அடிக்கணும்னு நினைக்கலை. நம்மளை தாக்குறவங்களுக்கு, பதிலுக்கு செய்றோம். அவ்வளோ தான். என்னால காந்தி மாதிரி அஹிம்சை வழியை எல்லாம் ஃபாலோ பண்ண முடியாது. நான் செய்றது என் நிலையில இருந்து பார்த்தா சரிதான். அவங்க அவங்களுக்கு அவங்கவங்க நியாயம். இதுக்கும் மேல இதைப் பத்தி யோசிக்காத மனோ. நிம்மதியா தூங்கு…” என்றவரை இயலாமையுடன் பார்த்தாள். மகள் கன்னத்தில் தட்டி அவர் நகர, எதுவும் பேசாது தலையணையில் முகம் புதைத்தவளின் மனம் முழுவதும் குமரன்தான். விழியோரம் ஈரம் கசிய, மனதோரம் பாரமேறியது‌.
சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை பொழுது புலர்ந்ததிருந்தது. ராதாமணி அதிகாலையிலே எழுந்துவிட்டார். மகளின் பிறந்தநாளாகிற்றே. தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தார். அடுத்த வருடம் அவள் வேறொரு வீட்டுப் பெண்ணாகி இருப்பாளே என்ற எண்ணம் மனதினோரம் துளிர்த்தது. சந்தோஷத்துனூடே சிறுபுள்ளியாய் மனம் அதில் பின்னடைந்தாலும், கைகள் அதன்பாட்டிற்கு வேலையை செவ்வென செய்து கொண்டிருந்தன.

“என்ன ராதா, அறுசுவையும் சமைச்சுடுவ போல?” எக்களிப்புடன் கேட்ட ரங்கராஜனின் வலது கையில் தொலைவியக்கியிருந்தது. தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் மனைவி மீதொரு கண்ணும் வைத்திருந்தார்.

அவரின் கேலியில் முறைத்த ராதாமணி, “போய் உங்கச் செல்ல மகளை எழுப்பிவிடுங்க. மகாராணி இன்னும் எழலை. பிறந்தநாள் அன்னைக்காவது வெள்ளென எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம் இல்ல!” சடைத்தவாறே சமையலை முடித்திருந்தார்.

ரங்கராஜன் எழுந்து மகளின் அறைக்குள் நுழைந்தார். அவள் உறங்கிக் கொண்டிருக்க, இவர் கட்டிலருகே அமரும் அரவத்தில் மனோவின் தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் துவங்கியது. லேசாய் கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள்.

“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா மனோ மா!” தலையைக் கோதி புன்னகையுடன் முதல் வாழ்த்தை தந்தை கூறவும், இரவு நடந்த அனைத்தும் பின்னகர்ந்து கொள்ள, கோபம் தற்காலிகமாக விடுப்பெடுத்துக் கொண்டது.

உதட்டிலேறிய சிரிப்புடன், “தேங்க் யூ பா!” என எழுந்தமர்ந்தவள், நீண்ட முடியைச் சுருட்டிக் கொண்டையிட்டாள்.

“போ மனோ, போய் குளிச்சிட்டு வா. உங்கம்மா காலையிலே விதவிதமா சமைச்சு வச்சிட்டா!” என்றவர் நகரவும், மனோ குளிக்கச் சென்றாள்.

அன்று வாங்கி வந்த சேலையைத்தான் அணிவதற்கு எடுத்து வைத்திருந்தாள். குளித்து முடித்து உள்பாவாடையும் மேல் சட்டையும் உடுத்தியவள், “ம்மா…” என அறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்த, “ஏன் டி இப்படி கத்துற, என்ன வேணும்?” என மகளை முறைத்துக்கொண்டே ராதா அறைக்குள் நுழைந்தார்.

“சேலையைக் கட்டிவிடு மா… கட்ட ட்ரை பண்ணேன். முடியலை!” மனோ கூற, ராதாமணி ஆச்சர்யத்துடன் புடவையை மடிப்பெடுத்து மகளுக்கு அணிவித்துவிட துவங்கினார்.

“ஏன் டி, நான் புடவை கட்டுனா கட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கிறவ. நீயா இன்னைக்கு புடவை கட்ற?” ராதாமணியின் ஆராய்ச்சிப் பார்வைத் தன்னை ஊடுருவியதையெல்லாம் மனோ லட்சியம் செய்யவில்லை.

“ஒரு சேலை கட்டிவிட்றதுக்கு இத்தனை கேள்வியா மா?” மகள் உதட்டைச் சுழித்தாள்.

மனோவிற்கு புடவையைக் கட்டி முடித்த ராதாமணி முகத்தில் புன்னகை‌. “இன்னைக்குத்தான் பொண்ணு மாதிரி லட்சணமா இருக்க…” என்றவரை முறைத்தாள். அயிரை நிறமும் கபில நிறமும் கலந்தப் புடவை அவளை பாந்தமாய் தழுவியிருந்தது. அதற்கு தோதாய் இளம் பச்சை வண்ண சட்டையில் மனோஹரி அழகு கூடிப் போய் மிளிர்ந்தாள்.

“ரூம்க்குள்ள வந்ததுலருந்து, ஒரு பெர்த்டே விஷ் பண்ணீயா மா? அதை தவிர எல்லாம் பேசு…” தாயிடம் செல்லக் கோபம் கொண்டாள் மனோஹரி. குரலில் காரமில்லை. காரணமில்லாத அன்பும் பிரியமுமிருந்தது.

“நான் என்னத்தை விஷ் கிஷெல்லாம் பண்ண. உன் மனசு போல நிறைவா வாழ்க்கை அமைஞ்சு சந்தோஷமா வாழணும் டி. அதை தவிர பெருசா எங்களுக்கு என்ன இருக்கு?” மகள் முகத்தை நெட்டி முறித்து ராதா வெளியேற, அவரைப் புன்னகையுடன் பார்த்தவள், தலையைக் காய வைத்து பின்னலிட்டு, மேஜை மீது தாய் வைத்திருந்த பூவை தலையில் சூடினாள்.

கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்து திருப்திக் கொண்டவள், வெளியே வர, “ஹேப்பி பெர்த் டே மனோ!” என திவாகர் அவளிடம் ஒரு பெட்டியை நீட்டினான். உதட்டிலேறிய சிரிப்புடன் அதைப் பெற்றுக் கொண்டவள், தாய் தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள்.

“போதும், வாடி… வந்து சாப்பிடு!” என மற்ற மூவரை அமர வைத்து ராதா பரிமாற, அவரையும் இழுத்து அமரவைத்து உண்டு முடித்தாள் மகள்.

ரங்கராஜன் உண்டுவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்தார். அவரருகே அமர்ந்த மனோ தந்தை முகத்தைப் பார்க்கவும், “என்ன வேணும் என் பொண்ணுக்கு?” என வினவினார்.

“இந்த பெர்த் டேவுக்கு என்ன கிஃப்ட் வேணும்னு நீங்க இன்னும் கேட்கலையே பா!” அவள் வினவவும், ரங்கராஜன் சிரித்துவிட்டார்.

“உனக்கில்லாதது என்கிட்ட என்ன இருக்கு மனோ மா. சொல்லுடா, என்ன வேணும் என் பொண்ணுக்கு?” எனக் கேட்டவருக்குத் தெரியுமே. அவள் கடந்து சென்ற பிறந்தநாளுக்கு கேட்ட மகிழுந்து முதல் பூந்தோட்டம் வரை மனோ வாசம்தான் வீடு முழுவதும் வீசுமென.

“ப்பா, நான் எதுக்கேட்டாலும் சரி சொல்லணும். மாட்டேன்னு மறுக்க மாட்டீங்க இல்ல?” அழுத்தமாக காரியக்காரி மனோஹரி வினவ, ரங்கராஜன் மகளைக் கேள்வியாகப் பார்த்தார். அவரது முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.

“ச்சு… அப்படியென்ன கேட்டுடப் போறா. இன்னொரு பூந்தோட்டமா?” திவாகர் கேலி செய்தான். அவனை நிமிர்ந்து முறைத்தாள் மனோ.

“என்ன வேணும் டி உனக்கு?” ராதாமணி கூட ஆர்வமாய் அருகில் வந்துவிட்டார். மூவர் பார்வையும் தன்னிடம்தான் என்பதை உணர்ந்தவளின் விழிகள் வாயிலைத் தொட்டு மீள, சரியாய் அந்நேரம் குமரன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

வெள்ளை சட்டையும் கருநீல கால்சராயும் அணிந்திருந்தவனின் பார்வைக் கூட அவளிடம்தான்.
புடவை உடுத்தியிருந்தவளை ஆராய்ச்சியாகப் பார்த்தவாறே வீட்டிற்குள்ளே வந்தான். அவனை சில நொடிகள் மனோவின் பார்வைத் தொட்டுத் தடவிப் போனது.

குமரன் வந்து நிற்க, “வா குமரா…” என்றான் திவாகர். அவன் தலையை அசைத்தான்.

“ப்பா, எனக்கு குமரனை பிடிச்சிருக்கு பா. அவரைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன்…” எந்த வித பிசிறுமின்றி தந்தையின் முகம் பார்த்து பேசியவளின் பேச்சில், உறுதியில் சுற்றியிருந்த மூவருக்கும் பேரதிர்ச்சிதான். குமரனுக்கு அவளது பேச்சு தெளிவாய்க் கேட்டும் கேட்காத நிலைதான்.

‘என்ன சொல்கிறாள் இந்தப் பெண்?’ என திருக்குமரனின் புரியாத பார்வை மனோஹரியை மொய்க்க, இவளது பார்வையும் அவனிடம்தான்.

உள்ளம் கேட்கும்…

error: Content is protected !!
Scroll to Top