காதல் 4.3

‘எதற்காக குரு சார் தன்னை அழைத்துள்ளார்.‌ இதற்கு முன் இதுபோல அழைத்தது இல்லையே. எதுவென்றாலும் மனோகர் சார் மூலமாக தான் நடக்கும்’ என்று எண்ணியவள்,

‘சரி போனால் என்னவென தெரிந்துவிட போகிறது’ என்று நினைத்து எழுந்து அவனறை அருகே சென்றாள் அனுமதியை வேண்டினாள்.

“எஸ் கம் இன்…* என்று அழுத்தமான குரல் அவளை உள்ளே அனுமதிக்க,
அமைதியாக உள்ளே சென்றாள்.

அலைபேசியில் கவனத்தை வைத்திருந்தவன் நிமிர்ந்து, “டேக் யுவர் சீட்” என்க,

எதுவும் கூறாது அமர்ந்தவள் அவன் முகம் கண்டாள். முழுதாக ஒரு நிமிடம் அலைபேசியில் கவனத்தை வைத்திருந்தவன் நிமிர்ந்து,

“மிஸ் மகிழினி” என்று ஆரம்பிக்க, அவனது அலைபேசி அலறியது.

திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும்,

‘வெயிட்’ என்று அவளுக்கு கையை காண்பித்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் பொருத்தியவன் எழுந்து அவனது பிரத்யேக அறைக்குள் நுழைந்துவிட்டான்.

இங்கு மகிழினி தான் என்ன செய்வதென தெரியாது அவனது அறையை சுற்றி பார்த்தபடி இருந்தாள்.

குருவிற்கான அமரும் சுழல் நாற்காலி அதனை தொடர்ந்து பெரிய மேஜை.

மேஜை மேல் ஒரு சிறிய கண்ணாடி குவளையில் நீர் அதனருகில் சில கோப்புகள் அதனை அடுத்து ஒரு எழுதுகோல் டப்பா என்று மிகச்சரியாக அவனிடத்தில் பொருந்தி இருந்தது.

அறையின் மூலையில் சிறிய குப்பை தொட்டி என்று எல்லாம் பக்காவாக இருந்தது.

இதற்கு முன் ஒரிரு முறை வந்திருந்தாலும் இப்போது தான் அறையை உற்று கவனித்தாள்.

நேரம் சென்றது ஐந்து நிமிடம் பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் ஆகியது.

இவளுக்கு சும்மா உட்கார்ந்து இருப்பது பிடிக்கவில்லை‌. அடுத்ததாக பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்று மூளைக்குள் ஓடியது‌.

அவளை வெகுநேரம் காக்க வைத்த பிறகு வந்து அமர்ந்தவன் காக்க வைத்ததற்கு நாகரீகம் கருதி கூட எந்த விளக்கமும் கூறாது,

“மிஸ் மகிழினி நீங்க லோன் அப்ளை பண்ணி இருந்திங்களா?” என்று வினவ,

எதற்கு கேட்கிறான் அதுதான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதே என்று நினைத்தாலும்,

“ஆமா சார் பண்ணியிருந்தேன்” என்று வாய் பதில் அளித்தது.

“என்ன ரீசனுக்காக” என்று வினவியவனது கையில் அவளது கடன் விண்ணப்பம் இருந்தது.

கேள்வி அவளிடம் கேட்டாலும் விழிகள் அவளது விண்ணப்பத்தில் இருந்தது.

‘எதற்கு இப்போது இது?’ என்று நினைத்தாலும் அதனை கேட்க தைரியமில்லாது,

“என் தம்பியோட எஜுகேஷன் பர்பஸ்க்காக சார்” என்று பதில் மொழிந்தாள்.

விண்ணப்பத்தை முழுதாக ஒரு முறை அலசியவன் தலையை தூக்கி அவளை கண்டான்.

என்னதான் மகிழினி இங்கு நான்கரை வருடமாக பணி செய்தாலும் அவளை அருகில் பார்ப்பது இதுதான் முதல் முறை.

விழிகள் அவளை ஆராய்ச்சியாக அளவிட்டது. சாதாரண காட்டன் சுரிதார். துப்பட்டாவை ஒரு புறம் விரித்து விட்டு மறுபுறம் எடுத்து குத்தியிருந்தாள்.

இடைக்கு சற்று மேல் இருந்த கூந்தலை ஒரு க்ளிப்பில் அடக்கியிருந்தாள். நெற்றியில் சிறிதான பொட்டு காதில் சிறிய தோடு கழுத்தில் மெலிதான சங்கிலி என்று மிகவும் எளிதான தோற்றம் தான்.

மகிழ் தான் அவனது அமைதியான பார்வையில் குழம்பி போனாள். இருந்தும் எதையும் கேட்கவில்லை.

சில நொடிகளில் ஒரு முடிவு எடுத்தவனாக,

“மகிழினி உங்க தம்பியோட படிப்பு செலவு ஃபுல்லா நானே ஏத்துக்கிறேன். நீங்க அதை திருப்பி கொடுக்க வேணாம்” என்று கூற,
மகிழ் புரியாது அவனை நோக்கினாள்.

“பட் நீங்க எனக்கு ஒரு பேவர் பண்ணனும்” என்றவன் அவளது முகத்தை பார்த்துவிட்டு,

“நீங்க என்னை மேரேஜ் பண்ணிக்கனும்” என்று மொழிய,

மகியின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. ஒரு நொடி இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை மகிழுக்கு.

“சார்‌…” என்றவளுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

அவளது அதிர்ச்சியை எந்தவித சலனமும் இல்லாது பார்த்தவன்,

“ஒரிஜினல் மேரேஜ் இல்லை. டூ இயர்ஸ்க்கு கான்ட்ராக்ட் மேரேஜ்” என்று அழுத்தி கூறி, அவளை மேலும் மேலும் அதிர வைத்தான்.

அவளுக்கு நடந்ததை உணர எந்தவித நேரமும் கொடுக்காதவன்,

“லுக் மகிழினி‌‌ உங்களுக்கு இப்போ பணத்தேவை இருக்கு.‌ எனக்கு உங்களோட தேவை இருக்கு. டூ இயர்ஸ்க்கு அக்ரிமெண்ட் மேரேஜ் பண்ண நீங்க சம்மதிச்சா நான் உங்களுக்கு தேவையான மணியை ஒரே செக்ல இப்போவே கொடுத்திடுவேன்”

“…”

“கான்டிராக்ட் முடிஞ்ச பின்னாடி நீங்க யாரோ நான் யாரோ. மேரேஜ்க்கு முன்னாடியே அக்ரிமெண்ட்ல நீங்க சைன் பண்ணனும். இந்த ரெண்டு வருஷமும் நமக்குள்ள‌ எந்தவித ரிலேஷன்ஷிப்பும் கிடையாது. ஜஸ்ட் என்னோட குடும்பத்துக்கு முன்னாடி ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா ஆக்ட் பண்ணனும்” என்றவன் அவளது முகத்தை கண்டான்.

அதில் குழப்பம் அதிர்ச்சி என்று கலவையான உணர்வுகள் தான். அதனை உணர்ந்தவன்,

“அவசரமில்லை யோசிச்சு நாளைக்கு வந்து உங்க முடிவை சொல்லுங்க” என்றுவிட்டு,

“நவ் க்ளியர் மை ப்ளேஸ்” என்றான்.

மகிழினிக்கு கடந்த பத்து நிமிடத்தில் என்ன நடந்ததென கிரகிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

ஆனால் அவனோ ஏதோ கதை போல கூறிவிட்டு இங்கிருந்து கிளம்பு என்கிறான்.

அவனது இறுதி வாக்கியத்தை உணர்ந்தவள் எழுந்து வெளியேற முயற்சிக்கும் சமயம்,

“மகிழினி…” என்ற அழுத்தமான குருவின் குரல் அவளை தடுத்தது.

மகி திரும்ப,

“இந்த விஷயம் நம்ம ரெண்டு பேரையும் தவிர யாருக்கும் தெரிய வேணாம்” என்றவனது குரலில் தெரியக்கூடாது என்ற மறைமுக மிரட்டல் இருந்தது‌.‌

அது மகிக்கும் புரிய சம்மதமாக தலையசைத்து வெளியேறினாள்.

போகும் அவளையே பார்த்தவனிடம் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

அவனது வாழ்நாளில் இது போல யாரிடம் விளக்கம் கொடுத்து பேசியது இல்லை. இப்படி விளக்கம் கொடுத்து பேச அவனுக்கு பிடித்தமும் இல்லை. ஆனால் சூழ்நிலை அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தது.

விழிகளை மூடி திறந்தவனது மனதில் கடந்த சில தினங்களாக வீட்டில் நடந்த நிகழ்வுகள் நிழலாடியது…

error: Content is protected !!
Scroll to Top