உள்ளம் – 2.1

குமரன் வீட்டிற்குள் வர, சிந்து அவனுக்காகத்தான் காத்திருந்தார்.‌ உள்ளே நுழைந்தவனின் முகம் அகத்தைப் பிரதிபலிக்க, “என்னாச்சு குமரா, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என வினவியவரின் குரலில் கவலை தென்பட்டது.

தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவனின் உதட்டில் இப்போது மெல்லிய புன்னகை. கோபம் வடிந்து போயிருக்க, உடலை லேசாய்த் தளர்த்தி இருக்கையில் அமர்ந்தான்.

“ஒன்னும் இல்லை மா. சின்ன ஐடி ரெய்ட். அதான் காலைலயே போக வேண்டியதாப் போச்சு மா…” என்றான்.

“எதுவும் பிரச்சனை இல்லையே டா?” என்ற சிந்து பேசிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்திருந்தார். சில நிமிடங்களிலே சூடான தேநீரைத் தயாரித்து அவனிடம் நீட்டினார்.

“பிரச்சனை எதுவும் இல்லை மா. எல்லாம் சரியா கணக்கு காட்டியாச்சு!” என்றவனின் உதடுகள் இப்போது தேநீரை சுவைக்கத் தொடங்கின.

“ரொம்ப களைப்பா தெரியிற டா. போய் குளிச்சுட்டு வா. சாப்ட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்குவ!” சிந்து கூறவும், தலையை அசைத்தவன் குளிக்கச் சென்றான்.

குமரன் குளித்து முடித்து உணவை உண்டுவிட்டுப் படுக்கையில் வீழ்ந்தான். ஆனால் உறக்கம் விழிகளைத் தழுவவே இல்லை. அமைதியாய்ப் படுத்திருந்தவனின் சிந்தனை முழுவதும் இப்போது மனோஹரிதான். ஏன் அவளின் பார்வை தன்னைத் துரத்துகிறது என்ற கேள்வி மூளையைக் குடைந்தது. எந்த விதத்திலும் அவள் விஷயத்தில் இவன் தலையிட்டதே இல்லை. அப்படி இருக்கையில் அவளின் செய்கைகள் இவனை சற்றே எரிச்சலடையச் செய்வதும், கோபம் கொள்ள வைப்பதுமாய் இருந்து தொலைத்தது. அதை யோசித்துக் கொண்டே சிறிது நேரத்திலே கண்ணயர்ந்தான்.

மாலை மங்கி இரவு கவிழத் துவங்கியிருந்த நேரம். மெலிதாய்க் கருமைப் பரவத் துவங்க, தோட்டத்திலிருந்த இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த ரங்கராஜனின் மனம் முழுவதும் காலையில் நடந்த நிகழ்வுதான். யார் காரணமாக இருக்கக் கூடும் என அவர் சிந்தனையில் அமிழ்ந்திருக்க, அருகே அவரை முறைத்துக்கொண்டே அமர்ந்த மனோஹரி தனது நீண்ட கூந்தலை சிறிய இழுபட்டையில் அடக்கி தூக்கிக் கொண்டையிட்டாள்.

மகள் வந்து அமரவும், யோசனையிலிருந்து கலைந்தவர், “வா மனோ…” எனப் புன்னகைத்தார். இவள் பதில் பேசாது தந்தையை முறைத்துப் பார்த்தாள். அவளின் முறைப்பில் புரியாது விழித்தார் ரங்கராஜன்.

“நான் எதுக்கு முறைக்கிறேன்னு கூட உங்களுக்குத் தெரியலை இல்ல?” என்றவளின் வார்த்தைகள் இப்போது சூடாய் வந்தன.

“என்னடி, எதுக்கு அவரை மிரட்டீட்டு இருக்க?” ராதாமணி அருகே வந்தவர், மகள் முகத்தையும் குரலையும் வைத்து என்னவென வினவினார்.

“ஏன், உனக்குத் தெரியாது இல்ல? உனக்கு வீடுதான் முக்கியம். மூணு வேலையும் சமைக்கிறதுதான் உன்னோட பிரதான வேலை. இவருக்கு பிஸ்னஸ்தான் முக்கியம். அப்புறம் எதுக்கு எங்க ரெண்டு பேரையும் பெத்தீங்க?” கோபமாய் இரைந்தவள், அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

“இவ ஏன்ங்க இப்படி பேசீட்டு போறா?” ராதாமணி கணவர் முகத்தைப் பார்க்க, அவருக்கும் தெரியவில்லை. சிறு வயதிலிருந்தே மனோஹரி இந்த வீட்டில் மூவருக்குமே செல்லம். பெரிதாய் அவளை ஒருவரும் அதட்டிப் பேசியதோ, திட்டியதோ கூட இல்லை. அவள் கேட்ட அனைத்தையும் ரங்கராஜன் செய்து கொடுப்பார். அதனாலே கொஞ்சம் பிடிவாதமும் அவளுடன் சேர்ந்து வளர்ந்திருந்தது. வாயும் சற்றே நீளம்.

“இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்குப் பிறந்தநாள் பா. நீங்க ரெண்டு பேருமே அதைப் பத்தி பேசலை. அதான் அவ முறுக்கீட்டுப் போறா!” திவாகர் நினைவுப்படுத்தவும் பெற்றவர்களுக்கு அப்போதுதான் இன்னும் இரண்டு நாட்களில் மகளின் பிறந்தநாள் வருகிறது என்ற எண்ணம் உதித்தது.

“ரெய்ட், அது இதுன்னு டென்ஷன்ல அவ பிறந்தாளை மறந்துட்டேன் டா. ரெண்டு பேரும் கடைக்குக் கிளம்புங்க. நீ அவளைக் கூட்டீட்டுப் போய் வேணும்ன்றதை வாங்கிக் கொடு டா. புள்ளை ஏமாந்துடப் போறா!” ரங்கராஜன் குரல் மகளின் மீதான நேசத்தில் கனிந்து போயிருந்தது. செல்ல மகளாகிற்றே! அவளின் முகவாடலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்காதீங்க. பிறந்தநாளை மறந்ததுக்கு எப்படி பேசீட்டு போறா பாருங்க…” ராதாமணி முகத்தைச் சுருக்கினார் மகளின் பேச்சில். இப்போதெல்லாம் மகளுக்கு வாய் நீள்கிறது என்றெண்ணம் தாய்க்கு வந்திருந்தது.

“சும்மா இரு ராதா. புள்ளை ஏற்கனவே கோபத்துல இருக்கா!” மனைவியை அதட்டிய ரங்கராஜன் மகனைப் பார்க்கவும், “சரிப்பா, நான் போய் அவளை கடைக்கு கூட்டீட்டுப் போறேன். கோபமா வேற இருக்கா. பாதி கடையை வாங்கிடுவா உங்க செல்ல மக!” திவாகர் சிரித்தான்.

“பாதியென்ன? முழுக் கடையும் கூட என் மகளுக்கு வாங்கிக் கொடுப்பேன் டா!” ரங்கராஜன் சிரிப்புடன் கூறவும், “ரொம்பத்தான்!” என ராதா சடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

“திவா, ரெண்டு பேர் மட்டும் போகாதீங்க. குமரனைக் கூட கூட்டீட்டுப் போங்க. எதுக்கும் அவன் துணைக்கு இருக்கட்டும்!” தந்தை கூறவும், திவாகரும் சரியென நகர்ந்தான்.

“ஐயா, பூ எல்லாம் எடுத்தாச்சு. காலைல டவுனுக்கு அனுப்பிட்றேன் ஐயா!” என தோட்டக்காரர் வந்து நின்றார். வீட்டிற்குப் பின்புறம் உள்ள நிலத்தில் மல்லிகை செடியும் இன்னும் பிற பூக்களும் மனோ ஆசைக்காக வளர்க்க ஆரம்பித்து, இன்று சந்தைக்குக்கொண்டு சென்று விற்கும் அளவிற்கு முன்னேறி இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆட்கள் வந்து பூக்களைப் பறித்துக் கொடுத்துவிட்டு செல்வார்கள். மறுநாள் காலையில் லாரியில் பூக்கள் எல்லாம் விற்பனைக்காகச் சந்தைக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
சிறிய லாபம் எனினும், விவசாயத்தில் காலூன்றினால், அது நிச்சயம் வருங்காலத்தில் பயன்படும் என நினைத்துதான்
ரங்கராஜன் இதை செய்து வருகிறார்.

“சரி முருகா, எல்லாரும் கிளம்புங்க!” என இவர் கூறவும், அவரும் அகன்றார்.

திவாகர் தங்கை அறைக்குள் நுழைந்தான். மனோ அவளது அறையிலிருந்தத் தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் வந்ததை உணர்ந்தும், அவள் எதிர்வினையாற்றவில்லை‌.

“மனோ, வா ஷாப்பிங் போகலாம். அப்பாவுக்கு வேலை டென்ஷன். அதான் அவர் மறந்துட்டாரு!” என இவன் கூற, அவளிடம் பதிலில்லை.

“சின்ன புள்ளை மாதிரி பண்ணாத மனோ. வா போகலாம்” திவாகர் லேசாய் அதட்டலிட்டான்.

“எல்லா நாளும் வேலை இருக்கத்தான் செய்யும் திவா. அதுக்காக பெத்த பொண்ணோட பெர்த் டேவைக் கூட மறக்கலாமா?” மனோவின் குரல் பெற்றவர்களைக் குற்றம் சாட்டியது. அவள் முகத்தைப் பார்த்த திவாகர், தங்கை அருகே அமர்ந்தான்.

“விடு மனோ, எல்லா நேரமும் எல்லாரும் சரியா இருக்க முடியாது. அதே மாதிரி உன்னைப் பத்தி மட்டுமே அவரு நினைச்சுட்டு இருக்க முடியுமா? ஆயிரம் வேலை இருக்கும். சோ, பிடிவாதத்தை விட்டுட்டு நீ இப்போ கிளம்பி வா. நம்ம ஷாப்பிங் போகலாம். உனக்கு என் செலவுதான்.‌ என்ன வேணுமோ, எல்லாத்தையும் வாங்கிக்கோ… ஹம்ம்!” திவாகர் குரல் தங்கையை சமாதானம் செய்ய தாழ்ந்து போக, மனோஹரியின் கோபமும் தணிந்திருந்தது. அவள் அப்படித்தான், சட்டு சட்டென கோபம் கொண்டாலும், எளிதில் சமாதானம் அடைந்துவிடுவாள்.

“சரி நீ போ, நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணீட்டு வரேன்!” மனோவின் குரல் இப்போது துள்ளியது. அதில் புன்னகைத்த திவாகர் அலைபேசியை எடுத்து குமரனை
வீட்டிற்கு வரப் பணித்துவிட்டு தானும் உடை மாற்றச் சென்றான்.

இருவரும் கிளம்பி வர, குமரனும் வந்துவிட்டான். “பத்திரமா போயிட்டு வாங்க…” என்ற ரங்கராஜன், “குமரா, பார்த்துக்கோ…” என குமரனிடம் கூறவும், அவனும் தலையை அசைத்தான்.

error: Content is protected !!
Scroll to Top