காதல் 4:
ஆதவனது கதிர்கள் முகத்தில் சுள்ளென படர அதனை உணராது கம்பியை பிடித்தபடி நின்றிருந்த மகிழினியும் முகம் முழுவதும் கண்ணீர் தடயங்கள்.
துடைக்க துடைக்க நிற்காது வழிந்தோடியது கண்ணீர். இதோ இன்னும் இரண்டு நாட்களில் அத்தனை மகிழ்வாக குடும்பத்தினருடன் வாழ்ந்த இல்லம் தங்களது கையை விட்டு போகிறது.
இதனை வாங்குபவர் வீட்டை இடிப்பாரோ உடைப்பாரே என்ன செய்வாரோ தெரியவில்லை என்று எண்ணும் போதே உள்ளம் வலித்தது.
விழிகள் இமைக்கவும் மறந்து வீட்டை அங்குலம் அங்குலமாக அளந்து நிரப்பி கொண்டிருந்தாள்.
இதோ இந்த வாசலில் தான் தினமும் தாயார் காலை எழுந்து குளித்து கோலம் போடுவார். இதோ இங்கு தான் தந்தை அமர்ந்து செய்தி தாளை வாசிப்பார்.
இந்த வராண்டாவில் தான் தானும் தமையன்களும் ஓடியாடி விளையாடினோம். அடித்து கொண்டோம் சமாதானம் அடைந்தோம் என்று ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி எண்ணி மனது கனத்தது.
இருந்த எல்லா வழிகளிலும் மகி முயற்சித்து பார்த்துவிட்டாள் பணம் கிடைக்கவில்லை.
பணிபுரியும் நிறுவனத்தில் எல்லோருக்கும் ஒரே விதி தான் ஐந்து வருடங்கள் கடந்த பிறகு தான் பெரிய தொகை கடனாக வழங்க முடியும்.
‘தான் முதலாளியிடம் எடுத்து கூறியும் பார்த்துவிட்டேன் உன்னுடைய விண்ணப்பம் நிராகரிப்பட்டுவிட்டது’ என்று மனோகர் கையை விரித்துவிட மகிழ் செய்வதறியாது கலங்கித்தான் போனாள்.
இதனை தானே மலை போல நம்பியிருந்தாள். இப்போது இங்கு பணம் கிடைக்கவில்லை என்றால் வேறு யாரிடம் கேட்பது.
குடும்பத்தினரை இழந்து தவித்த போதே உதவி செய்ய முன்வராத உறவினர்கள் மத்தியில் என்ன செய்வது என்று தெரியாது கையறு நிலையில் இருந்தாள்.
தங்களுக்கு துன்பத்தில் உதவிய மணிமாறனையும் கேட்க இயலாது. அவரிடமும் அளவுக்கு அதிகமாகவே உதவியை பெற்றாகிவிட்டது.
நான்கு லட்சம் வேண்டுமானால் நிறுவனத்தில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. அம்மாவின் நகைகள் ஒரு இரண்டு லட்சத்திற்கு வரும்.
மீதம் ஐந்தாறு லட்சமாவது தேவைப்படும் அதெற்கெல்லாம் எங்கே போவது.
‘பிறைசூடனிடம் கேட்கலாமா?’ என்ற சிந்தனை ஒரு நொடி வந்தாலும் உடனடியாக அதனை அழித்துவிட்டாள்.
தங்க பாதுகாப்பான இடம் நல்ல சம்பளத்துடன் வேலையும் கொடுத்து இத்தனை வருடங்களாக தங்களுக்கு எத்தனை பெரிய உதவியை செய்து கொண்டிருக்கின்றார்.
இதற்கு மேலும் அவர்களிடம் கேட்க அவளது மனமே ஒப்புக்கொள்ளவில்லை.
எல்லா கதவுகளும் அடைப்பட்ட பிறகு என்ன செய்வது என்று பலவாறாக சிந்தித்தாள்.
அகிலனுக்கு வேறு வாக்கு கொடுத்து அவனுடைய ஆசையை வளர்த்துவிட்டாயிற்று.
என்னால் பணத்தை ஏற்பாடு செய்ய இயலவில்லை என்று கூறி அவனது மனதை நிச்சயமாக உடைக்க இயலாது.
ஏதாவது செய்தாக வேண்டும் என்று சிந்தித்தவளுக்கு வீட்டை விற்பதை தவிர வேறு வழி கிடைக்கவில்லை.
தங்கள் வாழ்ந்த அழகிய வீட்டை விற்க வேண்டும் என்று நினைத்த போதே நெஞ்சில் ஊசி குத்தியது போல வலி.
தங்களது குடும்பத்தினரது நினைவாக இருந்தது அந்த ஒரு வீடு மட்டும் தான் இனி அதுவும் இருக்க போவதில்லை.
அகிலனிடம் கூறினால் நிச்சயமாக இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான் ஆதலால் இப்போது அவனிடம் இதனை பற்றி கூறவில்லை.
வீட்டு மீது கடன் வாங்குவது சம்மந்தமாக ஊருக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டாள்.
வீட்டை விற்றுவிடலாம் என்று முடிவை எடுத்த போது வந்த வலியை விட நேரில் வீட்டை கண்ட போது வந்த வலி தான் அதிகமாக இருந்தது.
சிறிய குருவிகூடு போல எத்தனை அழகாக தாங்கள் வாழ்ந்த வீடு இது. இந்த வீடு இனி ஒரு போதும் தங்களுக்கு சொந்தமில்லை.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இளையவர்களுடன் வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு போவாள்.
இனி அப்படி வந்தாலும் வீட்டை சுத்தம் செய்ய இயலாது. ஏன் வீடே இருக்குமா? என்பது சந்தேகம் தான்.
ஒவ்வொரு இடத்திலும் குடும்பத்தினருடன் வாழ்ந்த சுவடுகள் நினைவுகள் பொக்கிஷங்களாக.
வீட்டை விற்பது குடும்பத்தினரை நிரந்தரமாக பிரிவது போன்ற எண்ணத்தை கொடுத்தது.
அவர்கள் இவ்வுலகினை விட்டு சென்ற போது இதயத்தினை பிழிந்த உணர்வு இப்போதும் இதயத்தை கசக்கி பிழிந்தது.
விழிகளை மூடி ஒரு நொடி துக்கத்தை விழுங்கியவள் முகத்தை கழுவி வந்தாள்.
கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவளுக்கு தான் கிளம்ப வேண்டும் என்று எண்ணம் வந்தது.
ஆனால் கிளம்பத்தான் இயலவில்லை. கால்கள் நகர மறுத்தது.
தாய் தந்தையர் இருந்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது போலொரு முடிவை தான் நிச்சயமாக எடுத்திருப்பார்கள்.
தான் ஒரு நல்ல முடிவை தான் எடுத்துள்ளோம் என்று மனதை தேற்றியபடி வீட்டை பூட்டியவளது கரங்கள் ஒரு முறை சுவற்றினை வருடியது.
மீண்டும் அழுகை பெருக அதனை துடைத்துவிட்டு மணிமாறனது வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டை விற்பதற்கும் மணிமாறனிடம் தான் உதவியை நாடினாள். அவரை தவிர அவ்வூரில் அவளுக்கு உதவுவார் யாருமில்லை.
மணிமாறனுக்கு மகியின் முடிவில் அதிர்ச்சி தான். இருக்கும் ஒரு வீட்டையும் விற்றுவிட்டு என்ன செய்ய போகிறாய் சிந்தித்து ஒரு முடிவெடு என்று அவர் மொழிந்ததற்கு இதனை தவிர வேறு வழியில்லை என்று எடுத்து கூறினாள்.
மணிமாறனும் அரைகுறை மனதுடன் சம்மதித்தார். முன்பு கடன் கேட்டிருந்தவரிடம் பேச அவரே வீட்டை பணம் கொடுத்து வாங்கி கொள்வதாக கூறியிருந்தார்.
ஏதேதோ சிந்தனைகளுடன் நடந்து வந்தவளது கால்கள் அந்த பெரிய வீட்டின் முன் நின்றது. பெரிய வீடு என்பதை விட பங்களா என்று கூறலாம்.
மணிமாறன் அந்த ஊரின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர். இவளை கண்டதும் காவலாளி கதவை திறந்துவிட மகி உள்ளே நுழைந்தது வாசலுக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்த மணிமாறன்,
“வாம்மா” என்று அவளை வரவேற்றார்.
மணிமாறன் எழுபதுகளில் இருப்பவர் பார்த்தவுடன் மதிக்க தோன்றும் மரியாதையான தோற்றம்.
“உட்காரும்மா” என்றவர் மகிழ் அமர்ந்ததும்,
“என்ன உன் முடிவு மாறிடுச்சா?” என்று வினவ,
“இல்லை சார். என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை. வீட்டை விற்கதான் போறேன்” என்றிட,
“வீட்டை நேர்ல பாத்தா உன் முடிவு மாறிடும்னு நினைச்சேன். சரி இனி உன் இஷ்டம் தான். நான் கோபால்கிட்ட பேசிட்றேன்.
அடுத்த வாரம் நீயும் அகிலனும் ரெஜிஸ்ரேஷனுக்கு வந்திடுங்க” என்றார்.
“சரிங்க சார்” என்று இவள் பதில் மொழிய,
“அகிலுக்கு இதுல விருப்பமா?” என்று வினவ,
“இல்லை நான் இன்னும் அவன்கிட்ட இதை பத்தி பேசலை சார். உங்ககிட்ட பேசிட்டு அகிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன்” என்க,