அவர்களை அனுப்பிவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்த ரங்கராஜனின் முகம் கோபத்தில் கனன்றது. இதற்குக் காரணம் கண்டிப்பாக யாராக இருக்கும் என மூளை கேள்வி கேட்க, முதலில் யாரது என கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தவர், அலைபேசியை எடுத்து குமரனுக்கு அழத்தார்.
“குமரா, ரெய்ட் ஓவரா?” ரங்கராஜன் வினவ,
“ஓவர் சார். எந்தப் பிராப்ளமும் இல்லை. இப்போதான் குவாரிலயும் முடிஞ்சது!” குமரன் பதில் இயம்ப,
“சரி குமரா, நீயும் திவாகரும் கிளம்பி வாங்க!” என அவர் அழைப்பைத் துண்டிக்க, சிறிது நேரத்திலே இருவரும் வந்துவிட்டிருந்தனர்.
திவாகர் எதுவும் கூறாது அறைக்குள் நுழைந்து கொண்டான். காலையில் எழுந்த உடனே குவாரிக்குச் சென்றுவிட்டதால், குளிக்கக் கூட இல்லை. அறைக்குச் சென்று குளித்து முடித்து வெளியே வந்தான்.
குமரனிடம் சிறிது நேரம் பேசிய ரங்கராஜன், “நீ ஆள் யாருன்னு கன்பார்ம் பண்ணு குமரா!” என்றவரிடம் தலையைச் சம்மதமாய் அசைத்து வைத்தான். பேச்சு சத்தம் கேட்கவுமே வெளியே வந்த மனோஹரி தந்தைக்கு அருகில் அமர்ந்தாள். தலைக்கு குளித்து வீட்டில் அணியும் இலகுவான உடையை அணிந்து கூந்தலை காய வைப்பதற்காக விரித்துவிட்டிருந்தாள். அது இடைவரை புரண்டது.
அலைபேசியைக் குனிந்து கவனித்துக் கொண்டிருந்தவளின் செவிகள் இரண்டும் இவர்களின் பேச்சை அசிரத்தையாய் உள்வாங்கின.
“சரி டா, நீ கிளம்பு. போ, போய் சாப்ட்டு ரெஸ்ட் எடு!” இப்போது ரங்கராஜன் குரலில் லேசான அக்கறையும் கனிவும் கொட்ட, இவளது இதழ்கள் அதைக் கண்டு கேலியாய் வளைந்தன.
“குமரா, வா… திவாவோட நீயும் சாப்ட்டு போ!” ராதாமணி அவனை அழைக்க, தாயை நிமிர்ந்து ஒரு முறைப் பார்த்த மனோவின் விழிகள் இப்போது குமரனை சமீபித்தன. கொஞ்சமல்ல அதிகமாய் அலட்சியமாய் அவனைப் பார்த்தாள். லேசாய் அவனை ஊடுருவும் பார்வை கூட அது.
“இல்லை மேடம், நான் வீட்ல போய் சாப்ட்டுக்கிறேன்!” என்று பதில் அளித்தவனின் பார்வையும் அவளிடம்தான்.
“ரெண்டு தோசை சாப்ட்டு போ குமரா!” திவாகர் இப்போது வற்புறுத்தலாய் அழைத்தான்.
“மனோ, அவனுக்குத் தோசையை எடுத்து வை. நான் அடுப்பைப் பார்க்குறேன்!” என்ற ராதாமணி கல்லில் ஊற்றிய தோசையை எடுக்கச் செல்ல, ‘இவனுக்கு நான் ஏன் சாப்பாடு வைக்க வேண்டும்!’ என்பது போல அலட்சியமாய் அவனைப் பார்த்தாள் மனோ. அந்தப் பார்வை, அந்தப் பெண் அவனது பொறுமையைச் சோதிக்க ஆரம்பித்தாள். குமரன் கோபத்தை வெளிக்காட்ட முடியாது யாரும் அறியாது பல்லை லேசாய்க் கடித்தான்.
“நான் வரேன் சார்!” என்றவனின் குரல் இறுகிப் போக, விறுவிறுவென வெளியேறி இருசக்கர வாகனத்தில் பறந்தான். மனோஹரியின் பார்வை மட்டும் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவளது பார்வையில் திமிறும் அலட்சியமும் இருக்கும். அதும் அவனைக் காண்கையில் மட்டும்தானோ? என்று எண்ணுமளவிற்கு அவளது பாவனைகள் இருக்கும்.
முதலில் குமரன் அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டான். ‘நீயும் உன் திமிறும் அலட்சியமும் பணமும் உன்னோடு மட்டும். உன் தந்தையிடம் நான் வேலை செய்கிறேன். நீ என் முதலாளியின் பெண்.
அது மட்டும்தான் உனக்கும் எனக்குமான உறவு!’ என இவனும் அலட்டிக் கொள்ள மாட்டான். ஆனால், இப்போதெல்லாம் இவளது பார்வை அவனை அதிகமாய் சீண்டித் தொலைக்கிறது. எல்லோரையும் போல அவள் இவனை மதிக்கவில்லயோ என்ற எண்ணம் அவனது சிந்தயை சிக்கனமின்றி அரித்துக் கொண்டிருந்தது.
சில சமயம் பணத் திமிறோ எனக் கூட எண்ணி இருக்கிறான். அப்படி இருக்கையில் எல்லோரிடமும் அது வெளிப்படுமே. ஆனால், மனோ இது போல யாரிடமும் ஒரு போதும் எடுத்தெறிந்து பேசி குமரன் கண்டதில்லை. பொதுவாய் அவள் வீட்டு ஆட்களைத் தவிர வெளியாட்களிடம் பெரிதாய் பேசமாட்டாள்.
அதற்கு ரங்கராஜனும் ஒரு காரணம். அவருக்குத் தொழில் மட்டுமல்ல, அரசியலிலும் எதிரிகள் ஏராளம். எங்கே சென்றாலும் மகளின் பாதுகாப்பிற்கு ஆட்களை நியமிப்பார். இப்போதெல்லாம் குமரன்தான் அவளுடைய பிரதான பாதுகாப்பு வேலியாய் இருக்கிறான்.
வயசுப் பெண்ணை யாரை நம்பியும் அவரால் விட முடியவில்லை. குமரன் மீதான் நம்பிக்கையில் அவளின் பாதுகாப்பிற்காய் குமரனை அனுப்பி வைப்பார்.
முதலில் அவளது பார்வை அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போதெல்லாம் மனோவின் அலட்சிய பாவம் அவனை உசுப்பேத்தியது.
‘எந்த வகையிலும் நான் உன்னைவிட குறைந்தவனில்லை!’ என்று இவனும் அவளை வெகுவாய் அலட்சியம் செய்வான். ஆனால், அதெல்லாம் அவளைப் பாதித்ததாய் ஒரு நொடிகூட குமரன் உணர்ந்தது இல்லை. அப்போதும் இவன்தான் ஏகத்திற்கும் கடுப்பாகிப் போவான்.
முதலாளியின் பெண் என்ற ஒரே காரணத்திற்காகத் தனக்கு சற்றும் பொருந்தாத அமைதியைக் கடை பிடிக்கிறான். ஏனென்றால் ரங்கராஜன் மீது அவனுக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் உண்டு. பதினேழு வயதில் அவரிடம்தானே அடைக்கலம் என வந்து நின்றான். ஒரு நொடி கூட ஏனென்று கேட்காது எந்த முகாந்திரமும் இன்றி அவனை உடன் வைத்துக்கொண்டார் ரங்கராஜன். இன்றுவரை அந்த நன்றியுணர்வு குமரனுக்கு உண்டு. அதனாலே இத்தனைப் பொறுமையாய் செல்கிறான். ஆனால், இந்தப் பெண் என்றைக்கு அந்தப் பொறுமையைக் காற்றில் பறக்கவிடப் போகிறாள் எனத் தெரியவில்லை.
குமரன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு செல்வதைத்தான் பார்த்திருந்தாள் மனோஹரி.
“மனோ, குமரன் எங்க? சாப்பிடலையா?” ராதாமணி குரல் செவியில் விழுந்தாலும், அவள் பதில் இயம்பவில்லை.
“அம்மா, அவன் வீட்டுக்குப் போய்ட்டான்!” திவா பதிலளிக்க, அவர் சரியென்றுவிட்டார்.
உள்ளம் கேட்கும்…