காதல் 38:
குருவின் கண்ணீரை உணர்ந்து இறுகி போய் அமர்ந்தவளது விழிகளிலும் நீர் பெருகியது.
பதில் ஏதும் கூறாது அப்படியே சமைந்துவிட்டாள்.
நொடிகள் நிமிடங்களாக கடக்க அவளது அமைதியை உணர்ந்தவன் நிமிர்ந்து,
“என்னை மன்னிச்சிடு மகி. எனக்கு இதை தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியலை. தப்பு தான் நான் தான் எல்லாத்துக்கும் காரணம் எந்த இடத்திலயும் சரியா இல்லை. எல்லா தப்புக்கும் நான் மட்டும் தான் காரணம் உன்னை ரொம்ப ரொம்ப காயப்படுத்திட்டேன்”
“…”
“நீ சொன்ன மாதிரி நான் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் தான் சின்ன வயசுல இருந்து நான் கேட்டது எல்லாமே அடுத்த செகெண்ட் என்கிட்ட இருக்கும். என் வாழ்க்கையில நான் கேட்டு எதுவுமே இல்லை உனக்கு கிடையாது அப்படின்னு ஒரு வார்த்தை யாரும் சொன்னது இல்லை. காரணம் என் அப்பா. பொதுவா பாய்ஸ் எல்லாம் அம்மாக்கூட தான் க்ளோஸா இருப்பாங்க ஆனால் நான் ஆப்போசிட் எனக்கு எல்லாமே என் அப்பா தான். அவர் தான் என்னோட ஹீரோ நான் நினைச்சா போதும் என் அப்பா கண்முன்னாடி கொண்டு வந்திடுவாரு”
“…”
” எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு ஸ்கூல் முடிச்சேன் யூ.ஜி படிச்சிட்டு பி.ஜிக்கு அமெரிக்கா போனேன். வாழ்க்கையில ஒரு சின்ன கஷ்டம் கூட இல்லை. நல்ல ப்ரெண்ட்ஸ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். அப்போ தான் ஒரு நாள் என் அப்பாக்கு ஹெல்த் இஸ்யூஸ் உடம்பு சரியில்லைன்னு கால் வந்துச்சு ஓடி வந்து பார்த்தப்போ அப்பாக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்க எனக்கு எதுவும் புரியலை.”
“நான் இந்தியா வந்தப்போ அப்பா இந்த உலகத்திலே இல்லை. பிஸ்னஸ்ல நிறைய லாஸ் அதை யாருக்கும் தெரியாம சரி செய்யலாம்னு ட்ரை பண்ணியிருக்காரு பட் முடியலை. திரும்பி நம்மாள மீண்டு வர முடியாதுனு ஒரு எண்ணம் வர ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி அட்டாக் வந்திடுச்சு. எனக்கு எதுவுமே அவர் இருக்கும் போது தெரியலை அப்பா தெரியவிடலை. எனக்கு எதுவுமே புரியலை. பிஸ்னஸ்ல பெரிய லாஸ் சரி செய்ய முடியாத அளவுன்னு மட்டும் புரிஞ்சது.
“எங்க நாங்க உதவி கேட்ருவோமோன்னு எல்லா சொந்தக்காரங்களும் விலகி போக ஆரம்பிச்சாங்க அப்போ தான் எனக்கு எல்லாரோட உண்மையான முகமும் தெரிஞ்சது. தாத்தாவும் அம்மாவும் ரொம்ப பயந்துட்டாஙக. அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்ற ஒரு வார்த்தை எனக்கு பின்னாடி நீ தான் அம்மாவையும் மத்தவங்களையும் பாத்துக்கணும்னு சொல்ற ஒன்னு ஞாபகம் வந்துச்சு”
“அப்பா இடத்துல இனி எல்லாம் நான் தான்னு புரிஞ்சது எல்லாத்தையும் எடுத்து செஞ்சேன். எந்த கஷ்டமும் தெரியாம வளர்ந்துட்ட எனக்கு முதல்ல எதுவும் புரியலை. நிறைய தடுமாறுனேன் தாத்தா தான் கைட் பண்ணாரு. வாழ்க்கையில நிறைய மாற்றம் ஜெயிக்கணும்ற வெறியில ஓடியோடி உழைச்சு ஒரு மாதிரி இறுகி போய்ட்டேன் அப்புறம் கொஞ்ச வருஷத்துலே எல்லாத்தையும் சரி செஞ்சுட்டேன் சாஃப்ட்வேர் கம்பெனி நிறைய ஓபன் பண்ணேன் முன்னாடி இருந்ததைவிட பல மடங்கு பணத்தை சம்பாதிச்சேன். அப்போ விட்டு போன ரிலேடிவ்ஸ் எல்லாம் திரும்பி ஜாயிண்ட் ஆக ட்ரை பண்ணாங்க ஆனால் நான் யாரையும் பக்கத்துல விடலை”
“என் அப்பாவோட இழப்பு என்னை நிறைய மாத்துச்சு பழைய மாதிரி கலகலப்பு இல்லை ஒரு மாதிரி எனக்குள்ளயே இறுகி போய்ட்டேன். அதுவும் என் அப்பாவை பத்தி பிஸ்னஸ் பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம என் வாழ்க்கைய என்ஜாய் பண்ணிட்டு இருந்துட்டேன். ஒருவேளை எல்லாமே எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் எல்லாத்தையும் இவ்ளோ தூரம் வரவிட்ருக்க மாட்டேன்.
“எதையும் தெரிஞ்சுக்காம விட்டுட்டேன்னு என் மேல ரொம்ப ரொம்ப கோபம் ஒருவிதமான குற்றவுணர்வு இதெல்லாம் சேர்ந்து என்னை ரொம்ப இறுக்கமா மாத்திடுச்சு ப்ளஸ் இந்த ரிலேடிவ்ஸோட பிகேவியர் எல்லாம் பணம் இருந்தா தான் மதிப்பு பணத்தை வச்சு தான் மத்தவங்க உன்னை மதிப்பாங்க. பணத்துக்காக எப்படி வேணா மனுஷங்க மாறுவாங்கன்னு ஒரு மைண்ட் செட் வந்திருச்சு. அதனாலயே எல்லாரையும் பணத்தை வச்சு எடை போடுவேன் யாரையும் ஈஸியா நம்ப மாட்டேன். ஒரு ஸ்கேனிங் பார்வை தான் எல்லார் மேலயும்.”
“நாள் வேகமா போச்சு அப்போ தான் ஹனிகா என் லைஃப்ல வந்தா குட்டியா குழந்தை மாதிரி என்னையே சுத்தி வந்தவ மேல எனக்கொரு இன்ட்ரஸ்ட் வந்துச்சு அவளை அக்சப்ட் பண்ணிக்கிட்டேன். என்மேல காதலோட என்னை துரத்தி வந்த அந்த காதல் பிடிச்சு இருந்தது. ரெண்டு வருஷம் எங்க ரிலேஷன்ஷிப் நல்லா போச்சு. ஹனிகாவுக்கு பிஜி பண்ண ஆசை. அவ பிஜி முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஐடியால இருந்தோம். ஆனால் திடீர்னு அம்மா கல்யாணம் பத்தி பேசி என்னை கார்னர் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை.”
“அப்போ என்ன பண்றதுன்னு யோசிச்சப்போ தான் ஹனிகா இந்த ஐடியாவ கொடுத்தா. பட் நான் அக்ரிமெண்ட் மேரேஜ் எல்லாம் சரிவராதுனு சொல்லிட்டேன் பட் எனக்கு வேற ஆப்ஷன் எதுவும் இல்லை. வேற வழியில்லாம அந்த ஐடியாவையே யூஸ் பண்ணலாம்னு திங்க் பண்ணப்போ யாரை நடிக்க வைக்கலாம். இதனால எதாவது பிராப்ளம் வருமா…? நடிக்க வர்றவங்க எதுவும் பிளே பண்ணிடக்கூடாதுனு நிறைய யோசனை அப்போ தான் நீ உன் தம்பி படிப்புக்காக லோன் கேட்டு வந்த. உனக்கு லோன்க்கு எலிஜிபிலிட்டி இல்லாம இருந்தது நான் லோன் அப்ளிகேஷன ரிஜக்ட் பண்ணிட்டேன்”
“அப்போ தான் சட்டுனு ஒரு ஐடியா வந்தது. உன்னை ஏன் அக்ரிமெண்ட் மேரேஜ்க்கு ஆக்ட் பண்ண வைக்க கூடாதுனு. அத்தனை நாள் என் கம்பெனில ஒர்க் பண்ற ஆயிரம் பேர்ல ஒருத்தியா இருந்த உன்மேல என் கவனம் திரும்பிச்சு. உன்னை பத்தி விசாரிச்சேன். எனக்கு வந்த டீடைல்ஸ் எல்லாம் திருப்தியா இருந்ததால உன்னோட பணத்தேவைய நான் யூஸ் பண்ணிக்கிட்டேன். பணத்துக்காக எல்லாரும் என்ன வேணா செய்வாங்கன்ற என்னோட எண்ணம் மாதிரியே நீயும் சம்மதம் சொன்ன”
“அடுத்தடுத்து மேரேஜ் எல்லாம் நடந்தது. எல்லாம் என் பிளான்படி தான் போய்ட்டு இருந்துச்சு. நான் நினைச்ச மாதிரி நீ இல்லை. நீ உன்னோட லிமிட்ட எப்பவுமே மெயின்டைன் பண்ண. என் அம்மா தாத்தாக்கிட்டயும் நல்லபடியா நடந்துக்கிட்ட. ஆனாலும் யாரையும் நம்பாத என் குணம் உன்னையும் நம்பலை. சந்தேக கண்ணோட தான் எல்லாரையும் பார்த்தேன். உன்கிட்ட இருந்த மாதிரி எழில்கிட்டயும் கவின்கிட்டயும் லிமிட் மெயின்டைன் பண்ண முடியலை. இத்தனை நாள் இறுகிய இருந்த மனசு குழந்தைகளோட கள்ளமில்லாத அன்பால இளகி போச்சு.”
“அவங்க அப்பா அப்பான்னு என்னை சுத்தி வரும்போது என்னவோ இனம்புரியாத அன்பு. ஆபிஸ்விட்டு உள்ளே நுழைஞ்சதும் அப்பான்னு ஓடி வந்து என் காலைக்கட்டிக்கிற அந்த பாசம் என்னவோ சொல்ல தெரியலை. எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும் போது திடீர்னு வந்த அம்மு அகிலன் பிராப்ளம் நான் எதிர்பார்க்காதது.
“அதுவும் ஒரு அண்ணனா அந்த வீடியோவ பாத்த செகெண்ட் எனக்கு வந்த கோபதுக்கு அளவே இல்லை. என்னை பொறுத்தவரை அம்மு ஒரு குழந்தை வழக்கம்போல என்னோட எண்ணப்படி நீங்க தான் இந்த பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டிங்களோன்னு தோணுச்சு. என் அப்பா இருந்திருந்தா இதுமாதிரி நடக்க விட்ருப்பாரா…? நான் தான் சரியில்லையோன்னு என் மேல வேற கோபம். எல்லாம் சேர்ந்து உன்கிட்ட அப்படி பேசிட்டேன்”
“நான் கோபத்துல பேசிட்டேன்னு சொல்லலாம் ஆனால் அந்த வார்த்தையை கேட்ட உனக்கு தான் கஷ்டம் தெரியும்னு புரியுது. நான் ரொம்ப ரொம்ப அதிகமா பேசிட்டேன். பாத்து பாத்து வளர்த்த தங்கச்சிய அப்படி ஒரு கோலத்துல பாத்ததும் நான் என்ன ஆனேன்னு எனக்கே தெரியலை. இதுவரை நான் பார்த்து வந்த மனுஷங்க பாதை எல்லாம் சேர்ந்து என்னை உன்கிட்ட அப்படி நடக்க வச்சிடுச்சு. நான் எவ்ளோ மன்னிப்பு கேட்டாலும் அதை சரி பண்ண முடியாது. இருந்தாலும் கேட்குறேன் முடிஞ்சா என்னை மன்னிச்சிடு” என்றவனது முகம் அவளது கரத்தில் அழுந்த பதிந்தது.
“பணத்தை வச்சிதான் மனுஷங்கன்ற என்னோட எண்ணத்தை மாத்தி பணத்தை தாண்டி நிறைய பேர் இருக்காங்கன்னு எனக்கு புரிய வச்சது நீங்கதான். அதுவும் நீதான் நான் அவ்ளோ தூரம் பேசியும் உன்னை வார்த்தையால குத்தி காயம் பண்ண பின்னாடியும் அம்மு எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்ல சொன்னியே அப்பவே புரிஞ்சது என்னோட கணிப்பு எல்லாம் தப்புனு. நான் மன்னிப்பு கேட்க ட்ரை பண்ணேன் பட் நீ அக்சப்ட் பண்ணிக்கலை சரி உனக்கு கோபம்னு நான் விட்டுட்டேன் ஆனால் அது உன்னை இவ்ளோ தூரம் பாதிச்சு இருக்கும்னு எனக்கு தெரியலை”
“அப்புறம் நான் எனக்கு ஐ மீன் உன்மேல வச்ச பீலிங் எல்லாமே உண்மை. எனக்கு எப்போ எந்த புள்ளியில எந்த சகெண்ட்ல உன்மேல விருப்பம் வந்துச்சுனு தெரியலை. பட் கவினுக்கு முடியாம போனப்போ ஹாஸ்பிட்டல்ல வச்சு அழுது என் காலை பிடிச்சியே அப்போ உன்னோட அழுகை அந்த குரல் என்னை என்னவோ உலுக்கிடுச்சு அப்படியே ஓரு நிமிஷம் எனக்கு எதுவும் ஓடலை உள்ள ஏதோ நழுவி விழுந்துச்சு அப்போ நான் அதை பெரிசா கண்டுக்கலை. உடனே உன் அழுகைய சரி பண்ணனும் கவினை குணப்படுத்தணும்னு தான் ஓடுனேன் அப்போ கூட நான் கவின்மேல இருக்க பாசத்துல தான் அப்படி நடந்துக்கிறோம்னு நினைச்சேன்”