“என்ன பேசுறீங்க அத்தை, கோவில் வரி கேட்க வந்தவங்களுக்குப் பணம் கொடுத்து அனுப்புனேன். அதுக்கு நீங்க வாய்க்கு வந்த மாதிரி பேசலாமா?” சிந்து குரலை உயர்த்த, சுமதி பல்லைக் கடித்தார். கோவிலிலிருந்து வந்தவர்கள் சுமதியைப் புறக்கணித்துவிட்டு சிந்துவிடம் பேசி வரியை வாங்கிவிட்டு சென்றதில் அவர் மாமியாரிடம் அதை முறையிட்டிருக்க, அது பெரிய பூதமாகக் கிளம்பியது .
“நான் என்னத்த இல்லாத பொல்லாததையா சொல்லிட்டேன். நீ அவனுங்ககிட்டே பல்லை இளிச்சிட்டுப் பேசவும்தானே உன்கிட்ட வந்து நின்னானுங்க. எத்தனை நாள் டி இந்தக் கூத்து நடக்குது!” மீண்டும் மீண்டும் தங்கம்மாள் வார்த்தைகளை திராவகம் போல வீச, சிந்துவின் உடல் கூசிப் போனது.
ஷெண்பாவும் குமரனும் நடப்பது புரியாது மலங்க மலங்க விழித்து நிற்க, அவர்கள் பின்னே விக்ரமும் வந்துவிட்டான். பிள்ளைகளின் முன்னே மாமியாரின் வார்த்தைகளில் சிந்து அருவருத்துப் போனார். முகம் கன்றி சிவந்தது.
“பிள்ளைக முன்னாடி இப்படியெல்லாம் பேசாதீங்க அத்தை!” மாமியார் பேச்சை சகிக்க முடியாது பல்லைக் கடித்தார்.
“என்னடி பிள்ளைக… பிள்ளைகன்னுட்டு…” என நீட்டி முழக்கியவர், “இந்தா நிக்கிறானே, இவனை எம்மவனுக்குத்தான் பெத்தீயா நீ? வீட்டுக்கு ஓரமா ஒரு ரூம்ல இருந்துட்டு எப்பட்றியவ பிள்ளைய பெத்தெடுத்த!” தங்கம்மாளின் பேச்சில் சிந்து அதிர்ந்து போக, உடல் நடுங்கியது அவருக்கு. இதயம் திடுக்கிட, இப்படியொரு பேச்சைக் கேட்டு அவர் கல்லாய் சமைந்து நின்றார்.
“நிறுத்துங்க! இதுக்கு மேல என் அம்மாவை ஒரு வார்த்தைப் பேசுனீங்க, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என குமரனின் குரல் வீடே அலறும் வகையில் கர்ஜித்தது. சிந்துவின் நிராதரவான நிலை இவனுக்கு கோபம் கட்டுக்கடங்காது பொங்கச் செய்தது. தங்கம்மாளின் பேச்சு எந்தளவிற்குத் தாயைக் காயப்படுத்தியிருக்கும் எனத் துடித்துப் போனான் குமரன்.
“சீ! வாயை மூடுறா *** ஜாதிக்கார நாயே! ஒழுக்கங்கெட்ட ஆத்தாளுக்கு நீ ஏத்துட்டு வரீயா?” என அவர் முகம் அசூசையாய் சுருங்க, சிந்து அதில் மரித்தே போனார்.
“அப்பத்தா, யாரைப் பார்த்து என்னப் பேசுற நீ… சிந்தும்மாவைப் பத்தி தப்பா ஒரு வார்த்தைப் பேசுன, வயசான கிழவின்னு கூடப் பார்க்க மாட்டேன்!” என விக்ரம் அவரை அடிக்க கை ஓங்க, சுமதி இடையில் வந்தார்.
“வாயை மூடு விக்ரம், அப்பத்தா பெரியவங்க. அவங்களை அடிக்கக் கை ஓங்குவீயா?” என மகனை அடக்க, ஷெண்பா அழுது கொண்டே சிந்துவை அணைத்தாள். அந்நொடி சுயநினைவைப் பெற்ற சிந்துவின் உடல் நடுங்கிப் போக, வாழ்க்கையே வெறுத்துப் போனது. மாமியாரின் பேச்சு அக்கம் பக்கத்தினரும் கேட்டு அனைவரும் வாயிலில் வந்து நிற்க, குமரன் விழிகளில் நீருடன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனது மனம் தாயிற்காகத் துடித்து தவித்துப் போனது.
“அம்மா, அழாதீங்க… அந்தக் கிழவி சொன்னதுக்கெல்லாம் நீங்க அழுவீங்களா! அப்பா வந்ததும் அந்தக் கிழவியை வீட்டைவிட்டு தொரத்திடலாம்!” விக்ரம் சிந்துவின் அழுகைப் பொறுக்காது கூற, சிந்துவிடம் மாற்றமே இல்லை. அப்படியே நின்றிருந்தார்.
நடந்து அனைத்தையும் அறிந்து சொக்கநாதன் வீட்டிற்கு விரைந்தார். உள்ளே நுழைந்தவர் கண்டது உடல் வெடவெடக்க வெளுத்துப் போன முகத்துடன் அழுது கொண்டிருந்த சிந்துவைதான். பிள்ளைகள் மூவரும் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். வாயிலில் தெருக்காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்.
“டேய் குமரா, என்னாச்சு டா?” என சொக்கநாதன் அவனது தோளில் கைவைக்க, அவரது கையைக் கோபமாகத் தட்டிவிட்டான் மகன். அது அந்தப் பெரியவரின் கவனத்தில் பதியவில்லை.
“சிந்து, என்னாச்சு, ஏன் இப்படி அழற?” என அவர் சிந்துவின் அருகே செல்ல விழைய, “தொடாதீங்க… என் அம்மாவை நீங்கத் தொடக் கூடாது!” என குமரன் பெருங்குரலெடுத்துக் கத்தி சொக்கநாதன் முன்பு வந்து நின்றான்.
அவர் மகனின் வார்த்தையில் செயலில் ஒரு நொடி ஸ்தம்பிக்க, “என்னாச்சு? என்னாச்சுன்னு என் அம்மாவைக் கேட்குறீங்களே, உங்க அம்மாவை கேளுங்க! போய் உங்கம்மாவை கேளுங்கப்பா, நான் உங்களுக்குப் பிறக்கலையாம், என் அம்மா நல்லவங்க இல்லையாம்!” என அவன் கத்த, அந்தப் பெரியவர் அதிர்ந்து போனார்.
“குமரா, நீ என் புள்ளை டா! என் இரத்தம் டா!” என அவனைத் தொட முயன்றவரை அருவருப்பாய்ப் பார்த்தவன், இரண்டடி பின்னே நகர்ந்திருந்தான். அவனது முகம் கோபத்தில் தகித்தது.
“இதை என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்க அம்மாகிட்ட சொல்லுங்க!” என்று கத்தியவன், அவரது சட்டையைப் பிடித்திருந்தான்.
“ஏன் என் அம்மாவைக் கல்யாணம் பண்ணீங்க, என்ன பாவம் பண்ணாங்க அவங்க? டெய்லி இந்த வீட்ல அவங்க அனுபவச்ச கஷ்டத்தைத் தவிர என்ன கொடுத்தீங்க நீங்க. என்னை ஏன் பெத்தீங்க? பெறாமலே இருந்திருக்கலாமே பா! இப்படி என்னைப் பெத்த அம்மா கேட்க கூடாத வார்த்தையெல்லாம் கேட்டு நிக்கிறதைப் பார்த்தும் உங்களை மாதிரியே நானும் கையாலாகாம நின்னுட்டு இருக்கேன்!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினான். இத்தனை நாட்கள் மனதில் வைத்திருந்தவை எல்லாம் அந்நொடி திரண்டு வார்த்தைகளாய் வெளியேறின. மனம் வலித்தது அவனுக்கு தன் தந்தையின் குணத்தை எண்ணி. இவர் தன் தாயிற்கு ஆதரவாகப் பேசி, நின்றிருந்தால் சிந்து இந்நிலைக்கு வந்திருக்க மாட்டாரே என மனம் குமைந்தது. மகனின் வார்த்தையில் சொக்கன் அதிர்ந்தார். அவமானத்தில் தலைத் தானாக கவிழ, அவரது விழிகள் கலங்கின. அவன் கூறுவது அனைத்தும் உண்மையே!
“டேய் குமரா, இப்படியெல்லாம் பேசாத டா!” என்று குரல் இடறப் பேசியவர், தன் தாயிடம் திரும்பினார்.
“ம்மா… ஏன் மா இப்படி பேசுறீங்க? அவ என் பொண்டாட்டி மா. இதோ நிக்கிறானே என் ரத்தம்மா! அவளைப் பார்த்து இப்படியொரு வார்த்தையைக் கேட்க எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு?” சொக்கநாதன் கோபத்தில் கத்தினார். சிந்துவின் தோற்றம் அவரைப் பேச வைத்திருந்தது.
“டேய் சொக்கா, நான் இல்லாததையா சொன்னேன். இருக்கதை தான் சொன்னேன்!” என்றவரின் வார்த்தைகள் பொய்யென்று அங்கிருந்த அத்தனைப் பேருக்கும் தெரியும். ஏனென்றால் விக்ரமைவிட குமரனுக்கும் சொக்கனுக்கும் உருவ ஒற்றுமை அதிகம். பார்த்தாலே தந்தை மகன் என கண்டுபிடித்து விடலாம்.
“ம்மா…” என இவர் கத்த, “போதும்! நிறுத்துங்க… இந்த வீட்ல இத்தனை நாள் எங்கம்மா கஷ்டப்பட்டது போதும்!” என்ற குமரன், “ம்மா… எனக்கு இவரு வேணாம் மா. இவரை அப்பான்னு சொல்ல வாய்க் கூசுதுமா. இனிமேல் இந்த வீட்ல நம்ம இருக்க வேணாம். வெற எங்கையாவது போகலாம் மா!” எனக் குரல் அடைத்துப் போக, மன்றாடும் குரலில் சிந்துவின் கையைப் பிடித்து உலுக்கினான். சிந்து மகனைத் துடித்துப் போய்ப் பார்த்தார்.
“ம்மா… ஏன் மா அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்க மா… உங்களுக்கு அவர் முக்கியமா? இல்லை நான் முக்கியமா? அவருதான் வேணும்னா, இங்கே இருங்க. ஆனால் உங்கப் புள்ளை உங்களுக்கு இல்ல! நான் முக்கியம்னா என்னை நம்பி என் கூட வாங்க!” என்றவனின் வார்த்தைகளில் சொக்கநாதன் அதிர்ந்து சிந்துவைப் பார்க்க, அவர் கணவர் முகத்தைப் பார்க்கவேயில்லை. அவருக்குமே இந்த போராட்டமான வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. தாய்க்குப் பயந்து பயந்து இந்த மனிதர் தன்னுடன் வாழும் இந்த வாழ்வு அவருக்கு கசந்திருந்தது. ஓய்ந்து போனார்.
இதற்கு மேலும் இது போல வார்த்தைகளைக் கேட்க மனதில் திராணியில்லை. சொக்கநாதன் ஒழுங்காய் இருந்திருந்தால், தங்கம்மாளை இத்தனை தூரம் பேசிவிட்டிருக்க மாட்டாரே. அவருடைய கோழைத்தனம்தான் தங்களை இந்த இடத்தில் நிற்க வைத்திருக்கிறது எனப் புரிய, கணவருக்குக் கொடுத்த சத்தியத்தை மீறி மகன் கைகளைப் பற்றினார் சிந்து. மனம் வலித்தது. அந்நேரம் கூட கணவனுக்காக மனதினோரம் ஈரம் கசியாமல் இல்லை. ஆனால், அழுது கொண்டே தனக்காகவென நிற்கும் மகனை தனியேவிட மனமில்லாது வெளியேற முனைந்தார். குமரன் உடல் இறுக முகம் கோபத்தில் தகிக்க, தங்கம்மாளை அனல்வீசும் பார்வைப் பார்த்தான். அவர் அதற்கெல்லாம் அசுருபவர் இல்லையே! இன்னுமே அப்படியே நின்றிருந்தார். அவர்களை வெளியே அனுப்பிய திருப்தியில் அவரது குரூர முகம் மிளிர்ந்தது.
“டேய் குமரா, நீ ஏன் வீட்டைவிட்டுப் போகணும். அப்பத்தாதான் போகணும்… அதுதான் சிந்துமாவைத் திட்டுனது! நீ போகாத அண்ணா!” ஷெண்பா அவர்கள் முன்னே மறைத்தவாறு நின்றாள். அவளுக்கு அழுதழுது முகம் சிவந்திருந்தது. நடந்தது கொஞ்சம் புரிந்தும் புரியாத நிலை. ஆனால், சிந்துவும் குமரனும் வீட்டைவிட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதை உணர்ந்து பதறிப் போனாள் சின்னவள். அவர்கள் இருவரையும் இறைஞ்சும் பார்வைப் பார்த்தாள்.
“குமரன் இல்லாத வீட்ல நானும் ஷெண்பாவும் இருக்க மாட்டோம்!” மீசை அரும்பத் தொடங்யிருந்த விக்ரம் வீம்பாய் உரைத்து ஷெண்பா கரத்தைப் பிடித்துக்கொண்டு குமரனோடு வெளியேற முனைந்திருந்தான். அந்த வார்த்தையில் அவர்களின் செயலில் குமரன் மொத்தமும் உடைந்திருந்தான். இந்த அகோர நேசத்தின் பிடியில் வாழ தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணம் அவனை மேலும் இறுக வைத்திருந்தது.
“குமரா, நான் சொல்றதை கேளுண்ணா. எங்களைவிட்டுப் போகாதண்ணா! நானும் விக்ரமும் உன்னையும் சிந்துமாவையும் பார்த்துக்கிறோம். நம்ம எல்லாரும் எப்பவும் போல ஒன்னாவே இருக்கலாம் குமரா!” என ஷெண்பா விழிகள் வழியும் நீருடன் தேம்பிக் கொண்டே கெஞ்ச, கெஞ்ச அவளது பிஞ்சு விரல்களைக் கனத்த இதயத்துடன் இறுகிய முகத்துடன் தட்டிவிட்டிருந்தான் குமரன்.
“நீங்க என் கூட வரக்கூடாது. அங்கேயும் வந்து என் உயிரை எடுக்கப் போறீங்களா? வராதீங்க நீங்க. உங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. நீங்க ரெண்டு பேரும்தான் இதுக்குக் காரணம்!” மனம் வலிக்க பெருங்குரலெடுத்து குமரன் கத்திய போது ஷெண்பாவின் பிஞ்சு இதயம் ஸ்தம்பித்துப் போனது. உடல் நடுங்கிப் போனாள். அவளறிந்த குமரன் அவளிடம் கடிந்து ஒரு வார்த்தை ஒரு நொடி பேசியதாய் எங்குமே நினைவில் இல்லை.
விக்ரமும் அதிர்ந்து போனான். அவர்கள் இருவரையும் கோபமாய்ப் பார்த்த குமரன் சிந்துவுடன் விறுவிறுவென வெளியேறினான். சொக்கநாதன் கையாலாகாதத் தனத்துடன் இருவரையும் பார்த்து நிற்க, அவரது விழிகளில் திரண்ட நீர் கன்னத்தை நனைத்தது. மகன் கேட்ட கேள்வியில் மனிதர் மரித்துப் போயிருந்தார். அவன் கேட்ட அனைத்தும் அவரைக் குற்றக் குழியில் தள்ளியிருக்க, மொத்தமாய் உடைந்து போனார்.
ஷெண்பாவும் விக்ரமும் இன்னுமே குமரன் பேசிய பேச்சுகளிலிருந்து வெளிவரவில்லை. தேம்பிக் கொண்டே அவள் விக்ரமைப் பார்க்க, அவனது இமையோரம் நீர் தளும்பத் தொடங்க செல்லும் இருவரையும் வெறித்தான்.
ரோஷமாய்க் கூறி தாயை அழைத்து வந்துவிட்டாலும் பதினேழு வயதான குமரனுக்கு எதுவுமே தெரியவில்லை. எங்கு செல்வது, யாரைப் பார்ப்பது என எதுவும் அறியாத நிலைதான். திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல நிராதரவாக நின்றிருந்தான்.
எங்கோ நிர்க்கதியில்லாது நடுவீதியில் நின்றிருந்தவன் மனம் மட்டும் இனிமே தனக்குத் தந்தை வேண்டாம் என ஜெபம் செய்து கொண்டிருந்தது. அந்நிலையில்தான் சொக்கன் மீதிருந்தக் கோபத்தில் ரங்கராஜனை சந்தித்து வேலைக் கேட்டு மனோஹரி வீட்டில் பணிபுரியத் தொடங்கியிருந்தது.
சிந்து நடந்ததை கனத்த மனதுடன் உரைத்து முடிக்க, மனோஹரி துடித்துப் போனாள். எதிரிலிருந்தப் பெண்மணி எப்படி இத்தனை வாதைகளை அனுபவித்து மீண்டு வந்திருக்கிறார் என நெஞ்சடைத்துப் போக, கட்டியவனை நினைத்து தவித்துப் போனாள்.
அப்படியொரு நிலையில் குமரன் அந்த வயதில் என்ன பெரிதாய் என்ன செய்திருக்கக் கூடும் என்ற கேள்வியில் அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று தொண்டை கவ்வியது. விழியோரம் குபுகுபுவென ஈரம் படரத் தொடங்க, “எப்படி அத்தை இத்தனையும் தாங்கி, இப்போ இப்படி இருக்கீங்க?” எனக் கேட்டு சிந்துவை இறுக அணைத்தாள் மனோ.
நடந்த நிகழ்வைக் கேட்டு அவள் உணர்ச்சி வயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவர், “ஷ்… மனோ, ஏன் அழுகை? இதெல்லாம் நடந்து பத்து வருஷத்துக்கு மேலாகுது மா! நீ கேட்டன்னு நான் சொன்னேன். நினைச்சு அழுறதுக்கு இல்ல!” என அவளைத் தேற்றினாலும், மனோஹரியால் அத்தனை எளிதில் அதிலிருந்து மீள முடியவில்லை.
‘குமரன்… அவர் எப்படி துடித்திருப்பார்?’ என்ற எண்ணமே அவளை உடைக்கப் போதுமானதாய் இருந்தது.
தொடரும்…