தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தவன் மனையின் தவிப்பான பார்வையில் கரைந்து,
“ம்மா ப்ளீஸ். போதும் இதுக்கு மேல இதை பேச வேண்டாம் அவ பாவம் தப்பு என் மேல தான் மா” என்று தாயிடம் மனையாளுக்காக பரிந்து பேசினான்.
மகனிடம் பதில் கூறாதவர்,
“மகி நான் உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன் ஏன் நீ பதில் சொல்ல மாட்டியா? அவனை பாக்குற” என்று மருமகளை அதட்டினார்.
மகி, “அது… அத்தை ப்ளீஸ் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. இனி எப்பவுமே இதுமாதிரி நடக்காது” என்று கூற,
“ஓஹோ அப்போ இதுக்கு முன்னாடி இது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்குனு நினைச்சியா?” என்று கோதை திருப்பி வினா எழுப்ப,
மகிழ் தான் அவருடைய கேள்வியில் வாயடைத்து போனாள்.
“ம்மா…” என்று மீண்டும் குரு வர,
“நீங்க பேசாம இருங்க. நான் பேசிக்கிறேன்” என்றவள் கோதையின் கையை பிடித்து கொண்டு,
“அத்தை ப்ளீஸ் நான் செஞ்ச தப்பை எத்தனை மன்னிப்பு கேட்டும் சரி பண்ண முடியாது. நீங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. உங்ககிட்ட சொல்லாம போனது ரொம்ப பெரிய தப்பு தான். என்ன பண்ணா உங்க கோபம் போகும்னு தெரியலை. அம்மு தப்பு பண்ணா அடிச்சு திருத்துவிங்க தான அது மாதிரி என்னையும் அடிச்சுடுங்கத்தை” என்று கண்களில் நீருடன் கோதையின் கையை எடுத்து தன்னை அறைந்து கொள்ள,
“மகி என்ன பண்ற?” என்று பதறியவர் கையை உருவிக்கொண்டு மகியை அணைத்து கொண்டவர்,
“ஏன் இப்படி பண்ண. நீ பசங்க எல்லாரும் இல்லாம வீடு வீடாவே இல்லை” என்றவரது விழிகளும் நிறைந்து போனது.
“நானும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்த்தை” என்று தானும் அணைத்து கொண்டாள்.
மனையாளையும் தாயையும் ஒற்றுமையாய் கண்ட குருவிற்கு மனது வெகுவாய் நிறைந்து போனது.
பிறகு பிறைசூடனிடம் மன்னிப்பை வேண்டினாள்.
அதனை தொடர்ந்து நால்வரும் பயண களைப்பு தீர குளித்து முடித்து வர இரவுணவை அனைவரும் சேர்ந்து உண்டனர்.
மகி பிள்ளைகளை உறங்க வைக்க செல்ல குரு தாயின் அறைக்கு சென்றான்.
கோதை உறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தவர் மகனின் வரவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து,
“என்னப்பா” என்று வினவ,
அமைதியாக வந்து தாயின் அருகே அமர்ந்தவன் அவரை அணைத்து கொண்டான்.
கோதையும் ஏதும் கேட்காது மகனை அணைத்து தலை கோதினார்.
“சாரி அண்ட் தாங்க்ஸ் மா” என்று கூற,
பதில் கூறாது புன்னகைத்தவர்,
“ப்ரசாத் மகி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. எனக்கு தெரியும் அவ மேல எந்த தப்பும் இருக்காதுனு இருந்தாலும் நான் அவக்கிட்ட கோபமா பேசுனதுக்கு காரணம் இனி ஒரு தடவை அவ இந்த மாதிரி ஒரு முடிவு எடுக்க கூடாதுனு தான். மத்தபடி அவ மேல தப்பு இருக்காதுனு எனக்கு தெரியும். மகி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது அபூர்வம். அவளை நல்லா பாத்துக்கோ” என்று மொழிய,
மனைவியின் மேல் தாய்க்கு உள்ள நம்பிக்கையை கண்டு மனதிற்குள் வியந்து மகிழ்ந்தவன்,
“கண்டிப்பாம்மா” என்று தாயை அணைத்து விடுவித்தவன் மேலும் சில வார்த்தை பேசிவிட்டு அறைக்கு சென்றான்.
அங்கு இளையவர்களை உறங்க வைத்துவிட்டு மகி தானும் படுத்திருந்தாள்.
அறைக்குள் நுழைந்த கணம் குருவிற்கு யாவும் உள்ளே நிறைந்து போனது.
இத்தனை நாட்கள் இவர்கள் இல்லாது வெறுமையை பூசி இருந்த அறை இப்போது அழகால் நிறைந்து போனது.
கருமையாய் இருந்த வாழ்க்கை வர்ணமயமாகி போனது. இதோ இந்த கணம் வாழ்வு அவ்வளவு அழகாகி போனது.
மனதின் உவகையை சொல்ல வார்த்தைகள் இல்லை. இதழ்களில் ஒரு அமரிக்கையான புன்னகை வந்தமர அமைதியாக வந்து மெத்தையில் படுத்துக் கொண்டான்.
இத்தனை நாள் இவளில்லாது முள்மேடையாய் இருந்த மெத்தை இப்போது மலர் மேடையானது.
இவளருகாமையிலே நிம்மதியாய் மகிழ்ச்சியாய் வாழ்வை வாழ்ந்துவிட்டு போய்விடலாம் என்று உள்ளம் ஆனந்த கூச்சலிட்டது.
அமைதியாக திரும்பி படுக்கும் சமயம் அருகில் அசையும் அரவம் கேட்க திரும்பி பார்த்தான்.
மகிழ் எழுந்து அமர்ந்திருந்தாள். குரு எழுந்தமர்ந்து இரவு விளக்கை போட்டுவிட்டு,
“என்ன மகிழ் எதாவது வேணுமா?” என்று வினவ,
‘இல்லை’ எனும் விதமாக தலையசைத்தவள்,
“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்க,
“என்ன சொல்லணும்?” என்று அவள் முகம் பார்த்தான் குரு.
“அது… நீங்க… நான் உங்க வாழ்க்கையில இன்டர்பியர் ஆகிடுவேனோன்னு எதுவும் நினைச்சுடாதிங்க. நான் ஐ மீன் நம்ம ரிலேஷன்ஷிப் இப்பவும் அக்ரிமெண்ட் ரிலேஷன்ஷிப் தான் இது பெர்மனென்ட் இல்லைன்னு எனக்கு தெரியும். மோர் ஓவர் நான் யார் என்னோட நிலைமை என்ன தகுதி என்ன எல்லாம் எனக்கு நல்லா தெரியும். நீங்க எப்ப உங்க லைஃபை மூவ் பண்ண நினைச்சாலும் வேற மேரேஜ் பண்ண நினைச்சாலும் நான் உடனே உங்க லைஃபை விட்டு விலகி போய்டுவேன்”
“…”
“வேணும்னா அக்ரிமெண்ட் ரெடி பண்ணிடுங்க சார். சைன் பண்ணிட்றேன். நான் இதை நீங்க செஞ்ச உதவிக்கான நன்றிக்கடனா தான் செய்யிறேன். ஒருவேளை சீக்கிரமே நீங்க ஹனிகா மேமோட சமாதானம் ஆகி வீட்ல எல்லாரும் அக்செப்ட் பண்ணிக்க ரெடியா இருக்கும் போது நீங்க எனக்காக எந்த இடத்துலயும் யோசிக்க தேவையில்லை. நீங்க போன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும். இந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து நான் ரிலீவ் ஆகிடுவேன்” என்றவள் அவனது முகத்தை காண அவனிடம் பதில் இல்லை.
நிமிடங்கள் கடந்து,
“நான் இதை பத்தி எதுவுமே கேட்கலையே ஏன் இப்போ இது திடீர்னு…?” என்றவனது குரலில் அத்தனை இறுக்கம்.
“இல்லை எனக்கா சொல்லணும்னு தோணுச்சு. நீங்க உங்க லைஃப்ல மூவ் ஆன் ஆக நாங்க எந்தவிதத்துலயும் தடையா இருக்க மாட்டோம். அதான் சொன்னேன்” என்றுவிட,
தான் என்றோ கூறிய வார்த்தைகள் இன்று தன்னை தாக்குகிறது என்று எண்ணியவன் மௌனமாக தலையசைக்க இவள் படுத்துவிட்டாள்.
இங்கு குரு சற்று முன் இருந்த அத்தனை மகிழ்ச்சியையும் தொலைத்திருந்தான்.
அதுவும் அவளது ஒப்பந்தம் என்ற வார்த்தை வாழ்க்கையின் வட்டம் தன்னை சுழற்றியடிப்பதை உணர்த்தியது.
இருந்தும் மனதை தேற்றி கொண்டான். தனக்கு நேசம் பிறந்தது போல அவளுக்கும் பிறக்க வேண்டும் என்று எந்தவித அவசியமும் இல்லை. நிச்சயமாக ஒரு நாள் அவள் தன்னை புரிந்து கொள்வாள் என்று நம்பிக்கையோடு வாழ்வை நகர்த்தினான்.
அதன் பின்னர் வாழ்க்கை ஓரளவு பழையபடி அவர்களுக்கு நகர்ந்தது.
அப்போது தான் ஓரு நாள் ஏதேச்சையாக மகிக்கு ஹனிகாவின் திருமண பத்திரிக்கை கண்களில் பட்டது.
அது எப்போது குருவிற்கு வந்தது என்று தெரியவில்லை. அதனை கண்டதும் ஒரு பெரிய அதிர்ச்சி மகிழினிக்கு.
வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து எப்படியாவது குருவையும் ஹனிகாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று இவள் எண்ணியிருக்க இப்போது ஹனிகாவிற்கு திருமணமா?
அவளும் இவ்வளவு நாட்களாக குரு பிரசாத்தை பார்க்கிறாளே எப்போதும் போல இருந்தாலும் ஏதோ ஒரு சோகம் அவனிடம் தென்படுகிறதே…
அதன் காரணம் நேசம் கைக்கூடாததை தவிர வேறு என்ன இருக்க முடியும்.
நேசித்த வாழ்வு கைக்கூடாததன் வலி இவளுக்கு தெரியுமே…? அதுவும் தான் நேசித்த ஒருவனுக்கு அந்த வலி வர இவள் விரும்பவில்லை.
நிச்சயமாக குரு பிரசாத்திற்கு அவன் ஆசைப்பட்ட வாழ்வை அமைத்துக் கொடுத்து அவன் வாழும் மகிழ்ச்சியான வாழ்வை தான் காண வேண்டும் அதில் தான் தன்னுடைய முழு மகிழ்ச்சி இருக்கிறது என்று உள்ளம் நம்பியது.
இதோ இப்போது அதற்காக தான் குருவிடம் அகிலனை பார்க்க செல்வதாக பொய் கூறிவிட்டு ஹனிகாவை பார்ப்பதற்காக மும்பையை நோக்கி செல்கிறாள்.
பிள்ளைகளுக்கு பரிட்சை நடைபெறுவதால் தான் மட்டும் சென்று வருவதாக கூறி கிளம்பி வந்துவிட்டாள்.
சில மணி நேர பயணத்தில் விமானம் மும்பையில் தரையிறங்க சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்து வந்து நான்கு சக்கர வாகனத்தில் ஏறி தான் செல்ல வேண்டிய முகவரியை கூறி அமர்ந்தாள்.
ஏற்கனவே மகிழ் ஹனிகாவிடம் பேசி சந்திக்க சம்மதம் வாங்கி இருந்தாள். அதுவும் குருவிற்கு தெரிய வேண்டாம் என்றும் கூறி இருந்தாள்.
ஹனிகா தன்னுடைய தோழி வீட்டிற்கு வர கூறியிருக்க அவ்விடத்தை அடைந்து ஹனிகாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
அழைப்பை ஏற்ற ஹனிகா உள்ளே வருவதற்காக கதவை திறந்து,
“வாங்க உள்ள” என்று வரவேற்ற ஹனிகாவிற்கு மனது முழுவதும் குழப்பம் தான்.
இவள் எதற்கு தன்னை பார்க்க வந்துள்ளாள் அதுவும் குருவிற்கு தெரியாமல் என்று பலவாறான கேள்விகள் உள்ளே.
இருந்தும் எதையும் காண்பிக்காது வரவேற்றவள்,
“என்ன சாப்பிட்றிங்க டீ ஆர் காஃபி?” என்று வினவ,
“இல்லை எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மகிழ் மறுத்துவிட்டாள்.
பிறகு ஹனிகா, “சொல்லுங்க எதுக்காக என்னை பாக்கணும்னு சொன்னிங்க?” என்று வினா தொடுக்க
மகிழ் தன் பையில் இருந்த பத்திரிகையை எடுத்து நீட்டி,
“இது உங்க மேரேஜ் இன்விட்டேஷனா?” என்று வினா எழுப்பினாள்.
அதனை கண்ட ஹனிகா,
“ஆமா ஏன் கேக்குறிங்க?” என்று மொழிய,
“நீங்க குரு சாரை விட்டுட்டு ஏன் வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணிக்க போறீங்க?” என்று மகிழ் வினவ,
“வாட்…?” என்ற ஹனிகாவின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.