காதல் 35.1

காதல் 35:

திருச்சி விமான நிலையம் காலை நேர பரபரப்புடன் இயங்கியவாறு இருக்க பயணிகள் கையில் பையுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

காலை குளிருக்கு ஏதுவாக நன்றாக துப்பட்டாவை இழுத்து போர்த்திவிட்டு கையில் சிறிய பையுடன் விமான நிலைய வாசலில் இறங்கினாள் மகிழினி.

ஓட்டுநரிடம் கூறிவிட்டு தலையசைத்து வந்தவள் மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அவள் செல்லவிருக்கும் விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தது.

அமைதியாக வந்து விமான நிலைய லாஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

அடுத்தடுத்து செல்லவிருக்கும் விமானம் பற்றிய அறிவிப்பு வந்து கொண்டிருக்க வேடிக்கை பார்த்தபடி இருந்தவளுக்கு லேசாக பசித்தது.

எழுந்து சென்று அருகில் இருந்த தேநீர் விடுதியில் ஓரு தேநீரை வாங்கி கொண்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியிலே அமர்ந்து கொண்டாள்.

குளிருக்கு சூடான தேநீர் இதமாக இருக்க மெது மெதுவாக பருகினாள்.  சிந்தை எங்கெங்கோ சென்று வந்தது.

தனியாக செல்லும் முதல் விமான பயணம். அதுவும் எல்லோரிடமும் பொய்யுரைத்துவிட்டு செல்கிறாள்.

யாருக்கும் தான் செல்லும் இடமும் நோக்கமும் தெரிய வந்துவிட கூடாது என்று மனதிற்குள் வேண்டி கொண்டாள்.

அடுத்த சிறிது நேரத்திலே மகிழினி பயணம் செய்ய போகிற விமானத்தின் வருகை அறிவிக்கப்பட தன்னுடைய உடைமைகளை எடுத்து கொண்டு செய்ய வேண்டிய சோதனைகளை முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை தேடி வந்து அமர்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் அருகில் வந்து ஒரு பெண் அமர்ந்தது தெரிந்தது திரும்பி பார்க்கவில்லை.   விழிகளை மூடி கொண்டவளுக்கு இந்த மூன்று மாத வாழ்க்கை நினைவு வந்தது.

தான் மீண்டும் குருவின் வாழ்க்கைக்கு வந்த நாள் நினைவில் நழுவி சென்றது.

விழிகளில் நீருடன் ஓடி சென்ற மகி கோதையை இறுக அணைத்து கொண்டாள்.

என்ன முயன்றும் விழிகளில் நீர் பெருகியது.

“சாரி சாரி… அத்தை என்ன மன்னிச்சிடுங்க…” என்று இதழ்கள் விடாமல் உச்சரித்தது.

கோதை எந்தவித எதிர்வினையும் காண்பிக்கவில்லை.‌ எதையும் கூறவும் இல்லை.

மகிக்கு அவருடைய செயலிலே கோதையின் கோபம் புரிந்தது.

தான் செய்தது மிகப்பெரிய தவறு. தாய் இடத்தில் இருந்தவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு சென்றது மிகப்பெரிய தவறு எத்தனை மன்னிப்பு கேட்டாலும் சரியாகாது.

நிமிர்ந்து அவர் முகம் பார்த்தவள்,

“சாரித்தை என்னை மன்னிச்சிடுங்க. ஏதோ கோபத்துல பண்ணிட்டேன். ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க…” என்றவள் தேம்ப துவங்க,

“அப்பா என்கிட்ட யாரையும் பேச வேண்டாம்னு சொல்லுங்கப்பா. நான் என் பேரப் பசங்ககிட்ட மட்டும் தான் பேசுவேன்” என்று முகத்தை திருப்பி கொண்டார்.

“அத்தை…” என்ற மகி யாசிப்பாய் பார்க்க,

அழுது சிவந்த அவளது முகத்தை கண்ட குரு தாளாது,

“ம்மா நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல…” என்று ஆரம்பிக்க,

கோதை, “டேய் நீ பேசாம இரு இது எனக்கும் அவளுக்கும் உள்ளது நாங்க பேசி தீர்த்துக்கிறோம்” என்று மகனை முறைத்தார்.

“அத்தை தப்பு என் மேல தான் நான் தான் சின்ன விஷயத்துக்கு கோபப்பட்டு கிளம்பி போய்ட்டேன்” என்று மன்னிப்பு வேண்ட,

கோதை அப்போதும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

“ம்மா தப்பு என் மேல தான் அவ எதுவும் செய்யலை. நான் தான் கோபத்தில வார்த்தையை விட்டுட்டேன். அவக்கிட்ட பேசுங்க” என்று குரு மீண்டும் மொழிய,

“டேய் இப்போதான சொன்னேன் உன்கிட்ட.‌ இப்போ மட்டும் புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காம பேசுங்க. இத்தனை நாள் என்ன பண்ணிங்க?” என்று வினவ, இருவரிடமும் பதில் இல்லை.

“நீங்க ரெண்டு பேரும் இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?” என்றவர்,

“ஏன் மகி நான் என்னைக்காவது ஒரு ஆர்டினரி மாமியார் மாதிரி நடந்து இருக்கேனா…? உன்னை என் பொண்ணு மாதிரி தான பார்த்துக்கிட்டேன்.  உன்னையும் அம்முவையும் என்னைக்காவது பிரிச்சு பார்த்திருப்பேனா…?” என்று மகிழினியிடம் வினா தொடுக்க,

அவளது தலை இல்லை எனும் விதமாக அசைந்தது.

“அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லாம கொல்லாம வீட்டைவிட்டு போன. நாங்க வீட்ல இல்லாத நேரமா வீட்டைவிட்டு கிளம்பி போயிருக்க. இவனும் பார்த்திட்டு அமைதியா இருந்திருக்கான்”

“…”

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பண்ணியிருக்க வேண்டியது தான. இல்லைனா பெரியவங்க நாங்க சமாதானம் செஞ்சு வைக்க மாட்டோமா…? எங்ககிட்ட சொல்லாம கிளம்பி போயிருக்கேன்னா எங்களை நீ மதிக்கலைன்னு தான அர்த்தம்” என்று கேட்க,

மகிழ் பதறி, “ஹையோ அத்தை அப்படி எப்பவுமே நான் நினைக்கலை. நான் ஏதோ கோபத்துல அப்போதைக்கு என்ன செய்றோம்னு தெரியாம கிளம்பி போய்ட்டேன்” என்று மொழிந்தாள்.

“சரி கோபத்துல போய்ட்ட அப்புறமாவது எங்ககிட்ட சொல்லி இருக்கணும் இல்லை நாங்க கால் பண்ணோமே அதையாவது அட்டெண்ட் பண்ணியிருக்கணும். மூனு மாசம் எங்க இருக்க என்ன பண்ண எதுவும் எங்களுக்கு தெரியலை. இப்போ வரை குரு வந்து கூப்பிட்ற வரை நீ இங்க வரவோ எங்களை காண்டாக்ட் பண்ணவோ ட்ரை பண்ணலை”

“…”

“இப்போ நாங்க கூப்பிடலைன்னா நீ வீட்டுக்கு வந்திருக்க மாட்ட அப்டிதான…?” என்று முறைக்க,

“இல்லை இல்லைத்தை அப்படியில்லை…” என்று மகி மறுத்தாள்.

“அப்படியில்லைன்னா வேற எப்படி?” என்று கோதை வினவ,

மகியிடம் பதில் இல்லை. தவிப்புடன் குருவை ஏறிட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top