காதல் 36
ஹனியின் முகத்தில் பிறந்த அதிர்ச்சியை கண்ட மகி,
“நீங்களும் குரு சாரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினிங்க தான? அப்புறம் ஏன் நீங்க வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணிக்க போறீங்க?” என்று வினவ,
ஹனி அதிர்ச்சி விலகி புரியாது நோக்கியவள்,
“மகிழினி நீங்க என்ன பேசுறீங்க உங்களுக்கு புரியுதா?” என்று வினா தொடுத்தாள்.
“நான் எல்லாம் புரிஞ்சு தான் மேம் பேசுறேன். குரு சாருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவரோட அழகு படிப்பு ஸ்டேட்ஸ் எல்லாத்துக்கும் நீங்க தான் பொருத்தமான ஆள். அதுக்கு மேல நீங்க ஒருத்தரை ஒருத்தர் எவ்ளோ விரும்புனிங்க. வீட்ல ஒத்துக்கலைன்ற ஒரு ரீசனுக்காக உங்க காதல் கல்யாணத்துல முடியாம போய்ட கூடாது” என்று பேச,
ஹனி பதில் கூறாது வெறித்தாள்.
“நேசிச்ச காதல் கைக்கூடாததோட வலி எனக்கு தெரியும். குரு சாரும் சரி நீங்களும் சரி ரொம்ப ரொம்ப நல்லவங்க. நீங்க வாழ்க்கையில ஒன்னு சேர்ந்தா அதிகமா சந்தோஷப்பட்ற ஆள் நானாதான் இருப்பேன். ப்ளீஸ் மேம் குரு சாரை வேண்டாம்னு சொல்லாதிங்க. உங்களுக்குள்ள என்ன சண்டை இருந்தாலும் பேசி சரி பண்ணிடலாம்”
“மகிழினி இதை பத்தி பேச எதுவும் இல்லை. ப்ளீஸ் இங்க இருந்து போய்டுங்க” என்று ஹனிகா பொறுமை இழந்து கூற,
“மேம் ப்ளீஸ் மேம். இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க மேம். அங்க குரு சார் நீங்க இல்லாம சந்தோஷமாவே இல்லை. எப்பவும் போல இருந்தாலும் அவர் முகத்தில ஒரு சோகம் இருக்கும். அது மத்தவங்களுக்கு தெரியலைன்னாலும் எனக்கு தெரியிது மேம். அத்…” என்றவள் நிறுத்திவிட்டு,
“சாரோட அம்மாக்கிட்டயும் தாத்தாக்கிட்டயும் நான் பேசுறேன் மேம். நீங்க தான் சாரு எப்பவுமே ஏத்த பொண்ணுன்னு சொல்றேன் மேம். கண்டிப்பா அவங்க புரிஞ்சுப்பாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க” என்று ஹனிகாவின் கையை பிடித்து கொண்டு விழிகளில் கெஞ்சலுடன் கேட்க,
ஹனிகா தான் இவளிடம் என்ன கூறுவது என்று அவளை நோக்கினாள்.
குரு இன்னும் தன்னுடைய மனதினை இவளிடம் வெளிப்படுத்தவில்லை என்று புரிந்தது. தான் இப்போது மகியிடம் என்ன கூறுவது எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை.
“உங்க வீட்ல பேசணும்னா கூட நானே பேசுறேன் மேம். மேம் ப்ளீஸ் எனக்காக ஓரே ஒரு தடவை கன்சிடர் பண்ணுங்க. குரு சார் ரொம்ப நல்லவரு. அக்ரிமெண்ட் மேரேஜ் பண்ண என்னையே அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டாரு. நீங்க அவர் ஆசைப்பட்டு விரும்பின பொண்ணு உங்களை எவ்ளோ நல்லா பாத்துபாரு. சாரை பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை மேம். எனக்கு குரு சாரோட சந்தோஷம் முக்கியம் மேம். வேணும்னா நான் உங்க கால்ல விழுந்து கூட கேட்குறேன்” என்று விழிகளில் நீருடன் குனிய,
“ஏய்… என்ன என்ன பண்றீங்க…” என்று ஏகமாய் அதிர்ந்து பதறிய ஹனிகா விலகி,
“பர்ஸ்ட் எழுந்திருங்க…” என்று சற்று உரக்க கத்திவிட்டாள்.
இதில் மகிழ் சற்று அதிர்ந்து விலகி நின்றுவிட,
விழி மூடி தன்னை நிலைநிறுத்திக் கொண்ண ஹனிகா,
“மகிழினி உங்களுக்கு இப்போ என்ன வேணும் உன் குரு சார் சந்தோஷமாக இருக்கணும் அவ்ளோதான?” என்று வினவ,
மகியின் தலை மேழும் கீழும் அசைந்தது.
“பர்ஸ்ட் நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நான் குருவை விட்டு வரலை. உங்க குரு சார் தான் என்னை விட்டு போய்ட்டாரு” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,
“குடும்பத்தில இருக்கவங்ககிட்ட பேச முடியாம தான் இப்படி செஞ்சிட்டாரு” என்று மகிழ் இடை நுழைய,
“ஷ்… நான் பேசிட்டு இருக்கேன்ல எதுக்கு இன்டர்பியர் ஆகுறிங்க. அமைதியா நான் சொல்றதை கேளுங்க” என்று அதட்டிவிட்டு,
“அவர் என்னை விட்டுட்டு போனதுக்கு அவர் பேமிலி ரீசன் இல்லை. நீங்க தான் நீங்க மட்டும் தான்” என்று மகியை நோக்கி ஒரு விரலை நீட்டியவளது குரல் சிறிதாக பிசிறு தட்டியது.
“என்ன நா… நானா…?”என்ற மகிக்கு வார்த்தைகள் திக்கியது.
“ஆமா நீதான்…” என்று அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் ஹனியிடமிருந்து வெளிவந்தது.
‘நானா நான் எப்படி காரணம் ஆவேன். நான் என்ன செய்தேன். நான் எதுவுமே செய்யவில்லையே. ஒருவேளை என்னையறியாமல் எதாவது தவறு செய்துவிட்டேனா…? நான் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லையே…? விவாகரத்து வாங்கிய பிறகு நான் அவரை எந்தவகையிலும் தொடர்பு கொள்ளவில்லையே. ஏன் அவருக்கு தெரியாத ஓரிடத்தில் தானே இருந்தேன். ஒருவேளை இந்த இரண்டு வருடத்தில் என்னையறியாமல் எதாவது இடையூறு செய்துவிட்டேனா…?’
‘இத்தனை நாட்களாய காதலியுடன் சேராமல் துன்படுகிறாரே என்று அவருக்காக வருந்திய நான் தான் அவருடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமா…? ஆனால் அவர் இப்போது வரையிலும் என்னையும் என் பிள்ளைகளையும் எவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்கிறார். ஆனால் நான் அவர் வாழ்வை அழித்தது நான் தான் என்றே தெரியாமல் இருந்திருக்கிறேன்’ என்று நொடி நேரத்தில் பலவாறாக நினைத்து மறுகியவளுக்கு விழி நீர் பெருகிவிட,
“நான் என் மனசறிஞ்சு எதுவும் செய்யலை மேம். குரு சார் எனக்கு கடவுள் மாதிரி. அவர் வாழ்க்கையில என்னால எந்த கெடுதலும் நடக்காது. எதாவது தெரியாம செஞ்சிருச்சா நான் எப்படியாவது சரி செஞ்சிட்றேன் மேம். என்னை… என்னை மன்னிச்சிடுங்க மேம்” என்று ஹனிகாவின் கரத்தை பிடித்து கொண்டாள்.
மகியின் கண்ணீரை கண்ட ஹனிகா தன்னிலை அடைந்து,
“ஹே நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்குறிங்க. உங்க மேல எந்த மிஸ்டேக்கும் இல்லை” என்று மொழிய,
“நானே உங்க லைஃபை சரி பண்ணிட்றேன் மேம்” விழிகளை துடைத்தபடி மகிழ் பதில் அளிக்க,
“மகிழினி பர்ஸ்ட் நான் சொல்றதை கேளுங்க. நாங்க பிரிஞ்சதுக்கு நீங்க தான் ரீசன். பட் நீங்க எதுவும் பண்ணலை” என்றவள்,
“அன்ட் ஒன் மோர் திங்க் இதை எப்பவுமே சரி பண்ண முடியாது” என்று முடித்தாள்.
மகிழினி ஹனிகா கூறியது விளங்காது பார்க்க,
“பிகாஸ் குருவுக்கு உங்களை தான் பிடிச்சிருக்கு” என்றிட,
மகியின் முகத்தில் ஆயிரம் மின்னல்கள் வந்து போனது.
ஆழிப்பேரலையாய் அதிர்ச்சி தாக்க,
“என்ன…?” என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது.
‘குரு சாருக்கு தன்னை பிடித்துள்ளதா…? இருக்காது அவர் எங்கே அவர் என்னை எல்லாம் வீட்டிற்குள் விட்டதே பெரியது என்று எண்ணுபவர் அப்படிப்பட்டருக்கு தன் மீது விருப்பமா இருக்கவே இருக்காது’ என்று முடிவு செய்தவள்,
“இல்லை மேம். நீங்க ஏதோ தப்பா புரிஞ்சு இருக்கிங்க. அவர் எங்க நான் எங்க…” என்றவள் நொடியில் சமாளித்து கூற,
“இல்லை மகிழினி நான் தப்பா நினைக்கலை. குரு குரு தான் அவர் வாயால எனக்கு மகிழினியை தான் பிடிச்சிருக்குனு சொன்னாரு. அவளை நினைச்சிட்டு உன் கூட வாழ முடியாது ரெண்டு பேருக்கும் செய்யிற துரோகம்னு சொல்லிட்டு போய்ட்டாரு” என்று தெள்ளத் தெளிவாக இயம்பிட,
மகிழினி கண நேரத்தில் இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.
ஹனிகா கூறுவதை கிரகித்துக் கொள்ள மனது நேரமெடுத்தது.
விழிகளில் நீர் வற்றாது வழிய,
“கு.. குரு சாருக்கு என்னை பிடிச்சு இருக்கா…?” என்று நடுங்கிய இதழ்களுடன் வார்த்தைகள் வெளி வந்தது.
உள்ளே ஏதோ ஒன்று நழுவி சென்றதை மனது உணர்ந்தது.
“ஆமா நீங்க எவ்ளோ டைம் கேட்டாலும் இது தான் உண்மை. குரு சார் சந்தோஷமா இல்லைன்னு சொன்னிங்களே அந்த சந்தோஷம் உங்ககிட்ட தான் இருக்கு. நீங்க தான் அந்த சந்தோஷத்தை கொடுக்க முடியும். அவர் சோகமாக இருக்காருன்னு சொன்னிங்களே அதை நீங்க தான் சரி பண்ண முடியும்” என்று கூறிவிட,