அடுத்தடுத்து வேலை வேகமாக நடந்ததது. குருவும் மகிழும் பிள்ளைகளுடன் பள்ளிக்கு சென்று மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்தனர்.
குருவின் செல்வாக்கால் வேலை வேகமாக நடக்க ஒரு மணி நேரத்தில் யாவையும் முடித்து கிளம்பினர்.
அடுத்து மகி பணி புரியும் நிறுவனத்திலும் விரைவாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டை அடைந்தனர்.
குரு மகியிடம் தேவையானவற்றை மட்டும் எடுத்து கொள்ளுமாறு கூறிவிட அவளும் உடையும் மற்றும் இதர தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டாள்.
சௌமியிடம் தான் கணவரிடம் கோபித்து கொண்டு இங்கு வந்து இருந்ததாகவும் இப்போது அவர் வந்து சமாதானம் செய்யவும் தங்களுடைய வீட்டிற்கே செல்வதாகவும் சுருக்கமாக சிறிய பொய்யுரைத்துவிட்டு இருந்த பொருட்களை அவளிடமே கொடுத்துவிட்டு வீட்டு உரிமையாளரிடம் கூறிவிட்டு ஊட்டியை நோக்கி பயணமாகினர்.
சௌமியின் தோழியின் வாழ்வு நன்றாகிவிட்டதில் மகிழ்ந்து அவர்களை மகிழ்வுடன் அனுப்பி வைத்தாள்.
விமானத்தில் ஊட்டியை நோக்கிய பயணம். குருவின் ஒருபுறம் எழிலும் மறுபுறம் கவினும் அமர்ந்து இருக்க இங்க மற்றொரு இருக்கையில் அமர்ந்து இருந்த மகியின் மனது நடந்தவற்றை அசை போட்டு கொண்டிருந்தது.
இந்த இரண்டு நாட்களில் தன் மனதில் எத்தனை மாற்றங்கள் அதுவும் குருவால்.
இனி குருவை வாழ்வில் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணியிருக்க மீண்டும் அவனுடனான ஒரு பயணம் விமானத்தில் மட்டுமல்ல வாழ்விலும்.
இதுவும் நிரந்தரம் அல்ல என்று அவளுக்கு தெரியும். நேற்று குரு வந்து பேசி சென்ற பிறகு இரவு முழுவதும் அதே சிந்தனை தான்.
குருவை பற்றி தான் அவனுடைய நிலையை பற்றி தான். நேசம் கொண்டவனை இப்படி ஒரு உடைந்த நிலையில் அவளால் காண முடியவில்லை.
உள்ளம் மேவிய நேசத்தினால் உண்டான உறவு உடைவதென்பது உடலிலிருந்து உயிரை பிரிப்பதற்கு சமம்.
உள்ளம் கொண்ட நேசம் கைக்கூடாததன் வலி அவளுக்கு தெரியுமே. அவனுடைய வலியை உணர்ந்தாள்.
தன்னுடையதாக எண்ணினாள். தன்னுடைய வாழ்வில் எதிர்பாராது வந்து இத்தனை உதவிகளை செய்துவிட்டு சென்றவனுக்கு நிச்சயமாக தான் எதாவது செய்ய வேண்டும்.
தான் எவ்வளவு செய்தாலும் குரு தனக்கு செய்ததற்கு துளியும் ஈடாகாது. இருந்தும் தன்னால் ஆன உதவியை குருவிற்கு செய்ய வேண்டும்.
நிச்சயமாக கோதையிடமும் பிறைசூடனிடமும் நடந்ததவற்றை கூறி தான் எந்தவிதத்திலும் குருவிற்கு பொருத்தம் இல்லை.
ஹனிகா தான் அழகு அறிவு என யாவிலும் குருவிற்கு மிகவும் பொருத்தமான பெண் மேலும் குருவிற்கு ஹனிகாவின் மேல் தான் காதல் அவருடன் வாழ்ந்தால் தான் குருவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று பேசி புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டு தான் குருவிடம் தான் அவனுடன் வருவதாக சம்மதம் தெரிவித்தாள்.
சில மணி நேரப் பயணத்தில் இருவரும் திருச்சியை அடைந்து அங்கிருந்து அங்கிருந்து மகிழுந்தில் குருவின் வீட்டை அடைந்தனர்.
இத்தனை நேரம் அமைதியாக இருந்த மகியின் மனதிற்குள் இப்போது போராட்டம்.
கோதையிடமும் பிறைசூடனிடம் என்ன கூறுவது. தன்னை நம்பி தன் மீது அவ்வளவு பாசத்தை வைத்திருந்தவர்களை மதிக்காது ஒரு வார்த்தை கூட அவர்களிடம் கூறாது சென்றுவிட்டேன்.
இப்போது எப்படி அவர்களது முகத்தில் விழிப்பது. மகி மீண்டும் அவர்களை சந்திக்குமாறு சூழ்நிலை வரும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.
ஒருவித பதட்ட மனநிலையில் திரும்பி குருவை காண,
“பயப்படாத மகி. ஏற்கனவே நான் எல்லாம் பேசிட்டேன்” என்று தைரியம் கூற,
மௌனமாக தலையசைத்தவளுக்கு அவர்களிடம் என்ன பேசுவது கூறுவது என்று எதுவும் தோன்றவில்லை.
குரு தங்கள் இருவருக்கும் சண்டை அதனால் மகி கோவித்து கொண்டு சென்றுவிட்டாள்.
தவறு எல்லாம் தன் மீது தான் என்று ஏற்கனவே கூறி வைத்திருந்தான்.
மகிழுந்து வீட்டின் வாயிலுக்கு வந்ததும் மகி பிள்ளைகளுடன் இறங்கினாள். இளையவர்களை கையில் பிடித்து கொண்ட குரு,
“வா மகி…” என்றுவிட்டு முன்னே நடக்க,
அவன் பின்னோடு நடந்தவளுக்கு தான் ஏதோ முன் ஜென்மத்தில் இங்கு வாழ்ந்த உணர்வு.
இளையவர்களை பெரியவர்களை கண்டதும்,
“பாட்டி… தாத்தா…” என்று மகிழ்ச்சியுடன் ஓடி செல்ல,
கோதையும் பிறைசூடனும் சிறியவர்களை தூக்கி கொண்டனர்.
கோதைக்கும் பிறைசூடனுக்கும் எழிலையும் கவினையும் கண்டதும் அவ்வளவு மகிழ்ச்சி.
இளையவர்களுக்கும் தான் அது அவர்களது முகத்திலே பிரதிபலித்தது.
“டேய் குட்டிங்களா சொல்லாம கொல்லாம பாட்டியை விட்டு எங்கடா போனிங்க. நீங்க இல்லாம பாட்டியும் தாத்தாவும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்” என்று கோதை அவர்களை அணைத்து கொள்ள,
“நாங்களும் உங்களை மிஸ் பண்ணோம் பாட்டி. அம்மா தான் எங்களை அங்க கூட்டிட்டு போய்ட்டா. டாடி சொல்லிட்டாரு இனி நாங்க எப்பவும் உங்க கூட தான்னு” என்று எழில் மொழிய,
“ஆமா பாட்டி” என்று கவினும் அவரது கன்னத்தில் முத்தமிட்டான்.
சில பல நிமிடங்கள் இளையவர்களிடம் பேசிவிட்டு திரும்பிய கோதை மற்றும் பிறைசூடனது பார்வையும் மகியிடம் நிலைத்தது.
இருவரும் எதுவும் கேட்கவில்லை ஆனால் அவர்களை கண்டதும் மகிழுக்கு விழிகள் நிறைந்தது.
தனது தாய்க்கு பிறகு பெற்றவரை போல பார்த்து கொண்ட கோதையை கண்டு அவளுக்கு உள்ளத்தோடு சேர்ந்து விழிகளும் கலங்கியது.
என்ன பதில் மொழிவது தன் செயலுக்கு என்ன விளக்கம் கொடுப்பது என்று அறியாது நின்றவளது கண்ணீர் கன்னம் தாண்டி வழிய ஓடிச்சென்று கோதையை அணைத்து கொண்டாள்.