ஏதோ யோசனையில் இருந்தவளுக்கு அப்போதுதான் திவாகர் நினைவு வந்தது. கடந்த பதினைந்து நாட்களாக அவனை வீட்டுப் பக்கமே காணவில்லை என்ற நினைவு எழ, அலைபேசியில் சகோதரனுக்கு அழைத்தாள்.
“சொல்லு மனோ, என்ன பண்ற?” என்றவன் இயல்பாய்ப் பேசினான்.
“எங்க இருக்க திவா, வீட்லயா?”
“ஆமா! சண்டே லீவுதானே. அதான் வீட்ல இருக்கேன்!”
“வேலையெதுவும் இல்லைல?”
“இல்ல… பெருசா ஒன்னும் இல்ல!” என்றவன் கைகளை நெட்டி முறித்தான்.
“ஹம்ம்… அப்ப சரி நீ கிளம்பி இங்க வா!” என்றாள் தங்கை.
இதை எதிர்பாராத திவாகர், “இல்ல மனோ…” என எதோ பேச வந்தான்.
“என்ன இல்ல மனோ, இல்லாத ஒரு வேலை இப்போ நியாபகத்துக்கு வந்துடுச்சு. அதான் நான் வரலைன்னு சொல்லப் போறீயா?” அவள் குரலில் காரமிருந்தது. தமையன் அமைதியாகிப் போனான்.
“உனக்கு என்ன பிரச்சனை திவா, ஏன் இங்க வர மாட்ற. என்னை நீ பார்த்து பதினைஞ்சு நாளாச்சு, அது உனக்கு நினைப்புல இருக்கா? காலும் பண்ண மாட்ற, அம்மாவோட வருவன்னு பார்த்தா, ஏதேதோ ரீசன் சொல்லி தட்டிக் கழிக்கிற. அப்படியென்ன நான் வேண்டாதவளா போய்ட்டேன்…” என்றவள் குரலில் வருத்தம் மேவியது. மறுபுறம் திவாகர் பேச்சற்று அமர்ந்திருந்தான்.
“ரொம்ப கஷ்டப்பட்டு நீ என்னைப் பார்க்க வர வேணாம்ண்ணா! வராத!” என மனோ அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கு ஏதோ போலானது.
தலையைப் பிடித்து அமர்ந்தவன் எழுந்து கிளம்பி தங்கையைக் காணச் சென்றான். அவன் வந்ததை உணர்ந்த மனோஹரி, ‘உள்ளே வா, வராதே!’ என எதையும் கூறவில்லை.
சிந்துதான், “வாப்பா திவா, உள்ள வா!” என அழைத்தார்.
“உக்காரு பா, டீ போட்டு எடுத்துட்டு வரேன்!” என அவர் சமையலறைக்குள் நுழைய, கோபமாயிருந்த மனோவின் அருகே அமர்ந்தான் அவன்.
“எதுக்கு வந்த திவா?” இவள் ஆற்றாமையுடன் கேட்க, “ச்சு… சாரி மனோ, உண்மையா வொர்க் லோட் அதிகம். அதான் வர முடியலை!” என்றான் சமாளிப்பாக.
“பொய் சொல்லாத திவா, எதையோ மனசுல நினைச்சு நீ பேசுற… ஏன் இதுக்கு முன்னாடி உனக்கு வொர்க் இல்லையா என்ன? அப்போ எப்படி கால் பண்ண, வீட்டுக்கு வந்து பார்த்த!” இவள் சரியாய்க் கேட்க, திவாகர் பெருமூச்சை இழுத்துவிட்டான்.
நடந்ததை அவளிடம் கூற விரும்பாதவன், “சாரி டி, இனிமே இப்படி நடக்காது. ப்ராமிஸா எவ்வளோ வொர்க் இருந்தாலும் உன்னைப் பார்க்க வரேன், கால் பண்றேன்!” என்றான் தழைந்த குரலில். தங்கை கொஞ்சம் தணிந்தாள். சிந்து குளம்பியை எடுத்து வர குடித்தவன் குமரனைப் பார்க்காது கிளம்ப முடியாது என எண்ணி அவன் அறைக்குள் நுழைய, இன்ப அதிர்ச்சிதான்.
ஷெண்பாவும் அவனுடன் இருப்பாள் என இவன் எண்ணவில்லை. உள்ளே நுழைந்தவனின் பார்வை அவளைத் தொட்டுத் தடவி பின் குமரனிடம் வந்தது.
“வாங்க திவாகர்…” என்று தலையை அசைத்த குமரனும் அவனது பார்வையை உணர்ந்தான்.
“ஷெண்பா நீ போ, அப்புறம் பேசலாம்!” என தங்கையை அவன் வெளியேற்ற, அதில் திவாகருக்கு கோபம். அதை முகத்தில் காண்பித்தவாறே இருக்கையில் அமர்ந்தான்.
‘இவன் தங்கச்சியை என்ன செஞ்சுடுவேன்னு இப்போ வெளிய அனுப்புனான்?’ என்ற எரிச்சல் அப்பட்டமாய் அவன் முகத்தில் விரவியது.
“எப்படி இருக்க குமரா?” பட்டும் படாமலும் திவாகர் கேட்க, இவன் தலையை அசைத்தான்.
“அடிச்சவனைப் பிடிச்சு விசாரிச்சேன்!” திவாகர் கூற, “நான்தான் வேணாம்னு சொன்னேன் இல்ல!” குமரன் குரலில் எரிச்சல்.
‘எதற்கு இவனுக்கு இந்த வேலை?’ என அவனுக்குக் கடுப்பாகியது. தான் பார்த்துக் கொள்வதாய்க் கூறியும் கேட்காது திவாகர் இந்த விஷயத்தில் தலையிட்டதை குமரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது பிடித்தமின்மையை முகத்தில் காட்டினான்.
அவன் எதற்காகக் கூறுகிறான் என உணர்ந்த திவாகர், “எங்களுக்கும் புரியுது குமரா, ஷெண்பாவோட ப்ரெண்ட்னுதான் ரெண்டு தட்டுதட்டினேன். உனக்கு மட்டும் அவ மேல அக்கறை இருக்குன்னு நினைக்க வேண்டாம்!” எனப் பொரிந்தான்.
“அதான்… அந்த அக்கறைதான் வேணாம்னு சொல்றேன்! உங்களுக்கு எதுக்கு அவ மேல தேவையில்லாத அக்கறை?” குமரன் பல்லைக் கடிக்கவும், இவனுக்கு உச்சியில் ஏறியது.
“எதா இருந்தாலும் நானே பார்த்துக்குறேன்!” என்றவனின் பேச்சு இனிமே அவள் விஷயத்தில் உன் தலையீடு தேவையில்லை என்பதாயிருக்க, கோபமாய் திவாகர் வெளியே எழுந்துப் போய்விட்டான். இருவருக்குமே மற்றவர் மீது கோபம் பெருகியது.
நொடியில் முக பாவனைகளை மறைத்துவிட்டு, “நான் கிளம்புறேன் மனோ, அப்புறம் பார்க்கலாம்!” என அவளுக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென இயல்பாய் வெளியேறினான் திவாகர். அவனது பாவனையில் மனோஹரிக்கும் சந்தேகம் வரவில்லை.
திவா அகன்றதும் ஷெண்பா மீண்டும் குமரன் அறைக்குள் நுழைந்தாள். தான் செல்லும்போது இருந்த முகபாவனைகள் குமரன் முகத்தில் மாறியிருக்க,
“என்ன அண்ணா, ஏன் ஒருமாதிரி இருக்க நீ?” என அவனருகே அமர்ந்தவள், வினவினாள்.
“ஒன்னும் இல்லை ஷெண்பா…” பதிலளித்தவன், “திவாகர் கூடப் பேசியிருக்கீயா?” என வினவினான்.
“யாரு குமரா திவாகர்?” இவள் விழிக்க, தமையனுக்கு அப்படியொரு ஆசுவாசம். உண்மையாய் ஷெண்பாவிற்கு திவாகர் பெயர் நினைவில் இல்லை. அவனது பெயர் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் மறந்திருந்தாள். நினைவில் வைத்துக் கொள்ளுமளவு பரிட்சயமும் இல்லை, தேவையும் இல்லை.
“அதைவிடு, நீ டான்ஸ் ஆடுன வீடியோ காட்டறேன்னு சொன்ன?” என அவளின் கவனத்தை திசை திருப்பியிருந்தான். சிறிது நேரத்திலே விக்ரம் உள்ளே நுழைந்தான்.
“வா டா கிளம்பலாம்!” என்றவன் இருக்கையில் பொத்தென அமர்ந்தான்.
“எங்கடா?” குமரன் வினவ, ஷெண்பாவிற்கும் அதே கேள்விதான் முகத்தில்.
“அதான் கால் சரியாகிடுச்சு இல்ல… வீட்லயே உட்கார்ந்திருக்காம வெளிய எங்கேயாவது போலாம். சீக்கிரம் ட்ரெஸை மாத்துடா! ஆப்டர்நூன் ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்!” என அவன் துரிதப்படுத்த, ஷெண்பாவிற்கும் எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்குமென தோன்றியது.
“ஆமா அண்ணா, வெளியப் போகலாம். நீ ரெடியாகு!” என அவள் கூற, குமரன் தாயை நினைத்து யோசித்தான்.
“சிந்துமாகிட்டே நாங்கப் பேசிக்கிறோம்!” என்ற ஷெண்பா துள்ளலுடன் வெளியே வர, மற்ற இருவரும் பின் தொடர்ந்தனர்.
“சிந்து மா, நாங்க மூவிக்குப் போகலாம்னு இருக்கோம். ரொம்ப வருஷம் கழிச்சு மூனு பேரும் சேர்ந்து போகப் போறோம். நீங்க நோ சொல்லிடாதீங்க, அதான் அவனுக்கு கால் சரியாகிடுச்சு இல்ல. கையைப் பத்திரமா பார்த்துக்குறோம், ப்ளீஸ் சிந்து மா!” என அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். மறுத்துப் பேச வந்தவரின் வார்த்தைகள் அமிழ்ந்து போயின.
“சிந்து மா, நாங்க வெளியப் போகணும்!” விக்ரமும் தன் பிடியிலே நிற்க, அவரால் மறுக்க முடியவில்லை.
“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க பா!” என அவர் கூறியதும், ஷெண்பா துள்ளி குதித்தாள். குமரன் மனோவைப் பார்க்க, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் மனைவி.
“மனோ, நீயும் வாயேன் எங்கக் கூட!” அவன் அவளை சமாதானம் செய்ய அழைக்க, “ஆமா மனோ, நீயும் பிள்ளைகளோட போய்ட்டு வா. என்கூட உக்காந்தா உனக்கு நேரம் போகாது!” என்றார் சிந்து.
“இல்ல அத்தை, எனக்கு இஷ்டமில்லை!” என அவள் முடித்துவிட்டாள்.
ஷெண்பாவும், “அண்ணா, போய் ட்ரெஸ் மாத்து, கிளம்பு!” என குமரனை அறைக்குள் தள்ள, விக்ரமும் அவனுக்கு உதவ சென்றான்.
சிந்து அகலவும் ஷெண்பாவிடம் வந்த மனோ, “உங்க அண்ணனை வெளிய கூட்டீட்டுப் போக அத்தைக்கிட்ட கேட்டீங்க சரி, என்கிட்ட ஒருவார்த்தை சொல்லணும் இல்ல?” என வினவினாள்.
ஷெண்பா, “உங்ககிட்டே சொல்லணும்னு அவசியம் இல்ல!” என முகத்தை வேறுபுறம் திருப்பினாள். ‘என் அண்ணனை அழைத்துச் செல்ல இவளிடம் ஏன் கேட்க வேண்டும்?’ என்ற கோபம் அவளது குரலில்.
“அவசியம் இருக்கு, இப்போ அவர் உன் அண்ணன் மட்டுமில்ல, என்னோட புருஷன். அவரைச் சார்ந்த நல்லது கெட்டது எனக்கும்தான் சேர்த்தி. அதனால நீ எனக்கு அண்ணின்ற மரியாதையைக் கொடுக்கணும்…” என இவள் அழுத்திக் கூற, ஷெண்பா அவளை முறைத்தாள்.
“இது எனக்காக மட்டும் இல்ல, உங்க அண்ணனுக்காகவும் தான். நீ எனக்குத் தர்ற மரியாதையை வச்சுதான் நாளைக்கு மத்தவங்க என்னை மதிப்பாங்க, உங்க அண்ணனையும் மதிப்பாங்க…” என்று மனோ தன் கருத்தைக் கூற, அவளுக்குப் புரிந்தாலும் ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை போலும். அமைதியாய் மனோவை முறைத்துவிட்டு நகர்ந்தாள்.
மூவரும் வெளியே செல்ல கிளம்பினர். சிந்து மூன்று பேருக்குமே ஆயிரம் பத்திரங்களைக் கூற, மனோஹரியின் முறைப்புக் கணவனைத் தொடர்ந்த வண்ணமிருக்க, தற்காலிகமாக அதை கிடப்பில் போட்டவன் கிளம்பிவிட்டான். நீண்ட நாட்கள் கழித்தான இந்தப் பயணம் மூன்று பேருக்குமே உற்சாகத்தை அள்ளித் தெளித்திருந்தது.
தொடரும்…