அலுவலகத்தில் அப்படி என்றால் வீட்டு பக்கமே வர பிடிக்கவில்லை. கதவினை திறந்தால் அவளில்லாத வெறுமை அவனை கொன்று திண்றது.
அவளில்லாத குழந்தைகள் இல்லாத இருள் சூழ்ந்த வெறுமை தன்னை இழுத்து கொள்வது போல தோன்ற வீட்டிற்கு செல்வதை வெறுத்தான்.
நாட்கள் செல்லச் செல்ல தான் அவளில் எவ்வளவு தூரம் ஆழ்ந்து போயிருக்கிறோம் என்று அவனுக்கு உள்ளம் தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காண்பித்தது.
அவளில்லாத வாழ்க்கை இது போல தான் இனி எப்போதும் என உள்ளம் கூக்குரலிட்டது.
தாயிடம் அவர்கள் மூவரையும் பள்ளியில் இருந்து இருபது நாட்கள் சுற்றுலா அழைத்துச் சென்று இருப்பதாக பொய்யை கூறிவிட்டவனால் ஹனியிடம் பேச இயலவில்லை.
என்னவோ வேறொருத்தியை மனதில் வைத்து கொண்டு ஹனியிடம் பேசுவதில் பெரியதான குற்றவுணர்வு வாட்டியது.
இருவருக்கும் செய்யும் துரோகமாகப்பட வேலை அதிகமாக இருக்கிறது என்று கூறி ஹனியிடம பேசுவதை குறைத்து இருந்தான்.
நாட்கள் சென்றது அவனை வாட்டும் மகியின் இன்மையும் அதிகரித்தது. கோதையும் ஊரில் இருந்து வந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தது.
தாயிடம் நடந்த எதையும் கூற இயலும் என்று தோன்றவில்லை ஏற்கனவே சொன்ன பொய்யையே தொடர்ந்து வந்தான்.
யாரையும் பார்க்க பிடிக்கவில்லை பேச பிடிக்கவில்லை அப்பா என்று இளையவர்களின் குரலும் கள்ளமறியா முகமும் நினைவிற்கு வந்து வருத்தியது.
ஊண் உறக்கம் யாவையும் மறந்து சுற்றி கொண்டு இருந்தான் உடையில் நேர்த்தி இல்லை உள்ளத்தை போலே. தோற்றமே என்னவோ போல ஆகியிருந்தது.
வீட்டிற்கு வர அஞ்சி அலுவலகத்திலே சில நாள் தங்கிவிட்டான்.
கோதைக்கே அவனது தோற்றத்தை கண்டு வருத்தம் மோலோங்கி கேட்டுவிட, எதையெதையோ கூறி சமாளித்து இருந்தான்.
வர வர ஹனியும் ஏன் என்னிடம் இப்போது சரியாக பேசுவதில்லை என்று அடிக்கடி கேட்க துவங்கியிருந்தாள்.
இரவெல்லாம் விழித்து சிந்தித்தவன் ஒரு முடிவெடுத்துவிட்டான்.
தாயிடம் அலுவல் தொடர்பாக வெளியூருக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு மும்மைக்கு விமானம் ஏறி இருந்தான்.
செய்யப் போகும் செயலின் வீரியத்தை உள்ளம் உணர்ந்து தான் இருந்தது.
ஆனால் இதனை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. என்னவோ எதையும் கூறாது அவளை ஏமாற்றி கொண்டு தானும் குற்றவுணர்வுடன் இருப்பதற்கு உண்மையை கூறி உடைத்துவிடலாம் என்று தான் செல்கிறான்.
தன்னுடைய தற்போதைய முடிவு நிலை அறிந்தால் நிச்சயமாக ஹனிகா உடைந்து போவாள் தான்.
ஏன் அழுவாள் சண்டையிடுவாள் என எல்லாம் தெரியும் அழுதாலும் பரவாயில்லை உண்மையை கூறிவிடலாம்.
என்னை போன்ற பலகீனமானவன் அவளுக்கு எப்போதும் வேண்டாம். ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்.
நாளை திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய மனம் மாறிவிட்டால் அவளுடைய வாழ்வு என்னாவது என்னை போன்ற நிலையற்ற மனநிலையில் இருப்பவன் அவளுக்கு எப்போதும் வேண்டாம்.
ஹனிகா மிகவும் நல்லவள் அவள் குணத்திற்கு ஏற்றபடி ஒரு நல்வாழ்வு அமைய வேண்டும்.
அவள் மகிழ்வாக ஒரு நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்று பலவாறான எண்ணங்களுடன் பயணத்தை தொடர்ந்தான்.
ஹனியின் காதலுக்கு தான் தகுதியற்றவன் என்ற சிந்தனை மட்டும் உள்ளே வலு பெற்று இருந்தது.
சில மணி நேரப் பயணத்தில் மும்பையை அடைந்திருந்தான்.
ஹனியிடம் நேற்றே தான் வருவதை கூறியிருந்தான். இதனை அறிந்த ஹனி மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவள் தானே வந்து அழைத்து கொள்வதாக கூற குரு வேண்டாம் தானே வருகிறேன் என்று கூறிவிட்டான்.
ஹனிக்கு குருவை நேரில் காண்பதே மிகவும் மகிழ்ச்சியளிக்க எதையும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.
ஹனியின் தோழி திவ்யா குடும்பத்தோடு வெளியூர் சென்று இருப்பதால் தன்னுடைய வீட்டிலே சந்தித்து கொள்ளுமாறு கூறியிருந்தாள்.
ஹனியும் தானாக வீட்டில் கூறும்வரை எதுவும் தெரிய வேண்டாம் என்று எண்ணி சரியென கூறினாள்.
குரு வந்ததும் அவனிடம் பேசிவிட்டு தன்னுடைய வீட்டிலும் பேசிவிட்டு இருவரையும் சந்திக்க வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தாள் ஹனிகா.
ஆனால் விதி வேறொன்றை திட்டமிட்டிருப்பதை அவள் அறியாள்.
குரு விமான நிலையத்தில் இருந்து இறங்கி ஒரு நட்சத்திர விடுதியில் குளித்து தயாராகி ஹனிகாவை காண சென்றான்.
அந்த உயர் ரக அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது தளத்தை அடைந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தவனுக்கு ஒரு பெண்ணின் மனதை சுக்கு நூறாக உடைக்க போகிறோம் என்ற தோன்றி உள்ளே வதைத்தது.
காதில அலைபேசியுடன் கதவை திறந்தவள்,
“கால் யூ லேட்டர்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு,
“குரு…” என்று சிரிப்புடன் ஆரம்பித்தவள் அவனது தோற்றத்தில் அதிர்ந்து நின்று விட்டாள்.
அவன் உள்ளே நுழைந்ததும் கதவை பூட்டியவள்,
“என்ன என்ன ஆச்சு. ஏன் இப்படி ஆகிட்ட குரு…” என்று அதிர்வுடன் வினாவை எழுப்ப,
சலனமின்றி அவளை பார்த்தவன்,
“கொஞ்சம் ஒர்க் லோட்” என்றிட,
“என்ன வொர்க் எப்போ பார்த்தாலும் அதையே கட்டி அழறிங்க. நம்ம மேரேஜ்க்கு அப்புறம் நான் தான் உங்களுக்கு பர்ஸ்ட் அப்புறம் தான் பிஸ்னஸ் எல்லாம். பாருஙக தூங்காம கண்ணெல்லாம் ரெட்டிஷ்ஷா இருக்கு. போகாததுக்கு இந்த பியர்ட் வேற எப்பவும் நீட் அண்ட் க்ளீன் ஷேவ்ல இருக்க உங்களுக்கு இது சூட் ஆகலை” என்று பொரிந்து தள்ளியவள்,
“இருந்தாலும் இந்த அப்பியரன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மிஸ் யூ லாட் குரு” என்று அவனை இறுக்கமாக அணைத்து கொண்டவள்,
“சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கலாம் குரு. என்னால உங்களை பிரிஞ்சு இருக்க முடியலை” என்று அவனது மார்பில் முகத்தை புதைக்க,
இங்கு குருவிற்கு உடல் இறுகியது.
மனது மீண்டும் மீண்டும் இந்த அன்பிற்கு நீ முற்றிலும் தகுதி அற்றவன் என்று கூச்சலிட்டது.
என்னென்னவோ நினைத்து வந்தவனால் எதுவும் பேச இயலவில்லை.
இந்த பெண்ணின் நேசத்தின் முன்பு பேச்சற்றவனாகி போனான்.
“ஹனி எனக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா…?” என்று வினவிட,
“ஓ சாரி எதுவுமே கொடுக்காம பேசிட்டு இருக்கேன் பாருங்க உட்காருங்க நான் போய் குடிக்க எதாவது எடுத்துட்டு வர்றேன்” என்றவள் சமையலறைக்குள் செல்ல,
இங்கு குரு தான் இந்த பெண்ணிடம் எப்படி உண்மையை கூற போகிறோம் என்று நினைத்து தளர்ந்து அமர்ந்திட்டான்.
ஐந்த நிமிடத்தில் பழச்சாறுடன் வந்தவள் அவனுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு தானும் எடுத்து கொண்டவள் அவனருகில் அமர்ந்தாள்.
“ஜூஸ் எப்படி இருக்கு குரு…?” என்று வினவியவளுக்கு,
“ஹ்ம்ம் நல்லாயிருக்கு” என்று பதில் மொழிந்தான்.
அதனை அருந்தும் வரை அமைதியாக கழிந்திட ஹனி,
“குரு உங்க வீட்ல எப்போ நம்ம மேரஜை பத்தி பேச போறீங்க. அப்பா எனக்கு அலைன்ஸ் பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் சீக்கிரம் உங்க வீட்ல நீங்க பேசுனா நான் என் அப்பாக்கிட்ட பேசுவேன்” என்றவள் அவனது முகத்தை காண அதில் எந்தவித உணர்வும் இல்லை.
அவனது அமைதியில் அர்த்தம் கண்டவள்,
“எனக்கு புரியிது குரு. உங்களுக்கு உங்க வீட்ல இதை பத்தி பேச கஷ்டமா இருக்கும்னு ஆனால் இதை தள்ளி போட்டா நமக்கு தான் பிராப்ளம். மோர் ஓவர் எனக்கு இதுக்கு மேல உங்களை பிரிஞ்சு இருக்க முடியும்னு தோணலை. முடிஞ்ச அளவு சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கலாம்” என்று அவனது தோளில் சாய்ந்து கொள்ள,
இவனுக்கு தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
“ஆமா கேக்கணும்னு நினைச்சேன் மகிழ் எப்படி இருக்காங்க ஜாப் ப்ளேஸ் எல்லாம் செட் ஆகிடுச்சா…?” என்று வினவிட,
இவனுக்கு மேலும் உள்ளே இதயம் மெல்லிய சங்கிலியால் இறுகியது. இதற்கு மேலும் இவளை ஏமாற்ற கூடாது என்று நினைத்தவன்,
“நாம பிரிஞ்சிடலாம் ஹனிகா”என்று மொழிய,
அவனது வார்த்தையில், “என்ன…” என்று முழுதாய் அதிர்ந்து விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் ஹனிகா…