உள்ளம் – 22.3

அவனிடமிருந்து பிரிந்த விக்ரம் தலையை அசைக்க, “கவனமா போ விக்கி…” என்ற சிந்துவின் குரலுடன் இருவரும் விடை பெற்றனர். இப்போது திவாகரின் பார்வை ஷெண்பாவிடம்தான். செல்லும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

சில நிமிடங்களில் செவிலியர் வந்து மனோவை அழைக்க, சிந்துவும் உடன் சென்றார். குமரனும் திவாகரும் அறையில் தனித்திருந்தனர்.

“இது ஒத்து வராது திவாகர்!” அறையின் நிசப்தத்தைக் கலைத்து குமரன் பேச, அலைபேசியிலிருந்த தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவன் முகத்தில் புரியாத பாவனைதான்.

“என்ன குமரா?” இவன் கேட்க,

“உங்களோட பார்வையை நானும் பார்த்தேன்… ஷெண்பா… அவ குழந்தை, இது எந்த வகையிலுமே ஒத்துவராது. இனிமே பார்க்காதீங்க!” இடைவெளிவிட்டு பேசினாலுமே குமரன் குரலில் உறுதியிருந்தது. இதை நீ மீண்டும் செய்யக் கூடாது என்றொரு கட்டளை இருந்தது.

தன்னுடைய பார்வை அவனுக்குப் புரிந்துவிட்டது என உணர்ந்த திவாகர், ‘பார்க்கத் தானே செய்தேன்!’ என ஆயசமாய் அவனை நோக்கினான்.

“திவாகர், இது அவளுக்கு மட்டும் இல்ல, உங்களுக்கு முக்கியமா உங்கப்பா, அம்மாவுக்காகதான் சொல்றேன்!” என்றவன் முன்னே கைநீட்டி பேசவேண்டாம் எனக் சைகை செய்த திவாருக்கு அத்தனைக் கோபம்.

‘ஏன் இவன் தங்கையை நான் பார்க்கக் கூடாதா? இவன் என் தங்கையை திருமணம் செய்யலாம். அதெல்லாம் தவறு என்ற வரையறைக்குள் வராதா?’ என்ற கோபம் முனுக்கென வர, “ஆமா! நான் பார்த்தேன் குமரா… தப்புதான். பேச்சை விடு!” ரோஷமாய் உரைத்தவன் விறுவிறுவென வெளியேறினான். ஏனோ குமரனின் பேச்சு அத்தனை உவப்பாய் இல்லை திவாகருக்கு. அவன் பேசிய பிறகுதான் இன்னுமே ஷெண்பாவை பார்க்க, பழக, தெரிந்து கொள்ள வேண்டும் என்றொரு உந்துதல். தவறென மனதில் உருப்போட்டிருந்த விஷயத்தைக் குமரன் வாய்வழியாய்க் கேட்டதும் ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை.

‘ஆமா… பார்த்தேன். எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அதனால் பார்த்தேன். இனிமேலும் பார்ப்பேன்!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான். குமரன் அவன் செல்வதை அமைதியாய்ப் பார்த்திருந்தான். திவாகர் பேச்சு ஒரு வகையிலிருந்தாலும் அவனது செயல் வேறெதையோ உணர்த்த, இனிமேல் அவனைத் தன் பார்வை வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தான்.

இரவுணவை சமைத்து எடுத்துக்கொண்டு மருத்துவமனை உள்ளே நுழைந்த ராதா மகனைக் கண்டுவிட்டார்.
“திவா, அதுக்குள்ளேயும் கிளம்பிட்டீயா? இருடா, சாப்பாட்டைக் கொடுத்துட்டு வந்துட்றேன். சேர்ந்தே போகலாம், வாடா!” என அவனை அழைத்தார்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… கிளம்பப் போகும்போது கால் பண்ணு மா. பிக்கப் பண்ணிக்கிறேன்!” என அவர் முகத்தைப் பார்க்காது வெளியேறும் மகனை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

“மனோ, நேரமாச்சு பாரு, குமரனுக்கு சாப்பாடைக் கொடு, நீங்களும் சாப்பிடுங்க சம்பந்தி!” என ராதா உணவைப் பரிமாறினார்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம் ராதா, நாங்க இங்க வாங்கி சாப்பிட்டிருப்போம் இல்ல?” என சிந்து வினவ,

“நல்லா கேட்குறீங்க… நான் சமைச்சு எடுத்துட்டு வராம யார் எடுத்துட்டு வருவா. சாப்பிடுங்க நீங்க!” பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை ராதா.
சிந்துவும் மகனுக்கு உணவை ஊட்டியவாறு தானும் உண்டு முடிக்க, மனோவும் சாப்பிட்டாள்.

பாத்திரங்களை கழுவி பையில் நிரப்பிய ராதா, “உங்க அண்ணனுக்குப் ஃபோன் போடு மனோ. அவன் வந்து என்னைக் கூட்டீட்டுப் போவான்!” என்றார்.

அப்போதுதான் திவாகர் அறையில் இல்லாதது சிந்தனையில் உறைக்க, “அவனை எங்கம்மா காணோம்?” என்றவாறே அலைபேசியை எடுத்து திவாகருக்கு அழைத்தாள்.

“ஏதோ வேலை இருக்குன்னு கிளம்பிட்டான்!” பெரியவர் பதில் இயம்பினார். குமரன் எதுவும் பேசவில்லை. மனோவிடம் திவாகரைப் பற்றிக் கூறவும் தோன்றவில்லை.

அழைப்பு ஏற்கப்பட, “அண்ணா, அம்மாவைக் கூட்டீட்டுப் போக வா!” தங்கை அழைக்க, “நான் கீழே இருக்கேன். அவங்களை வர சொல்லு!” என்பதோடு அவன் அழைப்பைத் துண்டித்தான்.

“ம்மா, கீழே வெயிட் பண்றானாம். நீ போ…” என்றவள் ஒரு நொடி நிறுத்தி சிந்துவைப் பார்த்தாள்.

“அத்தை, தூங்கி எழுந்து நீங்ளும் காலைல வாங்க, இப்போ கிளம்புங்க!” மருமகள் கூற,

“இல்ல மனோ, வீட்டுக்குப் போனாலும் எனக்குத் தூக்கம் வராது. நான் இங்கேயே இருக்கேன்!” அவர் மறுத்தார்.

“ஏன் தூக்கம் வராது, அதெல்லாம் நல்லா வரும். இங்க சேர்லயே உக்கார்ந்திருந்தா, உங்களுக்கு கால் வீங்கிடும். அதுவுமில்லாம காலைல சமைச்சு எடுத்துட்டு வருவீங்க நீங்க. ரெண்டு நாளும் அவருக்கு வெளியவே வாங்கிக் கொடுத்தா, ஒத்து வராது. அதனால கிளம்புங்க!” எனப் பேசி சரிசெய்து இரண்டு பெண்களையும் அனுப்பிவிட்டு வந்தாள் மனோஹரி. சிந்துவின் வயதை எண்ணி, அவரது உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு கட்டாயப்படுத்தி அவரை அனுப்பி வைத்திருந்தாள்.

அறை அத்தனை அமைதியாயிருக்க, மனோஹரியின் வளையல் சத்தம் மட்டும்தான் செவியை அடைந்தது. இரவு உண்டபின் என்னென்ன மாத்திரைகளை கணவனுக்குக் கொடுக்க வேண்டும் எனப் பார்த்து அதை தனியே பிரித்து எடுத்தவளின் மீது குமரனின் பார்வை படிந்தது. காலையிலிருந்து அத்தனை பேர் இருந்ததில் இந்த தனிமை வாய்க்கவில்லை. இப்போது அமைதியாய் அவளை அவதானித்தான். வந்ததிலிருந்து ஒரு வார்த்தை அவனைப் பார்த்து மனைவி பேசவில்லை என்ற உபரித் தகவலை மூளை வழங்கியது.

“இந்த டேப்லெடைப் போடுங்க!” என்றவளின் வளைக்கரம் அவன் முன்னே நீள, குமரன் எந்த எதிர்வினையுமாற்றாது அமர்ந்திருந்தான்.

அவன் வாங்கவில்லை என்றதும் வாயருகேகொண்டு சென்றவள், “டேப்லெட் எடுத்துகிட்டாதான் வலி தெரியாம இருக்கும். வம்பு பண்ணாம சாப்பிடுங்க!” என உதட்டுக்குள் திணித்தவளிடம் மறுக்கத் தோன்றாது நீரை வாங்கிப் பருகினான். அவ்வளவுதான் என அகலச் சென்றவளின் கரத்தைப் பிடித்திழுத்தான் குமரன்.

error: Content is protected !!
Scroll to Top