“ஷெண்பா, என்ன பேச்சு இது?” விக்ரம் தங்கையை அதட்ட, “விடு விக்கி!” என குமரன் எப்போதும் போல அவளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட, இருவரையும் முறைத்தான் அவன்.
“இதை மட்டும் அவ கேட்டா, உன்னைக் கிழிச்சு தொங்க விட்றுவா!” குமரன் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி தங்கையிடம் கூறினான். என்னவோ கையிலிருந்த காயத்தின் வலி, சுற்றியிருக்கும் மருத்துவமனை என எதுவுமே அவனை அந்நொடி பாதிக்கவில்லை. அருகிலிருந்த இருவரின் இருப்பும், நீண்ட நாட்களுக்குப் பின்னான இயல்பான பேச்சிலும், சிரிப்பிலும் உரிமையுணர்விலும் நிறைந்து போயிருந்தது. அது முகத்திலும் பிரதிபலிக்க, காயம் கண்ட கைகளின் சுமை கூட இப்போது லேசான சுகமாய் இருந்தது.
“ஆமா, இல்லைன்னா மட்டும் உன் பொண்டாட்டி என்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிடுவாங்க… வாய் ரொம்ப நீளம் அவங்களுக்கு!” ஷெண்பா மனோவை நினைத்துப் பல்லைக் கடித்தாள்.
“அவ உங்களை என்னப் பண்ணா? எப்போ பார்த்துப் பேசுனீங்க?” குமரன் முகம் இப்போது யோசனையில் சுருங்கியது.
“பேசுனோம் இல்ல, பேசுனாங்க உன் பொண்டாட்டி, நான் கேட்டேன். அவ்வளோதான் நடந்துச்சு!” சின்னவள் சடைத்தாள்.
“எப்போ? எனக்குத் தெரியாதே!” அண்ணன் விழித்தான். ஷெண்பா அன்று தங்களுக்கு இடையே நடந்த உரையாடலை விவரித்தாள்.
“என்ன பேச்சு… ப்பா! இப்படி வாயாடி பொண்டாட்டி உனக்கு வேணுமா?” இவள் கோபமாய்க் கேட்க, குமரனுக்கு மனோவின் செய்கையில் சத்தியமாய்க் கோபம் வரவில்லை. தனக்காகத்தான் அவள் பேசியிருக்கிறாள், அவளது சண்டையின் சாரம்சம் தாங்களை சேர்த்து வைக்கத்தான் என உணர்ந்த நொடி மனதை வருடிப் போனாள் மனைவி. அதில் உதட்டோரம் புன்னகை நெளிய, “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, அவகிட்ட நீயே பேசு. உனக்குப் பிடிக்காத பொண்ணு எனக்கும் வேணாம்!” என்றவன் குரலில் நக்கல்தான்.
“ஆமா! ஆமா.. நான் பேசுறதை அவுங்க கேட்டுட்டாலும்!” அலுத்துப் போனக் குரலில் கூறிய ஷெண்பாவிற்கு மனோவின் மீது கோபமிருக்கும் அளவிற்கு அன்பும் வந்திருந்தது சமீப காலத்தில். தன் அண்ணனை திருமணம் செய்ய அவள் எத்தனை மெனக்கெட்டிருக்கிறாள் என தெரிய வந்தப்போது அவள் மீதான மரியாதையும் தானாய் ஓரடுக்கு உயரந்திருந்தது. தன் அண்ணனை அவள் நன்றாய்ப் பார்த்துக் கொள்வாள் என மனதோரம் குமரனைப் பற்றிய கவலை அகன்றிருந்தது. இருந்தும் தனக்கு மட்டுமே தன் தமையன் வேண்டும் என்ற உணர்வும் உரிமையும் அவளை அமைதியாய் இருக்க விடவில்லை. அதனாலே மனோஹரியிடம் சரிக்கு சரியாய் பேசிவிட்டாள்.
“உனக்கு ஏத்தப் பொண்ணாதான் டா பிடிச்சிருக்க. வாய் ரொம்ப நீளம் போல!” விக்ரம் கொஞ்சம் தணிந்து போயிருக்க, அண்ணன் தங்கையின் உரையாடலை அமைதியா கேட்ட வண்ணமிருந்தவன், இடை புகுந்தான்.
“நான் எங்கப் பிடிச்சேன். அவதான் என்னைப் பிடிச்சா?” குமரன் குறும்பாய்க் கூற, சிந்து சிரித்தபடியே பேசும் மகனை ஆசையாய்ப் பார்த்திருந்தார். விக்ரம், குமரன், ஷெண்பா என மூவரும் சிறுவயதில் பேசி, சிரித்து, விளையாடிய நாட்கள் கண்முன்னே வந்து போயின.
“ஏன் உனக்கு அவளைப் பிடிக்காதா? நடிக்காத டா!” விக்ரம் இழுக்கவும், இவனது முகத்தில் லேசான வெட்கப்புன்னகை.
இத்தனைப் பேச்சு தன்னை வைத்து அவர்கள் பேசுவார்கள் என அறிந்திடாத மனோஹரி கையில் குளம்பியுடன் வந்தாள். திவாகர் வெளியேயிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, “ஏன் திவா உள்ள வராம வெளிய உக்கார்ந்து இருக்க?” என வினவினாள்.
“அது… சும்மாதான்!” என்ன செல்லுவான் திவாகர். ஷெண்பாவின் அழுகைப் பொறுக்க முடியாது உள்ளே வராமல் வெளியே அமர்ந்திருக்கிறேன் என கூறினால், மனோவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அவன் அறிந்ததே.
“ஆமா! நீ டேப்லெட் வாங்கிட்டு உள்ள வந்த தானே? அப்புறம் ஏன் வெளியே போய்ட்ட?” யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என திவாகர் எண்ணி வெளியேறியிருக்க, அந்தக் கலவரத்திலும் இவளது பார்வையில் நான் விழுந்துவிட்டேனா? என எண்ணி தங்கையைப் பார்த்து விழித்தான்.
“ஆமா! அண்ணனும் தங்கச்சியும் ஓட்ற பாசமலர் படத்தை பார்க்க முடியாம வெளிய ஓடி வந்துட்டீயா? ம்க்கூம்… நானும்தான் கேன்டீனுக்குப் போய்ட்டேன் திவா. என்னாலயும் பார்க்க முடியலை!” பொறாமையில் பொங்கி அவளாகப் பேசிய தங்கையிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தலையை மட்டும் அசைத்து வைத்தான் திவாகர்.
“சரி, உள்ள வா… இந்நேரம் படம் முடிஞ்சிருக்கும்!” என உள்ளே நுழைந்த மனோவின் பின்னே திவாகர் நடந்தான்.
வந்தவனின் பார்வை எத்தனைக் கட்டுப்படுத்தியும் ஷெண்பாவைத்தான் சுற்றி வந்தன. யாரேனும் பார்த்தால் தவறாக எண்ணக் கூடும் என சிந்தனை சென்றாலும் உள்ளம் கேட்காது அவளிடம் சமீபித்தது.
அழுகை நின்றிருக்க, முகத்தை சுருக்கி, முறைத்துப் பின் சிரித்து என பேசியவளின் வலக்கை உயர்ந்து நெற்றியோரம் கலைந்து வழிந்த முடியைப் பின்னே தள்ளிக் கொண்டிருந்தது. அழுது சிவந்திருந்த முகம் இப்போது பூவாய் மலர்ந்திருக்க, இவனுக்குள் ஒரு ஆசுவாசம். யாரையும் அறியாது மூச்சை இழுத்து உதட்டைக் குவித்து ஊதியவன் ஓரமாய் ஓரிருக்கையில் அமர்ந்தான். இந்தப் பெண் அவனை சும்மாவிடப் போவதில்லை என உள்மனம் அடித்துக் கூறியது.
நிறைவேறாத ஆசை எனத் தெரிந்தாலும் அவள்மீதான ஆசைப் பிரவாகமாகப் பொங்கித் தொலைத்தது. விழிகளைக் கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்தி அலைபேசியில் புகுந்தான்.
“அத்தை, எல்லாருக்கும் காஃபியை ஊத்திக் கொடுங்க!” என்ற மனோ தனக்கொரு குவளையில் குளம்பியை எடுத்துக்கொண்டாள்.
ஷெண்பாவிற்கு தன் தமையனிடம் பேச ஆயிரமிருந்தன. இடைப்பட்ட நாட்களில் அவளுக்குக் கிடைத்த நட்புகள், படித்த பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், சுற்றிய இடங்கள், வாங்கிய உடைகள் என அனைத்தையும் அவனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். குமரன் சளைக்காது அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க, விக்ரமும் இடையிடையே பேச்சில் கலந்தான்.
மனோஹரி அவர்கள் மூவரையும் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தாள். சிந்துதான் மருமகளிடம் பேச்சை வளர்த்தார்.
“விக்கி, நேரமாச்சு… நீ இவளைக் கூட்டீட்டு கிளம்பு. வீட்ல சொல்லிட்டு வந்தீங்களா? தேடப் போறாங்க!” குமரன் கூற, தன் பேச்சு தடைபட்டதில் அவனை முறைத்தாள் சின்னவள்.
“நாளைக்குப் பேசலாம் ஷெண்பா. லேட் நைட் வீட்டுக்குப் போகக் கூடாது!” என அண்ணனாய் அதட்டலிட்டவன், விக்ரமைப் பார்த்தான். அவனும் தலையை அசைத்து விடைபெற யத்தனித்தவன் ஒரு நொடி தயங்கி குமரனை அணைக்கவும், அவன் திகைத்துப் போனான்.
“பத்திரமா இரு டா… இனிமே இப்படி கேர்லெஸ்ஸா இருக்காத. ரொம்ப பயந்துட்டோம்!” என்றவன் குரலில் இத்தனை நேரமிருந்த கோபமும் இறுமாப்புமில்லை. தம்பியின் மீதான அக்கறையில் லேசாய் கனிந்து உடைந்து போயிருக்க, குமரன் உடல் நிச்சயமாய் தளர்ந்து போனது. எத்தனை பயந்திருப்பான் விக்ரம் என புரிந்தவன், “சாரி விக்கி!” என்றான் வருத்தமான குரலில். அவன் வேண்டுமென எதையும் செய்யவில்லை. அதுவாய் நடந்துவிட்ட நிகழ்வு கைமீறி செல்லவும், ஒன்றும் செய்ய முடியாது போனது.