காதல் 32:
“பிரசாத் காஃபி குடிக்கிறியாப்பா…?” என்ற தாயின் குரலில் நினைவிற்கு வந்தவன்,
“இல்லை வேண்டாம்மா…” என்று பதில் மொழிய,
“சரிப்பா” என்றவர்,
“பிரசாத் எப்பதான் மகியும் பிள்ளைங்களும் வருவாங்க” என்று வினவிட,
“நெக்ஸ்ட் வீக் வந்திடுவாங்கம்மா” என்று பதில் அளித்தான்.
“சரிப்பா சீக்கிரமா வர சொல்லு. பிள்ளைங்களை பாக்காம ஒரு மாதிரி இருக்குப்பா” என்று இயம்ப,
“எனக்கும் தான் மா…” என்றவனது குரலில் என்னவோ இனம் கண்டறிய முடியாத உண்ர்வு தான் இருந்தது.
“சரிப்பா மகி கால் பண்ணா என்னை கூப்பிடு” என்று கூற,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தான் குரு பிரசாத்.
“என்னதான் ஸ்கூல்ல டூர் அழைச்சிட்டு போனாலும் ஒரு மாசமா கூட்டிட்டு போறது. இதுல சிக்னல் இல்லாத இடத்துக்கு வேற கூட்டிட்டு போயிருக்காங்க” என்று புலம்பியபடி கீழிறிங்கி சென்றவரை பார்த்தவாறு பால்கனி கம்பியில் சாய்ந்து நின்று இருந்தவனது முகத்தில் அத்தனை அழுத்தம்.
இருபது நாட்களாக மழிக்கப்படாத தாடி உறங்காது சிவந்திருந்த கண்கள் இளக்கத்தை தொலைத்து இறுகி இருந்த முகம் என்று ஆளே முற்றிலுமாக மாறி இருந்தான்.
அன்றைய தினம் மனைவி குழந்தைகள் திருமணம் என்று எண்ணம் வந்த கணம் மகியின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்ததில் ஏகமாய் அதிர்ந்து எழுந்து அமர்ந்துவிட்டான் குரு பிரசாத்.
சட்டென ஒரு நொடி என்ன நடந்ததென்று புரியவில்லை. திருமணம் குழந்தைகள் என்று எண்ணும் போது ஹனியின் முகம் நினைவிற்கு வராது மகியின் முகம் வந்தது ஏனென்று அவனுக்கே புரியவில்லை.
மகியை பார்த்த நாள் முதல் அனைத்தும் நினைவில் வந்து போனது.
திருமணத்திற்கு கேட்ட போது முழுதாய் அதிர்ந்த நின்ற மகியின் முகம்.
முகம் முழுவதும் சிரிப்புடன் குழந்தைகளுடன் பேசுபவள் தனது தாயிடம் பாசம் காட்டுபவள் தாய் தந்தை நினைவில் வாடி அழுது சிவந்து முகமெல்லாம் வீங்கி நின்றவள்.
பிள்ளைக்கு ஒன்று எனில் துடித்து அழுகையில் கரைந்து தனது காலை கட்டி கொண்டவள் பிள்ளைக்கு நல்லபடியாக சிகிக்சை முடிந்ததும் தனது கைகளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தவள்
தான் தந்தையின் நினைவில் வாடி நின்ற போது தாயாய் மடி தாங்கியவள்.
அம்முவின் மீது தவறு என்று அறிந்த பிறகும் அம்முக்காக தமையனை பழி ஏற்க கூறியவள் தவறு தன் மீது தான் என்று குரு மன்னிப்பு கேட்க சென்ற போது தன்மானத்துடன் பேசியவள்
அதே தன்மானத்துடன் தான் கொடுத்த பணத்தை மறுத்துவிட்டு அவளுக்காக வாங்கி கொடுத்த அனைத்தையும் திரும்பி கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்தவற்றை மட்டும் எடுத்து சென்றவள்.
இறுதியாக தான் கூறியதும் கையெழுத்திட்டு விவாகரத்தை கொடுத்துவிட்டு இன்றைய இரவே கிளம்பி சென்றவள் அனைத்து பரிமாணங்களில் அவனுக்குள் மனதிற்குள் ஓடி கொண்டு இருந்தாள்.
அழுகையுடன் சிரிப்புடன் கோபத்துடன் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்குள் ரீங்காரமிட கரங்களால் தலையை பிடித்து கொண்டான்.
அந்த கணமும் மூடிய இமைக்குள் அவள் தான் வந்தாள். அமைதியாய் பொறுப்பான தாயாய் மருமகளாய் அந்த வீட்டினுள் அவனது அறையினுள் வலம் வந்தவள் அவனது உணர்வுகளில் கலந்து உயிரில் உறைந்து இருந்தாள்.
அவன் கண்முன்னே கருத்தை கவராது நடமாடியவள் அவனுடைய வழக்கமாயிருந்தாள். பேசினாலும் பேசவில்லை என்றாலும் அவளை உண்ர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறான்.
“இன்னும் இருபது வருஷம் கூட உங்களுக்கு வொஃய்ப்பா நடிக்கிறேன். என் பையனை எனக்கு காப்பாத்தி கொடுங்க” என்று அவனது காலில் விழுந்த போது காலினை நனைத்த கண்ணீர் துளியினால் தான் ஆடிப்போனது எதனால் என்று புரிந்தது.
கவினுக்கு சிகிக்சை நல்லபடியாக முடிந்த பிறகு தனது கரத்தில் முகத்தை புதைத்தவளது கண்ணீர் கரத்தை மட்டும் அல்ல இதயத்தையும் சேர்த்து நனைத்து விட்டிருந்ததை உள்ளம் உணர்ந்தது.
இருமுறை அவளது கண்ணீர் அசைத்து பார்த்தது தன்னை மட்டுமல்ல தன்னுடைய உணர்வுகளையும் தான் மனதிற்கு தெரிந்தது.
குடும்பத்தாரின் நினைவில் மகி வாடி வருந்திய போது தான் தோள் தாங்கியதன் காரணம் உள்ளே முகிழ்ந்தது.
ஹனிகா தனது கன்னத்தில் இதழ் பதித்த போது தான் அதிர்ந்து அவளது முகம் கண்ட காரணம் இப்போது தான் புத்திக்கு உரைத்தது.
ஹனிகா மகியின் முன் அவ்வாறு நடந்து கொண்டதால் தான் தான் அதிர்ந்து நின்றோம் என்று அந்த கணம் எண்ணியிருக்க அது அப்படியல்ல. அதன் காரணம் வேறு என்று அவள் தன்னைவிட்டு விலகி சென்றுவிட்ட பிறகு தான் புரிந்தது.
அவள் இருந்த வரை அவள் தனக்கு இன்றியமையாதவள் என்று அப்போது புரியவில்லை.
அவளது இன்மை தான் அவள் மேல் தனக்கிருந்த உணர்வுகளை புரிய வைத்திருந்தது.
உடல் பொருட்கள் ஆவி என அனைத்திலும் அவள் நிறைந்துவிட்டாள்.
அவள் தன்னுடைய வழக்கமாகி போனாள் அவளின்றி ஒரு அணுவும் அசையாது என்று உள்ளம் உணர்ந்து கொண்டது.
ஹனிகாவின் கண்ணீரை காண விரும்பாத தனக்கு மகியின் கண்ணீரினால் உள்ளே ஒன்று நழுவிய உணர்வு நினைவிற்கு வந்தது.
நழுவிய ஒன்று இதயம் தான் அதுவும் அவளது காலடியில் தான் என எண்ணம் முகிழ்ந்தது.
இவளது கண்ணீர் தன்னை வருத்தியது என்றால் மகியின் கண்ணீர் தன்னை மொத்தமாக வோரோடு அசைத்து பார்த்துவிட்டது.
அதுவும் இத்தனை வருடங்களாக யாரிடமும் தனது இறுகத்தை தளர்த்தி தந்தை இறப்பின் போது இருந்த எண்ணத்தை வருத்தத்தை கூற முயலவில்லையே…? ஏன் பெற்ற தாயிடம் கூட பகிரவில்லை.
ஆனால் மகிழியிடம் அவள் கேட்டதும் இறுக அணைத்து கொண்டு அனைத்தையும் கொட்டிவிட்டானே…? அதுவும் அவளிடம் சேயாய் மாறி போயிருந்தானே…? அவளிடம் கூறிய பிறகு அவளுடைய ஆறுதலை கேட்ட பின்னர் சற்று தெளிந்து தன்னுடைய இறுக்கத்தில் இருந்து வெளிவந்திருந்தானே…?
தன்னுடைய சரி பாதியாய் எண்ணாதவளிடம் எப்படி தன்னை மறந்து மனதை திறந்து காட்டியிருக்க கூடும்.
ஏற்கனவே தன்னையறியாமல் தன் மனது அவளை வாழ்வின் சரிபாதியாய் தன்னில் சரி பாதியாய் நினைத்திருக்கிறது. தான் தான் அதனை உணராது இருந்திருக்கிறோம்.
ஆக மொத்தத்தில் அவள் மேல் தனக்கிருப்பது நேசம் என்று உள்ளம் அடித்து கூறிய நொடி குருவிற்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.
மகிழ் மேல் தனக்கு வந்திருப்பது காதல் என்றால் இத்தனை நாள் ஹனியின் மேல் இருந்தது என்ன…? ஈர்ப்பா அதுவும் இருபத்தியாறு வயதில் தனக்கு அவள் மேல் ஈர்ப்பு வந்தததா…?
அதுவும் இரண்டு வருடங்களாக அந்த ஈர்ப்பு நீடித்ததா…? ஒருத்தி மேலே நேசம் கொண்டிருக்கும் போது மற்றொரு பெண்ணின் மீது எப்படி நேசம் பிறக்கும்.
அவள் என்னருகில் என் அறையில் என் வீட்டில் தினமும் நடமாடினால் தனக்கு அவளை பிடித்துவிடுமா…? தான் என்ன அத்தனை பலகீனமானவனா…?
இந்தனை வருடங்கள் யாரும் என்னை நெருங்காததால் நான் தனியாக இருந்துவிட்டு என்னை நானே மிகவும் மனோதிடம் உள்ளவன் என்று நினைத்துவிட்டேனா…? என்று சிந்தை பிறந்த கணம் தன்மீதே ஒரு வெறுப்பு தோன்ற சட்டென்று மெத்தையில் இருந்து கீழிறங்கியவன் குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.
குழாயை திறந்து முகத்தில் நீரை பட்டு பட்டென்று அடித்து கழுவினான்.
மனதின் வெம்மை தீரவில்லை. தன் மீது வந்த கோபமும் குறையவில்லை வெறுப்பு தீரவில்லை.
அன்றிரவு சரியாக உறங்கவில்லை. அலுவலகத்தில் ஒரு வேலையும் ஓடவில்லை.
எதையுமே செய்ய முடியவில்லை. யாவிலும் அவளது மகிழினியின் முகம் தான்.