உள்ளம் – 22.1

“சாரி குமரா, சாரிண்ணா! உன்கூட இனிமே பேசாம இருக்க மாட்டோம். நான் ரொம்ப ஈகோ பிடிச்சவ. அதான் கடவுள் எனக்கு சரியான பாடம் தந்துட்டாரு. உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு கேள்விபட்டதும் என் உயிரே போய்டுச்சு… எதுவும் ஆகிடக் கூடாதுன்னு சாமியை வேண்டிக்கிட்டே வந்தேன்!” கேவியத் தொண்டையை சரிசெய்து தேம்பலும் அழுகையுமாய் திக்கித் திணறிப் பேசியபடி குமரனது அடிப்பட்ட கையை வருடினாள் ஷெண்பா. குமரனுக்கு எதுவும் ஆகவில்லை என்ற சந்தோஷத்தை எப்படி வெளிபடுத்துவது எனத் தெரியவில்லை அவளுக்கு. செவி வழியாய் அவன் நலம் கேட்டு, விழி வழியாய் அவனை உணர்ந்து, தொடுகை மூலம் ஸ்பரிசித்து, வாய் வழியாய் நேசத்தைப் பிதற்றினாள்.

ஐம்புலன்களும் அவனது நலம் நாடின. மீண்டும் அவனது இடதுபுற தோளில் முகத்தைப் புதைத்து கண்ணீரை உகுத்தவளை தமையன் பாசப்பார்வை பார்த்தான். அவனுக்குத் தெரியுமே ஷெண்பாவிற்கு தன்மீதான நேசத்தை. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையும் விதியும் அவர்களை பிரித்து வைத்திருந்தாலும் உறவுகளுக்கிடையே இருந்த பிணைப்பை ஒருவராலும் பிரிக்க முடியவில்லை. எப்போதும் அவளுக்கும் ஷெண்பாவிற்குமான நேசம் அலாதியானது.

அவளது தலையை மெதுவாகக் கோதி, “ஷெண்பா மா, எனக்கு ஒன்னும் இல்லை டா!” எனக் கூறியவனின் குரலில் கூட லேசான இடறல். எத்தனை வருடங்கள் கழித்தான இந்தப் பெண்ணின் நேசம் வெளிப்பட்டதில் அவன் நெகிழ்ந்து போயிருந்தான். உடல் அவளருகில் லேசாகிப் போன உணர்வு.

“கை ரொம்ப வலிக்குதா அண்ணா? எப்போ வீட்டுக்குப் போகலாம்னு டாக்டர் சொன்னாங்க?” என விழிகளில் வழியும் நீரைத் துடைத்தவாறு அவள் வினவ, “வலிக்கு மாத்திரை போட்டிருக்கான். ரெண்டு நாள்ல வீட்டுக்குப் போகலாம்னு டாக்டர் சொல்லி இருக்காரு ஷெண்பா குட்டி!” என அவளருகே வந்து சிந்து உரைக்க, அவரை இடையோடு அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவள், “சாரி சிந்து மா, இனிமே உங்கக் கூட சண்டை போட மாட்டேன். நம்ம எல்லாரும் எங்க இருந்தாலும், நல்லா இருந்தா அதுவே போதும் சிந்துமா!” என்றாள் மீண்டும் அழுகையுடன். நடந்த நிகழ்வு அத்தனையாய் அவளைக் கலவரப்படுத்தியிருந்தது.

குழந்தை பயந்திருக்கிறாள் என்றுணர்ந்தவர், “ஷெண்பா மா, அவனுக்குப் பெருசா அடி எதுவும் இல்ல. நீ பயப்படாத, அழுகையை நிறுத்து!” என அவளை சமாதானம் செய்ய, விக்ரம் இத்தனை பரபரப்புக்கும் பேச்சுக்கும் இடையிடாது குமரனை அழுத்தமாய்ப் பார்த்து முறைத்தான்.

அவனது பார்வையை உணர்ந்த குமரன், “விக்கி…” என எட்டி அவன் கையைப் பிடிக்க, “கையைவிட்றா நாயே!” என்ற விக்ரம் ஒருகாலை கட்டிலில் குற்றி ஏறி எக்கி அவனது சட்டையைப் பிடித்து, “பெரிய இவன்னு நினைப்பா டா! டூ வீலரை கூட ஒழுங்கா ஓட்டீட்டுப் போக மாட்டீயா?” எனக் கேட்டு அவனது முகத்தில் பட்டென அறைந்தான். கன்னம் திகுதிகுவென எரிந்து தொலைக்க, அடிவாங்கியவன் முகம் முழுவதும் சிரிப்புதான். பத்து வருடங்கள் கழித்து ஒருவழியாய் விக்ரம் பேசிவிட்டான் என்ற நினைப்பே குமரனுக்கு வலியை மறக்கடித்திருந்தது. மனம் நிறைந்து உதடுகள் விரிய முகம் மலர்ந்து அகம் கனிந்த சிரிப்பு அவன் வதனத்தில்.

“நான் கரெக்டா தான்டா போனேன்!” சிரிப்புடன் குமரன் உரைக்க, “கிழிச்ச… சரியா போயிருந்தா இப்படி அடிபட்டிருக்குமா?” என்றவன் குரலின் காரம் இத்தனை நேரத் தவிப்பை மட்டுப்படுத்தியது. ஷெண்பா அழுது கதறித் தன் பரிதவிப்பைக் கொட்டிவிட்டாள். ஆனால், இவனால் அப்படி செய்ய முடியவில்லை. அதனால்தான் இருந்தக் கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்துக் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

“சாரி டா!” குமரன் உதட்டிலேறிய புன்னகையுடன் அவன் கையை மீண்டும் பிடிக்க, “சிரிக்காத டா! வெறியாகுது!” என்றவன் ஏதோ கெட்ட வார்த்தையை உதட்டுக்குள் முணுமுணுத்தான். இன்னுமே அவனுக்குள் பரிதவிப்பும் பதட்டமும் அடங்கவில்லை. இவன் சிரிப்பு அதற்கு தூபம் போடுவது போலிருக்க, பெண்கள் இருக்கிறார்கள் என வாயைக் கட்டுப்படுத்தியவனால் கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குமரனின் சிரிப்புத் தொடர, விக்ரம் மீண்டும் கையை ஓங்க, “என்னப் பண்றீங்க நீங்க?” என மனோ இடையில் வந்து அவனைத் தடுத்திருந்தாள். அவன் முன்பு அடித்த அடியிலே இவள் அத்தனை அனலை விழிகளில் கக்கியபடி அவனை எரித்துக் கொண்டிருந்தாள்‌.
‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த அண்ணனும் தங்கையும்? அவளென்னவென்றால் அவனைக் கட்டிக்கொண்டு அடிபட்ட கையில் இடிக்கப் பார்க்கிறாள். இவன் என்னவென்றால் அடித்தேவிட்டான்!’ என்ற எரிச்சலில் நின்றவள் விக்ரம் மீண்டும் அடிக்கப்பாய பொங்கிவிட்டாள்.

“அவருக்கு அடிபட்டிருக்குன்னு பார்க்கத்தான் வந்திருக்கீங்க. அடிச்சு மேலும் காயப்படுத்த இல்ல!” இவள் குரல் அவனை மிரட்டும் தொனியில் வந்து விழ, விக்ரம் ஒரு நொடி திகைத்துப் போனான். ஷெண்பா கூறிய போது கூட அவன் நம்பவில்லை. ஆனால், இப்போது மனோஹரியின் தொனியே கூறியது அவளது இயல்பை.

“என் அண்ணன் அவன்! அவனை அடிப்போம், திட்டுவோம். எல்லா உரிமையும் எங்களுக்கு இருக்கு!” ஷெண்பா எழுந்து நின்று சண்டைக்கு வருவது போல பேச, குமரன் யார் பக்கம் பேசுவது எனத் தெரியாது விழித்தான்.

“மனோ, ஷெண்பா என்ன இது? சின்னப் பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு…” சிந்து ஒரு அதட்டலிட்டாலும் இருவருமே தணிவது போல தெரியவில்லை.
இன்னுமே சண்டை போடும் கடுவன் பூனை போல முகத்தை வைத்திருந்தார்கள்.

“மனோ, நீ இங்க வா… அத்தைகிட்டே உட்காரு!” என மருமகளை தன்னருகே இருத்தினார் பெரியவர். அவரது கரத்திலிருந்து தன் கையைப் பிடித்திழுத்துக் கொண்டவள், “உங்க மக வந்ததும், மருமக ரெண்டாபட்சமா போய்ட்டேன் இல்ல அத்தை!” என இவள் ரோஷமாய்க் கேட்டு நகர்ந்து அமரவும், அவருக்கு உதட்டில் புன்னகை பூத்தது.

“மனோ…” என அவளது கன்னத்தைத் தட்டி அருகே இழுத்தமர வைத்தவர், “அப்படி இல்ல டா. சின்ன வயசுல இருந்தே அவங்க அப்படித்தான். அடிச்சுப்பாங்க, சேர்ந்துப்பாங்க. இடையில எதாவது கேட்டா, நம்மளை ஜோக்கராக்கிடுவாங்க டா. அதுவும் இல்லாம, ரொம்ப நாள் கழிச்சு விக்ரம் பேசவும், கோபப்பட்டு அடிச்சான்…” என விளக்கம் கொடுத்தவர், “எனக்கு நீயும் அவங்களும் வேற வேற இல்லை. நாலு பேருமே ஒன்னுதான் டா!” என்றார் பாசத்துடன்.

“நம்பிட்டேன் அத்தை, நம்பிட்டேன்…” என சடைத்தவள், “நான் போய் காஃபி வாங்கிட்டு வரேன். இவங்க பேசி, அடிச்சுக்கிறதைப் பார்த்து என்னால சும்மா இருக்க முடியாது!” என மனோஹரி வெளியேறிவிட, பெரியவர் சிரித்துவிட்டார்.

உரிமையுணர்வும் பொறாமையுணர்வும் தலைதூக்கியதில் ஷெண்பா குமரன் கட்டிலில் அவனுக்கு நெருங்கி அமர்ந்து கையைப் பிடித்துக்கொண்டாள். தனக்கு மட்டுமே தன் தமையன் என்ற பாவனை அவளது முகத்தில் தீவிரமாயிருந்தது. குமரனுக்கு அவளது சின்ன வயது செய்கை நினைவை நிறைக்க, உதட்டில் சிரிப்பு மலர்ந்தது.

“ஷெண்பா, சின்னப்புள்ளை மாதிரி ஏன் அவகிட்டே சண்டை போட்ற. அவ உன் அண்ணி, அதுக்குரிய மரியாதையை நீ கொடுக்கணும்!” தமையன் கூற, “ஆமா! ஆமா… பொல்லாத அண்ணி. எனக்கு இந்த அண்ணியைப் பிடிக்கலை குமரா!” என இவள் முணுமுணுப்பது தெளிவாக இரண்டு ஆண்மகன்களின் செவியிலும் விழத்தான் செய்தன.

error: Content is protected !!
Scroll to Top