காதல் 31.2

உடனே அலைபேசியை எடுத்து இரவுணவு மற்றும் தேநீரை ஆர்டர் போட்டவன் எழுந்து குளித்து உடை மாற்ற சென்றான்.

குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வெளியே வர காவலாளியிடமிருந்து அழைப்பு வந்தது.

உணவு தான் வந்துவிட்டது போலும் என எண்ணியவன் அழைப்பை ஏற்று அதனை வாங்கி வர கூறியவன் எழுந்து வெளியே சென்றான்.

உணவை கொண்டு வந்த காவலாளி கொடுத்துவிட்டு செல்ல அதனை வாங்கிவிட்டு வந்தவன் தேநீரை அருந்த குவளை எடுக்க சமையலறை சென்றான்.

உள்ளே அனைத்தும் துடைத்து வைக்கப்பட்டது போல அத்தனை நேர்த்தியாக இருந்தது. இதுவரை ஓரிரு முறை சமையலறை பக்கம் வந்திருக்கிறான்.

இத்தனை நேர்த்தியை கண்டதாக நினைவில் இல்லை‌.

‘இதை தான் நேற்று அவ்வளவு நேரம் செய்து கொண்டு இருந்தாளா..? ஹ்ம்ம் குட் வொர்க்’ என்று மனது பாராட்டியது.

குவளையை எடுத்து வந்து தேநீரை அருந்தியவன் இரவுணவை அப்பபோதே முடித்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.

அலைபேசியில் எதாவது முக்கிய செய்தி மின்னஞ்சல் வந்துள்ளதா என்று சிறிது நேரம் அளவளாவியவனது மனதிற்குள் மகியை அனுப்பியாயிற்று அடுத்து எப்படி தாயிடம் பேச வேண்டும் ஹனியின் வீட்டில் பேச வேண்டும் என்று சிந்தனை ஓடியது.

முதலில் தனது வீட்டில் பேச வேண்டும் தனக்கும் மகிழினிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதை கூற வேண்டும்.

கண்டிப்பாக கோபப்படுவார்கள் திட்டுவார்கள் ஏன் சண்டை கூட வரலாம்.

தாயின் உடல்நிலையை கருதி தாத்தாவிடம் முதல் கூறி பிறகு அவரை வைத்தே எடுத்து கூற வேண்டும்.

நடந்த நிகழ்வுகளை அவர்கள் ஏற்று கொள்ள சில நாட்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாக இருந்து பின் ஹனியை பற்றி கூறலாம்.

மகி விடயத்தை முடித்துவிடலாம் ஹனியை பற்றி என்ன கூறுவது எவ்வாறு எல்லாவற்றையும் செய்து முடிப்பது என்று கேள்வி ஓடி கொண்டு இருந்தது.

சரியாக அதே சமயம் தாயிடமிருந்து அழைப்பு வந்தது. ஊருக்கு சென்றதில் இருந்து இரவு மட்டும் அழைத்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் கோதை.

அழைப்பை ஏற்றவன் பால்கனியில் சென்று நின்று கொண்டான்.

மறுமுனையில் கோதை,

“பிரசாத்…” என்று அழைக்க,

“சொல்லுங்கம்மா” என்று பதில் மொழிந்தான்.

“சாப்பிட்டியாப்பா…?” என்று பாசமாக குரல் வந்தது.

“ஹ்ம்ம் சாப்பிட்டேன்மா. நீங்க”

“ஆச்சுப்பா‌ உங்க அத்தை சிவப்பரிசி புட்டு செஞ்சிருந்தாங்க. மகி பசங்க எல்லாம் சாப்பிட்டாங்களாப்பா…?” என்று வினவியதும்,

குருவின் விழிகள் ஒரு முறை அறை பக்கம் சென்று திரும்பியது.

“ஹ்ம்ம் எல்லாரும் சாப்பிட்டாச்சும்மா…” என்று பதில் இயம்பினான்.

“மகிக்கு போன் போட்டேன். கால் போகலை” என்று வினவ,

குருவிற்கு தான் தன்னுடைய குடும்ப நபர்களின் எண்ணை கருப்பி விட கூறியது நினைவிற்கு வந்தது.

“அவ போன் சிக்னல் இல்லை போல” என்று குரு கூற,

“ஓ… பசங்க என்ன பண்றாங்கப்பா. போனை கொடுக்கிறியா…?” என்று வினவ,

“தூங்குறாங்கம்மா” என்று குரு சமாளித்தான்.

“அதுக்குள்ள தூங்கிட்டாங்களா…?” என்று கோதை ஆச்சர்யமாக வினவ,

“ஆமாம்மா. இன்னைக்கு வெளிய போய்ட்டு வந்தோம் அந்த டையரட்ல வந்ததும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க” என்று பொய்யுரைத்தான்.

“ஓ சரிப்பா. பசங்க ரெண்டு பேரும் கண்ணுக்குள்ளயே நிக்கிறாங்க அதான் பேசலாம்னு கூப்பிட்டேன். அவங்களையும் சேர்த்து அழைச்சிட்டு வந்திருக்கலாம்” என்று கோதை வருந்த,

குருவிற்கு முதன் முதலாக எப்படி தாயிடம் உண்மையை கூற போகிறோம் என்ற வினா மனதில் எழுந்தது.

“எக்ஸாம் வந்திருச்சும்மா இல்லைனா நானே அனுப்பி வச்சிருப்பேன்” என்று மொழிய,

“அதுவும் சரிதான்பா படிப்பு முக்கியம்ல. பத்து நாள் தான நேர்ல வந்து பேசிக்கிறேன். இல்லைனா நாளைக்கு வீடியோ கால் போட்றேன்” என்றிட,

“சரிம்மா” என்றவன் வேறு ஏதும் கூறவில்லை.

“சரிப்பா வேலை வேலைன்னு ஓடாம சீக்கிரமா தூங்கி எழு. மகி இருக்கும் போது நான் இதை சொல்ல அவசியம் இல்லை தான் இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிடு” என்று கூற,

“ஹ்ம்ம்‌‌…” என்று பதில் உரைத்தவனது மனதில் ஏதோ ஒரு உணர்வு.

“குட்நைட் பிரசாத்” என்று கோதை அழைப்பை துண்டிக்க தானும் இரவு வணக்கத்தை கூறி வைத்துவிட்டு வானத்தை வெறித்தான்.

இரவின் அழகில் பேரழகியாக தெரிந்த நிலவை விழிகயகற்றாது பார்த்தான். மனதில் செய்ய எண்ணியவற்றை யாரையும் காயப்படுத்தாது எப்படி செய்து முடிக்க போகிறோம் என்று பெரிய வினா தொக்கி நின்றது.

தொழிலில் யாவையும் அசால்ட்டாக கையாளும் தொழிலதிபன் குரு பிரசாத்திற்கு குடும்பம் என்று வரும் போது அனைத்தும் சிக்கலாக தெரிந்தது.

இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்க போகிறேன் ஹனியையும் சரி குடும்பத்தினரையும் சரி சிறிதும் வருத்தம் கொள்ளாதவாறு சேர்த்து வைக்க போகிறேன் என்று எண்ணம் வர ஒரு பெருமூச்சு எழுந்தது.

மேலும் யோசனையுடன் சிறிது நேரம் நின்றவனது விழியில் மகிழ் தங்கி இருந்த வீடு தென்பட்டது.

இருளில் விளக்கு கூட போடப்படாது மிகவும் மங்கலாக தெரிந்தது. மகி இருந்தால் தினமும் மாலை விளக்கை போட்டுவிட்டு வருவாள்.

என்னதான் பெரிய வீட்டிற்கு வந்துவிட்டாலும் மகிக்கு அந்த வீட்டின் மேல தனி பிடிப்பு இருந்தது. அது குருவிற்கும் தெரியும்.

இதோ இதே போல ஒரு இரவில் தானே அவளை பார்த்து அவளை வைத்து திருமண சிக்கலை தீர்க்கலாம் என்று சிந்தனை பிறந்தது.

இப்போது தான் தாயிடம் இவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியது போல இருக்கிறது அதற்குள் வருடங்கள் கடந்து விவாகரத்தும் வாங்கியாயிற்று.

மனத்திரையில் திருமணத்திற்கு மகியிடம் கேட்டு அவள் அதிர்ந்து நின்றது முதல் இன்று பேருந்தில் தலையசைத்து தனக்கு விடை கொடுததது வரை நிழலாடியது.

மகிழினி மிகவும் நல்ல பெண் குணத்திலும் சரி செய்கையிலும் சரி. இதுவே வேறு யாராவது அவனிடத்தில் இருந்திருந்தால் தனக்கு இந்த இரண்டு வருடம் இத்தனை அமைதியாக சென்று இருக்குமா…? என்பது சந்தேகம் தான்.

என்னதான் ஒப்பந்த திருமணம் என்றாலும் எல்லோரும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது இல்லையே…? வேறு யாராவது அவள் இடத்தில் இருந்திருந்தால் இந்த வளமையான வாழ்விற்கு ஆசைப்பட்டு குடும்பத்தில் எதாவது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் மகிழினி  தான் இப்போது கொடுத்த பணத்தை கூட மறுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

உலகில் பணத்தையும் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்கும் மனம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று இவனுக்கு உணர்த்தியவர்கள் மகியும் அகிலனும் தான் என்று எண்ணம் வர சடுதியில் அகிலனது முகம் நினைவிற்கு வந்தது.

அகிலன் தன்னை அவன் ஒரு நாயகன் அளவிற்கு பார்க்கிறான். தன் மேல் நிறைய மதிப்பு வைத்திருக்கிறான்.

அவன் தன்னிடம் வந்து எதாவது கேட்டால் தான் என்ன பதில் கூறுவது என்று யோசனை வர அடுத்த நொடியே மகிழினி நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை விட மாட்டாள்.

கண்டிப்பாக அகிலனிடம் எதாவது கூறி சமாளித்துவிடுவாள் என்று ஒருவகையில் அழுத்தமான எண்ணம் இருந்தது. அவள் மேல் தனக்கு ஏன் இப்படியான நம்பிக்கை இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது மகிழினி அவளால் எந்த பிரச்சனையும் தனக்கு வர விடமாட்டாள் என்று.

நேரம் போவது தெரியாமல் சிந்தனையில் இருந்தவன் அலைபேசியில் செய்தி வந்த ஒலியில் நினைவிற்கு வந்து அறைக்குள் சென்றான்.

நுழைந்த கணம் ஒரு ஆழ்ந்த அமைதி வந்து மோதியது.  என்னவோ இந்த அமைதி பிடிக்கவில்லை மனதிற்கு.

தினமும் இரவு ‘ஒரு பெரிய காடு இருந்துச்சாம்…’ என்று தொடங்கி இளையவர்ளை உறங்க வைக்க கதையை கூறும் மகிழினியின் அமைதியான குரல் காதிற்குள் ஒலித்தது.

கதையின் நடுவே ஆயிரம் கேள்விளை கேட்கும் இளையவர்களின் குரலும் செவியில் மோதியது.

வழக்கமாக கேட்டு பழகிய ஒன்று திடீரென நின்றுவிட்டதில் மனது அதனை எதிர்பார்க்கிறது என்று அவனுக்கு தோன்றியது.

அமைதியாக வந்து தன்னிடத்தில் படுத்தவனுக்கு அந்த பெரிய மெத்தையில் தான் மட்டும் படுத்திருப்பது என்னவோ சொல்ல முடியாத உண்ர்வை தோற்றுவித்தது.

‘ப்ச் தனக்கும் திருமணம் மனைவி  குழந்தைகள் என்று வாழ ஆசை வந்துவிட்டது போலும் விரைவில் ஹனியை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று கொள்ள வெண்டும்’ என்று அலுத்து கொண்டு நினைத்தபடி விழிகளை மூடியவனது  இமைகளை நிறைத்தாள் முகம் முழுவதும் புன்னகையுடன் நின்றிருந்த மகிழினி.

சடுதியில் கோடி மின்னல் தாக்கிட அதிர்வுடன் எழுந்து அமர்ந்துவிட்டான் குரு பிரசாத்

இல்லை அவளும்
என்றே உணரும்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…

error: Content is protected !!
Scroll to Top