காதல் 30.1

காதல் 30:

நொடிகள் நிமிடங்களாக கடக்க அவனையே இமைக்காது நோக்கியவளது விழிகளில் நீர் நிறைய துவங்கியது.

குருவும் அசையவில்லை அழுத்தமான‌ பார்வை ஒன்றை தான் அவளை நோக்கி வீசியிருந்தான்.

“ப்பா உள்ள வாங்க…” என்று கவின் கையை பிடித்து இழுத்ததில் இருவரும் சுயநினைவை அடைந்திட,

மகிழ் சட்டென்று மறுபுறம் திரும்பிவிட்டாள்.

திரும்பிய கணம் இரு சொட்டு நீர் கன்னத்தில் மோட்சமடைந்தது. சடுதியில் அதனை துடைத்துவிட்டு திரும்பி,

“வா… வாங்க…” என்றவளுக்கு வார்த்தை வெகுவாக கரகரத்தது அழுகையில்.

குரு ஏதும் கூறாது உள்ளே நுழைய,

“ஒரு டூ மினிட்ஸ் வந்திட்றேன்” என்றவள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

எழில், “ப்பா வாங்க வந்து உட்காருங்க” என்று அவனை பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

இங்கு உள்ளே நுழைந்த மகிழுக்கு பெரியதான அழுகை பிறக்க கைகளால் வாயை மூடிக் கொண்டாள்.

முழுதாக மூன்று மாதங்கள் கழித்து வந்தவனை கண்டதும் ஒரு நொடி இதயம் துடிக்க மறந்திருந்தது. இனி வாழ்வில் இவனை காணவே முடியாது காணும் வாய்ப்பும் இல்லை என்று மருகி தவித்த மனதிற்கு நடப்பது கனவா நிஜமா என்று தெரியவில்லை.

அவன் தான் குரு பிரசாத் தான் வந்திருப்பதா…? என்று சந்தேகம் பிறந்தது. முழுதாய் தன் முன் நின்றவன் குரு பிரசாத் தான் என்று புத்தி அடித்து கூறியது.

நடக்கவே நடக்காது என்று உள்ளம் ஏங்கிய ஒன்று நடந்ததும் உள்ளே ஒன்று மெதுவாக நழுவ தொடங்கியிருந்தது.

துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது. புதைத்து வைத்திருந்த நேசம் வெளியே துளிர்விட துவங்கியிருந்தது.

தன்னை மீறிவிட்ட உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவள் முகத்தை நீரினால் அடித்து கழுவியவள் அழுந்த துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

கவின், “ப்பா ஏன் இவ்ளோ நாள் எங்களை பார்க்க வரலை…?” என்று வினவ,

“ஆமாப்பா. டெய்லி நாங்க உங்களை எக்ஸ்பெக்ட் பண்ணோம்‌. ஏன்பா வரலை? அம்மா உங்களுக்கு ஒரு இம்பார்ட்டன்ட் ஓர்க் இருக்குனு சொன்னாங்க. அது முடிஞ்சதாப்பா” என்று வினா தொடுக்க,

“அப்பா இனிமேல் எங்களை விட்டு போக மாட்டிங்கதானா?” என்று கவின் மீண்டும் வினா எழுப்பினான்.

இருவரும் தன்னை பேசவேவிடாததில் சற்று மெலிதான புன்னகையுடன்,

“டேய் என்னை பேச விடுங்கடா?” என்று அவர்கள் இருவரையும் தூக்கி தொடை மேல் அமர வைத்து கொண்டான்.

“ஹ்ம்ம் இப்போ சொல்லுங்கப்பா” என்றதும் சட்டென்று சிரித்துவிட்டான்.

வெளியே வந்த மகிழ் கண்டது குழந்தைகளுடன் சிரித்து பேசி கொண்டு இருந்த குருவை தான்‌‌. கால்கள் ஒரு விநாடி வேரோட அப்படியே நின்றுவிட்டாள்.

அவனது புன்னகையில் அந்த காட்சியில் என்னவோ வெகு நாட்களுக்கு பிறகு காண கிடைத்த காட்சி.

என்னவோ இதற்கு முன் கண்ட காட்சிகள் எல்லாம் முன் ஜென்மமோ என்று எண்ணுமளவிற்கு இப்பிரிவு அவளை வாட்டியிருந்தது.

விழிகளை அசைக்கமுடியவில்லை அந்த சிரிப்பில் இருந்து. ஆனால் ஏதோ ஒன்று அந்த புன்னகையில் குறைந்தது. என்னவென தெரியவில்லை.‌ அவனது முகத்தில் என்னவோ குறைந்திருந்தது.

“சொல்லுங்க என்ன வேணும்?” என்று குரு வினவ,

கவின், “நான் பர்ஸ்ட்?” என்று கையை உயர்த்த,

எழில், “நோ நான் தான் பர்ஸ்ட்?” கையை தூக்கினான்.

குரு, “யாராவது ஒருத்தர் கேளுங்கடா” என்று குரு மொழிய,

கவின், “நான் கேக்குறேன்?” என்றவன்,

“ஏன் பா இவ்ளோ நாள் எங்களை பார்க்க வரலை?” என்று வினவ,

ஒரு கணம் அவனது முகத்தில் மாற்றம் வந்து போனதை மகிழ் கவனித்தாள்.

குரு பதில் மொழியும் முன்,

“கவின் நான் தான் சொன்னேன்ல அப்பாவுக்கு ஒர்க் இருந்ததுன்னு” என்றபடி வர,

கவின் தந்தையை ‘அப்படியா?’ எனும் விதமாக பார்த்தான்.

குரு, ‘ஆம்’ எனும் விதமாக தலையசைக்க,

“அப்பா உங்க ஒர்க்லாம் முடிஞ்சுதாப்பா?. இனிமேல் எங்க கூடவே இருக்கிங்களா?” என்று எழில் ஏக்கமாக கேட்க,

இவனுக்குள் ஒன்று உருகியது. மகிழுகும் எழிலின் ஏக்கத்தில் விழிகள் நிரம்பியது.

ஒரு கணம் மௌனம் கோலோச்ச,

“ப்பா எங்க கூடவே இருக்கப்பா.‌ ஸ்கூல்ல எல்லா பசங்களும் அவங்க அப்பாவோட தான் ஸ்கூல்ல விட்றாங்கப்பா. நீங்களும் பழைய மாறி எங்களை ஸ்கூல்ல விட்றிங்களா?” என்று கவின் கையை பிடித்து கொண்டு வினவ,

இங்கு குரு இந்த குழந்தைகளின் பாசத்தில் ஏக்கத்தில் என்னென்வோ ஆகி கொண்டிருந்தான்.

மகிழ் கன்னம் தொட்ட கண்ணீரை துடைத்துவிட்டு,

“கவின், எழில் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அப்பா இப்போ தான வந்து இருக்காங்க. ட்ராவலிங் டையர்ட் இருக்கும். அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்று அதட்டினாள்.

அதில் இருவரும் முகம் வாட,

“சாரிப்பா” என்றிட,

இவன் இருவரையும் இறுக அணைத்து கொண்டான்.  இந்த எதிர்பார்ப்பில்லாத அன்பில் உள்ளம் கரைந்தது.

கவின், “ப்பா எனக்கு என்ன வாங்கிட்டு வந்திங்க?” என்று வினா தொடுக்க,

“எனக்கும் எனக்கும் சாக்லேட் வாங்கிட்டு வந்திங்களா?” என்று எழில் வினவினான்.

வரும் அவசரத்தில் ஏதும் வாங்கிவர மறந்துவிட்டோம் என்று உண்ர்ந்து,

‘ப்ச்’ என்று தன்னை நிந்தித்தவன்,

“அப்பா வர்ற அவசரத்தில வாங்கிட்டு வர மறந்துட்டேன் டா. வாங்க இப்போ போய் வாங்கலாமா?” என்று வினவ,

“ஹ்ம்ம் போலாம்பா” என்ற இருவரது முகத்திலும் ஆயிரம் மத்தாப்புகள்.

எழில், “ப்பா கார்லயா போறோம்?” என்று இயம்ப,

“ஆமாடா” என்று குரு மொழிந்ததும்,

“கார்ல போறோம்” என்று வெகு நாட்களுக்கு பிறகு மகிழுந்தில் செல்வதில் அத்தனை ஆனந்தம்.

“கார் சூப்பரா இருக்கும்பா. அம்மா இவ்ளோ நாள் எங்களை ஸ்கூட்டில தான் ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போவாங்க. அதுவும் மூனு பேருக்கும் சேர்த்து பெல்ட் கட்டி. இனி நீங்களே கார்ல கூட்டிட்டு போறீங்களா…? நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்பா” என்று மீண்டும் ஏக்கமும் ஆசையுமாக கேட்க,

இவனுக்கு தான் மொழியில்லாது போனது. குழந்தைகளை பாசத்திற்கு ஏங்க வைத்துவிட்டோம் என்று புரிந்தது.

“ஹ்ம்ம் அழைச்சிட்டு போறேன்” என்று சம்மதாக தலை அசைத்ததும் இருவரிடமும் ஏகமாய் குஷி‌.

“வாங்கப்பா போலாம்” என்று கவின் இறங்கி குருவின் கையை பிடித்து இழுக்க,

குருவின் பார்வை தங்களை அமைதியாக பார்த்திருந்த மகியிடம் விழுந்ததது.

அவளிடம் தானே அனுமதி வாங்க வேண்டும். இவர்கள் அவளுடைய பிள்ளைகள் தானே…?

அவர்களது சம்பாஷனையை அமைதியாக பார்த்திருந்தவள் தான் எத்தனை முயன்றாலும் குருவின் இடத்தை இவர்களிடம் நிரப்ப இயலாது என்று உணர்ந்து,

“ஹ்ம்ம்…” என்று மட்டும் தலை அசைத்தாள்.

எழில், “ம்மா நீங்களும் வாங்க” என்று அவளது கையை பிடிக்க,

குருவும் அவளது முகத்தை கண்டான்.

“இல்லை நான் வரலை நீங்க போய்ட்டு வாங்க” என்று இருவருக்கும் பொதுவாக மறுத்துவிட,

குரு இளையவர்களை அழைத்து கொண்டு வெளியே சென்றிட கதவை பூட்டிவிட்டு வந்தவள் தொப்பென்று தரையில் அமர்ந்துவிட்டாள்.

இன்னும் நடப்பதை நம்ப இயலவில்லை. குரு தானா? குரு பிரசாத் தானா? என்று உள்ளம் மீண்டும் மீண்டும் வினா தொடுத்தது.

நடந்தது கனவென்று ஆகிவிடுமோ என்று உள்ளம் தவித்தது. ஆனால் நீளும் நொடிகள் அவை உண்மை தான் என்று உணர செய்ததது.

உண்மை தான் என்றால் எதற்கு வந்தான்? அதுவும் மூன்று மாதங்கள் கழித்து? இனி தன்னை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ள கூடாது என்றுவிட்டு சென்றவன் இப்போது எதற்கு வந்தான் என்று தெரியவில்லை.

ஒருவேளை அவனுக்கு எதுவும் பிரச்சனையாக இருக்குமோ? வாய்ப்பு இருக்கிறது மனது அவனது தோற்றத்தை ஆராய்ந்தது.

களை இழந்த முகம் மழிக்கபடாது மீசை மற்றும் தாடி. உடையில் கூட அத்தனை நேர்த்தி இல்லை. வாரப்படாத தலை. ஒளியில்லாத கண்கள்.‌ இப்போது கூட புன்னகையில் ஜீவனில்லை. சிவந்திருந்த கண்கள் உறக்கமில்லாத இரவுகளை பறைசாற்றியிருக்க இவளுக்கு இதயத்தின் ஓரம் மெலிதாக கோடிழுத்தது போல வலி விரவியது‌.

முன்பிருந்த தோற்றத்திற்கும் இப்போதைக்கும் எத்தனை வேறுபாடு. எங்கு சென்றாலும் ஜெல் வைத்து தலையை அழுந்த படிய செய்து அவ்வளவு நேர்த்தியுடன் செல்பவனுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தான் தெரியவில்லை.

ஒரு வேளை தன்னால் தானோ…? என்று எண்ணிய நொடி இதயம் தடதடத்தது.

‘இருக்காது’ ஒரு மனம் கூற ‘வாய்ப்பு நிறைய இருக்கிறது’ மற்றொரு மனது இயம்பியது.

சரிதான் தன்னால் அவனுக்கு ஏதோ பெரிய பிரச்சனை அதனால் தான் இப்படி ஓய்ந்து போய்விட்டான் என்று சிந்தை பிறந்தது.

என்னவாக இருக்கும் தன்னால் இயன்றால் நிச்சயமாக சரி செய்திட வேண்டும் என்று நினைக்க,

‘பிரச்சனையின் காரணமே நீயாக இருக்கும் போது நீ எங்கணம் அதை சரி செய்வாய்’ மனசாட்சி எள்ளி நகையாட அமைதியாகி போனாள்.

சரியாக பதினைந்து நிமிடத்தில் மூவரும் உள்ளே நுழைந்தனர்.

கை நிறைய பையை தூக்கி கொண்டு ஓடி வந்த எழில்,

“ம்மா அப்பா எனக்கு நிறைய சாக்லேட்ஸ் வாங்கி கொடுத்திருக்காரு” முகம் முழுவதும் சிரிப்புடன் மொழிய,

“எனக்கும்மா” என்ற கவினது முகத்திலும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

error: Content is protected !!
Scroll to Top