காதல் 29.2

ஆனால் மகிழ் இதுவரை செய்ததே பெரிய உதவி இனியும் கடன்பட விரும்பவில்லை என்று கூறி மறுத்துவிட்டாள்.

மகிழ் பெங்களுரு கிளம்பிய போது கூட கௌதம் அந்த பணத்தை மாதம் தோறும் வங்கி கணக்கில் போட்டுவிடுவதாக மொழிய வேண்டவே வேண்டாம் என்று மறுத்தவள் தான் செல்லும் இடத்தை பற்றியும் கூறவில்லை‌‌.

குரு கொடுத்த பணத்தை வைத்து இருவரையுமே பெங்களுரிலே முதன்மையான பள்ளியில் கூட படிக்க வைக்கலாம் ஆனால் மகி அதை விரும்பவில்லை.

அவர்கள் தன்னுடைய பிள்ளைகள் தன்னால் எது முடியுமோ அதை தான் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.

பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் எப்படியோ பள்ளியை அடைந்தவள் இருவரையும் உள்ளே விட்டுவிட்டு அவசரமாக அலுவலகத்தை நோக்கி சென்றாள்.

முதலில் பெங்களூர் சற்று பழக கடினமாக இருந்தாலும் மாற்றம் ஓன்றே மாறாதது என்று தானும் பழகி கொண்டாள்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்தியவள் அவசர அவசரமாக உள்ளே நுழைய நேரம் சரியாக ஒன்பதாகியிருந்தது.

தினமும் இது போல அவசர ஓட்டம் தான் வாழ்க்கையாக மகிக்கு இருக்கிறது.

உள்ளே நுழைந்ததும் தான் அடுத்தடுத்து வரிசையாக வேலை வந்து இழுத்து கொள்ள அதில் ஒன்றி போனாள்.

நிற்க நேரமில்லாமல் வேலை இருந்து கொண்டே இருந்தது. மதிய உணவை தாண்டி பணி தொடர சரியாக நாலு ஐம்பதிற்கு அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டவள் ஐந்து மணிக்கு பணியை முடித்து முதல் ஆளாக கிளம்பிவிட்டாள்.

தாமதமாக போனால் அங்கு பள்ளியில் பிள்ளைகள் காத்துக் கொண்டு இருக்க வேண்டுமே அதுதான் இத்தனை அவசரம்.

சௌமியாவிடம் கூறிவிட்டு தனது வாகனத்தில் பள்ளியை அடைய ஓரளவிற்கு எல்லா பிள்ளைகளும் சென்றிருக்க கவினும் எழிலும் இவளை எதிர்பார்த்து ஓரமாக அமர்ந்து இருந்தனர்.

மகியை தூரத்தில் கண்டதும்,

“அம்மா…” என்று இருவரும் சிரிப்புடன் ஓடி வர, இவளுக்கும் புன்னகை பிறந்தது ஆனால் அதில் உயிர்ப்பில்லை.

உயிர்ப்பு யாவையும் தான் பறித்து கொண்டு அனுப்பிவிட்டான அவன்.

“ம்மா எனக்கு சாக்கி?” என்று இருவரும் வினவ,

“போகும் போது வாங்கிக்கலாம் வாங்க” என்று இருவரையும் ஏற்றி கொண்டவள் வீட்டை நோக்கி பயணமானாள்.

இடையில் ஒரு பல்பொருள் அங்காடியில் நிறுத்தி அவர்கள் இருவருக்கும் இனிப்பு மற்றும் சமையலுக்கு தேவையான சில பொருட்களை வாங்கினாள்.

அப்போதே வானம் இருட்டிட துவங்கியிருந்தது. ஒரு வழியாக வீட்டை அடைய நேரம் ஏழாகியிருக்க இருவருக்கும் உடை மாற்றி சாப்பிட நொறுக்கு தீனியை கொடுத்து தொலைக்காட்சி முன்பு அமர வைத்தாள்.

பின்னர் வந்து முந்தைய நாள் அணிந்த உடைகளை ஊற வைத்துவிட்டு தனக்கு தேநீரை தயாரித்து பருகினாள்.

பிறகு துணிகளை துவைத்து காயப்போட்டுவிட்டு இரவு சமையலை துவங்கி முடிக்க நேரம் எட்டிற்கு மேல் ஆனது.  

மூவரும் அமர்ந்து இரவுணவை முடித்ததும் பாத்திரத்தை விளக்கி ஒதுங்க வைத்தவள் வந்து அமர நேரம் ஒன்பதாகி இருந்தது.

இளையவர்களை உறங்க வைத்துவிட்டு தானும் வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு அவ்வளவு சோர்வு‌‌. ஆனால் விழிகளை மூடினால் உறக்கம் வரவில்லை.

முகம் முழுவதும் சிரிப்புடன் இளையவர்களுடன் பேசி கொண்டிருந்த குரு பிரசாத் தான் வந்து நின்றான்.

கோபத்துடன் முகம் சிவக்க தன் முன் கத்தியவன் தாயிடம் பரிவுடன் பேசியவன் அலுவலகத்தில் கை தேர்ந்த தொழிலதிபனாக தந்தையின் நினைவில் குழந்தையாய் அணைத்து கொண்டவன் கவினுக்கு உடல்நலக்குறைவின் போது தாயாய் தன்னை அரவணைத்து கொண்டவன்  என்று பலவிதமான பரிமாணங்களில் வந்து நின்றான் குரு பிரசாத்.

இவளை உயிரோடு கொன்று தின்றான். கண்ணீரில் கரைய வைத்தான். நினைவில் தொலைய வைத்தான்.

இப்போதும் இமைகளின் நடுவே வந்து நின்றான் விழிகள் தன்னை மீறி நிறைந்தது.

என்னதான் பகல் முழுவதும் ஓடி ஓடி தன்னை மறந்து திரிந்தாலும் இரவின் தனிமையில் அவனுடைய நினைவு தான் இவளை வதைக்கிறது.

அலைபேசியில் இருந்த புகைப்படத்தை கரங்கள் வருடியது.  அதில் குரு கையில் கவின் இருக்க வலது புறம் மகிழ் எழிலை கையில் பிடித்தபடி நின்றிருந்தாள். அனைவரது முகத்திலும் புன்னகை தவழ்ந்தது. அது ஒரு கேளிக்கை விருந்தில் எடுத்ததது.

விரல் குருவின் முகத்தில் நிலைத்தது. மனது தந்தையின் நினைவில் தன்னை இறுக கட்டி கொண்டவனிடம் வந்து நின்றது.

குளியலறையில் குப்பென்று தனது நாசியை தாக்கும் அவனது வாசனைக்கு உள்ளம் ஏங்க முகத்தை தலையணையில் புதைத்தாள்.

விழிநீர் ஆறாக பெருகியது‌. இப்போது தன் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது.

இந்நேரம் அவனுக்கு ஹனிகாவுடன் திருமணம் கண்டிப்பாக முடிந்து இருக்கும். அவன் ஹனிகாவுடைய கணவன்.

வேறு ஒருத்தியின் கணவனை நினைப்பது மிகப் பெரிய பாவம் குற்றமும் கூட. நீ இந்தளவு இறங்கி போய்விட்டாயா…? என்று மனசாட்சி கேள்வி எழுப்ப தன் மீதே ஒரு அளவில்லா கோபம் பெருகியது‌.

முகத்தில் அறைந்து கொள்ளும் அளவிற்கு கூட ஆத்திரம் உதித்தது. கைகளை இறுக மூடி கொண்டவள் உறங்க முற்பட உடல் சோர்வின் காரணமாக நித்திரைக்கு சென்று இருந்தாள்‌.

மறுநாள் வழக்கம் போல விடிய அந்த நாளுக்கான பணிக்காக ஓட துவங்கியிருந்தாள்.

அதே நேரம் தனது நண்பன் கௌதம் முன்பு அமர்ந்திருந்த குருபிரசாத்தின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.

“என்ன சொல்ற கௌதம்…?” என்றவனது குரலில் துளியும் அதிர்ச்சி குறையவில்லை.

“ஆமாடா. அவங்க இங்க இருந்து போய் டூ மந்த்ஸ் ஆகுது” என்று கௌதம் மொழிய,

“ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல…?” என்றவனிடம்,

“அவங்க ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டாங்க. அதுனால தான் சொல்லல. அதுவுமில்லாம நீ கொடுத்த மணிய அவங்க ரெப்யூஸ் பண்ணிட்டாங்க” என்ற கௌதமின் பதிலில் குருவிற்கு கோபம் தலைக்கேறியது.

“அவ சொன்னா நீ சொல்லாம விட்டுடுவியா…? அவள சேஃபா பாத்துப்பேன்னு தான‌ உன்கிட்ட அனுப்புனேன். ஆனால்…” என்றவன்,

“ப்ச் இப்போ அவ எங்க இருக்காளோ…? சேஃப்டியான இடத்துல இருக்காளோ குழந்தைங்கள வச்சுகிட்டு இருக்கா” என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க,

“எனக்கு புரியிது குரு. அவங்க இருக்க ப்ளேஸ் எனக்கு தெரியும். இங்க என்னோட ஸ்டாஃப் ஒருத்தவங்க ஹெல்ப்ல தான் அவங்க ஜாப் போய் இருக்காங்க. அது சேஃபான இடம் தான் நான் விசாரிச்சுட்டேன். எனக்கு அவங்க இருக்க ப்ளேஸ் தெரியும்னு அவங்களுக்கு தெரியாது” என்றதும் தான் குருவின் முகத்தில் சிறிதான சூடு குறைந்தது.

“இப்போ அவ எங்க இருக்கா?” குருவிடமிருந்து வினா பிறந்தது.

“பெங்களுர் கோரமங்கலம்ல  ஏபிசி லிமிடெட்னு ஒரு கம்பெனில ஒர்க் பண்றாங்க. அங்க பக்கத்துல ஒரு அபார்ட்மெண்ட்ல ஸ்டே பண்ணி இருக்காங்க” என்றிட மகி இருப்பிடத்தின் முகவரியை பெற்று கொண்டவன் அவளை தேடி பயணமானான்.

அலுவலகம் முடிந்து பள்ளியை அடைந்த மகிழ் இருவரையும் அமர வைத்து பெல்ட்டினால் இறுக கட்டுவதற்காக குனிய அவளது கழுத்தில் இருந்த மாங்கல்யம் ஊஞ்சல் ஆடியது…

அவளுக்கு சற்று தூரத்தில் மகிழுந்தில் அமர்ந்து சாரளத்தின் வழியாக அவளையே பார்த்து கொண்டிருந்த குருவின் விழிகளும் அதில் நிலைத்தது‌.

மகிழ் அதனை எடுத்து உடைக்குள் போட்டவள் கட்டி முடித்திட்டு நிமிர்ந்தாள். கவின் ஏதோ வினா தொடுக்க திரும்பி பதில் அளித்ததவளது முகத்தில் மெலிதான புன்னகை பிறந்தது.

சிரிப்புடன் முறைத்து ஏதோ அவனை கண்டித்தவள் தனது வெஸ்பாவை எடுக்க குருவின் மகிழுந்தும் அவளை பின்தொடர்ந்தது.

மகி வாகனத்தை நிறுத்திவிட்டு இளையவர்களுடன் உள்ளே நுழைய குரு அப்படியே தான் பார்த்திருந்தான். அருகில் செல்ல முயலவில்லை‌.

மகிழ் எப்போதும் போல நொறுக்கு தீனியை கொடுத்து செல்ல விழைய,

“அம்மா…” என்ற எழிலின் அழைப்பு அவளை தடுத்தது.

“என்னடா வேற எதுவும் வேணுமா?” என்று வினவினாள்.

“ஹ்ம்ம்” என்று அவன் தலையசைக்க,

“என்ன‌ வேணும்?” என்று வினா எழுப்பினாள்.

“அப்பா வேணும். எப்போ வருவாரு?” என்று அவன் வினாவில் இவள் தான் ஒரு தடுமாறியவள் பதில் அளிக்கும் முன்,

“ஆமா நானும் அப்பாவ பாக்கணும்” என்று கவினும் குரல் கொடுத்தான்.

மகிழ் தன்னை நிதானப்படுத்திவிட்டு, “நான் தான் ஏற்கனவே உங்கக்கிட்ட சொல்லி இருக்கேன்ல அப்பா வொர்க்காக வேற ஊர் போய் இருக்காங்க சீக்கிரமா வந்திடுவாங்கன்னு” என்று பொறுமையாக எடுத்து கூற,

“எப்போ வருவாங்க?” என்று எழில் மொழிந்தான்.

“கொஞ்ச நாள் ஆகும்” என்று மகிழ் இயம்ப,

“அதான் எப்போ…?” என்று எழில் பதில் வினா எழுப்பினான்.

பதில் இல்லாது திணறியவள்,

“இன்னும் பைவ மந்த்ஸ்ல வருவாங்க” என்று கூற,

“ஃபைவ் மந்த்ஸா? அதுக்கு நிறைய நாள் இருக்கே. நான் அப்பாவ இப்போவே பாக்கணும். என் ப்ரெண்ட்ஸோட அப்பாலாம் அவங்க கூடவே இருக்காங்க மா” என்று ஏக்கமாக கூற இவளுக்கு உள்ளுக்குள் ஒன்று உடைந்தது.

“எழில் செல்லம். அப்பாவுக்கு ஒரு இம்பார்ட்டன்ட் வொர்க்கா போய் இருக்காங்க. சீக்கிரமா திரும்பி வந்திடுவாங்க டா” என்று கரகரத்த குரலில் மொழிந்தாள்.

“சரி‌ அப்போ எனக்கு வீடியோ கால் போட்டுக்கொடுங்க. நான் டாடிட்ட பேசணும்” என்று விடாப்பிடியாக நிற்க, இவளுக்கு விழிகள் நிறைந்தது.

“அப்பா யூ.எஸ்ல இருக்காங்கல அவங்களுக்கு இப்போ நைட் டைம். தூங்கிட்டு இருப்பாங்க. டிஸ்டர்ப் பண்ண கூடாது. நாம நாளைக்கு பேசலாம்” என்றிட,

மனமே இல்லாது தலை அசைத்தவன்,

“நாளைக்கு கண்டிப்பா பேசலாம் தானே…?‌ என்று வினவ,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

விழிகளில் நீர் நிற்காது வழிந்தது‌. இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களிடம் தான் இப்படி பொய் கூறி சமாளிப்பது என்று தெரியவில்லை.

எத்தனை நேரம் அப்படியே நின்று இருந்தாளோ தெரியவில்லை.

வெளியே எழில்,

“ம்மா அப்பா வந்துட்டாரு” என்ற கத்தியதில் தன்னிலை அடைந்து இவன் விளையாடுகிறான் என்று எண்ணி வெளியே வந்தவள் வாசலில் நின்றிருந்த குரு பிரசாத்தை கண்டு ஏகமாய் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அவ்வளவு நேரம் வெளியே மகிழுந்தில் அமர்ந்து இருந்தவன் பெருமூச்சுடன் இறங்கி அவளுடைய வீட்டை நோக்கி நடந்தான்.

வாசலில் வந்து சில நிமிடங்கள் அமைதியாக நின்றவன் அழைப்பு மணியை அழுத்த உள்ளே அழுகையுடன் நின்றிருந்த மகிழுக்கு அது கேட்கவில்லை.

எழில் தான் வந்து கதவை திறந்தான். அடிக்கடி சௌமியா வந்து போவாள் என்பதால் கதவின் கீழே இருக்கும் தாழ்ப்பாளை இளையவர்கள் வந்து திறக்கும் படி தான் பூட்டி இருப்பாள்.‌ இன்றும் அதுபோல செய்திருக்க எழில் வந்து கதவை திறந்தவன்,

இன்பமாய் அதிர்ந்து, “அப்பா…” என்றவன்,

“ம்மா அப்பா வந்துட்டாரு…” என்று கூச்சல் இட்டிருந்தான்.

குருவும் அவளை தான் அசையாது பார்த்தபடி அழுத்தமாக நின்றிருந்தான்.  விழிகள் நான்கும் இமைக்க மறந்து போயிருந்தது…

error: Content is protected !!
Scroll to Top