காதல் 3.3

“அக்கா இந்தாங்க உங்களுக்கும் ஸ்வீட் கொண்டு வந்திருக்கேன்” என்று இனிப்பை நீட்ட,

“இல்லை வேண்டாம் வர்ஷினி” என்று மகி மறுக்க,

“அட‌ எடுத்துக்கோங்க மகிக்கா. எனக்கு பி‌.எஸ்.ஆர் மெடிக்கல் காலேஜ்ல மெடிசின் சீட் கிடைச்சிருக்கு” என்று அம்மு மொழிய,

“கங்கிராட்ஸ்” என்று புன்னகையுடன் இனிப்பை எடுத்து கொண்டாள் மகிழ்.

“டாக்டர் வர்ஷினி இனி அப்படித்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க” என்று சிரிப்புடன் கூறியவள்,

“ஆமா உங்க தம்பிக்கு மெடிசின் சீட் கிடைச்சுதா?” என்று வினவ,

சட்டென்று தம்பியின் உருவம் மனக்கண்ணில் வந்து போக,

‘பணமிருந்தால் எதையும் செய்யலாம் போல. தேர்ச்சி மதிப்பெண்ணை விட சிறிது அதிகமான மதிப்பெண் பெற்ற வர்ஷினிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால் அவளைவிட பலமடங்கு மதிப்பெண் அதிகமாக எடுத்த தனது தமையனுக்கு’ என்றும் எண்ணம் வந்தது.

ஆனால் அடுத்த நொடியே,

‘ப்ச் மகி இப்போது எதற்கு இந்த சிறு பெண்ணை பார்த்து பொறாமைபடுகிறாய். யாருக்கு எது கிடைக்க வேண்டும் என்று விதி உள்ளதோ அதுதான் கிடைக்கும். அகிக்கு கண்டிப்பாக மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும்’ என்று தன்னைத்தானே ஒரு நொடியில் மனதிற்குள் கடிந்தவள்,

“இல்லை கவர்மென்ட்ல கிடைக்கல. ப்ரைவேட்ல தான் போட போறோம்” என்று பதில் மொழிந்தாள்.

“ரியல்லி அவ்ளோ மார்க் எடுத்தும் கிடைக்கலயா?” என்று வியப்புடன் வினவியவள்,

“எந்த காலேஜ்ல போட போறீங்க?” என்று வினவியவள்,

மகி பதில் கூறும் முன்,

“நான் போட்ருக்க காலேஜ்லயே ட்ரை பண்ணுங்க அக்கா. ப்ரைவேட் காலேஜ்லயே அதுதான் நம்பர் ஒன். கோச்சிங்கும் ரொம்ப நல்லா இருக்கும்” என்றிட்டாள்.

‘அந்த கல்லூரியிலா அங்கு படிக்க கிட்டத்தட்ட நாற்பது லட்சம் தேவைப்படுமே?’ என்று மனதிற்குள் நினைத்தவள் அதை அம்முவிடம் கூற இயலாது சரியென தலையசைத்து வைத்தாள்.

அதன்பிறகு குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வர்ஷினி கிளம்பினாள்.

மறுநாள் அலுவலகத்திற்கு சென்றதில் இருந்தே மகிழினியின் பார்வை மனோகரை தான் தேடி கொண்டிருந்தது.

இவள் தான் வழக்கத்தைவிட விரைவாக வந்திருந்தாள். அவளை வெகுநேரம் காத்திருக்க வைத்துவிட்டே மனோகர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்ததுமே அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவள்,

“சார் என்னோட லோன் அப்ளிகேஷன்” என்று அவர்முன்பு பூர்த்தி செய்த படிவத்தை நீட்டினாள்.

“லோன் உங்களுக்காம்மா‌ எல்லா ஜெராக்ஸும் அட்டாச் பண்ணிட்டிங்களாம்மா” என்று மனோகர் வினவ,

“ஹ்ம்ம் பண்ணிட்டேன் சார்” என்று பொழிந்தாள்.

“சரிம்மா நான் சார்க்கிட்ட சப்மிட் பண்ணிட்றேன்” என்றிட தனது இருக்கைக்கு வந்து பணியை கவனித்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் மனோகரிடமிருந்து மகிக்கு அழைப்பு வர எழுந்து சென்றாள்‌.

“வாம்மா‌. நீங்க எட்டு லட்சத்துக்கு லோன் அப்ளை பண்ணி இருக்கிங்க. இங்க பைவ் இயர்ஸ்க்கு மேல வொர்க் பண்ணாதான் போர் லேக்ஸ் மேல லோன் கிடைக்கும்னு ரூல் இருக்கு. உங்களுக்கு தெரியாதா?” என்று வினவ,

“தெரியும் சார். பட் எனக்கு ஒரு எமெர்ஜென்சி. போர் அண்ட் ஹாஃப் இயர் கம்ப்ளீட் ஆகிடுச்சே?” என்று மகிழ் பதில் அளிக்க,

“எஸ் பட் பைவ் இயரஸ் ஆகலை. லோன் ஆப்ரூவ் ஆகுறது கொஞ்சம் டவுட் தான்‌. பட் நான் சார்க்கிட்ட பேசுறேன்” என்க,

“சரிங்க சார்” என்று தலையசைத்து வெளியேறியவளுக்கு மனதெல்லாம் பாரம். நான்கரை வருடங்கள் ஆகிவிட்டதே கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இவர் கூறுவதை கண்டால் கிடைக்காது போலிருக்கிறதே…?

இங்கு பணம் கிடைக்காவிட்டால் தான் என்ன செய்வது‌ என்று புரியவில்லை. வேறு வழியும் இருப்பதாக தோன்றவில்லை.

கடவுளே நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மனதிற்குள் வேண்டினாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் நிறுவனமே அத்தனை அமைதியாகியது. காரணம் குரு பிரசாத்தின் வருகை.

அழுத்தமான காலடிகளுடன் தன் அறைக்குள் நுழைந்தான் குரு பிரசாத்.

அனுமதி பெற்று உள்ளே நுழைந்த மனோகர் அவன் கையொப்பமிட வேண்டிய முக்கியமான கோப்புகள் மற்றும் முக்கிய வேலைகளை பட்டியலிட்டார்.

எல்லாவற்றையும் கேட்ட குரு, “ஓகே யூ மே லீவ். நான் எல்லாத்தையும் பாத்துட்டு கூப்பிட்றேன்” என்க,

“ஓகே சார்” என்ற மனோகர்,

“சார் அப்புறம் ஒரு லோன் அப்ளிகேஷன் வந்திருக்கு” என்று மகியின் விண்ணப்பத்தை நீட்டினார்.

“யார் அப்ளை பண்ணி இருக்கது. என்ன பொசிஷன்ல அவங்க இருக்காங்க” என்று வாங்கி பார்த்தவனது பார்வை வட்டத்தினுள் விழுந்தது மகிழினி சுவாமிநாதன் என்ற பெயர்.

அதனை தொடர்ந்து முகப்பில் ஒட்டப்பட்டிருந்த மகியின் புகைப்படத்தில் பார்வை சென்றது.

“அக்கவுண்ட் செக்ஷன்ல ஒர்க் பண்ற மகிழினிக்கு சார்” என்று மனோகர் கூற,

தலையசைத்து கேட்டவன் விண்ணப்பத்தை புரட்டினான். அதில் குறிப்பிட்டிருந்த தொகையை கண்டவன்,

“எய்ட் லாக்ஸ்?” என்று புருவம் உயர்த்தியவனது பார்வை கடனுக்கான காரணத்தில் பதிந்தது. தம்பியின் படிப்பு செலவிற்கு என்று குறிப்பிட்டிருந்தாள்.

“இவங்க இங்க ஒர்க் சேர்ந்து எவ்ளோ நாள் ஆச்சு?” என்று வினா எழுப்ப,

“நான்கரை வருஷம் சார்” என்று மனோகர் கூறிய அடுத்த நொடி விண்ணப்பத்தை மூடியவன்,

“பைவ் இயர்ஸ்க்கு அப்புறம் தான் பெரிய அமௌண்ட் லோன் கொடுப்போம்ற ரூல்ஸ் உங்களுக்கு தெரியாதா?” என்று வினா எழுப்ப,

“தெரியும் சார். பட் இந்த பொண்ணுக்கு ஏதோ எமர்ஜென்சியாம்” என்று இழுத்தார் மனோகர்.

“எதுவா இருந்தா என்ன? இங்க ரூல்ஸ் ரூல்ஸ் தான். எல்லாருக்கும் ஓரோ ரூல்ஸ் தான் பாலோ பண்ணணும். ரிஜெக்ட் திஸ் பார்ம்” என்று ஒதுக்கியவன்,

“இனி இதுமாதிரி அன் குவாலிபைடு அப்ளிகேஷன் வந்தா நீங்களே ரிஜெக்ட் பண்ணிடுங்க. என்கிட்ட கொண்டு வந்து என் டைம் வேஸ்ட் பண்ணாதிங்க” என்று முடித்துவிட்டான்.

இங்கு பணம் கிடைக்குமா கிடைக்காதா என்ற பதட்டத்தில் அமர்ந்திருந்தாள் மகிழினி…

error: Content is protected !!
Scroll to Top