உள்ளம் – 1.1

வெண்ணிறப் பஞ்சு பொதியைப் போல அடுப்பிலிருந்தப் பால் பொங்கி வர, உதட்டைச் சற்றே குவித்து ஊதி அதை அடக்கிய சிந்து, அதில் தேநீர் பொடியைக் கலந்தார். வயதின் மூப்பின் காரணமாக அவரது கைகளில் தோள் சுருங்கி சற்றே மினுமினுப்பாய் இருந்தது. தலை முழுவதும் வெள்ளிக் கம்பிகள் மீண்டுமொருமுறை அவரது அகவையைப் பறைசாற்றின.

தேநீரை வடிகட்டி சர்க்கரையைக் கலந்தவர், உதட்டுக்கு அதைக்கொண்டு செல்ல, வெளியே காக்கைகள் சத்தமாய் கரைந்து கொண்டிருந்தன. அதில் சிந்தை கலைந்தவர் முகம் நொடியில் சுருங்கி விரிய, கையிலிருந்தத் தேநீரை அருகே வைத்துவிட்டு பழையச் சோற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு மாடியேறினார்.

சிறுவயதிலிருந்தே, காலை எழுந்ததும் காக்கைக்கு உணவு வைக்கும் பழக்கம் சிந்துவிற்கு உண்டு. இன்று ஏனோ சிந்தனை எதை எதையோ முட்டி மோதிக் கொண்டிருக்க, அசிரத்தையாய் அவரது மூளை கொஞ்சம் மந்தமாகி அந்த வேலையை மறந்துவிட்டிருந்தது. அதில் தன்னையே மனதில் நிந்தித்தவாறு சென்று சோற்றை வைத்துவிட்டு சிந்து சில அடிகள் நகர, பட்சிகள் உணவை உண்ணத் துவங்கியிருந்தன.

அப்படியே சிந்துவின் பார்வை காக்கையிலிருந்து வீட்டிற்கு பின்புறம் உள்ள மரங்களில் குவிந்தது. நிதானமாய் நின்று சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார் அவர். வீட்டு வாயிலில் பெரிதாய் கிளைகளைப் பரப்பியிருந்த மஞ்சள் கொன்றை மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கி மணத்தைப் பரிமளித்துக் கொண்டிருக்க, அந்தக் காலைவேளையில் கூதக்காற்று உடலைத் தழுவி சென்றது.

கண்களை சுழலவிட்டவாறு நின்றிருந்தவருக்கு அப்போதுதான் தேநீரின் நினைவு வர, கீழே இறங்கிச் சென்றார். மொத்த சூட்டையும் எப்போதோ அது இழந்திருக்க, மீண்டும் சூடுபடுத்தும் மனநிலை இல்லாது அதை எடுத்து ஒரு மிடறில் குடித்து முடித்தார் சிந்து.

காலையில் எழும்போதே உடலும் மனதும் அலுத்துப் போயிருந்ததை போலொரு எண்ணம் அந்தப் பெரியவருக்கு. மகனின் அறையை எட்டிப் பார்க்க, தலையணையில் முகம் புதைத்து குப்புற படுத்திருந்தவனின் சீரான சுவாசம் அவன் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதைப் பறை சாற்றியது. வலதுபக்க முட்டிக்கு கீழே எப்போதும் போல இரண்டு தலையணைகளை இறுக்கியவாறு தூங்கிக் கொண்டிருந்தான் திருக்குமரன், சிந்துவின் ஒரே மகன்.

கதவை லேசாய் சாற்றிவிட்டு வெளிவந்து திண்ணையில் அமர்ந்தார் சிந்து. இன்னுமே அக்கம் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் ஒருவருமே எழவில்லை. தெருவே ஆழ்ந்த அமைதியைத் தத்தெடுத்திருந்தது.

சிந்துவிற்குதான் இப்பொழுதெல்லாம் உறக்கம் சரியாய் விழிகளை எட்டுவதில்லை. தாமதாய் உறங்கினாலும், விரைவாய் விழித்துவிடுகிறார். இன்றும் அப்படித்தான் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து வெளியே வந்து அமர்ந்திருந்தார்.

சில நொடிகளில் இருசக்கர வாகனம் ஒன்று வாயிலில் வந்து நிற்க, “அம்மா, குமரன் எங்கமா? ஐயா உடனே வர சொன்னாரு!” பதகளிப்புடன் ஒலித்தது வாகனத்திலிருந்தவன் குரல். நெற்றி முழுவதும் வியர்வை துளிகள் அரும்பியிருந்தன.

“என்னாச்சு பா, எதுவும் பிரச்சனையா?” சிந்துவுக்கும் அப்பதட்டம் தொற்றிக் கொண்டது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. குமரனை வர சொல்றீங்களா?” இப்போது அவன் குரலின் பாவனை லேசாய் மாறியிருந்தது.

“இதோ பா‌..‌. எழுப்பிவிட்றேன்!” என்ற சிந்து அறைக்குள் நுழைந்து குமரனை எழுப்ப முயற்சித்தார்.

“குமரா, டேய் குமரா!” காதில் கேட்ட குரல் சற்றே தூக்கத்தைக் கலைத்ததில் முகத்தைச் சுருக்கி உச்சுக் கொட்டியவாறே மறுபுறம் திரும்பிப்படுத்தான் குமரன்.

“குமரா, ஏதோ அவசரம்னு வினோத் வந்து இருக்கான். என்னென்னு கேளு டா. அவன் முகமே சரியில்லை!” சிந்துவின் குரலிலிருந்தப் பதற்றம் இவன் மூளையை விழிப்படையச் செய்ய, உடனே எழுந்துவிட்டான்.

தாயின் முகத்தைக் கூடக் காணதவன், வதனத்தைக் கழுவிவிட்டு வெளியே சென்றான்.
“என்ன வினோத், இவ்வளோ காலைல வந்து இருக்க?” எனக் கேட்ட குமரனின் வலக்கை உயர்ந்து முன்நெற்றியை மறைத்த முடியை பின்னோக்கி தள்ள, முகத்தில் சிந்தனை ரேகைகள் நொடியில் படர்ந்தன.

“குமரா, செங்கல் சூளைல ரெய்ட் வராங்களாம். ஐயா உன்னை வரச் சொன்னாரு. சீக்கிரம் கிளம்பி வா!” வினோத் கூறவும், தலையை அசைத்த குமரன், “நீ போ… ஐஞ்சு நிமிஷத்துல வரேன்!” என அறைக்குள் நுழைந்து இரவு உடையைக் களைந்து வேறு உடைக்கு மாறியிருந்தான்.

“குமரா, டீ குடிச்சுட்டு போ!” சிந்து தேநீரை சூடு செய்து மகனிடம் நீட்ட, “வந்து பார்த்துக்கலாம் மா. நான் வரேன்!” என்றவன் நொடியில் தன் இருசக்கர வாகனத்தை இயக்கிப் பறந்திருந்தான்.

பச்சை பசேலென்றிருந்த வயக்காட்டைக் கடந்தது அவனது வாகனம். திருச்சி மாவட்டத்தின், கருங்குளம் கிராமம்தான் இவர்களது வசிப்பிடம். இப்போதுதான் கிராமத்திலிருந்து சற்றே நகரத்தின் நகலை தத்தெடுத்துக் கொண்டிருந்தது கருங்குளம். ஆதி காலந்தொட்டே நம் முன்னோர்களின் தொழிலான விவசாயம் இப்போது அருகிவிட்டிருந்த காலத்தில், இன்னுமே அங்காங்கே மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கையை ஒப்படைத்திருப்பதை அந்தப் பகுதியைக் கடக்கும்போது உணர முடிந்தது.

ஆங்காங்கே ஒங்கிஉயர்ந்திருந்த பனை மரங்களும் தென்னை மரங்களும் அந்தத் தெருவை ஆக்கிரமித்திருந்தன. வளைந்து நெளிந்து சென்ற பாதையில் லாவகமாய் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த குமரனின் மூளை அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும், எங்கே எதைக்கொண்டு சென்று வைக்க வேண்டும் என கணக்கிடத் துவங்கியது. பத்து வருட அனுபவத்தில் இது போல வருமான வரித்துறை சோதனையெல்லாம் கடந்து வந்திருக்கிறான்‌. அதில் கிடைத்த பாடங்களும் அனுபவங்களும் ஏராளம். இப்போது அந்த அறிவுதான் சமயோகிதமாக அவனை யோசிக்கத் தூண்டியது.

வழியில் செல்லும்போது தெரிந்த முகங்கள் இவனைக் கண்டு புன்னகைக்க, தலையை அசைத்துவிட்டே சென்றான். ஆனால் புன்னகை மட்டும் மில்லி மீட்டர்தான். அதற்கு மேல் காண்பதெல்லாம் அரிதான விடயம். குமரன், இருபத்தியெட்டு வயது இளைஞன். நல்ல கட்டுக்கோப்பான உடல்வாகு, வேலை செய்து உரமேயிருந்தன. பள்ளி முடிந்ததும் ரங்கராஜனிடம் வேலைக்குச் சேர்ந்தவன், கிட்டத்தட்ட பத்து வருடமாக அவரிடம் பணிபுரிந்து வரும் முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்.

பத்து நிமிடத்தில் குமரனின் வாகனம் அந்தப் பெரிய வீட்டின் முன்பு நின்றிருந்தது. வாயிலுக்கும் வீட்டிற்குமே பல அடிகள் தூரமிருந்தன. இருபக்கமும் செடிகளும் கொடிகளும் இடத்தை ஆக்கிரமித்திருக்க, அவற்றைக் கடந்து இவன் உள்ளே நுழைய, வீடே பரபரப்பாய் இருந்தது.

வெள்ளை வேட்டியும் மேலங்கியும் அணிந்திருந்த ரங்கராஜனின் உடல் மொழியிலும் குரலிலும் கூட அரசியல்வாதியின் சாயல் அப்பட்டமாய்க் காட்சியளித்தது. கூடத்தில் நின்றிருந்த அவர் எதையோ சத்தமாய் பேசுவது இவன் செவியைக் கூட அடைந்தது.
கிட்டதட்ட ஐந்தாறு நபர்கள் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். அவர் சற்றே பதட்டத்துடன் அவர்களிடம் அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றைப் கட்டளையிட, குமரன் அவரருகே சென்றான்.

error: Content is protected !!
Scroll to Top