அகிலுக்கு சென்ற விடயம் என்ன ஆகிற்று என்று கேட்க தவிப்பு தான் இருந்தாலும் வந்தவுடன் கேட்க வேண்டாம் அமைதியாக இருந்தான்.
அகிலின் கையை பிடித்த மகிழினி,
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சது டா. மணி சாருக்கு தெரிஞ்ச ஒருத்தர் மூலமா பணத்துக்கு ஏற்பாடு பண்ணியாச்சு”
“…”
“அவர் பைனான்ஸ் பிஸ்னஸ் தான் பண்றாரு. நம்ம வீட்டு பத்திரத்தை வாங்கியிருக்காங்க. எல்லாம் சரியா இருந்தா ஒரு வாரத்தில பணத்தை கொடுத்திட்றேன்னு சொல்லியிருக்காங்க” என்று மகிழ் மொழிய,
அகிலனின் முகத்தில் அளவில்லா நிம்மதி விரவியது. என்னதான் தமக்கையிடம் கடன் வாங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறியிருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு ஆசை இருந்து கொண்டு தான் இருந்தது.
“எவ்ளோ இன்ட்ரெஸ்ட்கா. எவ்ளோ நாள்ல ரிட்டர்ன் பண்ணனும்?” என்று வினவ,
“இன்ட்ரெஸ்ட்லாம் ரொம்ப கம்மி தான். மணி சாருக்காக குறைச்சிருக்காங்க. நீ இதை பத்தி எல்லாம் கவலைப்படாம ஒழுங்கா படி. நீ படிச்சு டாக்டராகி தான் இவங்களை படிக்க வைக்கணும்” என்க,
“கண்டிப்பாக்கா. படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போய் நான் எழிலயும் கவினயும் நல்லா படிக்க வைப்பேன். அவங்க என்ன ஆசைப்பட்டாலும் படிக்க வைக்கிறேன்” என்று உறுதியாக கூறியவன் முகத்தில் இறுதியில் சிறிதான அச்சத்தின் சாயல்.
“என்ன அகி?” என்று மகிழ் வினா தொடுக்க,
“இல்லை இருபது லட்சம் கடன் வாங்க போறோமே ரொம்ப பெரிய அமௌண்ட் எப்படி திரும்ப அடைக்கிறதுன்னு தான் லைட்டா பயமா இருக்கு”
“இப்போதான சொன்னேன். பணத்தை நான் பாத்துக்கிறேன். நீ நல்லா படிக்கிறதை மட்டும் பாருன்னு. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று வினா எழுப்ப,
“சே சே அப்படி இல்லைக்கா. இத்தனை வருஷம் நீதான எங்களை பாத்துக்கிட்ட. உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு” என்று அகிலன் உடனடியாக மறுத்தான்.
“அப்புறம் என்ன. இவ்ளோ நாள் பாத்துக்கிட்டேன்ல அது போல இனியும் பாத்துக்குவேன். நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத” என்று முடித்துவிட,
அகிலனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிழமை விடுமுறை தினம் ஆதலால் விரைவாகவே எழுந்துவிட்டாலும் எந்த பரபரப்பும் இன்றி சமையலை செய்து முடித்துவிட்டு இளையவர்களை வாசலில் விளையாட விட்டு தானும் கையில் புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.
மகிழினி இப்பொழுது ஒரு கல்லூரியில் முதுநிலை தொலை தூர கல்வியில் படித்து கொண்டிருக்கிறாள். அதற்காக தான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் முடிந்த அளவு படித்து வைப்பாள்.
தேர்வு நெருங்கும் நேரத்தில் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து படிக்க அவளுக்கு நேரம் இருக்காது ஆதலால் சிறிது சிறிதாக கிடைக்கும் நேரத்தில் படித்து கொள்வாள்.
கவினும் எழிலும் கையில் ஒரு பெரிய வண்ண பந்தை வைத்து தூக்கி போட்டு விளையாடி கொண்டிருந்தனர். அந்த பந்து அகில் வேலை பார்த்து அவர்களுக்காக வாங்கி கொடுத்தது.
புதிதாக கிடைத்த பந்தை வைத்து தான் இருவரும் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
புத்தகத்தின் பக்கத்தை புரட்டி கொண்டிருந்த மகிழுக்கு அப்போது தான் தான் பணிபுரியும் நிறுவனத்தில் கடனுக்கு விண்ணப்பிக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நினைவிற்கு வந்தது.
அகிலனிடம் பேசிய அன்றே அந்த படிவத்தை வாங்கி வந்திருந்தாள். நேற்றும் இன்றும் விடுமுறை ஆதலால் நாளைக்கு கண்டிப்பாக சமர்ப்பித்துவிட வேண்டும் என்று நினைத்தவள் அந்த படிவத்தில் கேட்க பட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதினாள்.
பிறகு அதனுடன் என்னென்ன நகல்கள் இணைக்க வேண்டும் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துவிட்டு அவையெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று சரிப்பார்த்து எடுத்து வைத்தாள்.
காலையில் சென்றதும் முதல் வேலையாக இதனை மனோகர் சாரிடம் கொடுக்க வேண்டும் ஏனெனில் நாளை காலை தான் குரு பிரசாத் நிறுவனத்தை பார்வையிட வருவான்.
அதன் பிறகு மீண்டும் வர இரண்டு நாட்கள் ஆகும். இப்போதே அவர்கள் கடனை வழங்க அனுமதித்தால் தான் இரண்டு வாரங்களிலாவது பணம் கைக்கு வந்து சேரும் என்று எண்ணியபடி இருந்தவள் முயன்று கவனத்தை படிப்பில் செலுத்த,
“ஹாய் குட்டீஸ்…” என்ற குரல் மகிழின் கவனத்தை கலைக்க, தலையை நிமிர்த்தி பார்த்தாள்.
அங்கே புன்னகையுடன் நின்றிருந்த அமிர்த வர்ஷினியின் கையில் ஒரு பை இருந்தது.
“ஹாய் வர்சிக்கா” என்று அவளருகே ஓடி சென்ற இருவரது முகத்திலும் பெரிய சிரிப்பு முளைத்திருந்தது.
“என்ன பண்றிங்க செல்ல குட்டீஸ். பால் விளையாட்றிங்களா?” என்று அவர்களிடம் வினவியவள்,
“ஹாய் மகிக்கா” என்று மகிழினியிடமும் பேச,
“ஹாய் வர்ஷி” என்று தானும் புன்னகைத்தாள்.
மகிழ் இங்கு வந்த போது எட்டாம் வகுப்பு தான் பயின்று கொண்டிருந்தாள்.
அந்த வயதில் அம்முவிற்கு ஒன்று மற்றும் நான்கு வயதில் தங்கள் வீட்டின் அருகே குடிவந்திருந்த சிறுவர்கள் மீது அத்தனை பிரியம்.
அவர்கள் வந்த புதிதில் இருந்தே இங்கு அடிக்கடி வந்து இளையவர்களுடன் விளையாடுவாள். எதாவது வாங்கி வந்து கொடுப்பாள்.
அவள் சிறுவர்களுடன் விளையாடுவதை மகிழினி தடுக்கவில்லை. ஆனால் அவளிடம் எதையும் வாங்கி கொள்ள
பிரியப்படவில்லை.
என்னவோ தனக்கு துன்பத்தில் உதவி செய்த அந்த குடும்பத்தின் மீது கோடி கோடியாய் நன்றிக்கடன் இருந்தாலும் அவர்களுடனுமே ஒட்டி உறவாட விரும்பவில்லை.
உதவி செய்தவர்கள் ஏன் செய்தோம் என்று ஒரு போதும் நினைத்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
வந்த அன்று அவர்கள் வீட்டினுள் நுழைந்தவள் தான் அதன் பிறகு அவர்களாக அழைத்தால் ஒழிய இவளாக சென்றதில்லை.
பிறைசூடனும் கோதையும் பணத்தை வைத்து ஆளை மதிப்பிடுவது இல்லை. தீபாவளி பொங்கல் என அனைத்திற்கும் இவர்கள் நால்வருக்கும் உடை எடுத்து கொடுப்பார்கள்.
இந்த சிறு வயதிலே பெரியவர்களை இழந்து தவிக்கின்றனரே என்ற கரிசனம் பிறைசூடனுக்கும் கோதைக்கும் உண்டு. அவர்களும் அம்மு இளையவர்களுடன் பேசுவதை தடுக்கவில்லை.
இருந்தும் மகிழினி ஒரு எல்லை கோட்டோடு நின்றிருந்தாள்.
ஆனால் இதெல்லாம் சிறு வயதில் இருந்த அம்முவிற்கு புரியவில்லை. அது இதுவென நிறைய சிறுவர்களுக்காக எடுத்து வருவாள். மகிழினியால் ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க இயலவில்லை.
சரி குழந்தைகளுக்குத் தானே என்று விட்டுவிட்டாள். ஆனால் அதிலும் ஒரு எல்லை உண்டு. மிகவும் ஆடம்பரமான பொருட்களை அம்மு சிறுவர்களுக்கு தருவதை மகிழ் இன்றளவும் அனுமதிப்பது இல்லை.
முதலில் தினமும் வந்து சென்ற அம்மு நாட்கள் செல்ல செல்ல தனது வருகையை குறைத்து கொண்டாள்.
அவளுக்கு படிப்பு நண்பர்கள் என்று வட்டம் பெரியதாகி இருந்தது.
வாரம் ஒரு முறை வந்து கொண்டிருந்தவள் இப்போது அவ்வபோது வந்து செல்கிறாள்.
அம்முவின் கேள்விக்கு, “ம்ம் பால் விளையாட்றோம் நீயும் வர்றீயா?” என்று எழில் வினவ,
“ஹ்ம்ம் வர்றேனே…” என்று சிரிப்புடன் கூறியவள்,
“அதுக்கு முதல் நான் உங்களுக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன் என்னன்னு சொல்லுங்க பாப்போம்” என்று வினவ,
“என்ன?” என்று இருவரும் ஆர்வமாக வினா தொடுத்தனர்.
“உங்களுக்கு பிடிச்ச சாக்லேட்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று கூற,
“சாக்லேட், சாக்தேட்” என்று இருவரது முகத்திலும் ஆனந்தம்.
“ஹ்ம்ம் சாக்லேட் தான் பெரிய சாக்லெட்” என்று தனது பையில் இருந்து பெரிய இனிப்பு இரண்டை எடுத்து அவர்களுக்கு கொடுக்க,
இருவரது பார்வையும் மகிழிடம் சென்றது. இது மகிழினி சொல்லி கொடுத்த பழக்கம் தான்.
யார் எது கொடுத்தாலும் தன்னிடம் கேளாது வாங்க கூடாது என்று கண்டிப்பாக வாங்க கூடாது என்று கூறியிருந்தாள்.
மகிழினி ‘வாங்கிக்கொள்’ என்று தலையசைத்த பிறகு தான் இருவரும் அதனை பெற்று கொண்டனர்.
“ம்மா பெதி சாக்தேட்…” என்று குதூகலித்த கவின் அவளிடம் காண்பித்து மகிழ்ந்தான்.