காதல் 3.1

காதல் 3:

குருவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரை பார்க்க தயாராகி இருந்த கோதை,

“அம்மு இன்னும் என்ன பண்ற நேரமாச்சு வா வெளியே” என்று குரல் கொடுக்க,

“ஹ்ம்ம் வர்றேன்‌. என்னைக்காவது என்னை நீ நிம்மதியா தூங்கவிடுறியா? ஹாஸ்டல் போன பிறகு நான் எனக்கு தூக்கம் கலையிற வரை தூங்குவேன்” என்று முணுமுணுத்தபடி வெளியே வந்தாள் அம்மு‌.

“அங்க என்னடி முணுமுணுப்பு?” என்று கோதை முறைக்க,

“ப்ச் ஒன்னுமில்லைம்மா” என்றவள் வந்து தாத்தாவின் அருகில் அமர்ந்தாள்.

“அம்மும்மா இன்னைக்கு தான உனக்கு காலேஜ் அலாட் பண்ணுவாங்க. இன்னும் செக் பண்ணலையா?” ‌என்று பிறைசூடன் வினவ,

“ஹ்ம்ம் ஆமா. அதை எதுக்கு செக் பண்ணிக்கிட்டு எப்படியும் நான் கேட்ட காலேஜ தான் அலாட் பண்ணியிருப்பாங்க” என்று அலுக்க,

“அம்மு படிப்பு விஷயத்துல எதுக்கு இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்க. ஒழுங்கா செக் பண்ணு. அந்த காலேஜை அலாட் பண்ணலைன்னா என்ன பண்றது” என்று அதட்டினார் கோதை.

“கவுன்சிலிங்ல கிடைக்கலைன்னா மேனேஜ்மென்ட்ல சீட் வாங்கிக்கலாம்” என்று ஆரம்பித்தவள் தாயின் முறைப்பில் அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

அதில் அவள் எதிர்பார்த்தது போலவே அதே கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது.

“ம்மா நான் தான் சொன்னேன்ல சீட் கிடைச்சிடுச்சு பாருங்க. என்னமோ கவர்மென்ட் காலேஜ் சீட்டுக்காக நாம வெயிட் பண்ண மாதிரி பயந்திங்க. ப்ரைவேட் தான எப்படியும் கிடைச்சிடும்னு எனக்கு தெரியும்” என்று மொழிய,

“ஹ்ம்ம் எல்லாம் அண்ணன் பணம் கட்டிடுவான்ற எண்ணம். உழைச்சு சம்பாரிச்சா தான் பணத்தோட அருமை தெரியும்” என்று கோதை மகளை திட்டினார்.

அதனை கருத்திலே கொள்ளாதவள்,

“தாத்தா இன்னும் டூ வீக்ல பீஸ் கட்டி ஜாயின் பண்ணனும். அண்ணன்கிட்ட சொல்லணும்” என்று பிறைசூடனிடம் பேச துவங்க,

‘இவளிடம் பேசி எந்த பயனும் இல்லை’ என்பதை உணர்ந்தவர்,

“ப்பா நான் போய் ஜோசியரை பாத்திட்டு வர்றேன்” என்று ஆயத்தமாக,

“சரிம்மா பாத்து போய்ட்டு வா” என்று பிறை சூடன் வழியனுப்ப, அம்மு தனது அலைபேசியுடன் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

அம்மு எப்போதும் இப்படித்தான். பெரியதாக எதை பற்றியும் கவலை கொள்ளாமாட்டாள். அது அவளுடைய சுபாவமோ அல்லது அவள் வளர்ந்த சூழ்நிலையோ அது அம்மு தான் அறிவாள்.

என்னவோ கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் அவளுக்கு ஒருவிதமான அலட்சிய மனப்பான்மை இருந்தது எல்லா விடயங்களிலும்‌.

அவளுடைய வயதினர் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வாரோ அதனை விட அதிகமாக மகிழ்த்து வாழ்பவள். அதற்காக பணத்திமிர் என்றெல்லாம் கூறிவிட முடியாது.

என்னிடம் உள்ளது நான் என் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன் அவ்வளவு தான் அவளுடைய எண்ணம். நன்றாக ஊர் சுற்றி கேளிக்கை விருந்தில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகமாக விரும்புபவள் அண்ணன் ஒருவன் மீதுள்ள பயத்தால் அடக்கி வாசித்து கொண்டிருக்கிறாள்.

பணி முடிந்து வந்த மகிழினி சிறுவர்களுக்கு சாப்பிட சிற்றுண்டியை கொடுத்துவிட்டு வீட்டு பத்திரம் இருந்த கோப்புகளை எடுத்து ஒரு முறை ஆராய்ந்தாள்.

எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு தனக்கு உதவி செய்யக்கூடிய தந்தை மீது நன்மதிப்பை வைத்துள்ள மணிமாறனிடம் தான் அலைபேசியில் விபரத்தை கூறி விட்டின் மேல் கடன் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டாள்.

மணிமாறனும் விபரத்தை கேட்டுவிட்டு தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதி அளித்தவர் நாளை அவளை அவளது சொந்த ஊருக்கும் அழைத்திருந்தார்.

மகிழினியும் இப்போதே சென்று வேலையை துவங்கினால் தான் விரைவில் பணத்தை ஏற்பாடு செய்ய இயலும் என்று எண்ணி நாளை அலுவலகத்திற்கு வர இயலாது என்று விடுப்பு கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு நாளை செல்லும் போது எடுத்து செல்ல தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்தாள்.

மகிழினியின் சொந்த ஊர் திண்டுக்கலில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான்‌‌. ஊட்டியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் சென்றுவிட்டு திரும்பிவிடலாம். காலை விரைவாக சென்றுவிட்டு இருட்டுவதற்குள் திரும்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தாள்.

ஜோசியரை பார்க்க சென்ற கோதை விரைவிலே திரும்பி வந்துவிட,

பிறைசூடன், “என்னம்மா அதுக்குள்ள போய்ட்டு வந்துட்டியா? ஜோசியர் என்ன சொன்னாரு” என்று ஆர்வமாக வினவ,

“இல்லைப்பா அவரை பார்க்க முடியலை‌. ஏதோ அவசர வேலையா திடீர்னு வெளியூர் போய்ட்டாராம். அங்க போன பிறகு தான் நியூஸ் கிடைச்சது” என்க,

“ஓ… முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம் அவங்களுக்கு. இப்படி அலைய விடுறாங்க” என்று மொழிய,

“விடுங்கப்பா. ஏதோ அவசரம்னு சொன்னாங்க. கார்ல் தானே போய்ட்டு வர்றேன் இதுல என்ன அலைச்சல்” என்று தந்தை அருகில் அமர்ந்தார்‌.

“சரி இவரில்லைன்னா ஆலம்பட்டி ஜோசியக்காரரை பாத்திட்டு வர வேண்டியது தான?” என்று வினவ,

“வேண்டாம் பா. இவர் தான் கரெக்டா சொல்லுவாறு. ரெண்டு நாள்ல வந்திடுவாராம். அப்போ போய் பாத்த்துக்கலாம்” என்று முடித்துவிட்டார்.

இதனை அறிந்த குருவும் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர்களாக திருமணத்தை பற்றி எதாவது கூறியதால் நாம் பேசி கொள்வோம் என்ற‌ எண்ணத்தில் இருந்தான்.

சிறுவர்கள் இருவரையும் வராண்டாவில் விளையாட விட்டுவிட்டு வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்த அகிலின் விழிகள் கடிகாரத்தில் பதிந்தது.

நேரம் எட்டை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் சொந்த ஊருக்கு சென்ற தமக்கையை காணவில்லை.

அவனிடமிருந்த சிறிய பொத்தான் அலைபேசியில் மகிழுக்கு அழைத்திருந்தான். பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறியிருந்தாள்.

பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தது. ஆனால் மகிழினி வந்தபாடில்லை.

இளையவர்களை தனியாக விட்டும் செல்ல இயலாது தவித்தபடி வாசலை காண அவனை அதற்கு மேலும் காக்க வைக்க விரும்பாது அங்கு வந்து சேர்ந்தாள் மகிழினி.

தமக்கையை கண்டதும், “க்கா ஏன் இவ்ளோ நேரம் ஆகிடுச்சு” என்று அவளது கையில் இருந்த பையை வாங்க,

“வர்ற வழியில பஸ் ப்ரேக் டவுன் ஆகிடுச்சுடா. இறங்கி கொஞ்சம் நேரம் நின்னுட்டு இருந்தேன். அப்புறம் ஒரு டவுன்பஸ் வந்துச்சு அதுல தான் மாறி வந்தேன்” என்று காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே நுழைய,

“மகிம்மா…” என்று ஓடி காலை கட்டிக்கொள்ள, மகிழும் புன்னகையுடன் இருவரையும் அணைத்து கொண்டாள்.

“ம்மா எனக்கு சாக்தேட் வாங்கித்தியா?” என்று கவின் வினவ,

“ஹ்ம்ம் வாங்கிட்டு வந்திருக்கேன் செல்லம்” என்று மொழிந்தாள்.

“ம்மா எனக்கு பிஸ்கெட்” என்று எழில் வினவ,

“உனக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன் பட்டு” என்றபடி சமையலறை சென்று தண்ணீரை வாயில் சரித்து கொண்டவள்,

இரண்டு கிண்ணங்களை எடுத்து இருவருக்கும் திண்பண்டங்களை வைத்து கொடுத்துவிட்டு தம்பியின் அருகில் அமர்ந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top