அதில் சங்கடத்துடனும், குற்ற உணர்வுடனும் அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு அதே நிலையில் தனது முதலாளியை ஏறிட்டுப் பார்த்தவளோ,
“ஆமாம் சார். நானும், மதுபாலாவும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் தான். நான் சொல்லித் தான் அவ இந்தக் கம்பெனியை அப்ரோச் பண்ணினாள்”என்ற உண்மையைத் தன் வாயாலேயே ஒப்புக் கொண்டிருந்தாள் பிரேமா.
அதைக் கேட்டதும்,”நீங்க அவங்களை இந்தக் கம்பெனியை அணுகச் சொன்னது வரைக்கும் சரி தான். ஆனால் இதுக்கப்புறம் அவங்களோட வேலையிலோ, மத்த விஷயங்களிலோ உங்களோட தலையீடு கண்டிப்பாக இருக்கக் கூடாது!”என்று அவளுக்குத் தீர்க்கமாக அறிவுறுத்தி விட்டிருந்தான் புகழேந்தி.
அதையே தான், அங்கேயிருந்த மற்ற அனைவரும் எண்ணினார்கள் போலும்.
அதனாலேயே அவர்கள் தங்களது முதலாளியின் கூற்றை ஆமோதிக்கும் விதமாகத் தாங்களும் அதே தீர்க்கமான பார்வையுடன் அவளை நோக்கிச் செலுத்தினர்.
அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்டு,”கண்டிப்பாக சார்! இதையே தான் அவளும் எங்கிட்ட சொன்னாள். இந்தக் கம்பெனியைப் பத்தின எல்லாத்தையும் நானே சுயமாகப் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்! எனக்கு நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் உதவி பண்ணக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லிட்டாள் சார்!”என்று முதலாளியிடமும், மற்ற அனைவரிடமும் விளக்கம் அளித்தாள் பிரேமா.
அதை அனைவரும் அரை மனதுடன் ஏற்றுக் கொள்ளவும், அவளது பதிலில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டு,”ம்ஹ்ம். குட்”என்றிருந்தான் புகழேந்தி.
“இப்போ அவங்களை நம்மக் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துக்கிற ஐடியா இருக்கா சார்?”என்று அங்கேயிருந்த மத்திம வயது ஆண் அவனிடம் வினவ,
உடனே அனைவரின் விழிகளும் ஒரே நேரத்தில் அவனைத் தான் ஆவலுடன் நோக்கியது.
பிரேமாவிற்கோ தன்னால் தனது தோழிக்குக் கிடைக்க இருந்த வேலை கிடைக்காமல் போய் விடுமோ என்றக் கலக்கத்துடன் அவனைப் பார்த்திருந்தாள் பிரேமா.
“முதல்ல அவங்களோட டெமோவைப் பத்தின உங்களோட கருத்துக்கள் என்ன? நீங்க அதில் எடுத்து இருக்கிற குறிப்புகள், அப்பறம் அவங்களுக்கு எந்த மாதிரியான பிரிவைக் கொடுக்கலாம்னு சொல்லுங்க!”என்று அவர்களது தனித், தனிக் கருத்துக்களை எல்லாம் கவனமாக கேட்டு விட்டு,
“இப்போ நீங்க சொல்லுங்க வெற்றி”எனத் தன் காரியதரிசியைப் பார்த்தான் புகழேந்தி.
“எனக்குமே அவங்களோட டெமோ ரொம்பப் பிடிச்சு இருந்துச்சு சார். அதே மாதிரி அவங்களுக்குள்ளே இன்னும் நிறையத் திறமைகள் இருக்கு! அதை நாம வெளியே கொண்டு வந்தால் அது அவங்களுக்கும், நம்மளோட கம்பெனிக்கும் கண்டிப்பாக ரொம்பவே உபயோகமாக இருக்கும்!”என்று தனது கருத்தை அவனிடம் பகிர்ந்து கொண்டான் வெற்றிச் செல்வன்.
அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறி விட்டதால் தனக்கும் மதுபாலாவின் செயல்பாட்டு விளக்கம் பிடித்து இருந்ததாலும், அவளுக்கு இருந்த திறமையாலும் அவளைத் தனது கம்பெனியில் வேலைக்குச் சேர்க்க முடிவெடுத்து விட்டான்.
ஆனால் அதை அவர்களிடம் தெரிவிக்காமல்,”ஓகே! நீங்க எல்லாரும் போய் உங்க வேலையைப் பாருங்க. நான் என்னோட இறுதி முடிவை நாளைக்குச் சொல்றேன்”என்றுரைத்து அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு வெற்றிச் செல்வனை மட்டும் அங்கே இருக்கச் சொன்னான் புகழேந்தி.
அவனோ,“சார்! எனக்கு என்னமோ அந்தப் பொண்ணை வேலைக்கு எடுக்கலாம்னு உறுதியாகத் தோணுது சார்!”என்க,
“அப்படியா? எனக்கும் அதே தான் தோணுது வெற்றி”என்றவனைக் குழப்பமாக ஏறிட்டு,
“அப்போ அதை மத்தவங்க கிட்டே இப்போவே சொல்லி இருக்கலாமே சார்? ஏன் நாளைக்குச் சொல்றேன்னுச் சொல்லி அனுப்பினீங்க?”எனக் கேட்க,
“அதுக்குக் காரணம் இருக்கு வெற்றி. ஏன்னா, அந்த மதுபாலா இங்கே இருக்கிற ஸ்டாஃப் பிரேமாவோட ஃப்ரண்ட்! அவங்களோட பரிந்துரையில் தான் இந்தக் கம்பெனிக்கே அந்தப் பொண்ணு வேலை கேட்டு வந்திருக்காங்க! அப்படி இருக்கும் போது அவங்களை உடனே வேலைக்கு எடுத்துட்டா இது மத்தவங்களுக்கும் ஒரு சான்ஸாக ஆகிடும்! அப்பறம் அவங்களும் தங்களோட ஃபேமிலி மெம்பர் இல்லைன்னா ஃப்ரண்ட்ஸை இங்கே வேலைக்குச் சேர்க்க பரிந்துரைக்க ஆரம்பிச்சுருவாங்க! அதனால் தான், நான் எல்லார் கிட்டேயும் இந்த விஷயத்தை உடனே சொல்லாமல் விட்டேன்! அதே மாதிரி பிரேமாவுக்கும் என்னோட முடிவைக் கேட்பதில் அதிக ஆர்வம் இருந்ததைப் பார்த்தேன்! அதனாலேயே ஒரு நாள் தள்ளிப் போட்டேன்!”என்று அவனுக்கு விளக்கிக் கூறியிருந்தான் புகழேந்தி.
அதைப் புரிந்து கொண்டு,”ஓஹ் ஓகே சார். நாம அந்தப் பொண்ணுக்கு எப்போ ஜாயினிங் லெட்டர் அனுப்பி வைக்கனும்?”என்றான் வெற்றிச்செல்வன்.
“நாளை மறுநாள் அவங்களுக்குக் கால் செஞ்சி நேரில் வரச் சொல்லுங்க. அப்போ ஜாயினிங் லெட்டரைக் கொடுத்துடலாம். அதுக்கு முன்னாடி இந்த தகவலை அந்த டெமோவில் இருந்த குரூப் மெம்பர்ஸூக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க. இப்போ நீங்கப் போகலாம்”
“ஓகே சார்”என்று கூறி விட்டுச் செல்ல,
‘என்னோட மூளை உன்னைப் பார்க்காமல் தவிர்க்கனும்னு யோசிக்குது! ஆனால் என் மனசு உன்னைத் தேடுது! என் கண்கள் உன்னைப் பார்க்கனும்னுத் தோணுதே மது!”என்று, மதுபாலாவை நேரில் பார்க்கப் போகும் தருணத்திற்காக காத்திருக்கலானான் புகழேந்தி.
ஆனால் இங்கோ தனது வேலையில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே,”அக்கா! நீ போய் டிரெஸ்ஸை மாத்திட்டு வா. நாம வெளியே போகப் போறோம்”எனத் தமக்கையிடம் அறிவுறுத்திக் கொண்டு இருந்தாள் சுதா.
“நீயே இப்போ தான் வேலை முடிஞ்சு வந்திருக்கிற! டீ கூடக் குடிக்காமல் என்னை எங்கே கிளம்பச் சொல்ற? இப்போ வெளியே போறது அவசியமா?”என்று அவளிடம் சலித்துக் கொண்டாள் மதுபாலா.
“டீயை
வெளியே ஹோட்டலில் குடிச்சிக்கலாம்க்கா. இப்போ நீ போய் நான் சொன்னதை செய்”என்றத் தங்கையிடம்,
“சரி. எங்கே போகப் போறோம்றதையாவது சொல்லு”
“அது சஸ்பென்ஸ்”என்றவளைப் பொய்யாக மறைத்து விட்டுத் தன் உடையை மாற்றிக் கொண்டுச் தலைமுடியையும் பின்னலிட்டுக் கொண்டு வர,
அதைப் பார்த்து விட்டு,“சூப்பர்! வா போகலாம்”என அவளை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாள் சுதா.
உடனே வீட்டைப் பூட்டி விட்டு இருவரும் சாலையில் நடக்க ஆரம்பிக்க,
“ரொம்ப தூரமாகப் போறோமா?”எனக் கேட்டாள் மதுபாலா.
“கொஞ்ச தூரம் தான்க்கா. ஆனால் நாம நடந்து போக வேண்டாம்! பஸ்ஸில் போயிடலாம்”என்றாள் சுதா.
இருவரும் பயணியர் நிழற்குடைக்குள் நின்றுப் பேருந்திற்காக காத்திருக்க,
சிறிது நேரம் கழித்துப் பேருந்து வந்து விடவும், அதில் ஏறிக் கொண்டனர்.
தனது அருகில் அமர்ந்திருந்த தங்கையிடம்,”ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறியே!”எனச் சலித்துக் கொண்டாள் மதுபாலா.
அதில் புன்னகைத்தவளோ தாங்கள் இறங்கும் இடம் வந்ததை அறியும் விதமாக நடத்துனரின் அறிவுறுத்தலைக் கேட்டதுமே,”நாம இறங்குற இடம் வந்துடுச்சு. வா, க்கா”என்று தமக்கையிடம் கூறினாள் சுதா.
உடனே அவ்விருவரும் பேருந்திலிருந்து இறங்கினார்கள்.
தன்னைக் கூட்டிக் கொண்டு ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்த தங்கையிடம்,”நாம இந்தக் கடைக்கு எதுக்குடி வந்திருக்கோம்? ஞாயிற்றுக்கிழமை தானே டிரெஸ் எடுக்கிறதாகப் பிளான் போட்டிருந்தோம்?”எனக் கேட்டாள் மதுபலா.
“அதனால் என்னக்கா? எனக்கு என்னமோ உனக்கு வேலை கண்டிப்பாக கிடைச்சுரும்ன்ற நம்பிக்கைப் பலமாக இருக்கு. அதான். இப்போவே இந்த வேலையை முடிச்சுடலாம்ன்னு நினைச்சேன்”என்று அவளுக்குப் பதிலளித்தாள் சுதா.
“நீ ரொம்ப ஆசை வளர்த்துக்காதேடி! அப்பறம் வேலை கிடைக்கலைன்னா நீ தான் மனசுக் கஷ்டப்படுவ”என அறிவுறுத்திய தமக்கையிடம்,
“இல்லக்கா. நான் அப்படியெல்லாம் ஃபீல் பண்ண மாட்டேன்! நீ என்னை அப்படி சீக்கிரம் உடைஞ்சுப் போற அளவுக்கு வளர்க்கவும் இல்லை! அதனால் எப்படியும் டிரெஸ் எடுக்கிறதுன்னு முடிவாகிடுச்சு. அதை இன்னைக்கே முடிச்சிடலாம்”என்றதும்,
அவளுடன் சேர்ந்து தனக்கான துணிகளைத் தேர்வு செய்யத் தொடங்கினாள் மதுபாலா.
சிறிது நேரம் கழித்து மூன்று ரெடிமேட் உடைகளை வாங்கிக் கொண்டு, அங்கேயிருந்த ஒரு பேக்கரியில் தேநீரை வாங்கிப் பருகி விட்டுப் பேருந்தில் ஏறித் தங்களது வீட்டிற்கு வந்து விட்டனர் சகோதரிகள் இருவரும்.
“நீ இதையெல்லாம் இப்போவே போட்டுப் பார்த்திரு அக்கா”என்று தமக்கையை வலியுறுத்தி அவளை அன்றைக்கே அந்த ஆடைகளைப் போட்டுப் பார்த்து அளவுச் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வைத்து விட்டாள் சுதா.
அடுத்த நாள் காலையில் தனது முதலாளியின் உத்தரவின் படி மதுபாலாவை அலுவலகத்தில் சேர்த்துக் கொள்ளப் போவதாக தங்களுடன் டெமோவில் உட்கார்ந்து இருந்த அனைவரிடமும் அறிவித்தான் வெற்றிச்செல்வன்.
அதைக் கேட்டதும் முதலில் மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தது பிரேமாவே தான்!
ஆனால், அதை உடனே துடைத்தெறிந்ததைப் போலான பாவனையைக் காட்டிக் கொண்டாள்.
“உங்களுக்கு நம்ம முதலாளி சொன்னது ஞாபகத்தில் இருக்கும்னு நம்புறேன்”என்ற வெற்றிச்செல்வனிடம்,
“நல்லா ஞாபகம் இருக்கு சார்!”என அவனிடம் தீர்க்கமாக உரைத்தாள் பிரேமா.
“ம்ஹ்ம். குட்!”என்றவனோ, இதை தனது முதலாளியிடம் தெரிவிக்க,
“அப்போ மதியம் மதுபாலாவுக்குக் கால் செஞ்சி நாளைக்குக் காலையில் பதினொரு மணிக்குக் கிளம்பி வரச் சொல்லிடுங்க”என்றுரைத்து விட்டான் புகழேந்தி.
“ஓகே சார்”என்று கூறி விட்டு அலுவலகத் தொலைபேசி அழைப்புகளைக் கையாளும் பெண் ஊழியரிடம் விஷயத்தை உரைக்க,
அவளும் அலுவலகத்தில் தனக்காகப் பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து மதுபாலாவின் செல்பேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
அப்போது தான், துவைத்த துணிகளைக் காயப் போட்டு விட்டு வந்திருந்தவளோ, தனது செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதும் அதை எடுத்துப் பார்க்கப் புது எண்ணாக இருக்கவும் அழைப்பை ஏற்கச் சில நொடிகள் தயங்கி விட்டு, ஒருவேளை அந்தக் கம்பெனியில் இருந்து வந்த அழைப்பாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றவே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,
“ஹலோ” என்றாள்.
“ஹலோ! மிஸ். மதுபாலா மேடமா?”என்றப் பெண்ணின் குரலைக் கேட்டதும்,
“ஆமாம். நீங்க யாரு?”என்றிருந்தாள்.
“நான் கிளாமர் கேலக்ஸி கம்பெனியில் இருந்து மிஸ். துர்கா பேசுறேன்”என்றவளிடம்,
“ஹாங்! சொல்லுங்க மேடம்!”என்று தனது உற்சாகத்தை மறைத்துக் கொண்டுக் கேட்டாள் மதுபாலா.
“உங்களை நாளைக்குக் காலையில் பதினொரு மணிக்கு கம்பெனிக்கு வந்து எங்க எம். டியை மீட் பண்ணச் சொல்லி இருக்காங்க மேடம். அதனால் கண்டிப்பாக வந்துடுங்க. மத்த விஷயத்தை எல்லாம் அவர் தான் உங்ககிட்ட நேரடியாகப் பேசுவார்”என்று பட்டும், படாமல் கூறியவளிடம்,
“ஓகே மேடம்”என்றுரைக்க,
“தாங்க்யூ மேம்”எனச் சொல்லி அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்து விடவும்,
அவள் கூறிய விஷயத்தைக் கேட்ட மதுபாலாவிற்கோ, அங்கே தன்னை வேலையில் சேர்த்துக் கொள்ளத் தான் வரச் சொல்லி இருக்கிறார்களோ? என்ற எண்ணம் உருவானது!
அப்படி மட்டும் நடந்து விட்டால் அந்த வேலையால் கிடைக்கப் போகும் நன்மைகளை நினைத்துப் பார்த்துப் பூரித்துப் பார்த்துக் கொண்டாள்.
மாலையில் வீட்டிற்கு வந்திருந்த தங்கையிடம் இந்த விஷயத்தைச் சொல்ல முனையும் போது அவளது முகம் மிகவும் சோர்ந்து தெரிந்ததைக் கண்டு,
“என்ன சுதா, இன்னைக்குச் சென்டரில் ரொம்ப வேலை அதிகமா?”என்று அவளிடம் அக்கறையாக வினவினாள் மதுபாலா.
“இல்லக்கா. அங்கே எப்பவும் போல தான் வேலை இருந்துச்சு! ஆனால்…”என்றவளின் தயக்கத்தில் அவளது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு,
“என்னடி ஆச்சு?”என விசாரிக்க,
அவளது தோளில் சாய்ந்து கொண்டு,”அங்கே வந்து போற சில காலேஜ் பசங்க எனக்கு ரொம்பத் தொல்லைக் கொடுக்கிறாங்க அக்கா! என்னால் அதை எதிர்கொள்ளவே முடியலை! ரொம்பக் கடுப்பாக இருக்கு!”என்று தமக்கையிடம் விவரித்தாள் சுதா.
அதைக் கேட்டுப் பதைபதைப்புப் போய் விட்டாள் மதுபாலா!
தன்னுண தங்கைக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தானே இவ்வளவு மெனக்கெட்டுக் கொண்டு இருக்கிறாள்?
அப்படியிருக்கும் போது அவள் வேலை செய்து கொண்டு இருக்கும் அந்தக் கம்ப்யூட்டர் சென்டரில் அவளுக்கு இப்படியான தொந்தரவு ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
“என்னை நாளைக்குப் பதினொரு மணிக்கு அந்தக் கம்பெனிக்கு வரச் சொல்லி இருக்காங்க சுதாம்மா. வேலைக்குச் சேர்த்துக்கத் தான் கூப்பிட்டு இருப்பாங்கன்னுத் தோணுது! நான் அந்த வேலையில் சேர்ந்ததும் நீ இந்த வேலையை விட்டுட்டுக் காலேஜில் சேர்ந்துடு! நான் எப்படியாவது என்னோட வேலையில் கிடைக்கிற சம்பளத்தை வச்சு நம்ம வீட்டோட பொருளாதாரத்தைப் பார்த்துக்கிறேன்”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் மதுபாலா.
அவளோ,“நீ மட்டும் தனியாக எப்படி பார்த்துப்ப அக்கா?”என்றாள் வருத்தமாக.
“அதெல்லாம் பார்த்துப்பேன். நீ எதையும் நினைச்சுக் கவலைப்படாதே!”என்று கூறி அவளது மனதை அமைதிப்படுத்தினாள் மதுபாலா.
அதற்குப் பிறகு மற்ற வீட்டு வேலைகளைப் பார்த்து விட்டு இரவு உணவைத் தயாரித்து உண்டு விட்டு உறங்கி விட்டார்கள் இருவரும்.
- தொடரும்