காதல் 29:
பெங்களூரின் சற்று நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் கோரமங்கலம் தொடக்கத்தில் இருந்தது அந்த சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு.
ஆலிஸ் அப்பார்ட்மெண்ட் என்று பெரிதாக பெயரிடப்பட்ட பலகை முகப்பில் தொங்கி கொண்டிருந்தது.
காலை நேரம் பள்ளி அலுவலகம் செல்பவர்கள் பரபரப்புடன் தயாராகி தங்களது இடத்தை நோக்கி ஓடி கொண்டு இருக்க அதில் . வைத்திருந்த பாத்திரத்தை துணியால் தூக்கி வடித்துவிட்டு குழம்பிற்கு தாளிக்க துவங்கினாள்.
பெங்களூரின் குளிரான காலநிலையிலும் அடுப்பின் முன் நிற்பதால் சற்று வியர்த்து வடிந்தது.
சேலை தலைப்பால் முகத்தினை ஒற்றி எடுத்தவள் குழம்பை தாளித்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே இளையவர்கள் சுகமாக துயில் கொண்டிருந்தனர். அது ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடு.
அந்த குடியிருப்பில் எல்லா வீடுகளும் ஒற்றை படுக்கை அறை கொண்டவை தான். அதற்கே பதினைந்தாயிரம் மாத வாடகை.
குருவின் சொல்படி கேரளாவில் அவனது நண்பன் வீட்டிற்கு சென்றவளுக்கு ஏனோ அங்கிருக்க பிடிக்கவில்லை. குருவிற்கு தெரியாத ஒரிடத்திற்கு வந்துவிட எண்ணி கௌதமிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அங்கிருந்த அலுவலக தோழி மான்யா மூலமாக தான் பெங்களூரில் உள்ள பெரிய தொழிற்சாலையில் வேலைக்கு விண்ணப்பித்து இங்கு வந்துவிட்டாள். மான்யா மிகவும் நல்ல கலகலப்பானவள். பார்த்ததுமே அமைதியாக இருந்த மகியை மான்யாவிற்கு பிடித்துவிட அவளாக தான் முன்வந்து அனைத்து உதவிகளையும் செய்தாள்.
இவளுக்கு வீடு பார்த்து கொடுத்ததும் அந்த மான்யாவின் தோழி சௌமியா தான். மகி இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் தான் சௌமியாவும் வசிக்கிறாள்.
கௌதமிடம் குருவிற்கு தான் அங்கிருந்து வெளியேறுவது தெரிய வேண்டாம் என்று கூறிவிட்டு தான் வந்திருந்தாள். இது தான் இருப்பதிலே மிகவும் குறைந்த செலவில் வாடகைக்கு கிடைத்த வீடு. அதுவுமட்டுமின்றி ஏதும் தெரியாத இடத்தில் சௌமியாவுடன் இருப்பதே நல்லதாக பட பாதுகாப்பு கருதி இங்கு குடியேறி இருந்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குழந்தைகளை எழுப்ப அவளுக்கு மனமே இல்லை. ஆனால் எழுப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் செல்ல வேண்டுமே.
இது குருவின் அலுவலகத்தினை விட மிகவும் கெடுபிடியான இடம். சரியாக ஒன்பது மணிக்கு கையெழுத்திட்டு உள்ளே நுழைந்திட வேண்டும்.
மாலை ஐந்து மணிக்கு தான் மீண்டும் வெளியேற முடியும். இடையில் அரை மணி நேரம் உணவு இடைவேளை. மூன்று நாள் தாமதமாக சென்றால் அது ஒரு நாள் விடுப்பு கணக்கில் வந்துவிடும். வேலை சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்றது போல ஊதியமும் கொடுப்பதால் மகிழ் இங்கு தொடர்கிறாள்.
“கவின் செல்லம் எழுந்திடுடா” என்று கன்னத்தில் தட்ட,
“ப்ச் போம்மா…” என்று கையை தட்டிவிட்டு திரும்பி படுத்தான்.
“டேய் ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. ரெண்டு பேரும் எழுந்திடுங்க…” என்று கெஞ்சி கூத்தாடி அவர்களை எழுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட எழுப்பி இருவரையும் குளிக்க வைத்து பள்ளி சீருடை அணிவித்து தயார் செய்தவள் உணவை தட்டில் வைத்து கொடுத்துவிட்டு அவர்களுக்கு மதிய உணவை டப்பாவில் அடைத்தாள்.
பின்னர் தானும் இரண்டு வாய் உணவை அள்ளி போட்டு கொண்டவள் கூந்தலை லேசாக பின்னலிட்டவள் துப்பட்டாவை எடுத்து கழுத்தில் போட்டுவிட்டு இருவரையும் கையில் பிடித்து கொண்டு வெளியே வந்தவள் கதவை பூட்ட,
“என்னடி கிளம்பியாச்சா…?” என்று குரல் கொடுத்து எட்டி பார்த்தாள் சௌமியா.
“ஹ்ம்ம் ரெடிதான்…” என்று மகிழ் பதில் மொழிய,
“சரி நீ போய்ட்டு இரு. நான் வந்திட்றேன்” என்று சௌமி இயம்பினாள்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்துவிட்டு மகிழ் நகர எத்தனிக்க,
“சாப்பிட்டியா டி…?” என்றவளது குரல் அவளை தடை செய்தது.
“ஹ்ம்ம்… ஆச்சு” என்றவள் திரும்பி பார்த்து கூற,
“ஹ்ம்ம் பாத்து போ” என்றவள்,
“பாய் குட்டீஸ்” என்று இளையவர்களிடம் கை அசைத்தாள்.
அவர்கள் இருவரும்,
“பாய் சித்தி…” என்று மகிழ்வுடன் கை அசைத்தனர்.
மகியைவிட சௌமி ஒரு வயது குறைவு என்பதால் சௌமியே சித்தி என்று அழைக்கும் படி கூறி இருந்தாள்.
இளையவர்களை அழைத்து கொண்டு கீழே வந்தவள் தனது வெஸ்பாவில் பையை வைத்துவிட்டு தானும் அமர்ந்து இளையவர்களை சேர்த்து அமர வைத்து குழந்தைகளை வண்டியில் அழைத்து செல்லும் போது உபயோகிக்கப்படும் பெல்ட்டை வைத்து மூவரையும் சேர்த்து கட்டினாள்.
மகிழின் வசிப்பிடத்தில் இருந்து
பள்ளி சற்று தூரத்தில் இருப்பதால் வந்த ஒரே வாரத்திலே நேரத்தை சேமிக்க ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கியிருந்தாள்.
இவர்களை பள்ளியில் விட்டுவிட்டு அப்படியே அலுவலகத்திற்கு சென்றுவிடுவாள். மாலை அலுவலகம் முடிந்த பிறகு தனது வாகனத்திலே சென்று ஐந்தரை மணிக்கு அவர்களை அழைத்து கொள்வாள்.
ஓரளவு நல்ல பள்ளிக்கூடத்தில் தான் தன்னுடைய வசதிகேற்ப சேர்த்திருந்தாள்.
குரு இளையவர்களின் கல்வி செலவிற்காக மாத மாதம் பணத்தை கௌதம் மூலமாக கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.