காதல் 22:
“கவின்கு பசிக்கிது பூவா…” என்று கவின் வயிற்றை தடவ,
“மகி புள்ளைக்கு பசிக்கிதாம் பாரு போய் சாப்பாடு எடுத்துட்டு வா…” கோதை குரல் கொடுக்க,
“ஹான் தோசை ஊத்திட்டு இருக்கேன்த்தை டூ மினிட்ஸ்” என்று குரல் கொடுத்தவள் சுட சுட தோசையுடன் இரண்டு நிமிடங்களில் வெளியே வந்தாள்.
பட்டு புடவை சகிதமாக அமர்ந்திருந்த கோதை,
“ப்பா நேரமாச்சு கிளம்பலாமா?” என்று வினவ,
கவினது முன்பு தட்டை வைத்த மகிழ்,
“அத்தை இருங்க தோசை ஊத்துறேன் சாப்பிட்டு போங்க” என்றாள்.
“இல்லைம்மா லேட் ஆகிடுச்சு. நாங்க அங்க போய் பாத்துக்கிறோம்* என்று கோதை பதில் மொழிந்தார்.
“ஒரு பத்து நிமிஷம் லேட்டா போனா ஒன்னும் ஆகிடாது. சாப்பிடாம போனா மயக்கம் வந்திடும் உங்களுக்கு சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டு தான் போகணும்” என்று உரிமையாய் அதட்டியவள்,
“தாத்தா உங்களுக்கும் தான் சாப்பிட்டு தான் போகணும்” என்றாள்.
இளையவளின் அதட்டலில் இருவருக்கும் புன்னகை பிறக்க,
“பார்றா என் மருமக என்னை அதட்டுறா” என்று கோதை சிரிக்க,
“சாம்பிடாம போனா அதட்ட தான் செய்வேன். நீங்க என்னை சாப்பிடாம விடுவிங்களா?” என்று தானும் புன்னகைத்தவள் சமையலறைக்குள் நுழைய,
இவர்களது உரையாடலை கேட்டபடி அறையில் இருந்து அலுவலகம் கிளம்பி இறங்கி வந்தான் குரு பிரசாத். முகத்தில் வழக்கம் போல அழுத்தம் குடி கொண்டிருந்தது.
கூடத்திற்கு வந்தவனை கண்ட கோதை,
“என்னப்பா ஆபிஸ்க்கு கிளம்பிட்டியா…? சாப்பிட்டு போ” என்க,
“சரிம்மா” என்றவன் அமர்ந்து தாத்தாவுடன் தொழில் ரீதியாக உரையாட துவங்கினான்.
மகிழ் இருவருக்கும் விரைவாக தோசையை எடுத்து வந்தாள்.
கோதையும் பிறை சூடனும் சாப்பிட சென்றதும் குரு அலைப்பேசியில் முக்கிய செய்திகளுக்கு மட்டும் பதில் அளித்து கொண்டிருந்தான்.
பிறைசூடனது நெருங்கிய சொந்தத்தில் ஒரு திருமணம் அதற்கு செல்ல தான் பிறைசூடனும் கோதையும் தயாராக இருந்தனர்.
இருவரும் உண்டதும் கிளம்ப தயாராக,
“அத்தை டேப்லெட்ட மறந்துட்டிங்க” என்று எடுத்து வர சென்றாள்.
“வர வர நீ மாத்திரையை சரியான நேரத்துக்கு எடுத்துக்கிறதே இல்லை” என்று பிறைசூடன் குறைபட,
“வயசாகிடுச்சுல அதான் மறதி வந்திட்டு. அதனால என்ன அதான் மக மாதிரி பாத்துக்க ஒரு தங்கமான மருமக இருக்காளே…” என்று கோதை புன்னகைக்க,
“சரி தான். நாமளே தேடி பாத்திருந்தாலும் இப்படி ஒரு பொண்ணை பாத்திருக்க முடியாது. என் பேரன் தொழில் விஷயத்துல மட்டும் இல்லை. வாழ்க்கையிலும் கெட்டிக்காரன்” என்று உணவு மேஜேயில் அமர்ந்தவாறு பேச,
இது கூடத்தில் அமர்ந்து அலைபேசியை கவனித்து கொண்டிருந்த குருவின் காதிலும் விழ ஒரு கையில் மாத்திரை பெட்டியும் மறுகையில் தண்ணீர் குவளையும் வைத்தவாறு வந்தவளது முகத்தில் முடிக்கற்றைகள் விழ அதனை புறங்கையால் ஒதுக்கிய படி நடந்து வந்தவளை தான் பார்த்தான்.
கிட்டத்தட்ட மூச்சு வாங்க வந்தவள்,
“இந்தாங்க போட்டுட்டு கிளம்புங்க” என்க,
“மெதுவா வர வேண்டியது தானே” என்று மருமகளை கடிந்துவிட்டு மாத்திரையை விழுங்கினார்.
இருவரும் புறப்பட்டு செல்லும் நேரம் வாசல் வரை சென்று வந்தவள் அப்போது தான் குரு அங்கிருப்பதையே கவனித்தவள் போல,
“சார் உங்களுக்கு தோசை சுட்டு எடுத்துட்டு வரவா?” என்று வினவ,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைய,
“ம்மா எனக்கு சப்பாத்தி” என்றான் எழில்.
“சப்பாத்தியா…? அப்பாவுக்கு வேலைக்கு நேரமாச்சு. தோசை ஊத்திட்டு அம்மா மாவு பிசைஞ்சு போட்டு தர்றேன்” என்று கூற,
“ம்ஹூம் எனக்கு சப்பாத்தி இப்போவே வேணும்” என்று அடம்பிடிக்க,
“எழில் கண்ணா ஒரு டென் மினிட்ஸ்” என்று கெஞ்ச,
“நோ…” என்று அடமாக கூறினான் எழில்.
மகிழ் ஏதோ கூற வர இதனை கவனித்த குரு,
“அவனுக்கு சப்பாத்தி போட்டு கொடுத்திட்டு எனக்கு தோசை கொடு” என்றிட,
சம்மதமாக தலையசைத்தவள்,
“வர வர உனக்கு அடம் அதிகமாகிடுச்சு” என்று எழிலிடம் கூறிவிட சென்றவள் மற்றொரு அடுப்பில் தோசை கல்லை வைத்தவள் தோசையை ஊற்றிவிட்டு மாவை விரைவாக பிசைந்து சப்பாத்தியையும் முதல் கல்லில் போட்டு எடுத்தாள்.
எழிலுக்கு ஒரு தட்டில் சப்பாத்தியை எடுத்து வந்து வைத்தவள,
“எழில் சாப்பிடு” என்று கூறிவிட்டு,
“சார் உங்களுக்கும் தோசை எடுத்து வச்சிட்டேன்” என்று அவனிடம் கூறினாள்.
குரு வந்து அமர்ந்ததும் சுட சுட இரண்டு தோசைகளை தட்டில் வைத்தவள் அவனுக்கு மிகவும் பிடித்த நிலக்கடலை சட்னியையும் புதினா சட்னியையும் வைத்தாள்.
குரு அமைதியாக உண்ண மேலும் இரண்டு தோசைகளை கொண்டு வந்தவள் அருகில் வைக்க,
“போதும்” என்று குரு கூறியதும்,
“சப்பாத்தி கொண்டு வரவா சார்?” என்று மீண்டும் வினவினாள்.
“வேணாம்” என்று மறுத்துவிட்டவன் உண்டுவிட்டு கிளம்பும் நேரம்,
“ப்பா அவேஞ்சர்ஸ் பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னிங்களே…” என்று இருவரும் ஆளுக்கொரு காலை பிடித்து கொள்ள,
குருவிற்கு சட்டென்று புன்னகை பிறந்தது.
மகிழ், “டேய் என்ன இது ஆபிஸ் கிளம்புற நேர்த்தில வம்பு பண்ணிக்கிட்டு நாளைக்கு போகலாம்” என்று அதட்ட,
“ம்ஹூம் இன்னைக்கே போகணும்” என்று இருவரும் சேர்ந்தபடி கூற,
குரு இருவரையும் இரு கைகளிலும் ஏந்தி கொண்டு,
“ஈவ்னிங் ஆபிஸ்ல இருந்து சீக்கிரமா வந்து உங்களை அவேன்சர்ஸ் பாக்க அழைச்சிட்டு போறேன். அதுவரைக்கும் சமத்தா இருக்கணும்” என்று கூற,
“சரிப்பா” என்று தலையசைத்த இருவரும் அவனது இரு கன்னங்களிலும் முத்தமிட குருவிற்கு சிலிர்த்தது.
இதனை பார்த்த மகியின் முகத்திலும் அப்படி ஒரு ரசனை புகுந்தது.
ஒரு நொடி தன்னை மறந்து அதனை ரசனையுடன் பார்த்தவள் சட்டென்று திரும்பி கொண்டாள்.
குரு இளையவர்களிடம் பேசிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பியதும் அவன் விட்டு வைத்திருந்த ஒரு தோசையை உண்டு முடித்தவள் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்து கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் பொத்தென்று அமர்ந்துவிட்டாள்.
இளையவர்கள் தொலைக்காட்சியில் ஓடிய பொம்மை படத்தை பார்த்து கொண்டிருந்தனர்.
இங்கு இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடியவளது மனக்கண்ணில் அன்றைய நிகழ்வு நிழலாடியது.
சட்டென்று கன்னம் தாண்டிய கண்ணீரை துளியும் பொருட்படுத்தாது எப்போதும் போல அழுத்தமான நடையுடன் லேசாக நனைந்தபடி நடந்து வந்தவனை இமைக்காது பார்த்திருந்தாள்.
எங்கே இமைத்தால் மறைந்துவிடுவானோ என்று உள்ளம் பதறியது.
“குரு வந்துட்டானாம்மா” என்ற கோதையின் விழிப்பில் சடுதியில் நினைவை அடைந்தவள் முகத்தில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு,
“ஹ்ம்ம் வந்துட்டாருத்தை” என்றவளது குரல் அவளையும் மீறி தழுதழுத்துவிட,
அவன் தன்னை நெருங்கிவிட்டதை உண்ர்ந்தவள்,
“நான் போய் அவருக்கு டீ போட்றேன்” என்று விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
குரு உள்ளே நுழைந்ததும் கோதை,
“ஏன்பா குரு இவ்வளோ நேரம். நாங்க போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வந்தது. ரொம்ப பயந்துட்டேன்” என்று அவனது கையை பிடித்து கொள்ள,
“ம்மா எதுக்கு பயம். நான் என்ன குழந்தையா?” என்று குரு மொழிய,
“எவ்ளோ வயசானாலும் பிள்ளைங்க பெத்தவங்களுக்கு குழந்தை தான்” என்று மொழிந்தவர்,
“மழை வேற அடிச்சு ஊத்துது. போததுக்கு கம்பெனி இருக்க இடத்துக்கு பக்கத்துல நிலச்சரிவுன்னு வேற நியூஸ்ல சொல்ல அவ்ளோ பயந்துட்டேன். நீ வர இன்னும் ஐஞ்சு நிமிஷம் லேட்டாகியிருந்தா கூட தாத்தாவ உன்னை தேடி அனுப்பியிருப்பேன்” என்று பயத்துடன் கூற,
அவரது அச்சத்திற்கு காரணம் அறிந்தவன்,
“ம்மா நான் வரும் போது பாதை நல்லா தான் இருந்துச்சு. வர்ற வழியில ஒரு மரம் உடைஞ்சு விழுந்திருச்சு. அதான் வேற வழியில வந்தேன். மழை ரொம்ப இருந்ததால ட்ரைவ் பண்ண கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று விளக்கம் தந்தான்.
“போனாவது போட்டு சொல்லியிருக்கலாம்ல பா” என்று பிறைசூடன் கூற,
“இல்லை தாத்தா நான் கிளம்பும் போதே மொபைல் லோ பேட்டரில தான் இருந்துச்சு. கொஞ்ச நேரத்தில சுவிட்ச் ஆஃப் ஆகிட்டு” என்று மொழிந்தான்.
“சரிப்பா எல்லாம் சரிதான். இனி இது மாதிரி ஆகாம பாத்துக்கோ. நான் கூட பரவாயில்லை. மகிழ் தான் ரொம்ப ரொம்ப பயந்துட்டா” என்று மொழிய,
குருவின் விழிகள் அவளை தேடியது.
“உனக்கு தான் காஃபி போட போயிருக்கா. நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வாப்பா” என்று கோதை கூற,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் எழுந்து அறைக்குள் சென்றான்.
இங்கு சமையலறைக்குள் நுழைந்த மகிழுக்கு அழுகை குறையவில்லை. துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது.
ஏனென்று தெரியவில்லை அவனது உருவத்தை உள்ளம் உண்ர்ந்த நொடி தான் போன உயிர் திரும்ப வந்தது.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தாளோ பின்னர் நடப்புக்கு
வந்தவள் முகத்தை நன்றாக கழுவிவிட்டு பாலை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சினாள்.
தேநீரை தயாரித்தவள் குவளையில் எடுத்து வர குரு உடை மாற்றி வந்து தாயின் அருகில் அமர்ந்து பேசி கொண்டு இருத்தான்.
மற்றொரு புறம் பிறை சூடன் அமர்ந்திருக்க அவனது மடியில் இளையவர்கள் அமர்ந்திருந்தனர்.
என்னவோ மீண்டும் அவனை பார்த்த கணம் கண்ணீர் பெருக முயன்று தன்னை கட்டுபடுத்தியவள் மூவருக்கும் தேநீரை கொடுத்தாள்.
தேநீரை எடுத்து கொண்ட குரு அவளது முகத்தை தான் கண்டான். அவள் முகத்தை கழுவி இருந்தாலும் ஆங்காங்கே சிவப்பாகி என்னவோ போல தெரிந்தது.
தேநீரை கொடுத்தவள் அமைதியாக அமர்ந்து கொள்ள பெரியவர்களுடன் பேசியவன் இரவு உணவை உண்ண சென்றான்.
மகிழ் தான் அவனுக்கு பரிமாறினாள். முகத்தில் அத்தனை அமைதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
உண்டுவிட்டு அறைக்கு சென்ற பிறகும் அமைதியாக இளையவர்களை உறங்க வைத்துவிட்டு தானும் படுக்க விழைய,
“மகிழினி…” என்ற குருவின் குரல் அவளை தடுத்தது.
திரும்பி பார்த்தாள். கட்டிலில் சாய்ந்தவாக்கில் கையில் கைப்பேசியுடன் அமர்ந்தவனது பார்வை இவளிடம் தான்.
“ஹான்…” என்ற வார்த்தை தான் வந்தது. அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
“நீ ரொம்ப பயந்துட்டேன்னு அம்மா சொன்னாங்க” என்றவனது பார்வை அவளை ஆராய்வதாய் அவளுக்கு தோன்ற உள்ளுக்குள் ஒன்று நடுங்கியது. முதல் முறையாக மனதிற்குள் தடுமாற்றம் வந்தது.
“அது நீங்க வர லேட்டாகிடுச்சு ப்ளஸ் மொபைல் சுவிட்ச் ஆப் அப்புறம் டிவில நிலச்சரிவுனு நியூஸ் வந்ததும் கொஞ்சம் பயந்துட்டேன். என்னை விட அத்தை தான் ரொம்ப பயந்துட்டாங்க” என்று மனதை நிலைப்படுத்தி பதிலை கூற,
“ஓ…” என்றவனது பதிலுக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் இவள் பார்த்தாள்.
இவள் விழிப்பதை கண்டவன் ஏதும் கூறாது அலைபேசியினுள் புகுந்துவிட மகிழ் விட்டால் போதுமென போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாள்.
ஆனால் உறக்கம் வரவில்லை. விழிகளை மூடினாள் நடந்த நிகழ்வு தான் நினைவிற்கு வந்தது.
அதோ அவனை கண்டதும் ஆசுவாசம் அடைந்த மனதினை கொண்டு தன்னுடைய நிலையை உணர்ந்துவிட்டாள்.
உணர்ந்த விடயம் அத்தனை உவப்பானாக இல்லை. ஆம் அவன் மீது தனக்கு இருப்பது நேசம் என்று புரிந்து கொண்டாள்.
இத்தனை நாளாக அவன் செய்த உதவிக்கு குருவை கடவுளாக பாவித்தவளுக்கு தனக்கு அவன் மீது உள்ளது பக்தி இல்லை நேசம் என்று தெரிந்து கொண்டாள்.