ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 11(2)

அவன் இந்தளவிற்குத் தனது அலுவலகம் சார்ந்த வேலைகளில் மிகவும் முனைப்புடன் இருப்பதால் தானே இவ்வளவு பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்கி இதை இப்பொழுது வரைக்கும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறான் என்பதாலேயே அவர்களுக்குப் புகழேந்தியின் பதில் வியப்பாக இருக்கவில்லை! 

“இதுக்கப்புறம் இந்த டிசைன்ஸ்ஸை வச்சுத் துணிகளைத் தைக்கிற வேலைகளை ஆரம்பிச்சிடலாம்”என்று வெண்பா மற்றும் வினோதினியிடம் அறிவித்தான். 

“ம்ஹ்ம். ஆமாம்டா! அந்தப் பொண்ணையே இந்த வேலையையும் செய்யச் சொல்லிடலாமா?”என்றத் தமக்கையிடம், 

“அந்தப் பொறுப்பை இவங்களுக்குக் கொடுக்கிறதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகனும்க்கா. இந்த விதிமுறை உங்களுக்கே தெரியும்ல?”என்றிருந்தான் புகழேந்தி. 

“ஆமாம்டா. ஆனாலும் எனக்கு இந்த யோசனை வந்துச்சு. நான் இதை உங்கிட்ட பகிர்ந்துக்கிட்டேன்! அவ்வளவு தான். கடைசி முடிவு உன்னோடது தான்”என்றுரைத்து விட்டாள் வெண்பா. 

உடனே,”நீங்கப் போய் மிஸ். மதுபாலா கிட்டே அவங்க வரைஞ்சிக் கொடுத்த வரைபடங்களை எல்லாம் எம். டி அப்ரூவ் செஞ்சிட்டார்ன்னும், ஐடி கார்ட் வாங்கும் போது இதைப் பத்தி இன்னும் வெளிப்படையானக் கருத்துக்களை அவரே நேரடியாகச் சொல்வாராம்ன்னு அவங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுங்க!”என வினோதினியிடம் சொல்லி அனுப்பி வைத்தான் புகழேந்தி. 

 அவன் கூறியதை அப்படியே வார்த்தை மாறாமல் மதுபாலாவிடம் ஒப்புவித்து விட்டிருந்தார் அவளது வழிகாட்டிப் பெண். 

அதைக் கேட்டதுமே தனது உச்சிக் குளிர்ந்து போனதைப் போல் உணர்ந்தவளோ, 

“ரொம்பத் தாங்க்ஸ் மேம்!”என்று தனக்கு நன்றிக் கூறியவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, 

“இருக்கட்டும்மா. இப்போ பிரேக் டைம். சாயந்தரம் ஆஃபீஸ் முடியிறப்போ நீங்க வந்து என்னைப் பார்த்தால் போதும்”என்றுரைத்து விட்டு அவளை அனுப்பி வைத்தாள் வினோதினி. 

உடனே தன்னுடைய செல்பேசி மற்றும் பணப்பையை எடுத்துக் கொண்டுச் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று, 

அங்கு மேசையில் அமர்ந்து கொண்டுச் செல்பேசியில் இருந்து, தோழிக்கு,‘ஹாய்’என்று குறுஞ்செய்தி அனுப்பி வைக்கவும், 

உடனே அதைப் பார்த்து விட்டு,’ஹாய்டி’எனத் தானும் பதில் அனுப்பினாள் பிரேமா.

உடனே,’கேன்டீனுக்கு வாடீ!’என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு அவளது வருகைக்காக காத்திருந்தாள் மதுபாலா. 

சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்து அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு, 

“என்னடி ஆஃபீஸில் இருக்கிறப்போ நாம ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கக் கூடாதுன்னு எல்லாம் கண்டிஷன் போட்ட! இப்போ என்னடான்னா நீயே எனக்கு மெசேஜ் செஞ்சி வரச் சொல்லி இருக்கிற! என்ன விஷயம்?”என அவளிடம் படபடத்தாள் பிரேமா. 

“இப்போ நான் ரொம்பச் சந்தோஷமாக இருக்கேன்டி! அதனால் தான் உனக்கு ட்ரீட் தரலாம்ன்னு நினைச்சு இங்கே வரச் சொன்னேன்”என்று அவளுக்குப் பதிலளித்தாள் மதுபாலா. 

“அப்படியா? உன் சந்தோஷத்துக்கான காரணத்தை முதல்ல சொல்லுடி”என்று அறிவுறுத்த,

“நீ முதல்ல உனக்குப் பிடிச்சதைச் சொல்லு. நான் போய் வாங்கிட்டு வர்றேன். அதுக்கப்புறம் விஷயத்தைச் சொல்றேன். ஏன்னா, பேசி முடிச்சிட்டுச் சாப்பிட நேரம் இருக்குமான்னுத் தெரியலை!”என்றவளின் கூற்றைத் தானும் ஆமோதித்துக் கொண்டுத் தனக்குப் பிடித்தச் சிற்றுண்டிகளை அவளிடம் தெரிவிக்கவும், 

உடனே சென்று அவளுக்கும், தனக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வந்து மேசையில் அடுக்கினாள் மதுபாலா. 

அதைக் கொறித்துக் கொண்டே,”என்னன்னுச் சொல்லுடி! சர்ப்ரைஸ் தாங்கலை”என அவளை ஊக்கினாள் பிரேமா. 

“இன்னைக்கு எனக்கு டிசைன்ஸ் வரைஞ்சிக் கொடுக்கிற வேலையைத் தந்தாங்க டி!”என்று ஆரம்பித்து மொத்தத்தையும் அவளிடம் கூறி முடித்து விட, 

அதைக் கேட்டப் பிரேமாவிற்குத் தனது தோழியை எண்ணிப் பெருமைப் பொங்கியது எனலாம்!

“வாவ்! சூப்பர் மது! கங்கிராட்ஸ் டி! இது வெறும் ஆரம்பம் தான்! நீ இன்னும் இங்கே நிறையப் பாராட்டுக்களைப் பெறனும்!”என்றத் தோழியிடம், 

“தாங்க்ஸ்டி! ஆனாலும் எம். டி நேரடியாக கூப்பிட்டுப் பாராட்டுறதுக்கு இன்னும் நாள் இருக்கே! அதான் கொஞ்சம் சுணக்கமாக இருக்கு”என்று சோகமாகப் பகிர்ந்து கொண்டாள் மதுபாலா. 

“அப்படி நினைக்காதே எருமை! எதுவும் தாமதமாகுதுன்னா அது தரமாக நடக்கப் போகுதுன்னு அர்த்தம்! அப்படி யோசிச்சு ஃப்ரீயாக இரு!”என அவளுக்கு அறிவுரை வழங்கினாள் பிரேமா. 

“ஓகே டி!”என்று கூறிப் புன்னகைத்து விடவும், 

அதற்குப் பிறகுச் சிற்றுண்டிகளை வேகமாகச் ருசித்து முடித்து விட்டுத் தத்தமது வேலைகளைப் பார்க்கச் சென்றார்கள் அவர்கள் இருவரும். 

அதேபோல் மாலையில் தனது வழிகாட்டிப் பெண்ணான வினோதினியிடம் அன்றைய வேலைகளை முடித்து விட்டதற்கானச் சான்றுகளைக் காண்பித்து விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாள் மதுபாலா.

அவளுக்குச் சிறிது இடைவெளி விட்டுத் தனது இருசக்கர வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினாள் பிரேமா.

அவளைக் கண்டதுமே,”ஒரு தடவை வீட்டுக்கு நடந்து போயிட்டேன்னு இப்படி குறுக்கே வண்டியைக் கொண்டு வந்து நிப்பாட்டிப் பயமுறுத்தாதேடி குரங்கு!”எனச் செல்லமாக கடிந்து கொண்டு வண்டியில் ஏறிக் கொள்ளவும், 

“அப்படியெல்லாம் இந்த விஷயத்தில் உன்னை நம்ப முடியாதுடி! நீ இன்னைக்கும் நடந்தே போயிட்டு ஒரு குஷியில் மறந்து போய் நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன்னுக் கூசாமல் பொய் சொல்லுவ! அதனால் தான் உனக்கு முன்னாடியே வெளியே வந்து வண்டியை எடுத்துட்டு உனக்காக வெயிட் செஞ்சேன்!”என்றவளிடம், 

“ஆமாம்! நீங்க ரொம்ப முன்னெச்சரிக்கையாகத் தான் இருக்கீங்க! ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு டி பக்கி!”என்று அறிவுறுத்தினாள் மதுபாலா. 

அந்தச் சிறு தூரம் மற்றும் சிறு நேரப் பயணத்தை ரசித்துப், பேசிச் சிரித்தபடியே மேற்கொண்டனர் அவ்விருவரும். 

இதே நேரத்தில்,”எல்லா பணியாளர்களும் கிளம்பிட்டாங்க அக்கா! நாமளும் புறப்படலாமா?”என்று தன் தமக்கையிடம் வினவினான் புகழேந்தி. 

“ஹாங்! புறப்படலாம்டா”என்றதுமே, 

அவர்கள் இருவரும் காரில் பயணித்து வீட்டை அடைந்து விட்டனர். 

அதைத் தன் கணவனுக்கு அழைத்து தகவலாகத் தெரிவித்து விட்டாள் வெண்பா. 

“உன் வீட்டுக்கு வந்தாச்சுடி! நான் இப்படியே கிளம்புறேன்”என்றப் பிரேமாவின் குரலைக் கேட்டதுமே வாசலிற்கு விரைந்து வந்து, 

“அக்கா! ரெண்டு பேரும் வந்துட்டீங்களா?”என்றவளோ,

“பிரேமாக்கா! எப்படி இருக்கீங்க?”என அவளிடம் விசாரித்தாள் சுதா. 

அதற்கு அவளோ,”நான் நல்லா இருக்கேன்டா! நீ எப்படி இருக்கே?”என்றாள். 

“நானும் நல்லா இருக்கேன்!”என்க, 

“சரி. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்”என்றப் பிரேமாவிடம், 

“அதெல்லாம் எப்படி உடனே உங்களைக் கிளம்ப விட்ருவோம்? நீங்க உள்ளே வந்து ஒரு கிளாஸ் டீ குடிச்சிட்டுத் தான் போகனும்”என அவளை வீட்டிற்குள் அழைத்து வந்து, 

தங்கள் மூவருக்குமானத் தேநீரைத் தயாரித்துக் கொண்டு வந்து அதை மற்ற இருவருக்கும் கொடுத்து விட்டுத் தானும் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டாள் சுதா. 

“உங்க அக்கா உனக்காக ஒரு குட் நியூஸ் வச்சிருக்கிறா”என்று அவளுக்கு அறிவிப்பைக் கொடுத்தாள் பிரேமா.

  • தொடரும்
error: Content is protected !!
Scroll to Top