தெரிந்த கணம் இதயம் தாளம் தப்பியது. குரு பிரசாத் மீது தனக்கு தேசமா…? அவர் எங்கே தான் எங்கே.
அவர் கோபுரத்தில் வாழ்பவர் தான் குடிசையில் இருப்பவள். அவருடன் ஒப்பிடுகையில் தனக்கு என்ன தகுதி இருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலான உண்மை ஒன்று அவனுக்கு ஹனிகாவின் மீது நேசம் இருந்தது. ஹனிகாவை பார்க்கும் நேரம் எல்லாம் குருவின் விழிகளில் வழிந்திடும் நேசத்தை கண்டிருக்கிறாளே…
சில முறை அவளே இருவரும் ஒருவருக்கொருவர் பிறந்தது போல அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று தானே நினைத்தது உண்டு.
குரு பிரசாத் ஹனிகாவிற்கு சொந்தமானவர். அடுத்தவருடைய உடைமைக்கு ஆசை படுவது மிகப்பெரிய தவறு. அதனை தான் செய்ய கூடாது என மனதில் எண்ணம் பிறக்க விழிகளின் ஓரம் கசிந்தது.
தகுதிக்கு மீறி ஆசைப்படாதே. அவர் உனக்கு கடவுள் அவரை நீ ஆராதிக்கலாம் தவறில்லை ஆசைப்பட கூடாது.
அவர் உனக்கு செய்த உதவிகளை நினைத்து பார்த்திருந்தால் நீ இத்தகைய எண்ணம் கொண்டிருப்பாயா…?
உன்னுடைய எண்ணம் தெரிந்தால் அவர் உன்னை பற்றி எத்தனை கீழ்த்தரமாக நினைப்பார். வேறொருவருக்கு சொந்தமாக போகிறவர் மேல் ஆசை வைப்பது எவ்வளவு பெரிய குற்றம்.
அதுவும் இந்த ஆசைப்படுவதற்கு
எல்லாம் ஒரு தகுதி வேண்டும் அது உன்னிடம் எந்த காலத்திலும் இருக்காது. ஹனிகா எங்கே நீ எங்கே.
அவரோடு ஒப்புமை படுத்தி கொள்ளும் அளவிற்கு கூட உனக்கு எந்த வித தகுதியும் இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலே உதவி செய்தவருக்கு உபத்திரவம் செய்வது மகா பாவம். என்னால் உங்களுடைய குடும்பத்தில் எந்தவித பிரச்சனையும் வராது என்று வாக்கு கொடுத்திருக்கிறாய்.
அவருடைய வாக்கிற்காக குரு எவ்வளவு பெரிய உதவியை உனக்கு செய்திருக்கிறார். இதை எல்லாம் மறந்து அவருக்கு துரோகம் இழைக்க போகிறாயா…? என்று மனம் கேட்டது.
‘இல்லை என்றைக்கும் என்னால் அவர் வாழ்வில் எந்தவித சிக்கலும் வராது’ என்று தனக்குத்தானே கூறி கொண்டாள்.
நீ நினைப்பது சரி தான் அவர் உனக்கு கடவுள்.
கடவுளை வணங்குவதற்கு மட்டும் தான் பக்தைக்கு உரிமை உள்ளது அவரை சொந்தம் கொண்டாட அல்ல என்று எண்ணியவள் அடுத்த கணமே தனக்குள் முளைத்த நேசம் தன்னுடனே போகட்டும் என்று முடிவு செய்தாள்.
அரும்பிய வேகத்திலே கருகிய தனது நேச மலரை நினைக்கையில் மகிக்கு அழுகை பெருகியது.
ஒவ்வொரு செயலிலும் நேசத்தை பொழியும் தாய் தந்தையரை காண்கையில் தனக்கும் இப்படி ஒரு நேசம் கிடைத்தால் வாழ்க்கை அழகாக இருக்குமே என்று பல முறை நினைத்தது உண்டு.
ஆனால் இப்போது முளைத்த நேசத்தை முளையிலே கிள்ளிவிட நேரிடும் என்று மனது ஒரு போதும் எண்ணியதில்லை.
விழிகளில் சூடான நீர் சரசரவென இறங்க அதனை துடைத்த படியே இருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.
அடுத்தடுத்து நாட்கள் நகர அவள் நினைத்தது போல குருவை அவனது நினைப்பை தனது நேசத்தை அத்தனை சுலபத்தில் விட்டுவிட முடியாது என்று தோன்றியது.
விழியும் மனதும் எந்நேரமும் அவனை தான் தேடியது. தன்னுடைய நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே உழன்றது. மனதும் ஏனோ தனிமையை அதிமாக தேடியது.
எதுவும் பிடிக்கவில்லை யாரிடமும் பேச பிடிக்கவில்லை. என்னவோ வாழ்க்கையே வெறுத்துவிட்டது.
இப்படியே போனால் தான் என்னாவது என்று அஞ்சியவள் தனிமையில் இருக்கும் நேரத்தை வெகுவாக குறைத்து கொண்டாள்.
தன்னை எந்நேரமும் எதாவது ஒரு வேலையில் மூழ்கடித்து கொண்டாள். காலையில் எழுந்ததும் சமைப்பது பிள்ளைகளை கவனிப்பது என்று எதாவது ஒன்றை செய்து கொண்டே இருந்தாள்.
அவனோடு இருக்கும் வரைக்குமாவது தனக்கான நினைவுகளை சேர்த்து வைத்து கொள்வோம் இதன் பிறகு தன் வாழ்வில் யாருமில்லை.
இந்த நினைவுகளுடனே மீத வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் என்று எண்ணி கொண்டாள்.
முன்பே கோதையையும் பிறை சூடனையும் நன்றாக கவனித்து கொண்டவளுக்கு இப்போது சொல்லவா வேண்டும்.
கொண்டவனின் குடும்பத்தினரை தன்னுடன் குடும்பத்தினராக நினைத்து மிகவும் நன்றாக பார்த்து கொண்டாள். அதனோடு சேர்த்து குருவையும் கவனித்தவளுக்கு அவனுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் கருத்தில் பதிய அவனுக்கு பிடித்த உணவுகளை பார்த்து பார்த்து செய்தாள்.
இத்தனையும் மிகவும் கவனமாக தான் செய்தாள். எந்த புள்ளியிலும் தன்னுடைய நேசம் குருவிற்கு தெரிந்துவிட கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருந்தாள்.
நினைவுகளை தூர விரட்டியவள் பிள்ளைகளுடன் தன் பொழுதை கழித்துவிட்டு மாலை வந்ததும் எளிமையான ஒரு புடவையில் தயாராகி இருந்தாள்.
குழந்தைகளையும் தயார் செய்து கொண்டிருந்தாள். குரு தான் மாலை விரைவாக வந்து விடுவதாக பிள்ளைகளிடம் கூறி இருந்தானே.
வருவதாக சொன்னால் நிச்சயமாக வந்துவிடுவான் என்று தெரியும் ஆதலால் தான் தயாராகி கொண்டு இருந்தனர்.
இருவருக்கும் உடை மாற்றிய பிறகு வெளியே அழைப்பு மணி ஓசை வர எழுந்து வெளியே சென்றாள்.
வாசற்கதவில் காவலாளி இருந்தாலும் வீட்டில் தான் மட்டும் பிள்ளைகளுடன் இருந்ததால் கதவை பூட்டி இருந்தாள்.
‘அதற்குள் வந்துவிட்டாரா?’ என்று எண்ணியபடி வந்தவள் கதவை திறக்க வாசலில் குரு பிரசாத் நின்று இருந்தான்.
“சீக்கிரமாவே வந்துட்டிங்களா சார். நான் இன்னும் பசங்களை ரெடி பண்ணவே இல்லை” என்று பதில் மொழிந்தபடி திரும்பி நடக்க,
“மகிழினி…” என்றவனது அழுத்தமான குரல் அவளை நிறுத்தியது.
அப்போது தான் அவனது குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவள் திரும்பி பார்க்க,
“எத்தனை நாளா நீயும் உன் தம்பியும் இந்த பிளான போட்டிங்க?” என்று அழுத்தமாக வினவியவனது முகம் செந்தணலாக இருக்க,
“என்ன… என்ன பிளான்?” என்றவளுக்கு அவனது முகத்தை கண்டதும் உள்ளுக்குள் பயம் அப்பியது.
“டோன்ட் ஆக்ட் லைக் அ இன்னசென்ட் இடியட்…” என்று ஏகமாய் கத்தியவனது குரலில் நடுங்கி தான் போனாள்.
“நிஜமா எனக்கு என்ன சொல்றிங்கன்னு புரியலை” என்றவளது விழிகளில் நீரீப்படலம்.
“ச்சை அழுது தொலைக்காத… இப்படி அழுதழுது தான் நல்லவ மாதிரி ஏமாத்தி இருக்க என்னை. நானும் முட்டாள் மாதிரி ஏமாந்து இருக்கேன்…”
“…”
“இப்படி ஒரு பணக்கார வாழ்க்கையில சொகுசா வாழ்ந்ததும் இங்கயே செட்டில் ஆகிடலாம்னு ஆசை வந்திடுச்சா…? என்னோட மிஸ்டேக். வாசலோட நிறுத்த வேண்டிய உன்னை என் பெட்ரும் வரை அலோவ் பண்ணது என் மிஸ்டேக் தான் ஹவ் சீப் யூ ஆர். பணத்துக்காக என்ன வேணா செய்விங்களா…” என்றவன் இறுதியில்,
“சீ…” என்று அருவருப்பாய் முகம் சுழிக்க,
இத்தனை நேரம் அவனது வார்த்தைகளில் அதிர்ந்து ஆயிரம் பாகங்களாய் உடைந்துவிட்டவளுக்கு அவனுடைய இறுதி வார்த்தையான,
‘பணத்துக்காக என்ன வேணா செய்விங்களா?’ என்பதும்,
‘சீ…’ என்ற முகசுழிப்பும் தன் மானத்தே தீண்ட,
“போதும் நிறுத்துங்க சார். நான் அப்படி என்ன செஞ்சுட்டேன்னு இப்படி பேசுறிங்க” என்று அழுகையில் துடிக்கும் உதடுகளுடன் கையை அவன் முன் நீட்டியிருந்தாள்.
“செய்றதை எல்லாம் பிளான் பண்ணி செஞ்சிட்டு இப்போ வரைக்கும் எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சிட்டு இருக்க. இத்தனை நாளும் இப்படி தான் ஏமாத்தி இருக்க”
“…”
“உன்னை உன்னை என் லைஃப்ல அலோவ் பண்ண என்ன சொல்லணும். அதான் உன் தம்பியை டாக்டருக்கு படிக்க வச்சு உன்னோட மகனையும் காப்பாத்தி கொடுத்துட்டேனே. சும்மா இல்லை அறுபது லட்சம் கொடுத்து அவன் உயிரை காப்பாத்தி இருக்கேன். அந்த நன்றிக்கடன் கொஞ்சமாவது இருந்தா இப்படி பண்ணி இருப்பிங்களா…?”
“…”
“என் ஆபிஸ்ல என்கிட்ட சம்பளம் வாங்குற உன்னை என் வீட்டுக்குள்ள விட்டது எவ்ளோ பெரிய தப்புனு இப்போ தான் புரிஞ்சது. அக்காவும் தம்பியும் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்ளோ க்ளவரா பிளான் பண்ணி இருக்கிங்க. உன்னை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா…? சீ என் கண் முன்னாடி நிக்காத போ இங்க இருந்து” என்று உச்சஸ்தானியில் கத்த அவனது வார்த்தையில் எப்போதோ மறித்து சிதைந்திருந்தவள் பயத்தில் நடுங்கி விழப்போனவள் அப்படியே கால்களை மடித்து அமர்ந்து இரு கைகளையும் கொண்டு காதை மூடி,
“போதும் ப்ளீஸ் ப்ளீஸ் இதுக்கு மேல என்னால கேட்க முடியாது” என்று அழுகையில் கரகரத்தவள்,
“தயவு செய்து என்ன நடந்தச்சுனு சொல்லுங்க. என் பிள்ளைங்க மேல சத்தியமா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது” என்று கேவலை அடக்கியபடி கூறினாள்.
தன்னுடைய அலைபேசியை எடுத்து உயிர்ப்பித்தவன் ஒரு காணொளியை எடுத்து அவளிடம் காண்பிக்க,
அதனை நடுங்கும் கரங்களால் வாங்கி பார்த்தவள் ஏகமாய் அதிர்ந்துவிட்டாள்…