காதல் 21.3

“ஆமத்தை நியூஸ்ல கூட சொல்லலையே” என்று இருவரும் பேசியபடி வெளியே வந்தனர்.

கோதை, “நியூஸ் வச்சு பார்ப்போம்* என்று கூறி செய்தி தொலைக்காட்சியை வைக்க அதில் அன்று இரவு முழுவதும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.

“நைட் முழுக்க மழையா? இந்த மழைக்கே தண்ணீ தேங்கிடும்” என்று மொழிந்தவர்,

“குருவுக்கு போனை போட்டு சீக்கிரமா வர சொல்லும்மா” என்றார்.

சம்மதமாக தலையசைத்தவள் குருவிற்கு அழைப்பு விடுக்க அழைப்பு முழுவதும் சென்று துண்டாகியது.

“அத்தை அவர் காலை அட்டென்ட் பண்ணலை. மீட்டிங்ல இருப்பார்னு நினைக்கிறேன்” என்று மகிழ் மொழிய,

“திரும்பவும் போடும்மா. என்ன மீட்டிங்கா இருந்தா என்ன. பேக்டரில இருந்து வர்ற வழி நல்லாவா இருக்கு. மழை நேரத்தில சீக்கிரம் கிளம்புறது தான் நல்லது* என்று விட்டார்.

மகிழ் மீண்டும் அழைக்க, “வில் கால் யூ லேட்டர்” (நான் பிறகு அழைக்கிறேன்) என்று செய்தி வந்தது.

“அத்தை அவர் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்றேன்னு மெசேஜ் போட்ருக்காரு. மீட்டிங்லதான் இருக்காரு போல” என்றிட,

“சரிம்மா போன் போட்டா உடனே கிளம்ப சொல்லு. இல்லைன்னா என்கிட்ட கொடு நான் பேசிக்கிறேன்” என்றார்.

பிறகு நேரம் செல்ல குரு அழைத்தான்.

மகிழ் அழைப்பை ஏற்றதும்,

“சொல்லு மகிழினி” என்ற அழுத்தமான குரல் செவிக்குள் நுழைய,

“கிளம்பிட்டிங்களா? மழை வருதுனு அத்தை உங்களை சீக்கிரமா கிளம்ப சொன்னாங்க” என்று மகி மொழிய,

“ஹ்ம்ம். மீட்டிங் ஓவர். இதோ கிளம்ப போறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.

பிறகு அவர்கள் இரவுணவை முடித்துவிட்டு குருவிற்கு காத்திருக்க அவன் வந்த பாடில்லை.

சரியாக அதே நேரத்தில் குருவின் அலுவலகம் உள்ள இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதுள்ளது என்று செய்தி தொலைக்காட்சியில் ஒலிக்க கூடத்தில் அமர்ந்திருந்த மூவருக்கும் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

மகிழ் உடனே அலைபேசியை எடுத்து குருவிற்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட அவளுக்கு உள்ளே இதயம் மத்தளம் வாசித்தது.

“அ..‌. அத்தை அது அவர் போன் சுவிட்ச் ஆப்னு வருது” என்று கூறியவளது குரலே மாறி இருந்தது.

கோதை, “சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும். இதுக்கு போய் பயப்பட்ற” என்று கோதை மருமகளுக்கு தன் பயத்தை மறைத்து ஆறுதல் கூற,

பிறை சூடன், “நான் வாட்ச்மேனுக்கு கால் பண்ணி அவன் கிளம்பிட்டானான்னு கேட்குறேன்” என்று அழைத்து விசாரிக்க அவன் சென்று அரை மணி நேரம் ஆகிவிட்டது என்று அவர் கூறினார்.

“அவன் கிளம்பி அரை மணி நேரம் ஆச்சாம். பக்கத்துல வந்திருப்பாம் பயப்படாதம்மா” என்று கூற,

மகிழ் சம்மதமாக தலை அசைத்தாலும் உள்ளுக்குள் ஒன்று பயத்தில் இறுகி கொண்டு இருந்ததை அவள் உணர்ந்தாள்.

நேரம் மீண்டும் சென்றது அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது.
ஆனால் குரு வீட்டிற்கு வரவில்லை‌.

நேரம் கடக்க கடக்க மகிழுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது.

“அத்தை எனக்கு பயமா இருக்கு. நான் வேணா காரை எடுத்துட்டு போய் பாக்கவா…?” என்று கலங்கிய விழிகளுடன் வினவ,

“வேணாம்மா. அப்புறம் உன்னையும் தேட வேண்டியது இருக்கும். என் புள்ளைக்கு எதுவும் இருக்காது” என்று மறுத்தவருக்கும் உள்ளே பயம் பரவியது.

இங்கு மகிக்கு தான் ஒவ்வொரு மணி துளியும் ஒரு யுகமாக கழிய இதயத்தின் ஓரம் மெலிதாய் வலி விரவ துவங்கியது.

“அவருக்கு எதுவும் இருக்காது” என்று தனக்கு தானே உரு போட்டு கொண்டவளுக்கு மெலிதான நடுக்கம் கூட ஏற்ப்பட்டது.

பெற்றோரிடம் நுறாவது முறையாக வேண்டுகோளை வைத்தாள். பயத்தில் உள்ளங்கை எல்லாம் வியர்க்க அருகில் இருந்த கோதையை கெட்டியாக பிடித்து கொண்டாள்.

மகியின் பயம் அதிகரிக்க பிறைசூடன்,

“நான் ட்ரைவரோட போய் பாத்திட்டு வர்றேன்” என்று கிளம்ப தயாரான சமயம் வாசலில் மகிழுந்தின் ஒலிப்பெருக்கி சத்தம் கேட்டது.

மகிழ் உயிரை பிடித்து கொண்டு ஓடி சென்று பார்க்க குருவின் மகிழுந்து தான் உள்ளே நுழைந்தது.

வாகனத்தை நிறுத்துவிட்டு அவன் இறங்கிய சமயம் இவளது விழிகளில் நீர் கரகரவென இறங்கியது அப்படியே அசையாது நின்றுவிட்டாள்.

தலைவன் பால் கொண்டுள்ள நேசத்தை இப்போதாவது பேதை உணர்வாளா…?

error: Content is protected !!
Scroll to Top