தன்னையறியாது கூட தன்னால் குருவின் குடும்பத்திலோ குருவிற்கோ எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிட கூடாதுனு என்பதில் அத்தனை உறுதி இருந்தது.
அறுபது லட்சம் கிட்டத்தட்ட அரை கோடியையும் தாண்டி. இவ்வளவு பணத்தை தான் எடுத்துக் கொண்ட பொறுப்பிற்காக மட்டும் யார் தருவார். ஆனால் குரு தந்தான். இருப்பவர்களுக்கு எல்லாம் கொடுக்கும் மணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை குருவிற்கு இருந்தது.
அதில் இருந்தே குரு கொடுத்த வாக்கை நிச்சயமாக காப்பாற்றி தீருவான் என்று புரிந்தது.
தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தன்னை திருமணம் செய்தது சரி தான் அவனுடைய குணம் இது என்று தெரிந்தது.
தன்னுடைய உயிரை காப்பாற்றி தன் தம்பிக்கு படிப்பை கொடுத்து தன்னுடைய பிள்ளையின் உயிரை மீட்டு கொடுத்து என்று இத்தனை உதவிகளையும் செய்தவனுக்கு பிரதிபலனாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தான் தோன்றியது.
இத்தகைய உதவி செய்தவன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று தினமும் பெற்றோரிடம் வேண்டினாள்.
அவன் ஆசைப்பட்டது போல ஹனிகாவுடம் சிறப்பாக வாழ வேண்டும். ஒரு வேளை தங்களது ஒப்பந்ததம் முடிந்த பிறகு குருவின் திருமணத்தில் எதாவது தடை வந்தால் இரு வீட்டாரிடமும் பேசி நன்முறையில் தானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.
முடிந்தால் தம்பி மருத்துவம் முடித்து நல்ல வேளையில் அமர்ந்து வாழ்வில் ஒரு நிலைக்கு வந்த பிறகு சிறிது சிறிதாக சேமித்து கவினது மருத்துவத்திற்கு ஆன பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும்.
தான் வாழ்நாள் முடிவதற்குள் எப்படியாவது அவனிடம் பட்ட கடனை அடைத்துவிட வேண்டும் என்று அடிக்கடி எண்ணி கொள்வாள்.
“நான் டீ போட போறேன். உனக்கும் போடவாம்மா…” என்று வினவிய கோதையிடம்,
“இல்லை எனக்கு வேண்டாம்த்தை. நீங்க உட்காருங்க நான் போய் டீ போட்டு எடுத்திட்டு வர்றேன்” என்று அவரை அமர வைத்துவிட்டு எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.
தன்னை ஒரு வேலையும் செய்ய விடாது தானே அனைத்தையும் இழுத்து போட்டு செய்யும் மருமகளை மென்னகையுடன் கண்டார் கோதை.
வழக்கம் போல மனதிற்குள் தான் தேடி தேடி அலைந்திருந்தாலும் இப்படி ஒரு நல்ல பெண்ணை மகனுக்கு மணமுடித்திருக்க இயலாது என்று தோன்றியது.
மகனின் தேர்வு மிகவும் சரியானது அவன் என்றும் எதிலும் தவறியதில்லை தவறவும் மாட்டான்.
வேலை செய்வதற்காக அல்ல அவளது குணம் அமைதி என்று எல்லாம் சேர்ந்து தான் இப்படி என்ன வைத்தது.
அதுவும் சில வாரங்களுக்கு முன்பு கோதைக்கு நான்கு நாட்கள் காய்ச்சல் வந்து அவதிபட மகிழ் தான் உடனிருந்து அனைத்தையும் பார்த்து கொண்டாள்.
ஏன் அம்முவே நாளை இப்படி பார்ப்பாளா என்று சந்தேகம் வரும் அளவிற்கு நன்றாக பார்த்து கொண்டாள். வேளா வேளைக்கு ரத்த அழுத்த மாத்திரையை சரியாக எடுத்து கொடுப்பாள்.
பிறை சூடனையும் தன்னால் முடிந்த அளவு நன்றாக கவனித்து கொண்டாள்.
காரணம் மகிழ் மட்டும் அறிந்ததே. குரு தனக்கு செய்த உதவிக்கு தன்னால் முடிந்த அளவு குருவின் குடும்பத்தினரை நன்றாக பார்த்து கொண்டாள்.
இஞ்சியை தட்டி போட்ட தேநீரின் மணம் மகி வருவதற்குள கூடத்திற்குள் நுழைந்திட கையில் கோப்பையுடன் வந்தாள் மகிழ்.
தேநீரை எடுத்து கொண்ட கோதை,
“உனக்கும் சேர்த்து போடலையாம்மா” என்று வினவ,
“இல்லைத்தை எனக்கு வேணாம்” என்று கூறிவிட்டவள் நேரத்தை பார்த்துவிட்டு வாசலை எட்டி பார்த்தாள்.
“மணியாகிடுச்சு இன்னும் ஸ்கூல் வேன் வரலையா மகி…?” என்று கோதை வினா எழுப்ப,
“நானும் அதான்த்தை பாத்திட்டு இருக்கேன்” என்று கூறிய போது பள்ளி வாகனம் வாசலில் வந்து நின்றது தெரிந்தது.
“அத்தை வேன் வந்திடுச்சு. நான் போய் பசங்களை அழைச்சிட்டு வர்றேன்” என்று வாசல் கதவிற்கு அருகே சென்றவள் இருவரையும் அழைத்து வந்தாள்.
வரும் போதே இருவரும், “ம்மா அது ம்மா இது” என்று பள்ளியில் நடந்ததை பற்றி கூற,
இவளும், “ஹ்ம்ம்…” என்று தலையசைத்த படி வந்தாள்.
வீட்டிற்கு அழைத்து வந்ததும் கோதையின் உதவியுடன் உடை மாற்றி இருவருக்கும் பால் மற்றும் சிற்றுண்டியை கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தாள்.
கோதை வெளியே எட்டி பார்த்துவிட்டு, “மழை வர்ற மாதிரி இருக்கு மாடியில காயப் போட்ட துணியை எடுத்திட்டு வர்றேன்” என்க,
தானும் எட்டி பார்த்தவள், “ஆமத்தை மழை அடிச்சு ஊத்த போகுதுன்னு நினைக்கிறேன். நீங்க படியேற வேண்டாம் ஏற்கனவே முட்டி வலி இருக்கு. நான் போய்ட்டு வர்றேன்” என்று விறுவிறுவென படிகளில் ஏறினாள்.
காலையில் காயப்போட்டிருந்த துணிகள் நன்கு காய்ந்திருக்க வேகமாக எடுக்க துவங்கினாள். பாதி எடுக்கையிலே மழை துளி முகத்தில் பட்டு தெறிக்க வேகமாக எடுத்தாள்.
இருந்தும் சற்று நனைந்திருந்தாள். துணியுடன் கீழே பாதி நனைந்தபடி வந்தவளை கண்ட கோதை,
“அதுக்குள்ள மழை சடசடன்னு பேய ஆரம்பிச்சிடுச்சா. போய் ட்ரெஸ மாத்து” என்று துணிகளை வாங்க,
“இல்லை வேணாம்த்தை லேசாதான் நனைஞ்சிருக்கு” என்று மறுக்க,
“புது மழையா இருக்கு. காய்ச்சல் வந்திட போகுது. போ” என்று உரிமையாய் அதட்ட,
“சரிங்கத்தை” என்று புன்னகைத்தவள் உடை மாற்றி வந்தாள்.
பின்னர் இளையவர்களுடன் நேரம் கழிய இருவரும் இரவுணவை தயார் செய்ய துவங்கினர்.
மழை விடாது பொழிய இளையவர்களுக்கு தொலைக்காட்சியில் பொம்மை படத்தை வைத்து கொடுத்து அவர்கள் தன் பார்வை வட்டத்தில் இருக்குமாறே சமையலை துவங்கினாள்.
குருவின் சிறு வயதில் ஒரு மழை நாளில் நடந்த நிகழ்வை கோதை கூற மகியும் சிரிப்புடன் கேட்டபடி சமையலை செய்தாள்.
அவர்கள் சமைத்து முடித்தும் மழை விடவில்லை.
கோதை, “என்ன இந்த மழை இவ்ளோ நேரம் பெய்யிது. தெக்கு வடக்கே தெரியலை. ஏன் திடீர்னு இப்படி மழைன்னு தெரியலையே…” என்று கூற,