ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 11(1)

“சொல்லலாமே!”என்றனர் அவனது அக்காவும், மாமாவும். 

உடனே அவர்களைக் கூர்மையாகப் பார்க்கலானான் புகழேந்தி. 

“உன்னோட ஆஃபீஸில் நீ வச்சிருக்கிற டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படியே தான் எல்லா வேலையும் நடக்குது! ஆனால் உன்னோட அலுவலகத்தில் வேலை செய்ற எல்லாருமே திறமையானவங்களாக இருக்கும் போது அந்தத் திறமையை உன்னோட ஆஃபீஸில் மட்டுமே அதை நிறுத்தி வச்சுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்! அதனால் அவங்களில் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து நீ மத்த மத்திய, மாநிலங்களில் நடக்கிற சிலப் போட்டிகள், கண்காட்சிகளில் பங்கேற்க வைக்கலாம்ன்னு எனக்குத் தோணுது!”என்று அவனுக்கு யோசனையைக் கூறினான் மித்ரன். 

அதைக் கேட்டதுமே,”வாவ்! இது சூப்பர் ஐடியா மாமா!”என அவனிடம் உரைத்து விட்டு, 

“இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற அக்கா?”என்று தன்னுடைய தமக்கையிடம் வினவினான் புகழேந்தி. 

அதற்கு,”எனக்கும் இந்த யோசனை ரொம்பவே பிடிச்சிருக்கு!”என்று அவனிடமும், தனது கணவனிடமும் உற்சாகத்துடன் கூறி விட்டு,

“அதே மாதிரி உன் ஆஃபீஸிலேயும் நிறையப் போட்டிகள் நடத்து! அப்போ தான் அவங்களுக்கு வெளியே போட்டிகளுக்குப் போகும் போது ஒரு தைரியம் பிறக்கும்!”என்று தன் பங்கிற்குத் தம்பிக்கு அறிவுறுத்தினாள் வெண்பா. 

“ஷூயர் அக்கா!”என அவளிடம் கூறினான் புகழேந்தி.

“மத்தபடி ஆஃபீஸ் நிர்வாகத்தில் எந்த விதக் குறையும் சொல்ற மாதிரி எதுவுமே இல்லை!”என்றுரைத்து விடவும், 

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட யோசனைகளைக் கேட்டுக் கொண்டே உணவுண்ணத் தொடங்கினான். 

சிறிது நேரத்திலேயே தாங்கள் மூவரும் தங்களது மதிய உணவை உண்டு முடித்து விட்டு அலுவலகத்திற்குத் திரும்பினார்கள் மித்ரன், வெண்பா மற்றும் புகழேந்தி.

அதே சமயத்தில், அவர்களுக்கு முன்பாகவே தாங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டுத் தத்தமது வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டனர் மதுபாலாவும், பிரேமாவும். 

அலுவலகத்தில் நுழைந்ததுமே,”நான் கொஞ்ச நேரம் இங்கே இருந்துட்டுக் கிளம்பிட்றேன். நீ எப்போ வர்ற – ம்மா?”எனத் தன்னுடைய மனைவியிடம் விசாரித்தான் மித்ரன். 

அதற்கு அவளோ,“நான் சாயந்தரம் ஆஃபீஸ் முடியிற நேரத்தில் புகழ் கூடவே கிளம்பி வர்றேன்ங்க”என்றுரைத்து விட்டாள்.

உடனே தானும் தனக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டுப் புகழேந்திக்கு நன்றித் தெரிவித்து விட்டு அவனிடமும், தன் துணையிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கேயிருந்து கிளம்பிச் சென்றான் மித்ரன். 

அதற்குப் பின்னர் அந்த அலுவலகத்தில் இருந்த மற்ற வேலைகளைப் பார்க்கலானார்கள் அந்த அக்காவும், தம்பியும். 

“மேம்! இன்னைக்கு எனக்குக் கொடுத்த வேலையை முடிச்சிட்டேன்”என்று தன் வழிகாட்டிப் பெண்ணிடம் தெரிவித்தாள் மதுபாலா. 

“ம்ஹ்ம். சீக்கிரம் முடிச்சிட்டீங்களே! இதை எப்பவும் பின்பற்றுங்க!”என்ற வினோதினியோ, 

“நீங்க இதை முதல் தடவைச் செஞ்சி இருக்கிறதால் இதை நான் ஒரு தடவைப் பார்த்துட்டு உடனே முதலாளிக் கிட்டே கொண்டுப் போய்ச் சமர்ப்பிச்சிட்றேன். அதுக்கப்புறம் நீங்கச் செஞ்சித் தர்ற டிசைன்ஸ்ஸை எல்லாம் நானே பார்த்து அப்ரூவ் பண்ணித் தைக்க அனுப்பிடுவேன்! இப்போ அது வரைக்கும் நீங்க மத்த பெண்டிங் வேலைகளைப் பார்த்துட்டு இருங்க. இல்லைன்னா, ரிலாக்ஸ் பண்ணுங்க”என்று அவளிடம் கூறி விடவும், 

அதில்,”ஓகே மேம். தாங்க்யூ”என அவருக்கு நன்றி சொல்லி விட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றிருந்தாள் மதுபாலா. 

அவளிடம் கூறியதை உடனே செயல்படுத்தும் விதமாக அவள் வரைந்துக் கொடுத்திருந்த வடிவமைப்புகள் அடங்கிய குறிப்பு நோட்டை எடுத்துக் கொண்டுத் தன் அறையிலிருந்து வெளியேறிப் புகழேந்தியின் காரியதரிசியிடம் காண்பித்து, 

“சார்! இந்த டிசைன்ஸ் எல்லாம் மிஸ். மதுபாலா வரைஞ்சது. இதைச் சார் கிட்டே காட்டனும்”என்று அவனிடம் விஷயத்தை தெரிவித்தார் வினோதினி. 

“சரிங்க மேம். நான் சார் கிட்டே இதை இன்ஃபார்ம் பண்ணிட்டு உங்களைக் கூப்பிட்றேன். நீங்க உட்காருங்க”என்று அவரை அங்கேயிருந்த நாற்காலியில் அமரச் செய்து விட்டுத் தன் முதலாளியிடம் அனுமதி பெற்று அவனது அறைக்குள் பிரவேசித்து, 

“சார்! மிஸ். மதுபாலா டிசைன்ஸ்ஸை வரைஞ்சிக் கொடுத்துட்டாங்களாம்! அதை உங்ககிட்ட காண்பிக்கிறதுக்காக மிஸஸ். வினோதினி மேம் வெளியே காத்திருக்காங்க”என்றிருந்தான் வெற்றிச்செல்வன். 

அங்கு வெண்பாவும் இருந்ததால், 

“அவங்களை அதை உடனே கொண்டு வரச் சொல்லுங்க வெற்றி. நானும் அந்த வரைபடங்களைப் பார்க்கனும்!”என்று அவனிடம் உரைத்தாள். 

அவனோ தனது முதலாளியின் அனுமதி வேண்டி அவனைப் பார்க்கவும், 

அதைப் புரிந்து கொண்டு,“மிஸ். வினோதினியை உள்ளே வரச் சொல்லுங்க வெற்றி”என்று அவனுக்கு அனுமதி அளித்து விட்டிருந்தான் புகழேந்தி. 

“ஓகே சார்”என்று அவனிடம் கூறிச் சென்றச் சில நிமிடங்களிலேயே வினோதினியை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் மறுபடியும் நுழைந்தான் வெற்றிச்செல்வன். 

அவனை அனுப்பி வைத்து விட்டு,”நீங்க உட்கார்ந்து எங்களுக்கு அந்த வரைபடங்களை காண்பிங்க”என்று வினோதினியிடம் கேட்டுக் கொள்ளவும், 

உடனே அவரும் அவர்கள் இருவருக்கும் வணக்கம் கூறிக் கொண்டு, மதுபாலா வரைந்தவற்றை அவர்களிடம் காட்டினார். 

அவற்றைச் சில நிமிடங்களுக்கு நன்றாக கூர்மையாகப் பார்த்து விட்டு, 

“இதெல்லாம் ரொம்பவே புதிதான வடிவமைப்புகளாக இருக்கு! இவங்களோட வரைபடம் வரையும் திறமையும் அபாரமாக இருக்கு!”எனச் சிலாகித்துக் கூறினாள் வெண்பா.

ஆனால் அவளைப் போலவே உடனே பதிலையோ, பாராட்டையோ தெரிவிக்காமல் அந்தப் படங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் புகழேந்தி.

அதைக் கவனித்து விட்டு,”என்னடா நீ எதுவும் சொல்லாமல் இருக்கிற?”என்று அவனிடம் கேட்க, 

அதற்கு,”நான் இதையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்துக் கருத்தைச் சொல்லி விட முடியாது தானேக்கா? அதனால் தான், உன்னிப்பாகப் பார்த்துட்டு அதுக்கப்புறம் என் மனசுல தோன்றதைச் சொல்லலாம்ன்னு நினைச்சேன்”எனத் தமக்கைக்குப் பதிலளிக்கவும்,

“அதுவும் கரெக்ட் தான்”என்ற வெண்பாவோ,

அங்கேயிருந்த மற்றொருவரான வினோதினியிடம் அளவளாவத் தொடங்கி விட்டாள்.

சிறிது நேரம் கழித்து,”நான் எல்லா வரைபடங்களையும் பார்த்து முடிச்சிட்டேன்!”என அவர்கள் இருவரிடமும் தெரிவித்தான் புகழேந்தி. 

“ஓஹோ! இப்போ அதுக்கான கருத்துக்களைச் சொல்லு!”என்றிருந்தாள் வெண்பா. 

உடனே,”இந்த வரைபடங்களைப் பார்த்தால் மிஸ். மதுபாலாவுக்குச் சின்ன வயசுல இருந்தே நல்லா வரையிறத் திறமை இருந்து இருக்குன்றது நல்லாவே தெரியுது! அதே மாதிரி நீங்க வரைபடங்களை வரைஞ்சிக் கொடுங்கன்னுச் சொன்னதுமே எந்த மாதிரி வரையனும்னுக் கேட்காமல் அவங்களுக்குத் தோன்றியதை வரைஞ்சு இருக்காங்க! ஒவ்வொரு படமும் முழுக்க, முழுக்கத் தொழில் சார்ந்து இருக்கு!”என்றவனைப் புன்னகையுடன் ஏறிட்டுப் பார்த்தனர் மற்ற இரண்டுப் பெண்களும். 

error: Content is protected !!
Scroll to Top